என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் உண்டியல் கொள்ளை"

    • கொள்ளை சம்பவம் தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கைவரிசை காட்டிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    • திருடப்பட்ட உண்டியலில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை காணிக்கை இருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்ததனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் எதிரே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கூரைக்குண்டு கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அனைத்து சமுதாயத்திற்கும் உட்பட்டது.

    இந்த கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் விசேஷ நாட்களில் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை திறந்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த 2 அடி உயரமுள்ள சில்வர் உண்டியலை பெயர்த்து எடுத்துக் கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். இன்று அதிகாலை கோவில் கதவு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் சூலக்கரை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் தடயங்களை சேகரித்தனர். அப்போது அங்குள்ள மர்த்தடியில் கோவில் கதவின் பூட்டு கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் கைரேகைகளை சேகரித்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கைவரிசை காட்டிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    திருடப்பட்ட உண்டியலில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை காணிக்கை இருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்ததனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • உண்டியல் கிடப்பதைப் பார்த்து பொது மக்கள் கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
    • தொடர் உண்டியல் உடைப்பு சம்பவங்கள் தொடர்பாக கீரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்துத் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் திருட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி, கோவில் உண்டியல்கள் உடைப்பு எனத் திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இத்தகைய சூழலில் தான் கீரமங்கலம் காவல் சரகத்தில் உள்ள வேம்பங்குடி மேற்கு கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் கோவில், கொத்தமங்கலம் கூலாட்சி கொல்லை காமாட்சியம்மன் கோவில் உண்டியல்கள் உடைத்துத் திருடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சேந்தன்குடி பெரியாத்தாள் ஏரிக்கு வடக்குப் பக்கம் உள்ள புதருக்குள் ஒரு சில்வர் உண்டியல் கிடப்பதைப் பார்த்து பொது மக்கள் கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரித்ததில் அது நகரம் காளியம்மன் கோவில் உண்டியல் என்பது தெரிய வந்துள்ளது.

    கீரமங்கலம் காவல் சரகத்தில் மட்டும் கடந்த 27-ம் தேதி ஒரே இரவில் 3 ஊர்களில் 3 கோவில் உண்டியல்களை உடைத்துக் கொள்ளையடித்துள்ளனர்.

    இதனால் கீரமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் உண்டியல் உடைப்பு சம்பவங்கள் தொடர்பாக கீரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தடயவியல் துறையினர் கைரேகை பதிவுகளைச் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

    கோவில் பூட்டை உடைத்து உண்டியல்களை கொள்ளையடித்த மர்ம மனிதர்கள், ரெயில்வே ஊழியர் வீடு உள்பட 2 வீடுகளிலும் புகுந்து கை வரிசை காட்டியுள்ளனர்.

    மதுரை:

    மதுரை திருநகர் மருது பாண்டி நகரை சேர்ந்தவர் ராமநாதன். இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தா. வீட்டை பூட்டிவிட்டு மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதேபோல பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் திருச்சி சென்று விட்டார். இவரது வீட்டின் பூட்டை உடைத்தும் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அக்கம் பக்கத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்பினால் தான் எவ்வளவு நகை போனது என்பது தெரியவரும்.

    இதற்கிடையில் அந்தப் பகுதியில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    அங்கிருந்த 2 உண்டியல்களை எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் உள்ளே இருந்த பணத்தை எடுத்து விட்டு பின்பக்கமாக உண்டியலை போட்டு சென்றுள்ளனர்.

    மேலும் கோவில் கருவறையில் இருந்த வெள்ளி கவசம், உற்சவர் சிலைகள் தப்பின. இச்சம்பவம் குறித்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு , கை ரேகைகளை சேகரித்தனர். திருட்டு குறித்து திருநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

    ஒரே பகுதியில் வீடுகள் மற்றும் கோவில்களில் கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திட்டக்குடி அருகே உண்டியலை உடைத்து இரண்டு கோவில்களில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. #Robbery
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த மேல்ஆதனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடந்தது.

    கோவிலின் பூசாரியாக வேலாயுதம் என்பவர் இருந்து வருகிறார். அவர் வழக்கம்போல் பூஜைகளை முடித்து கொண்டு நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் கோவிலின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த 2 உண்டியல்களை அடியோடு பெயர்த்து எடுத்தனர். பின்னர் அம்மன் கழுத்தில் கிடந்த ½ பவுன் நகையையும் திருடினர்.

    இதைத்தொடர்ந்து இந்த கோவிலின் அருகே இருந்த அய்யனார் கோவிலுக்குள் புகுந்தனர். அங்கிருந்த உண்டியலையும் பெயர்த்து எடுத்து 3 உண்டியல்களையும் வெளியே கொண்டு சென்றனர். அதனை உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் மாரியம்மன் கோவிலை திறக்க வந்த பூசாரி வேலாயுதம் கோவிலில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து ராமநத்தம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கோவிலில் கொள்ளபோன உண்டியல்கள் உடைந்த நிலையில் அருகில் உள்ள வயல்வெளியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நகை மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

    கோவிலுக்குள் புகுந்து நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×