என் மலர்
புதுக்கோட்டை
- தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
- கூட்டணியில் யாருக்கு எவ்வளவு சீட் என்பதை எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார்.
புதுக்கோட்டை:
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், அதிமுக- பாஜக கூட்டணி ரெய்டுக்கு பயந்து அமைந்த கூட்டணி என கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில், 'தினத்தந்தி' நாளிதழுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும். தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதலமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார்.
மேலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள். அனைத்தும் தெளிவாகிவிடும் என்று கூறினார்.
அமித்ஷாவின் இந்த பேட்டி தமிழக அரசியல் மட்டுமின்றி அதிமுக தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்டளை தளபதி எடப்பாடி பழனிசாமி தான். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். கூட்டணியில் யாருக்கு எவ்வளவு சீட் என்பதை எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க இணைவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கான நகர்வுகள் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
- இந்து சமய அறநிலையத்துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது.
- தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் போலி வேடம் எடுபடாது.
புதுக்கோட்டையில் கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* திராவிடத்திற்கு எதிரான மாநாட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது.
* இந்து சமய அறநிலையத்துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது.
* இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சிறுபான்மையினருக்குதான் பாதுகாப்பு தேவை.
* முருகனை தமிழ்நாட்டை விட்டு கடத்திச்செல்ல முடியாது அவர் நம்மோடுதான் இருப்பார்.
* யார் தமிழ்நாட்டை ஆண்டால் பாதுகாப்பு என தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு தெரியும்.
* தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் போலி வேடம் எடுபடாது.
* அ.தி.மு.க. என்று பெயர் வைத்துக்கொள்ளவே தகுதியற்றவர்களாக ஆகி விட்டார்கள்.
* திராவிடத்தை வீழ்த்துவோம் என்று சொல்லி தான் இந்த முருகன் மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் கட்சியின் பெயரிலேயே திராவிடம் இருப்பதை எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டார். மற்றவர்களும் இன்றைக்கு மறந்துவிட்டு பா.ஜ.க.வின் கொத்தடிமைகள் நாங்கள் என்பதை நிருபித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு கிடைத்து இருக்கும் அருமையான அடிமைகள் அவர்கள்.
* இங்கு எந்த ஒரு மத கலாச்சாரத்திற்கு நாங்கள் இங்கு இடம் கொடுக்க மாட்டோம். எல்லா மாணவர்களும் ஒன்றுதான். அவர்கள் அண்ணன் தம்பிகளாக தான் தமிழ்நாட்டின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருக்கிறார்கள். எல்லா மாநிலத்திலும் கலாட்டாவை உருவாக்கி, அங்கே பயங்கரவாதங்களை உருவாக்கி, சண்டை சச்சரவுகளை உருவாக்கி நுழைந்தார்கள். இங்கே அப்படி நுழைய திராவிட மாடல் அரசு பா.ஜ.க.வை எந்த காலத்திலும் அனுமதிக்காது. அடித்து விரட்டப்படுவார்கள்.
* இங்கே எப்போதும் single engine தான். ஒரே இயக்குபவர் தான் எங்கள் தலைவர் தளபதி தான். எங்கள் தோழமை கட்சிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
* சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரைவில் சட்டப்படி மணல் குவாரிகள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இவ்வளவு நாள் முருகனுக்கு ஏன் மாநாடு நடத்தவில்லை?
- அரசியலுக்காக முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள என்றார் சீமான்.
புதுக்கோட்டை:
மதுரை மாவட்டத்தில் வரும் 22-ம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண், மத்திய மந்திரிகள், பா.ஜ.க. தேசிய தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அவர்கள் ஒப்புக்கு பேசுகிறார்கள். நான் உளமாற முருகனை பற்றி பேசுகிறேன். நான் முருகனின் பேரன்.
நான் செய்வதற்கும், அவர்கள் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பா.ஜ.க. நேற்று ஆரம்பிக்கப்பட்ட கட்சி இல்லை. இவ்வளவு நாள் முருகனுக்கு ஏன் அவர்கள் மாநாடு நடத்தவில்லை?
தமிழ்நாட்டில் முருகனுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. முருகனை தொட்டால் ஓட்டு வருமா என பா.ஜ.க. பார்க்கிறது.
