என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அறந்தாங்கி அருகே மலேசிய தொழிலதிபர் வீடு உள்பட 4 வீடுகளில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அப்துல்ஹமீது தெருவை சேர்ந்தவர் நாகூர்கனி (வயது 56). இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வருகிறார். அங்கு அவருக்கு சொந்தமாக 7 உணவு விடுதிகள் உள்ளன.

    இவருக்கு சொந்தமான வீடு அறந்தாங்கியில் உள்ளது. விடுமுறை மற்றும் வரும்போது அதனை பயன்படுத்துவது வழக்கம். இந்த வீட்டை பராமரிப்பதற்காக உறவினர் ரகுபர்னிசா(36) என்பவரை நியமித்திருந்தார்.

    ரகுபர்னிசா தினமும் வந்து வீட்டை சுத்தம் செய்து பராமரித்துவிட்டு செல்வார். இந்தநிலையில் மதுரையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் நடைபெற்ற விழாவிற்கு ரகுபர்னிசா சென்றார். பின்னர் காலையில் வந்து வழக்கம் போல் பணிகளை தொடர்வதற்காக நாகூர்கனியின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மலேசியாவில் உள்ள நாகூர்கனிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக அறந்தாங்கி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 20 சவரன் நகை மற்றும் 7 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதே போல் அறந்தாங்கி அருகே உள்ள பாண்டிபத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவர் வெளிநாட்டில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி பாண்டிபத்திரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் உறவினர் வீட்டில் நடைபெற்ற விசே‌ஷத்திற்காக சிவசங்கரி சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 20 சவரன் நகை மற்றும் 2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து சிவசங்கரி அளித்த புகாரின் பெயரில் நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி அருகே களப்பக்காடு பகுதியை சேர்ந்தவர் ரெத்தினம் (42). விவசாயி. இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்காக சென்றிருந்தார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 1சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதே பகுதியை சேர்ந்த சதுரகிரி என்பவர் (53) காலை வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த žபவுன் நகை மற்றும் 20 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த 2 வழக்குகள் குறித்தும் அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டை உடைத்து கொள்ளையடி க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க.வின் குடுமிபிடி சண்டையால் தமிழக அரசியல் கேலிக்கூத்தாகிவிட்டது என புதுக்கோட்டையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் மாவட்ட ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அரசியல் கட்சிகள் மட்டுமல்ல பொதுமக்களும் கூறி வந்த நிலையில் அவரின் இறப்பு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமி‌ஷனை தமிழக அரசு அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது.


    இதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த வீடான போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கி நினைவிடமாக மாற்ற போவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளதும் வரவேற்கக்தக்கது. ‘நீட்‘ தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிரந்தரமாக தடை வாங்க முடியாவிட்டாலும், இந்த ஒரு ஆண்டாவது விலக்கு கேட்டு முயற்சி எடுத்து வருகிறது.

    இதற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது அவரின் தொழில் தர்மம். ஆனால் வெளியில் அவர் நீட்டிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க.வின் குடுமிப்பிடி சண்டையால் தமிழக அரசியல் கேலிக்கூத்தாகிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    புதுக்கோட்டை:

    வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

    புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருமயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ரகுபதி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் முகமதலி, ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன், தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர் செல்லப் பாண்டியன், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் கவிவர்மன், சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளர் அஸ்ரப்அலி, தி.மு.க. சந்திரசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கவிச்சுடர் கவிதைப்பித்தன், ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புராண வரலாற்றில் பாண்டவர்களும் கவுரவர்களும் கிருஷ்ணரிடம் மண்டியிட்டு கிடப்பது போன்று ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகியோர் பிரதமர் மோடியிடம் மண்டியிட்டு கிடக்கின்றனர் என ப.சிதம்பரம் கடுமையாக பேசியுள்ளார்.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பஸ் நிலையம் எதிரே உள்ள காமராஜர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தமிழக முதல்வர், அமைச்சரவையை 420 என்று கூறுகிறார். அதற்கு தமிழக முதல்வர் தினகரன் தான் 420 என்று கூறுகிறார். இதிலிருந்தே ஆட்சியின் அலங்கோலம் நன்றாக தெரிகிறது. இது அவமானம் இல்லையா?.

