என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டையில் முழு சுகாதார விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு சுகாதார இயக்கத் திட்டத்தின் கீழ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தல் நிலையிலிருந்து விடுதலை இயக்க வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் கணேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது மாவட்ட கலெக்டர் முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம் என்ற தலைப்பிலான உறுதிமொழியை முழங்க, எனது கிராமத்தை தூய்மை கிராமமாகவும், எனது கிராமம் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற கிராமமாக மாற்றிட அனைத்து முயற்சிகளையும் செய்வேன், குழந்தைகளின் ஆரோக் கியத்தை மேம்படுத்தும் நகம் வெட்டும் பழக்கம், சோப்பினால் கை கழுவும் பழக்கங்களை கற்பிப்பதுடன் நானும் மேற்கொள்வேன் என்று அனைத்து அலுவலர்களும், பள்ளி மாணவ, மாணவியர்களும், செவிலியர்களும் உறுதி ஏற்றனர்.
மாவட்ட கலெக்டர் தலைமையில் துவங்கிய இந்த பேரணியானது, புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் துவங்கி, கீழ ராஜ வீதி வழியாக நகர்மன்ற அலுவலகத்தை சென்றடைந்தது. இந்த பேரணியில் கல்வித்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், சமூக நலத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களும், பள்ளி மாணவ, மாணவியர்களும், செவிலியர்களும் உள்பட 1000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.






