என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • பயப்படுவதற்கு தி.மு.க. அடிமை கட்சி கிடையாது.
    • எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, மக்களின் மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா கேட்டு வருவோரை அலைக்கழிக்காமல் உடனே தீர்வு காண வேண்டும். அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,

    மாநிலத்தின் நிதியை கேட்டு பெறுவதற்காக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் சென்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அரசியல் பண்ணத்தான் செய்வார். ED-க்கும் மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று தொடர்ந்து பலமுறை சொல்லிக்கொண்டு வருகிறேன். தொடர்ந்து குரல் கொடுப்போம்.

    மிரட்டி அடி பணிய வைக்க பார்த்தார்கள். பயப்படுவதற்கு தி.மு.க. அடிமை கட்சி கிடையாது. கலைஞர் உருவாக்குன கட்சி. சுயமரியாதை கட்சி. பெரியாரின் கொள்கைகள் உடைய கட்சி. தவறு செய்பவர்கள் தான் பயப்படணும். நாங்கள் யாருக்கும் அடிபணியணும், பயப்படணும்னு அவசியம் இல்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம் என்றார். 

    • தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் குழந்தையை பெற்றெடுத்த தீபாவிடம் விசாரணை நடத்தினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி. இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.

    இவரது மகள் தீபா (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் கல்லூரியின் விடுதியில் தங்கி நர்சிங் இறுதியாண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் தீபா, ஒருவருடன் காதல் வலையில் வீழ்ந்துள்ளார். இதன் காரணமாக அவர் கர்ப்பமானார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

    நிறைமாத கர்ப்பமாக இருந்த தீபாவிற்கு பிரசவ வலி வந்துள்ளது. அப்போது அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த குழந்தையை தனது வீட்டு வாசல் முன்பு குழி தோண்டி தீபா புதைத்தார்.

    அப்போது அவ்வழியாக சென்ற ஒரு பெண், குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அங்கும், இங்கும் சுற்றிப்பார்த்தார். அப்போது, தீபா வீட்டு வாசலில் மண்ணுக்குள் குழந்தையின் கை மட்டும் வெளியே தெரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததார்.

    பின்னர் புதைக்கப்பட்ட குழந்தையை அந்த பெண் தோண்டி எடுத்த போது, குழந்தை உயிருடன் இருந்தது. உடனே குழந்தையை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் பனையப்பட்டி அரசு சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குபின், மேல்சிகிச் சைக்காக குழந்தை புதுக்கோட்டை ராணியர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பின்னர் அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் குறித்து பனையப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் குழந்தையை பெற்றெடுத்த தீபாவிடம் விசாரணை நடத்தினர்.

    காதலனுடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமான தீபா, நிறைமாதம் ஆன உடன், குழந்தையை பெற்றெடுப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். குழந்தை பிறந்த உடன் காதலனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்போது அவர், திருமணமாகாத நிலையில் குழந்தையினை பெற்றெடுத்ததால் உறவினர்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் எனவே பிறந்த குழந்தையை மறைத்துவிட்டு ஒன்றும் நடக்காதது போல் வந்து விடு என காதலன் கூறியதாக தெரியவருகிறது.

    இதனை தொடர்ந்து தீபா குழந்தையை தனது வீட்டு வசாலில் குழி தோண்டி அவசர அவசரமாக உயிருடன் புதைத்துள்ளார் என தெரியவருகிறது.

    போலீசார் காதலன் மற்றும் தீபா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார், வீட்டிலேயே தனக்குத் தானே அவரே எப்படி பிரசவம் பார்த்தார்?

    குழந்தையை அவர் மட்டுமே புதைத்தாரா? அவருக்கு உடந்தையாக அவரது காதலன் இருந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவி வீட்டின் வாசலிலேயே குழியை தோண்டி பிறந்த குழந்தையை புதைத்துள்ளார்.
    • அவ்வழியே சென்ற பெண், புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரலை கேட்டு உடனடியாக அந்த குழியைத்தோண்டி உள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே நர்சிங் மாணவி தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை பெற்றெடுத்து உள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டின் வாசலிலேயே குழியை தோண்டி பிறந்த குழந்தையை புதைத்துள்ளார்.