    புராண வரலாற்றில் பாண்டவர்களும் கவுரவர்களும் கிருஷ்ணரிடம் மண்டியிட்டு கிடப்பது போன்று ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகியோர் பிரதமர் மோடியிடம் மண்டியிட்டு கிடக்கின்றனர். புகழ்பெற்ற திராவிட கலாச்சாரத்தில் உள்ள அ.தி.மு.க. பதவிக்காக இது போன்று மண்டியிட்டு கிடப்பது அவமானம் இல்லையா.


    ஓ.பி.எஸ். மற்றும் இ.பி. எஸ். ஆகியோர் கூட்டு களவாணிகள். இந்த அரசு ஒரு நொடி கூட இனி நீடிக்க கூடாது. தமிழக அரசு கலைய வேண்டும், அல்லது கலைக்கப்படவேண்டும்.

    பிரதமர் மோடி சி.பி.ஐ. அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை ஆகியவற்றின் தலைவராக தான் மக்கள் அவரை பார்க்கின்றனர்.

    தந்தை பெரியாரின் கொள்கைகள் நிறைந்த நாடான தமிழகத்தில் பா.ஜ.க.வால் எப்போதும் வேரூன்ற முடியாது என்பது பிரதமர் மோடிக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அ.தி.மு.க.வை பயன்படுத்தி அதன்மேல் ஏறி பா.ஜ.க. சவாரி செய்ய நினைக்கிறது.

    வெளிநாட்டில் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணத்தை ஒழித்த பா.ஜ.க. ஏழை மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக சொன்னது உள்ளிட்ட தேர்தல் நேரத்தில் கூறிய எந்த வாக்குறுதிகளையும் பா.ஜ.க. நிறைவேற்றவில்லை.

    ஆண்டுக்கு 2 கோடி மக்களுக்கு வேலை வழங்குவதாக சொன்ன மோடியின் பண மதிப்பின்மையால் சுமார் 15 லட்சம் பேர் வேலையிழந்து தவிக்கிறார்கள்.

    விவசாயிகள் பிரச்சனைகளை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. கரும்பு, நெல் ஆகியவற்றிற்கு உரிய விலை கொடுக்கவில்லை. 2015-ம் ஆண்டிற்கு முன்பு தமிழகத்தில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை என்பது கிடையாது. ஆனால் தற்போது விவசாயிகள் தற்கொலை என்பது அதிகரித்துவிட்டது.

    மத்திய அரசால் சிறுபான்மையினர்களுக்க பாதுகாப்பில்லை. பெண்கள் சிறுபான்மையினர் தலித் மக்கள் ஆகியோர் அச்சத்தில் உள்ளனர். எந்த அரசையும் அல்லது எந்த அதிகாரியையும் பார்த்து நான் அஞ்சமாட்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    புதுக்கோட்டை அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியான சம்பவம் கீரமங்கலம் பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள அணவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவரது  மனைவி ஜெயந்தி. இவர்கள் தற்போது கொத்தமங்கலத்தில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு சித்தார்த் (வயது 4) என்ற மகன் இருந்தான்.

    கடந்த சில நாட்களாக சித்தார்த்துக்கு காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் கொத்தமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    இருப்பினும் காய்ச்சல் குணமாகாததால், சித்தார்த்தை மேல்சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் சித்தார்த் பரிதாபமாக இறந்தான். டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியான சம்பவம் கீரமங்கலம் பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறையினர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கந்தர்வகோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 30 பவுன் நகை-பணம் திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை மொட்டைவாண்டான் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55) விவசாயி. இவருடைய மனைவி தனம். நேற்று ராஜேந்திரன் கோவிலுக்கு சென்று விட்டார். தனம் வீட்டை பூட்டி விட்டு தங்களது தோட்டத்திற்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட 3 வாலிபர்கள் ராஜேந்திரன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கு பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 ஆயிரத்தை திருடினர்.

