என் மலர்
செய்திகள்

கந்தர்வக்கோட்டையில் வாலிபரை தாக்கி காரில் பெண் கடத்தல்
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்த மல்லிகைநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகள் பிரியங்கா (வயது 25). இவர் டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று பிரியங்கா கந்தர் வக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு தனது உறவினர் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். கந்தர்வக்கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் வேம்பன்பட்டி என்ற இடம் அருகே சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது பின்னால் வேகமாக ஓரு கார் வந்தது. அந்த கார் திடீரென மோட்டார் சைக்கிளை வழி மறித்து நின்றது. அதில் இருந்து 5 பேர் இறங்கினார்கள். அவர்கள் அஜித்குமாரை தாக்கி கிழே தள்ளி விட்டு பிரியங்காவை காரில் கடத்தி சென்றனர்.
இது குறித்து கலியமூர்த்தி கந்தர்வக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மனுவில் கந்தர்வக் கோட்டை அருகே உள்ள சோமபுரத்தை சேர்ந்த பாலு, பாலமுருகன், ராசு, செல்லத்துரை, வீரபாண்டி ஆகிய 5 பேர் தன் மகள் பிரியங்காவை கடத்தியதாக கூறியுள்ளார். இந்த கடத்தல் சம்பவம் குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கலியமூர்த்தியின் உறவினர்கள் சுமார் 200 பேர் பெண்ணை கடத்தியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க கோரி கந்தர்வக்கோட்டை போலீஸ் நிலையம் எதிரே சாலை மறியல் செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை டி.எஸ்.பி. ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பெண்ணை கடத்தியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி கூறினார்.
இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. இளம்பெண்ணை கடத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.