அரசியலுக்காக முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள். அவர்களின் அரசியலுக்காக உத்தர பிரதேசத்தில் ராமரை தொடுவார்கள், கேரளாவில் ஐயப்பனை தொடுவார்கள், ஒடிசாவில் பூரி ஜெகன்நாதரை தொடுவார்கள், தமிழ்நாட்டில் முருகனை தொட்டிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் ஏமாறும் கூட்டம் என்று நம்மை நினைத்துவிட்டார்களா? பா.ஜ.க. மத அரசியல் செய்கிறார்கள், மக்கள் நல அரசியல் செய்யவில்லை என தெரிவித்தார்.
- 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.
- கமலுக்கோ அவரது கட்சிக்கோ பா.ஜ.க. ஆதரவு கிடையாது. ஆனால் தமிழுக்கு எப்போதும் ஆதரவு உண்டு.
புதுக்கோட்டையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. யார் அந்த சார்? என்று ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. ஆனால் காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை.
குற்றப்பத்திரிகை தெளிவில்லாமல் இருக்கிறது. தெளிவுபடுத்த வேண்டியது தமிழ்நாடு முதலமைச்சரின் பொறுப்பு.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மோசமாக உள்ளது. நவீன வகையான போதை மருந்து நடமாட்டம் தமிழகத்தில் தான் இருக்கிறது.
தி.மு.க. தோல்வி பயத்தில் இருக்கிறது. அதனால் தான் எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் உறுதியாக இருந்தால் எங்கள் கூட்டணியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.
தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்கள் இருக்கின்றனர். வரக்கூடிய தேர்தலை அனைவரும் சேர்ந்து சந்திக்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களிடம் பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழை உயர்த்தி பேசினால் நாங்கள் வரவேற்போம் . ஆனால் ஒரு மொழியை சிறுமைப்படுத்தி, ஒரு மொழியை உயர்த்திப் பேசினால் தேவையில்லாத விவகாரங்கள் வரும் அதை தான் கமல்ஹாசன் செய்துள்ளார்
தமிழ் 5000 வருடத்திற்கு முன்பானது என்பதை யாரும் மறுப்பதற்கு கிடையாது. ஆனால் அதற்காக மற்றொரு மொழி சிறுமை என்று கூற முடியாது. அனைத்து மொழியுமே உயர்ந்தது. கமலுக்கோ அவரது கட்சிக்கோ பா.ஜ.க. ஆதரவு கிடையாது. ஆனால் தமிழுக்கு எப்போதும் ஆதரவு உண்டு.
மத்திய மந்திரி அமித்ஷா வருகின்ற 8-ந் தேதி மதுரைக்கு வருகை தர உள்ளார். ஒவ்வொரு நிர்வாகிகளையும் சந்தித்து பேச உள்ளார். அண்ணா மலை குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்று திரும்பி உள்ளார். தொடர்ந்து இனி வரக்கூடிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார்.
அனைத்து எதிர்கட்சிகளும் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும். தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகளை செல்வப் பெருந்தகை அழைத்து உள்ளார். இது குறித்து அந்தந்த கட்சிகள்தான் முடிவு எடுக்க வேண்டும்.
இதுவரை தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை. வரக்கூடிய காலங்களில் அது சாத்தியமா என்று பார்க்கலாம். ஆனால் 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை மாநில தலைவராக இருந்தபோது தமிழ்நாடு அரசியல் களம் அதிரடியாக இருந்தது. தற்போது அமைதியாக உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை உண்டு அவர் அதிரடியான அணுகுமுறை கையாண்டார். நான் அமைதியான அரசியல் செய்ய விரும்புகிறேன். அதிரடி அரசியல் வேண்டாம் என்றார்.
- ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
- வரும் காலங்களில் நிச்சயம் ஆட்சியில் பங்கு என்ற நிலை உருவாகும்.
புதுக்கோட்டை:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
2024 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்த போது 5 எம்.பி. சீட்டுகளும், ஒரு ராஜ்ய சபை சீட்டு தருவதாக அ.தி.மு.க. ஒப்புக்கொண்டது. அதன்படி தற்பொழுது எங்களுக்கு அ.தி.மு.க. ராஜ்ய சபை சீட்டு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தே.மு.தி.க.வுக்கு மேல்-சபை எம்.பி. பதவி கொடுக்கவேண்டியது அ.தி.மு.க.வின் கடமை.