    பின்னர் 2 வாலிபர்கள் மட்டும் நகை-பணத்துடன் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்று விட்டனர். வீட்டினுள் இருந்த மற்றொரு வாலிபர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தபோது, வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த ராஜேந்திரனின் தம்பி பாலசுப்பிரமணியன், அந்த வாலிபரிடம் நீ யார்? என கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர், கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    அப்போது சுதாரித்துக்கொண்ட பாலசுப்பிரமணியன், அருகில் கிடந்த கட்டையை எடுத்து அந்த வாலிபரை தாக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த வாலிபரை, பாலசுப்பிரமணியன் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து கந்தர்வகோட்டை போலீசில் ஒப்படைத்தார்.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து, விசாரணை நடத்தியதில், அவர் பகட்டுவான்பட்டியை சேர்ந்த பிரபு (35) என்பது தெரியவந்தது. இது சம்பந்தமாக புதுக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய 2 வாலிபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டையில் முழு சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கணேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு சுகாதார இயக்கத் திட்டத்தின் கீழ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தல் நிலையிலிருந்து விடுதலை இயக்க வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் கணேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது மாவட்ட கலெக்டர் முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம் என்ற தலைப்பிலான உறுதிமொழியை முழங்க, எனது கிராமத்தை தூய்மை கிராமமாகவும், எனது கிராமம் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற கிராமமாக மாற்றிட அனைத்து முயற்சிகளையும் செய்வேன், குழந்தைகளின் ஆரோக் கியத்தை மேம்படுத்தும் நகம் வெட்டும் பழக்கம், சோப்பினால் கை கழுவும் பழக்கங்களை கற்பிப்பதுடன் நானும் மேற்கொள்வேன் என்று அனைத்து அலுவலர்களும், பள்ளி மாணவ, மாணவியர்களும், செவிலியர்களும் உறுதி ஏற்றனர்.

    மாவட்ட கலெக்டர் தலைமையில் துவங்கிய இந்த பேரணியானது, புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் துவங்கி, கீழ ராஜ வீதி வழியாக நகர்மன்ற அலுவலகத்தை சென்றடைந்தது. இந்த பேரணியில் கல்வித்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், சமூக நலத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களும், பள்ளி மாணவ, மாணவியர்களும், செவிலியர்களும் உள்பட 1000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி மதுக்கடை மற்றும் பார்கள் மூடவேண்டும் என கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003 (அரசு ஆணை (பல்வகை) எண்.292, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (ஏஐ) நாள் 03.11.2003)-இன் விதி 12-இல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு 15.08.2017 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் விற்பனை நடை பெறாமலும், மூடப்பட்டும் இருக்க வேண்டும்.

    எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபானக்கூடங்கள்(பார்) ஆகியவற்றில் மேற்கண்ட ஒரு நாள் மட்டும் மது விற்பனை ஏதும் நடைபெறாது என்றும், அவை யாவும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    பொன்னமராவதி வீரப்பெருமாள் கோயில் மண்டபத்தில் பா.ஜ.க புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சேதுபதி தலைமை வகித்தார்.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி வீரப்பெருமாள் கோயில் மண்டபத்தில் பா.ஜ.க புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சேதுபதி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ, மாவட்ட விவசாய அணித்தலைவர் பொன்விஜயராகவன், திருச்சி கோட்ட இணை பொறுப்பளார் சிவசாமி, மாநில செயலாளர் புரட்சிக்கவிதாசன் ஆகியோர் நிர்வாகிகள் கட்சிப்பணியாற்றுவது குறித்தும் கட்சி வளர்ச்சிகுறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் பேசினார்கள்.

    பறிகொடுத்த பாராம்பரியம் மிக்க புதுக்கோட்டை எம்பி தொகுதியை மீண்டும் கொண்டுவரவேண்டும், மாவட்ட பொதுமக்கள் பயன் பாட்டிற்காக செயல்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசுத்தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பது குடிநீர் பிரச்சனையை தீர்க்க மாவட்ட முழுவதும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

    இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், ஜீவானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ரங்கசாமி,சி வசாமி,தியாகராஜன், மற்றும் மாவட்ட, ஒன்றிய,நகரம்,பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மண்டலத்தலைவர் ரகுபதி வரவேற்றார். முடிவில் பேரூர் தலைவர் சேதுமலையாண்டி நன்றி கூறினார்.
    மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மீனவர்களின் படகு மீது மோதியது.

    இதில் பாலமுருகன் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்தார். அதேபோல் ரோந்து கப்பலில் வந்த கடற்படை வீரர் விஜயசிங்கா என்பவரும் கடலில் விழுந்துள்ளார். உடனே பாலமுருகனை கடற்படை வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து சென்றனர். அப்போது மீனவர்களுக்கும், கடற்படையினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

    இதற்கிடையே கடலில் விழுந்த கடற்படை வீரர் விஜயசிங்காவை உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை மீனவர்கள் சிறைப் பிடித்து வைத்துள்ளதாக நினைத்து 12 விசைப் படகுகளுடன் 41 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைதானார்கள்.

