என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தி.மு.க. நகர செயலாளரான பழனியப்பன்(வயது 54). இவர் கீரனூர் கடைவீதியில் செருப்பு கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று காலை வழக்கம்போல கடைக்கு சென்ற அவர், கடையின் ஒரு பக்க கதவை திறந்து வைத்து விட்டு உள்ளே சென்றார். அப்போது கடைக்கு வந்த பழனியப்பனின் உறவினர் ஒருவர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடையில் பழனியப்பன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து அக்கம், பக்கத்தினர் உதவியுடன் பழனியப்பனை கீழே இறக்கி சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் பழனியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
மேலும் பழனியப்பன் கடையில் இருந்து அவர் எழுதிய வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். அதில், தான் பெற்ற கடனை சிலர் திருப்பி கேட்டு தொந்தரவு கொடுத்ததால், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டிருந்தது என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பழனியப்பனுக்கு ஹேமலதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தற்கொலை செய்து கொண்ட பழனியப்பன் குடும்பத்தினரை தி.மு.க. பிரமுகர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் தளங்களில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.
வழக்கமாக இன்று கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீன்களை பிடித்துக் கொண்டு நாளை கரை திரும்புவர். இந்த நிலையில் நாளை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 146 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் நேற்று இரவு இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் அங்கு மின்னல் வேகத்தில் வந்தது.
இதைப்பார்த்ததும் புதுக்கோட்டை மீனவர்கள் அச்சத்துடன் அங்கிருந்து வலைகளை சுருட்டிக் கொண்டு புறப்பட தயாரானார்கள். ஆனால் அதில் ஷாஜகான் என்பவருக்கு சொந்தமான படகை சுற்றி வளைத்தனர். படகில் ஏறிய கடற்படையினர் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்களை சரமாரியாக தாக்கினர்.
பின்னர் அந்த படகில் இருந்த கணேசன், வடிவேலு, இருளாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறைப்பிடிக்கப்பட்ட 3 மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப்படகை இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகாம் அலுவலகத்திற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இன்று பிற்பகலில் அவர்கள் இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னரே அவர்கள் விடுதலையாவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரிய வரும்.
கடந்த வாரம் நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் யாழ்ப்பாணம் அருகே சிறைப்பிடிக்கப்பட் டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 வாரங்களில் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள மலையடிப்பட்டியை சேர்ந்தவர் காசிலிங்கம். இவரது மகன்கள் குமார் (வயது 37), திருமுருகன் (33).
இந்நிலையில் அண்ணன் தம்பி இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மோதலும் ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் சொத்து ஒன்றை விற்றதில் அதற்கான பங்கு தொகையை திருமுருகனுக்கு குமார் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து திருமுருகன் , குமாரிடம் தட்டி கேட்கவே இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் உண்டான நிலையிலும் அண்ணன் - தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று நள்ளிரவு திருமுருகன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்த குமார் அரிவாளால் திருமுருகனை சரமாரி வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார். இதில் ரத்தவெள்ளத்தில் திருமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் கீரனூர் போலீஸ் டி.எஸ்.பி. பாலகுரு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சொத்து தகராறில் தம்பியை அண்ணன் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசலில் போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்தார்.
நெடுவாசலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியார்களிடம் கூறியதாவது:
நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால், அதுகுறித்து எனக்கு கவலையில்லை. இந்தியை கற்றுக்கொள்வது இந்தி திணிப்பு ஆகாது. ஜெயலலிதா இருக்கும் போது வாய் திறந்து பேசாத அமைச்சர்கள், தற்போது பேசுகின்றனர். மக்கள் வேண்டாம் என்று சொல்லும் திட்டத்தை அரசு ஏன் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் திமுக தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான விடுதி, கூடைப்பந்து, கால்பந்து, கையுந்து பந்து, ஹாக்கி பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான தனித்தனி மைதானங்களும், தடகளப்போட்டிகளை விரிவாக மேற்கொள்ள தேவையான வசதிகளும் உள்ளன.
