என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • 2026-ல் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.
    • கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள்.

    புதுக்கோட்டை:

    தி.மு.கவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக என்ற அ.தி.மு.க. வின் புதிய பிரசார திட்டங்களை புதுக்கோட்டையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் பதில் சொல்லுங்க அப்பா என்ற தலைப்பில் பெண்களின் பாதிப்புகள் குறித்த காணொலியையும் வெளியிட்டார்.

    தி.மு.க. அளித்த வாக்குறுதிகளின் உண்மை நிலையை அறிய மக்களுக்கு ரிப்போர்ட் கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்து தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று மக்களிடம் கொடுக்கப்பட உள்ள ரிப்போர்ட் கார்டையும் வெளியிட்டார்.

    இதன்பின் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * 2026-ல் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    * தி.மு.க. ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது.

    * நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழிவாங்குவது நல்ல அரசுக்கு அழகல்ல.

    * அ.தி.மு.க கூட்டணிக்கு பெரிய கட்சிகள் எப்போது வரவேண்டுமோ அப்போது வரும்.

    * கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள்.

    * தி.மு.க.வினர் சென்று பிரதமரின் வீட்டு கதவை தட்டினால் மட்டும் சரியா? என்றார்.


    • கடந்த 7-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.

    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதே தயாராகிவிட்டன. அந்த வகையில் எதிர்கட்சியான அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக களப்பணியை தற்போதே தொடங்கி விட்டனர். அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கடந்த 7-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    முதற்கட்ட சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தில் இருந்து தொடங்கி தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிறைவு செய்தாா். தொடர்ந்து 2-வது கட்ட சுற்றுப்பயணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நேற்று தொடங்கினார். அவர் கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.

    நேற்று கந்தர்வகோட்டை தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேசினார். அப்போது ஏராளமான பொதுமக்கள் குவிந்து இருந்தனர்.

    இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்திற்கு சென்றவர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

    அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கட்டுக்கட்டாக பணம் விநியோகம் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • அதிமுக ஆட்சியில் தொங்கப்பட்ட காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
    • காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 2,306 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டது.

    மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் புதுக்கோட்டை கந்தர்வகோட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது, எடப்பாடி பழனிசாமி உரையாற்றியதாவது:-

    அதிமுக ஆட்சியில் தொங்கப்பட்ட காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    ரூ.16000 கோடியில் தொடங்கப்பட்ட காவிரி- குண்டாறு திட்டம் முடக்கப்பட்டுள்ளது.

    அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தால் புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்கள் பயன் பெறுகின்றனர்.

    காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 2,306 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டது.

    புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்களுக்காக ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டது.

    அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மருதங்கோன் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

    வீட்டு மனை இல்லாத ஏழைகள், தாழ்த்தப்பட்டோருக்கு வீட்டு மனை கொடுத்து, இலவச வீடுகள் கட்டித் தரப்படும்.

    தைப்பெங்கலை கொண்டாடும் விதமாக அனைத்து குடும்பத்திற்கும் ரூ.2500 வழங்கப்படும்.

    விவசாயிகளுக்கு ஷிப்ட் முறையில் திமுக ஆட்சியில் மின்சாரம் தருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்களுக்கு கூடும் கூட்டத்தை விட அங்கு கூடிய கூட்டம் குறைவுதான்.
    • பா.ஜ.க. அரசு ஆளில்லா ரெயில்வே கேட்டுக்கு தீர்வு காண மாட்டார்கள். பாலம் கூட மாநில அரசுதான் கட்டி வருகிறது.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி முன்பு இது போன்றுதான் பிரசாரத்தை ஆரம்பித்தார். அதை மீறிதான் தி.மு.க. வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். இந்தமுறை இப்போது தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணியை ஆரம்பித்திருக்கிறார். நாங்கள் முன்னரே எங்கள் பணியை தொடங்கி விட்டோம்.

    அ.தி.மு.க. தொண்டர்களுக்கு பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை. அதனால் பா.ஜ.க. வை நன்மை பயக்கும் கட்சி என்று மாற்றுகிறார். நாங்கள் என்ன நன்மை செய்யாமலா இருக்கின்றோம்.

