என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லைதாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சிறைப்பிடிப்பு
    X

    எல்லைதாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சிறைப்பிடிப்பு

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டையை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் 4ரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஒரு படகில் சென்ற 4 மீனவர்கள் இன்று காலை இலங்கை கடல் பரப்புக்கு உட்பட்ட கோவிலன் கடல் பகுதியின் வடகிழக்கே 9 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி 4 மீனவர்களையும் நாட்டுப்படகுடன் சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.


    பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு

    மீனவர்கள் 4 பேர் சிறை பிடிக்கப்பட்ட தகவலை அறிந்த ஜெகதாப்பட்டினம் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மீன்பிடிக்க நீண்டதூரம் செல்வதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது மீன்வளத்துறையிடம் பதிவு செய்து விட்டு செல்வார்கள். நேற்று முன் தினம் இரவுதான் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன் பிடித்து விட்டு கரை திரும்பினர். இன்று காலை அவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் குறிப்பிட்ட தூரம் வரை மட்டும் செல்வதால் மீன்வளத்துறையிடம் பதிவு செய்வது கிடையாது. நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்களில் 4 பேர் எல்லை தெரியாததன் காரணமாக இலங்கை கடற்பகுதியில் சென்றதால் அந்நாட்டு கடற்படையினரால் சிறைபிடிக்கபட்டிருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் மீன் பிடித்த பகுதி இலங்கைக்கு அருகே உள்ள யாழ்ப்பாணம் கடற்பகுதியாகும்.

    இருப்பினும் இலங்கை கடற்படையினரின் தொடர் நடவடிக்கையால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கவலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×