எனவே நாள்தோறும் ஆயிரக் கணக்கான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டு மைதானத்தில் பல்வேறு தேவைகளுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தன்னிறைவு திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதான கட்டுமான நிதி அமைப்பின் பங்களிப்பாக மூன்றில் ஒரு பங்கான ரூ.3.16 லட்சம் பங்களிப்புடன், மொத்தம் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் கிணறு அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த கிணறு 20 அடி அகலமும், 10 மீட்டர் ஆழமும் கொண்டதாகவும், சுற்றுச்சுவர் பாதுகாப்புடன், கிணற்றின் மேல்பகுதியில் பாதுகாப்பு கம்பிவலை மூடி அமைப்புடன் கட்டப்பட உள்ளது. இந்த கிணறு அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கிணறு அமைக்கும் பணியினை விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
அறந்தாங்கியைச் சேர்ந்தவர் கலியபெருமாள். தொழிலதிபரான இவர் அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதியில் நெல்கடை நடத்தி வருகிறார். நெல் மொத்த வியாபாரம் செய்யும் கலியபெருமாள் கடையின் பின்புறம் உள்ள குடோனில் நெல் பிடிப்பதற்கான கோணிகள் (சாக்குகள்), தராசுகள் போன்றவற்றை வைத்திருந்தார்.
மேலும் குடோனில் கலியபெருமாள் மற்றும் பணியாளர்களின் இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் கலியபெருமாள் குடோனில் வைக்கப்பட்டிருந்த சாக்கு மூடைகளில் திடீரென்று தீப்பற்றியது.
உடனே தீ மளமளவென்று சாக்கு மூடைகள், இருசக்கர வாகனங்களில் பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.
குடோனில் தீப்பற்றி எரிவதை பார்த்த அவ் வழியே சென்றவர்கள் அறந்தாங்கி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் குடோனில் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான சாக்குகள், தராசுகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமானது. குடோனில் மின்இணைப்பு இல்லாத நிலையில் தீப்பற்றி உள்ளதால், யாரேனும் சமூக விரோதிகள் தீவைத்துள்ளனரா? என்ற கோணத்தில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை எஸ்.எஸ். நகரை சேர்ந்தவர் முரளி. இவருக்கும் திருமயம் நெடுங்குடி பகுதியை சேர்ந்த உலகநாதன் என்பவரின் மகள் மலர் (வயது 20) என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.இவர்கள் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்று முன் தினம் அவர்கள் வீடு திறக்கபடாமல் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது கணவர்- மனைவி 2 பேரும் விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தனர்.
உடனே அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலர் பரிதாபமாக இறந்தார். முரளி மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு பேராடி வருகிறார்.
இது குறித்து மலரின் தந்தை உலகநாதன் புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். குடும்ப தகராறில் கணவன் மனைவி வஷம் குடித்தனரா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். புதுமண தம்பதியின் தற்கொலை முயற்சி அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் இன்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் கமல் அரசியலுக்கு வரலாம். அதை யாரும் தடுக்கவில்லை. முடிவெடுத்தால் முதல்வர் என்று அவர் கூறிய கருத்திற்குத்தான் நான் விளக்கம் அளித்தேன். என்னை அவர் எலும்பு நிபுணர் என்று விமர்சனம் செய்துள்ளார். நான் எலும்பு உள்ளவனா? இல்லையா? என்று எந்த மேடையிலும் விவாதிக்க தயார்.
அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் பற்றி புகார் கூறி வரும் கமல், தி.மு.க. ஆட்சியின் ஊழல் குறித்து இதுவரை பேசாதது ஏன்? இதன் மூலம் தி.மு.க.வின் ஊதுகுழலாக ஸ்டாலினின் கைப்பாவையாக அவர் இருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.
ரஜினி குறித்து நாங்கள் விமர்சம் செய்யாதது ஏன் என்று கேட்கிறார்கள். ரஜினி எந்த மதத்தையும் புண்படுத்தியவர் கிடையாது. ஆனால் கமல், குறிப்பாக இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் திரைப்படங்களில் நடித்துள்ளார். நேரிடையாகவும் பேசியுள்ளார். எனவே தான் நாங்கள் அவரை எதிர்க்கிறோம்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போதே அரசியலுக்கு வந்து விட்டதாக கமல் கூறியுள்ளார். ஆனால் அவர் அரசியலுக்கு வந்தது குறித்து யாருக்கும் தெரியாது. கமலை நடிப்பை மக்கள் பார்த்து ரசிப்பார்கள். ஆனால் அரசியலில் அவரை ஆதரிக்கமாட்டார்கள்.
பணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று சசிகலா குடும்பத்தினர் நினைத்து வருகிறார்கள். இது அவருக்கே பாதகமாக அமைந்து விடும். பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை ஊழலை வெளிப்படுத்திய டி.ஐ.ஜி. ரூபாவை அதே பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்று பா.ஜனதா போராடி வருகிறது. அ.தி.மு.கவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் 110 இடங்களில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
அதன்படி தமிழகத்தில் புதுக் கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதியில் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வாணக்கன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயுவை தங்கள் பகுதியில் எடுக்கக் கூடாது எனவும், அதனால் தங்கள் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிப்படையும் என கூறி அப்பகுதி பொதுமக்கள் முதற்கட்டமாக போராட்டம் நடத்தினர்.
அப்போது மத்திய அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போராட்டம் நடத்திய பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை மந் திரி தர்மேந்திர பிரதான் புதுக்கோட்டை உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதியில் எரிவாயு எடுக்க அனுமதி அளித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனை அறிந்த நெடுவாசல் மக்கள் மீண்டு ம் 2-ம் கட்டமாக போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இங்கு ஹைட்ரோ கார்பன் எனும் எரிவாயு எடுத்தால் ஏற்படும் அபாயம் குறித்து பிரச்சாரம் செய்தனர். பின்னர் கிராம சபை கூட்டம் நடத்தினர். அதில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 2-ம் கட்ட போராட்டத்தை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏப்ரல் 12-ந் தேதி முதல் போராட்டம் தொடங்கியது.
இதில் மத்திய, மாநில அரசுகளை கவரும் வகையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. மண்சோறு சாப்பிடுதல், எரிவாயு சாப்பிடுதல், எரிவாயு குழாய் நெஞ்சில் பாய்ந்து விவசாயிகள் தற்கொலை செய்வது என அரசின் கவத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு வகையான நூதன போராட்டங்களை நடத்தி வந்தனர்.
ஆனாலும் மத்திய, மாநில அரசுகள் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மக்கள் அனுமதியளித்தால் மட்டுமே அப்பகுதியில் எரிவாயு எடுக்கப்படும் என்று கூறிவருகின்றனர். அதற்கு எதிராக போராடும் மக்கள் குறித்து அரசு கண்டு கொள்ளவில்லை என நெடுவாசல் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று நெடுவாசல் போராட்டம் 99-வது நாளை எட்டியுள்ளது. வழக்கம்போல் பொதுமக்கள் நாடியம்மன் கோவில் திடலில் கூடி அரசுக்கு எதிராகவும், ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் எரிவாயு எடுப்பதை தங்கள் பகுதியில் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகளை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 98-வது நாளாக நடைபெற்ற போராடத்தில் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக போராடிய சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்தும், மாணவியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று மெழுகுவர்த்தியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளை நெடுவாசல் போராட்டம் 100-வது நாளை எட்டும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் தங்கள் கட்சிகளின் உட்பூசல் மற்றும் கட்சி விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு நெடுவாசல் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது அனைத்து மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
மேலும் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அனைத்து தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி இத்திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
முதற்கட்டமாக நடத்திய போராட்டத்தின் போது மாரடித்து ஒப்பாரி வைத்த ஒரு பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் மதுரை ஐகோர்ட்டு அனுமதியுடன் புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக பெருந்திரள் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு, எரிவாயு சிலிண்டர் நிரப்ப பதிவு செய்வதில் சிரமங்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து வரப் பெறும் புகார்களைப்பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
எனவே, எரிவாயு இணைப்பு குறித்து தங்களது குறைகளை தெரிவிக்க விரும்பும் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் நேரில் தெரிவிக்கலாம். தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கந்தர்வக் கோட்டையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்பாட்டத்திற்கு கந்தர்வக்கோட்டை ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் துணைத்தலைவர்கள் மகாலிங்கம், நிர்மலா ஒன்றிய இணைச் செயலாளர்கள் மரியசெல்வம், தேவி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் காமராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
கூட்டத்தில் 10லிருந்து 30ஆண்டுகள் வரை பணிமுடித்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய தேக்க நிலை ஊதியத்தை நிலுவையுடன் உடனடியாக வழங்க வேண்டும், 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமுல்படுத்தி, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், 20சதவீத இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும்.
சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களை, காப்பீட்டு திட்டத்தில் இணைத்து இலவச காப்பீட்டுத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், மகப்பேறு விடுப்பு 270 நாட்களை உடனடியாக அமுல்படுத்த வேண்டும், ஓய்வு கால ஒட்டுமொத்த தொகையை ரூ.3லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், ஒன்றிய பொருளாளர் எம்.செல்வக்குமார் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.