    அவ்வழியே சென்ற பெண் ஒருவர், புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரலை கேட்டு உடனடியாக அந்த குழியைத்தோண்டி உள்ளார். பின்னர் உயிருடன் இருந்த குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    பிறந்த குழந்தை உயிருடன் புதைத்த சம்பவத்தில் கல்லூரி மாணவியின் காதலன் சிலம்பரசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள குழந்தையின் தாய், மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் குழந்தையுடன் இருப்பதால் அவரையும் பின்னர் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • கலவரம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஏன் ஆய்வு நடத்தவில்லை?
    • கேமரா பதிவுகளை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு.

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சண்முகம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் கடந்த 5-ந் தேதி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட விழாவினை பார்க்க சென்ற பட்டியல் சமுதாய மக்களை தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் நேரடியாக எந்த ஆய்வும் நடத்தவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா, மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.

    பின்னர் அரசு வக்கீல்கள் வாதிடுகையில், "பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் சேர்த்து இடைக்கால நிவாரணமாக ரூ.8¾ லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்த வீடுகளுக்கு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் வீடு கட்டி கொடுக்கப்படும். அமைதி பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் கோவிலில் வழிபட அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றனர்.

    அதற்கு நீதிபதிகள், கலவரம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஏன் ஆய்வு நடத்தவில்லை? மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., வருவாய் துறையினர் அனைவரும் ஒயிர் காலர் வேலைதான் செய்வீர்களா? என கேள்வி எழுப்பினர். பின்னர் சம்பவம் தொடர்பான கேமரா பதிவுகளை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

    இந்த நிலையில், வடகாடு திருவிழாவில் இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருணா இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் சம்பந்தப்பட்ட பட்டியலின மக்கள் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார். 

    • சத்யராஜ் என்பவரது மகனின் முதல் பிறந்தநாள் விழாவை ஒட்டி அசைவ உணவு பரிமாறப்பட்டது.
    • கருப்பையா என்ற 60 வயது நபர் சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் குருங்கலூர் வேளாணி கிராமத்தில், பிறந்தநாள் விழாவில் அசைவம் சாப்பிட்டவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சத்யராஜ் என்பவரது மகனின் முதல் பிறந்தநாள் விழாவை ஒட்டி அசைவ உணவு பரிமாறப்பட்டது.

    பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டோர் அசைவ விருந்தை சாப்பிட்ட நிலையில், 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    கருப்பையா என்ற 60 வயது நபர் சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

    30க்கும் மேற்பட்டோர் ஏம்பல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலருக்கு சிவகங்கை மாவட்டம் சூரக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கேப்டன் விஜயகாந்த் இப்போது நம்மிடையே இல்லை என்ற வருத்தம் எங்களுக்குள் எப்போதும் இருக்கும்.
    • என்னையும் அவரையும் ஒப்பிட வேண்டாம்.

    புதுக்கோட்டை:

    தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளது. 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஊருக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம்.

    அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். தே.மு.தி.க.வை கட்சி ரீதியாக வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டணி குறித்த அறிவிப்பு தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளியாகும்.

    கேப்டன் விஜயகாந்த் இப்போது நம்மிடையே இல்லை என்ற வருத்தம் எங்களுக்குள் எப்போதும் இருக்கும். ஆனால், அவருடைய ஆசைகளையும், கொள்கைகளையும் நாங்கள் நிச்சயம் வென்றெடுப்போம்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதனை அவருடைய நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.

    த.வெ.கவுடன் கூட்டணி அமைப்பது பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜய பிரபாகரன், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். விஜய் ஒன்றும் எங்களுக்கு எதிரி இல்லை. அவர் அண்ணன் தானே.

    விஜயகாந்த் குருபூஜை சமயத்திலும், 'கோட்' திரைப்படத்தின்போதும் அவரைச் சந்தித்திருக்கிறேன். அப்போது கூட்டணி விஷயங்கள் குறித்து நாங்கள் பேசவில்லை. என்னையும் அவரையும் ஒப்பிட வேண்டாம். எனக்கு இப்போது 33 வயதுதான் ஆகிறது. ஆனால் அண்ணனுக்கு 50 வயது.

    அவர் என்னை விட மிகவும் சீனியர். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் பல லட்சம் இளைஞர்கள் அவருக்கு பின்னால் இருப்பது அவரது பலமாக நான் பார்க்கிறேன் என பதில் அளித்தார்.