    ஒரே நாளில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மட்டும் 41 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைதான மீனவர்கள் அனைவரும் இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்ற நீதிபதி சபே‌ஷன் வீட்டில் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். மீனவர்களை வருகிற 22-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணல் மேல்குடி, மீமிசல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    இந்த வேலைநிறுத்தம் காரணமாக படகுகள் அனைத்து மீன்பிடி துறை முகங்கள் மற்றும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேரடியாகவும், மறைமுக மாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்து உள்ளனர்.
    புதுக்கோட்டை மீனவர்கள் 53 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று காலை மீனவளத்துறை அனுமதியுடன் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கட லுக்கு சென்றனர். அவர்கள் வழக்கமாக மீன்பிடிக்கும் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து இருந்தனர்.

    நள்ளிரவில் அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் வந்தது. அதிலிருந்த கடற்படை வீரர்கள் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களின் 2 படகுகளில் தாவிக் குதித்தனர். பின்னர் அந்த படகுகள் முழுவதும் சோதனை நடத்திய அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதனால் நிம்மதி பெரு மூச்சுவிட்டவாறு மீனவர்கள் தொடர்ந்து அங்கு மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். சுமார் 2 மணி நேரம் கழித்து மீண்டும் அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றி வளைத்தனர்.

    அவர்கள் அந்த இடத்தில் நகர முடியாதவாறு தடுத்தனர். துப்பாக்கிகளை கொண்டும் மிரட்டினர். மேலும் தங்கள் கடற்படை ரோந்து கப்பலில் வந்த வீரர் ஒருவரை காணவில்லை. அவரை மீனவர்கள்தான் பிடித்து வைத்திருப்பதாக கூறினர். உடனடியாக அவரை விடுவிக்காவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்றும் எச்சரித்தனர்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு உருவானது. இலங்கை கடற்படை வீரர்களிடம் நாங்கள் இதுவரை மீன்பிடிக்க மட்டுமே இந்த பகுதிக்கு வந்து சென்றுள்ளோம். கடற்படை வீரர்களிடம் அமைதியாக பேசியுள்ளோமே தவிர அவர்களை மிரட்டியது கூட கிடையாது. அவ்வாறு இருக்கும்போது கடற்படை வீரர் மாயமானது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தனர்.

    ஆனால் அதனை ஏற்க மறுத்த இலங்கை கடற்படையினர் 13 படகுகளில் இருந்த சுமார் 44 மீனவர்களை சிறைப்பிடித்தனர். இதற்கிடையே கடற்படையினருக்கும், புதுக்கோட்டை மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொள்ளும் சூழலும் உருவானது.

    நடுக்கடலில் செய்வதறியாது திகைத்த புதுக்கோட்டை மீனவர்களை கடற்படையினர் துப்பாக்கி முனையில் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பான தகவலை புதுக்கோட்டை மீனவர்கள் தங்களது வாக்கி டாக்கி மூலம் கரையில் உள்ள மீனவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 318, 049 ஆகிய எண்கள் கொண்ட 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். அதிலிருந்த மீனவர்கள் 9 பேரையும் சிறைப்பிடித்த கடற்படையினர் அவர்கள் மீது எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகவும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 6 படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது உயிர் தப்புவதற்காக ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த கணேஷ், பாலமுருகன் ஆகிய 2 மீனவர்கள் கடலில் குதித்துள்ளனர். நடுக்கடலில் தத்தளித்த அவர்களை 3 மணி நேரத்திற்கு பிறகு மற்ற மீனவர்கள் காப்பாற்றினர். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கடற்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.
    ராகுல்காந்தி கார் மீது மர்ம நபர் கற்களை வீசி தாக்கியதில் காரின் பின்புற கண்ணாடி உடைந்தது. இதனை கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    குஜராத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி காரின் மீது மர்மநபர் ஒருவர் கற்களை வீசினார். இதில் அவரது காரின் பின்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதில் பாதுகாப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    இதனை கண்டித்து புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை.திவ்யநாதன், சின்னராசு, ஆரோக்கியசாமி, இப்ராகிம்பாபு சூர்யா.பழனியப்பன், சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×