என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை - டெல்லியில் விரைவில் போராட்டம்: அய்யாக்கண்ணு அறிவிப்பு
    X

    சென்னை - டெல்லியில் விரைவில் போராட்டம்: அய்யாக்கண்ணு அறிவிப்பு

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை-டெல்லியில் விரைவில் போராட்டம் நடத்துவோம் என்று அய்யாக்கண்ணு கூறினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த பிப்ரவரி 16-ந்தேதியில் இருந்து போராட்டம் நடைபெற்றது. மத்திய - மாநில அரசுகள் அளித்த வாக்குறுதியை ஏற்று மார்ச் 9-ந்தேதி போராட்டம் கைவிடப்பட்டது.

    பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது. இதனால் விரக்தி அடைந்த இளைஞர்கள் கடந்த ஏப்ரல் 12-ந்தேதி 2-ம் கட்ட போராட்டத்தை தொடங்கினர். போராட்டக்களத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் ஆதரவு அளித்தாலும் விடாது போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த போராட்டக்களத்தை தீவிரப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இன்று 49-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    இந்நிலையில் நேற்று நடந்த போராட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்ற மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மமேந்திர பிரதான் அளித்த உத்தரவாதத்தை அவர் நிறைவேற்றவில்லை.

    இந்த திட்டத்தை ரத்து செய்ய கோரி விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். அதில் தீர்வு கிடைக்காவிட்டால் தலைமை செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதன்பிறகு புதுடெல்லியிலும் போராட்டம் நடத்துவோம். போராட்டம் நடத்த நெடுவாசல் மக்களும் அனுமதி அளித்துள்ளார்கள். ஜூன் 16-ந்தேதி புதுடெல்லியில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற உள்ளது . அதில் 28 மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் கலந்து கொள்ள உள்ளன.

    அதிலும் இந்த திட்டம் தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளோம். அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகளுக்காக போராட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×