    • அரசு பஸ்ஸின் கண்ணாடிகள், காவல்துறை வாகனம் நொறுக்கப்பட்டது.
    • மற்றொரு தரப்பில் புள்ளான் விடுதியைச் சேர்ந்த ராஜா 19 என்பவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவில் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இந்த தேரோட்டத்தில் பங்கேற்ற இருதரப்பு இளைஞர்கள் அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பும்போது வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்தது. அதைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் வசிக்கும் பகுதிக்கு மற்றொரு தரப்பினர் திரண்டு சென்று தாக்குதல் நடத்தினர் .

    இதில் வீடுகள், வாகனங்கள் அடுத்து நொறுக்கப்பட்டது. குடிசைக்கு தீ வைத்து கொளுத்தினர். மேலும் அரசு பஸ்ஸின் கண்ணாடிகள், காவல்துறை வாகனம் நொறுக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் உள்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் வடகாடு ஆலங்குடி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மற்றும் அதிரடி படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். வீடுகள் தாக்கப் பட்ட பகுதியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார். இரு தரப்பினர் மோதல் சம்பவத்தால் வடகாடு கிராமத்தில் இன்று 3-வது நாளாக பதட்டம் நிலவுகிறது அங்கு பாதுகாப்பு பணிக்காக இன்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    முதல் கட்டமாக வீடுகள் மீது தாக்குதல் மற்றும் தீ வைத்தல் போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒரு தரப்பைச் சேர்ந்த ராமஜெயம், தனபால், வினித், பிரவீன், முருகேஷ், அர்ச்சுனன், அரவிந்தன் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் மற்றொரு தரப்பில் புள்ளான் விடுதியைச் சேர்ந்த ராஜா 19 என்பவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆக மொத்தம் இரு தரப்பைச் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக வடகாடு பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இன்று 2-வது நாளாக அந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. மோதல் சம்பவத்தால் பதட்டம் நிலவினாலும் திருவிழா வழக்கம்போல் நடந்து முடிந்தது அம்மனுக்கு தீர்த்தவாரி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.

    • முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காரை பின்தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது.
    • போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுக் கொண்டிருந்தபோது கெண்டையன்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காரை பின்தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது.

    முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியன் சென்ற கார், மீன் வியாபாரி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    காரில் பயணம் செய்த முன்னாள் எம்எல்ஏ ராசு, கார் ஓட்டுநர் ரமணி மற்றும் மீன் வியாபரி படுகாயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    • அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
    • பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக முகமது கனி கடிதம் எழுதியுள்ளார்.

    தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி போட்டியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

    அதிமுக- பாஜக கூட்டணி, அதிமுகவில் சலசலப்பை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதுக்கோட்டை அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக முகமது கனி கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி என சி. விஜயபாஸ்கருக்கு எழுதிய கடிதத்தில், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • வேண்டுமென்றே எதுவும் பேச மாட்டோம்.
    • பொன்முடி மீதான நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும்.

    புதுக்கோட்டை:

    அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், அவர் தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் நீடித்து வருகிறார்.

    இதனை தொடர்ந்து, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி கேசுவலாக பேசி இருக்கலாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    வேண்டுமென்றே எதுவும் பேச மாட்டோம். பேச்சுவாக்கில் Slip ஆகி இருக்கும். சீனியர் அமைச்சர் குறித்து கருத்து சொல்ற உரிமை எனக்கு கிடையாது. பொன்முடி மீதான நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். 

    • தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது மழை மற்றும் வெயில் அடித்து வருகிறது.
    • மீன்வளத்துறையின் அறிவிப்பை தொடர்ந்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகங்களில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் மீனவ கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

    இதனை நம்பி சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வசதி பெறுகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது மழை மற்றும் வெயில் அடித்து வருகிறது.

    இதனால் கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மீன்வளத்துறையின் அறிவிப்பை தொடர்ந்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • மழையூர் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்ம ஆசாமிகள் சிலர் முருகேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
    • சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவரது மகன் முருகேசன் (வயது 25), மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று இரவு மழையூர் கடைவீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    மழையூர் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்ம ஆசாமிகள் சிலர் முருகேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், தலை, தோள்பட்டை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்த முருகேசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே முருகேசன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தகவலை அறிந்த அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மழையூரில் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் முருகேசன் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதே பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முருகேசன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    ×