பொறுத்தார் பூமி ஆள்வார், என்பதற்கிணங்க பதட்டமோ, அவசரமோ இல்லாமல் தே.மு.தி.க. உள்ளது. அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம். உறுதி அளித்தபடி மேல் சபை எம்.பி. சீட் தரவில்லை என்றால் என்ன செய்வது என்று தே.மு.தி.க. பிறகு பார்த்துக்கொள்ளும்.
தேர்தலுக்கு கால அவகாசம் உள்ளது. வரும் ஜனவரிக்குள் எல்லாம் முடிவு செய்யப்படும். 234 தொகுதிகளுக்கும் பூத் வாரியாக கமிட்டி நியமித்து 2 நாளில் தெரிவிக்கப்பட உள்ளது. தே.மு.தி.க. வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை கொடுப்பதும் இல்லை, யாரிடமும் அட்வைஸ் பெறுவதும் இல்லை.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். வரும் காலங்களில் நிச்சயம் ஆட்சியில் பங்கு என்ற நிலை உருவாகும்.
தமிழர்களுக்கு அன்னை தமிழ் மொழி தான். அந்தந்த மாநிலத்திற்கு அவர் அவர்களின் மொழிகள் தாய்மொழி. நமக்கு ஆதி மொழி தமிழ் மொழி. அண்ணா பல்கலைக்கழக பிரச்சனையில் ஞானசேகரன் தண்டனை கொடுத்தது வரவேற்கத்தக்கது.
இருப்பினும் ஞானசேகரன் பின்னணியில் யார்? யார்? உடந்தையாக இருந்தார்களோ, அவர்களுக்கும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடிகர் ராஜேஷ் காலமானார் என்று செய்தி வேதனை அளிக்கிறது. விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர் ராஜேஷ்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நகரச் செயலாளர் பரமஜோதி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜாகிர் உள்பட பலர் இருந்தனர்.
- பயப்படுவதற்கு தி.மு.க. அடிமை கட்சி கிடையாது.
- எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, மக்களின் மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா கேட்டு வருவோரை அலைக்கழிக்காமல் உடனே தீர்வு காண வேண்டும். அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,
மாநிலத்தின் நிதியை கேட்டு பெறுவதற்காக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் சென்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அரசியல் பண்ணத்தான் செய்வார். ED-க்கும் மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று தொடர்ந்து பலமுறை சொல்லிக்கொண்டு வருகிறேன். தொடர்ந்து குரல் கொடுப்போம்.
மிரட்டி அடி பணிய வைக்க பார்த்தார்கள். பயப்படுவதற்கு தி.மு.க. அடிமை கட்சி கிடையாது. கலைஞர் உருவாக்குன கட்சி. சுயமரியாதை கட்சி. பெரியாரின் கொள்கைகள் உடைய கட்சி. தவறு செய்பவர்கள் தான் பயப்படணும். நாங்கள் யாருக்கும் அடிபணியணும், பயப்படணும்னு அவசியம் இல்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம் என்றார்.
- தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் குழந்தையை பெற்றெடுத்த தீபாவிடம் விசாரணை நடத்தினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி. இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் தீபா (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் கல்லூரியின் விடுதியில் தங்கி நர்சிங் இறுதியாண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் தீபா, ஒருவருடன் காதல் வலையில் வீழ்ந்துள்ளார். இதன் காரணமாக அவர் கர்ப்பமானார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
நிறைமாத கர்ப்பமாக இருந்த தீபாவிற்கு பிரசவ வலி வந்துள்ளது. அப்போது அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த குழந்தையை தனது வீட்டு வாசல் முன்பு குழி தோண்டி தீபா புதைத்தார்.
அப்போது அவ்வழியாக சென்ற ஒரு பெண், குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அங்கும், இங்கும் சுற்றிப்பார்த்தார். அப்போது, தீபா வீட்டு வாசலில் மண்ணுக்குள் குழந்தையின் கை மட்டும் வெளியே தெரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததார்.
