என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஒரு படகில் சென்ற 4 மீனவர்கள் இன்று காலை இலங்கை கடல் பரப்புக்கு உட்பட்ட கோவிலன் கடல் பகுதியின் வடகிழக்கே 9 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி 4 மீனவர்களையும் நாட்டுப்படகுடன் சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

மீனவர்கள் 4 பேர் சிறை பிடிக்கப்பட்ட தகவலை அறிந்த ஜெகதாப்பட்டினம் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க நீண்டதூரம் செல்வதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது மீன்வளத்துறையிடம் பதிவு செய்து விட்டு செல்வார்கள். நேற்று முன் தினம் இரவுதான் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன் பிடித்து விட்டு கரை திரும்பினர். இன்று காலை அவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் குறிப்பிட்ட தூரம் வரை மட்டும் செல்வதால் மீன்வளத்துறையிடம் பதிவு செய்வது கிடையாது. நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்களில் 4 பேர் எல்லை தெரியாததன் காரணமாக இலங்கை கடற்பகுதியில் சென்றதால் அந்நாட்டு கடற்படையினரால் சிறைபிடிக்கபட்டிருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் மீன் பிடித்த பகுதி இலங்கைக்கு அருகே உள்ள யாழ்ப்பாணம் கடற்பகுதியாகும்.
இருப்பினும் இலங்கை கடற்படையினரின் தொடர் நடவடிக்கையால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கவலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மின்வாரிய செயற் பொறியாளர் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை, குளத்தூர் தாலுகா, தொண்டைமான் நல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறப்படும் பகுதியான கீரனூர், உடவயல், குளத்தூர், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், தென்னதிரையான் பட்டி, சிட்கோ, பாரதிதாசன் பல்கை லக்கழகம், அண்ணாப் பல்கலைக்கழகம் ஆகிய பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது என்று கீரனூர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான நூதன போராட்டங்களில் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை பி.யு. சின்னப்பா பூங்கா அருகே இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவினர் அறிவித்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு போராட்டக்குழுவினர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, புதுக்கோட்டை மதிகொண்ட அய்யனார் திடலில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினார்.
இதையடுத்து இன்று பிற்பகல் 2 மணிக்கு மதி கொண்ட அய்யனார் திடலில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே நேற்று நடந்த போராட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பெண்கள் கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், நாஙகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 2-வது கட்டமாக 95 நாட்களாக போராடி வருகிறோம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று வாய்மொழியாக கூறினார். நாங்கள் வேறு ஒன்றும் கேட்கவில்லை. வாய்மொழியாக கூறிய உறுதிமொழியை சட்ட மன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி தந்தால் போதும் என்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட 42 பஞ்சாயத்துகளில் அதிக மக்கள் தொகை கொண்ட வார்பட்டியில் சுமார் நான்கு மாதங்களுக்கு மேலாக குடிநீர் தட்டுபாடு நிலவி வந்தது.
இதனால் நாள்தோறும் வந்தடைந்த குடிநீர் தற்போது 3 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை வருவதால் குடிப்பது மட்டுமின்றி குளிக்க, சமைக்க மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் என்ன செய்வதறியாமல் இருந்து வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் அய்தர்அலி கூறியதாவது, அதிக மக்கள்தொகை கொண்ட வார்பட்டியில் இது போன்ற பிரச்சினை நிலவுவதால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் மூன்று நாளைக்கு ஒருமுறையே குளிக்க முடிகிறது என்றும் அத்தியாவசிய தண்ணீர் தேவை பூர்த்தி செய்ய கூடுதல் ஆழ்துளை கிணறு அமைக்கபட்டால் பொது மக்களின் தண்ணீர் தேவை தற்காளியமாக தீர்க்க முடியும் இது தொடர் கதையானால் சாலை மறியலில் ஈடுபட்டபோவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
சம்மந்தபட்ட அதிகாரி விரைந்து நடவடிக்கை எடுக்கபட வேண்டும் எனவும் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்பட அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும், ஆய்வக வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், விபத்துக்களை தடுக்க கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை கல்லூரி வந்த மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு திரண்டனர். பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.
சென்னை:
அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரில் திடீரென இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் புதுக்கோட்டை ராஜகோபால புரத்தைச் சேர்ந்த அடைக்கலம் (வயது60) என்பவருக்கு படுகாயம் அடைந்து கால் முறிவு ஏற்பட்டது.
இதனை கண்ட அமைச்சர் உடனடியாக காரில் இருந்து இறங்கி, சாலை விபத்தில் சிக்கி கால் முறிந்த நிலையில் காயமடைந்தவரை தனது காரில் இருந்த தலையணையைக் கொண்டு இறுகக் கட்டி முதல் உதவி சிகிச்சை அளித்தார்.
மேலும் தனது பாதுகாப்பு வாகனத்தில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். புதுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை டாக்டர்களை தொலைபேசியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பு கொண்டு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உடனடியாக மேல் சிகிச்சை செய்யுமாறு உத்தரவிட்டார்.
விபத்தில் சிக்கியவருக்கு தாமே முன்வந்து உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளித்ததை கண்டு அருகில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அமைச்சரை வெகுவாக பாராட்டினர்.
திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் முகமது காதர் (வயது 32). இவர் உள்பட நண்பர்கள் 5 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சீசன் களை கட்டியுள்ளதால் பல்வேறு அருவிகளுக்கு சென்று குளித்த அவர்கள் நேற்று இரவு திருச்சிக்கு புறப்பட்டனர்.
இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் விராலிமலை பகுதிக்கு வந்த 5 பேரும் சாலையோர கடையில் டீ குடித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை நெருங்கி கொண்டிருந்தனர்.
அப்போது திருச்சியில் இருந்து விராலிமலை நோக்கி அரசு டவுன் பஸ் வந்தது. அந்த பஸ் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விராலிமலைக்குள் நுழைவதற்காக கொண்டம நாயக்கன்பட்டி பிரிவு ரோட்டில் திரும்பியது.
அதே சமயம் திருச்சி நோக்கி அதிக வேகமாக வந்த கார் டவுன் பஸ்சின் பக்கவாட்டில் மோதி சொருகிக் கொண்டது. இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
காரில் பயணம் செய்த சபியுல்லா (36), முகமது காதர் (32), சிவகங்கையை சேர்ந்த முகமது காசிம் (35) ஆகிய 3 பேரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியானார்கள். பின் இருக்கையில் அமர்ந்திருந்த திருச்சி பொன்நகர் பகு தியை சேர்ந்த முகமது பைசல் (34), பாலக்கரையை சேர்ந்த முகமது முஸ்தபா (30) ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்தில் இறந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. சம்பவ இடத்தை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கீரனூர் டி.எஸ்.பி. பாலகுரு ஆகியோர் பார்வையிட்டனர்.
விபத்து குறித்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செழியன், சப்-இன்ஸ்பெக்டர் இசைவாணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. கார் டிரைவர் கண் அயர்ந்ததால் விபத்து ஏற்பட்டதா? அல்லது காரில் வந்தவர்கள் மது போதையில் இருந்தார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக எந்த சர்ச்சையும் கிடையாது. திட்டமிட்டபடி வருகிற 17-ந் தேதி மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும். மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
இதேபோல உயர் மருத்துவ படிப்பில் மருத்துவர்களுக்கான 50 சதவீதம் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது. எப்போதும் தமிழக அரசு மருத்துவர்கள் பக்கம் தான் இருக்கும். இதை உறுதிப்படுத்துவதற்காக தான் இடஒதுக்கீடு முறையை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 158 விசைப்படகுகளில் 800 மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் அப்பகுதியை சேர்ந்த சகோதரர்களான பிரசாத், பிரதீப் மற்றும் செல் வராஜ் ஆகியோர் நேற்றிரவு நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை யினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 3 பேரையும் கைது செய்த தோடு, விசை படகையும் பறி முதல் செய்தனர். பின்னர் அவர்களை விசாரணைக் காக இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
மீனவர்கள் சிறை பிடிக் கப்பட்ட தகவலை அறிந்த அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர். கடந்த 5-ந் தேதி கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன வர்கள் 8 பேர் சிறை பிடிக் கப்பட்ட நிலையில் தற் போது மேலும் 3 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.
மீன்பிடி தடை காலத் திற்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற புதுக் கோட்டை மாவட்ட மீனவர் களில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர் கைது செய் துள்ளனர். 3 விசைப் படகு களையும் பறிமுதல் செய்துள் ளனர்.
இலங்கை கடற்படையி னரின் தொடர் நடவடிக்கை யால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கவலை யடைந்துள்ளனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட் டுள்ளதாகவும் தெரிவித் துள்ளனர். எனவே இந்த விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை கண்டித்து நெடுவாசலில் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். ஒவ்வொரு நாளும் நூதன போராட்டங்களை நடத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், இத்திட்டத்திற்கு எதிராகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே உள்ள திட்டலில் இன்று 88-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்திருந்த ஒருவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அப்போது அப்பகுதி பெண்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்திக்கொண்டும், இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை என்றும், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை நெடுவாசல் பகுதி பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
நாங்கள் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம். இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி மத்திய மாநில அரசுகள் மற்றும் மாவட்டநிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை இத்திட்டத்தை ரத்து செய்து எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே நாங்கள் இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுப்பது போன்ற நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால் இத்திட்டத்தை ரத்து செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மலையப்பட்டியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் அபினா (வயது 15). இவர் அங்குள்ள பெண்கள் மேல்நிலைபள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 5-ந்தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அபினா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கந்தர்வக்கோட்டை போலீசில் முத்து புகார் செய்தார். போலீசார் அபினா எங்கு சென்றார்? யாராவது அவரை கடத்தி சென்றனரா? என்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கடலுக்கு சென்ற அவர்களில் ராசு என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற காளி, உதயா, அஞ்சான், முருகன் ஆகியோர் நெடுந்தீவுக்கு தென் கிழக்கு பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகு மீது தங்களது ரோந்து படகை மோதினர். இதில் நிலை தடுமாறிய விசைப்படகில் இருந்து 4 மீனவர்களும் கடலில் விழுந்தனர். இதையடுத்து ஒரு சில விநாடிகளில் மீனவர்களின் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது.
பின்னர் இலங்கை கடற்படையினர் எதையும் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டனர். நடுக்கடலில் தத்தளித்த புதுக்கோட்டை மீனவர்களை அந்த வழியாக மற்றொரு படகில் வந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.