பின்னர் புதைக்கப்பட்ட குழந்தையை அந்த பெண் தோண்டி எடுத்த போது, குழந்தை உயிருடன் இருந்தது. உடனே குழந்தையை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் பனையப்பட்டி அரசு சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குபின், மேல்சிகிச் சைக்காக குழந்தை புதுக்கோட்டை ராணியர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் குறித்து பனையப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் குழந்தையை பெற்றெடுத்த தீபாவிடம் விசாரணை நடத்தினர்.
காதலனுடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமான தீபா, நிறைமாதம் ஆன உடன், குழந்தையை பெற்றெடுப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். குழந்தை பிறந்த உடன் காதலனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்போது அவர், திருமணமாகாத நிலையில் குழந்தையினை பெற்றெடுத்ததால் உறவினர்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் எனவே பிறந்த குழந்தையை மறைத்துவிட்டு ஒன்றும் நடக்காதது போல் வந்து விடு என காதலன் கூறியதாக தெரியவருகிறது.
இதனை தொடர்ந்து தீபா குழந்தையை தனது வீட்டு வசாலில் குழி தோண்டி அவசர அவசரமாக உயிருடன் புதைத்துள்ளார் என தெரியவருகிறது.
போலீசார் காதலன் மற்றும் தீபா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார், வீட்டிலேயே தனக்குத் தானே அவரே எப்படி பிரசவம் பார்த்தார்?
குழந்தையை அவர் மட்டுமே புதைத்தாரா? அவருக்கு உடந்தையாக அவரது காதலன் இருந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- மாணவி வீட்டின் வாசலிலேயே குழியை தோண்டி பிறந்த குழந்தையை புதைத்துள்ளார்.
- அவ்வழியே சென்ற பெண், புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரலை கேட்டு உடனடியாக அந்த குழியைத்தோண்டி உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே நர்சிங் மாணவி தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை பெற்றெடுத்து உள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டின் வாசலிலேயே குழியை தோண்டி பிறந்த குழந்தையை புதைத்துள்ளார்.
அவ்வழியே சென்ற பெண் ஒருவர், புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரலை கேட்டு உடனடியாக அந்த குழியைத்தோண்டி உள்ளார். பின்னர் உயிருடன் இருந்த குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பிறந்த குழந்தை உயிருடன் புதைத்த சம்பவத்தில் கல்லூரி மாணவியின் காதலன் சிலம்பரசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள குழந்தையின் தாய், மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் குழந்தையுடன் இருப்பதால் அவரையும் பின்னர் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- கலவரம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஏன் ஆய்வு நடத்தவில்லை?
- கேமரா பதிவுகளை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சண்முகம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் கடந்த 5-ந் தேதி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட விழாவினை பார்க்க சென்ற பட்டியல் சமுதாய மக்களை தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் நேரடியாக எந்த ஆய்வும் நடத்தவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா, மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.
பின்னர் அரசு வக்கீல்கள் வாதிடுகையில், "பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் சேர்த்து இடைக்கால நிவாரணமாக ரூ.8¾ லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்த வீடுகளுக்கு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் வீடு கட்டி கொடுக்கப்படும். அமைதி பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் கோவிலில் வழிபட அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றனர்.
அதற்கு நீதிபதிகள், கலவரம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஏன் ஆய்வு நடத்தவில்லை? மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., வருவாய் துறையினர் அனைவரும் ஒயிர் காலர் வேலைதான் செய்வீர்களா? என கேள்வி எழுப்பினர். பின்னர் சம்பவம் தொடர்பான கேமரா பதிவுகளை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், வடகாடு திருவிழாவில் இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருணா இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் சம்பந்தப்பட்ட பட்டியலின மக்கள் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார்.
- சத்யராஜ் என்பவரது மகனின் முதல் பிறந்தநாள் விழாவை ஒட்டி அசைவ உணவு பரிமாறப்பட்டது.
- கருப்பையா என்ற 60 வயது நபர் சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் குருங்கலூர் வேளாணி கிராமத்தில், பிறந்தநாள் விழாவில் அசைவம் சாப்பிட்டவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்யராஜ் என்பவரது மகனின் முதல் பிறந்தநாள் விழாவை ஒட்டி அசைவ உணவு பரிமாறப்பட்டது.
பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டோர் அசைவ விருந்தை சாப்பிட்ட நிலையில், 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
கருப்பையா என்ற 60 வயது நபர் சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
30க்கும் மேற்பட்டோர் ஏம்பல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலருக்கு சிவகங்கை மாவட்டம் சூரக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கேப்டன் விஜயகாந்த் இப்போது நம்மிடையே இல்லை என்ற வருத்தம் எங்களுக்குள் எப்போதும் இருக்கும்.
- என்னையும் அவரையும் ஒப்பிட வேண்டாம்.
புதுக்கோட்டை:
தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளது. 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஊருக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். தே.மு.தி.க.வை கட்சி ரீதியாக வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டணி குறித்த அறிவிப்பு தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளியாகும்.
கேப்டன் விஜயகாந்த் இப்போது நம்மிடையே இல்லை என்ற வருத்தம் எங்களுக்குள் எப்போதும் இருக்கும். ஆனால், அவருடைய ஆசைகளையும், கொள்கைகளையும் நாங்கள் நிச்சயம் வென்றெடுப்போம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதனை அவருடைய நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.
த.வெ.கவுடன் கூட்டணி அமைப்பது பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜய பிரபாகரன், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். விஜய் ஒன்றும் எங்களுக்கு எதிரி இல்லை. அவர் அண்ணன் தானே.
விஜயகாந்த் குருபூஜை சமயத்திலும், 'கோட்' திரைப்படத்தின்போதும் அவரைச் சந்தித்திருக்கிறேன். அப்போது கூட்டணி விஷயங்கள் குறித்து நாங்கள் பேசவில்லை. என்னையும் அவரையும் ஒப்பிட வேண்டாம். எனக்கு இப்போது 33 வயதுதான் ஆகிறது. ஆனால் அண்ணனுக்கு 50 வயது.
அவர் என்னை விட மிகவும் சீனியர். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் பல லட்சம் இளைஞர்கள் அவருக்கு பின்னால் இருப்பது அவரது பலமாக நான் பார்க்கிறேன் என பதில் அளித்தார்.
- அரசு பஸ்ஸின் கண்ணாடிகள், காவல்துறை வாகனம் நொறுக்கப்பட்டது.
- மற்றொரு தரப்பில் புள்ளான் விடுதியைச் சேர்ந்த ராஜா 19 என்பவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவில் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த தேரோட்டத்தில் பங்கேற்ற இருதரப்பு இளைஞர்கள் அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பும்போது வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்தது. அதைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் வசிக்கும் பகுதிக்கு மற்றொரு தரப்பினர் திரண்டு சென்று தாக்குதல் நடத்தினர் .
இதில் வீடுகள், வாகனங்கள் அடுத்து நொறுக்கப்பட்டது. குடிசைக்கு தீ வைத்து கொளுத்தினர். மேலும் அரசு பஸ்ஸின் கண்ணாடிகள், காவல்துறை வாகனம் நொறுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் உள்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் வடகாடு ஆலங்குடி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மற்றும் அதிரடி படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். வீடுகள் தாக்கப் பட்ட பகுதியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார். இரு தரப்பினர் மோதல் சம்பவத்தால் வடகாடு கிராமத்தில் இன்று 3-வது நாளாக பதட்டம் நிலவுகிறது அங்கு பாதுகாப்பு பணிக்காக இன்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதல் கட்டமாக வீடுகள் மீது தாக்குதல் மற்றும் தீ வைத்தல் போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒரு தரப்பைச் சேர்ந்த ராமஜெயம், தனபால், வினித், பிரவீன், முருகேஷ், அர்ச்சுனன், அரவிந்தன் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் மற்றொரு தரப்பில் புள்ளான் விடுதியைச் சேர்ந்த ராஜா 19 என்பவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆக மொத்தம் இரு தரப்பைச் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக வடகாடு பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இன்று 2-வது நாளாக அந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. மோதல் சம்பவத்தால் பதட்டம் நிலவினாலும் திருவிழா வழக்கம்போல் நடந்து முடிந்தது அம்மனுக்கு தீர்த்தவாரி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.