    முன்பு பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்று கூறினார். தற்போது கூட்டணி வைத்து நன்மை பயக்கும் கட்சி என்று கூறுகிறார். அதனை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமிக்கு கூடும் கூட்டத்தை விட பல மடங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. பிரசாரத்தின் தொடக்க இடம் என்பதால் அதனை ஒருங்கிணைப்பு செய்து அந்த கூட்டத்தைக் கூட்டி உள்ளனர்.

    எங்களுக்கு கூடும் கூட்டத்தை விட அங்கு கூடிய கூட்டம் குறைவுதான். நாளை முதலமைச்சர் திருவாரூர் வருகிறார். திருவாரூருக்கு வந்து பாருங்கள். முதலமைச்சருக்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று. 15-ந்தேதி மயிலாடுதுறைக்கு முதலமைச்சர் வருகிறார். அப்போது பாருங்கள் யாருக்கு கூடிய கூட்டம் அதிகம் என்று.

    ஓரணியில் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது. அனைத்து இடத்திலும் அதிகப்படியான உறுப்பினர்கள் சேருகின்றனர். மக்களே முன்வந்து சேருகின்றனர். மிகவும் பிரியமாக இருக்கின்றனர். சர்வர் சரியாக வேலை செய்யும் இடத்தில் எல்லாம் 30 ஆயிரம் பேர் வரை சேர்ந்துள்ளனர்.

    சர்வர் சில இடங்களில் வேலை செய்யவில்லை. அந்த இடத்தில்தான் கொஞ்சம் தாமதம் ஆகிறது. சர்வர் வேலை செய்யும் இடத்தில் சிறப்பாக இருக்கிறது. பா.ஜ.க. அரசு ஆளில்லா ரெயில்வே கேட்டுக்கு தீர்வு காண மாட்டார்கள். பாலம் கூட மாநில அரசுதான் கட்டி வருகிறது.

    பாலம் இணைப்பு கூட கொடுக்கவில்லை, நிலத்தை கையகப்படுத்தி நாங்கள் கொடுக்காமல் இல்லை, நிலம் கையகப்படுத்தும் பொழுது நிலத்திற்கு சொந்தக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகுதான் நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும் சூழல் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடிக்கு என்றைக்குமே தார்மீக உணர்வே கிடையாது.
    • நாங்கள் செய்வதை பின்பற்றி செய்து அதில் தோல்வியை தழுவக்கூடிய ஒரு வெற்றிகரமான நபர்தான் எடப்பாடி பழனிசாமி.

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எதிரிகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு நாங்கள் இல்லை. அதேநேரத்தில் எதிரிகளை சமாளிக்கக்கூடிய சக்தியும் ஆற்றலும் எங்களுடைய தலைவருக்கு உண்டு என்பதை எடுத்துச்சொல்வதில் நாங்கள் முன்னணியில் நிற்கின்றோம்.

    இன்று நாங்கள் செய்து இருக்கும் சாதனைகள் இந்தியாவிலேயே தமிழ்நாடு அடைந்து இருக்கும் நன்மைகள், தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்திருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் இவை எங்கள் கூட்டணியை முன்னேற்றி சென்று வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும்.

    எடப்பாடிக்கு என்றைக்குமே தார்மீக உணர்வே கிடையாது.

    தூத்துக்குடி சம்பவத்தில் காக்கை, குருவிகள் போல் சுட்டுக்கொள்ளப்பட்டார்கள். அதைக்கேட்டபோது நான் டி.வி.யில்தான் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு முதலமைச்சராக இருந்தவர். அவரிடத்தில் நாம் நாகரித்தை எதிர்பார்க்க முடியாது.

    அதேநேரம் தலைவர் தளபதி அவர்கள் நாகரிகம் உள்ளவர். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தரக்கூடியவர். இறந்துபோன அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் ஆறுதல் சொல்ல வேண்டியது அவரது பணி, கடமை. அதை உணர்ந்து செயலாற்றக்கூடியவர் எங்களுடைய முதலமைச்சர். கடமை உணர்வு எதுவுமே இல்லாத ஒரு கொத்தடிமை எடப்பாடி பழனிசாமி.

    நாங்கள் மக்களின் மனதில் இருக்கிறோம்.

    ஏட்டிக்கு போட்டி அதுக்கு பெயர் பழனிசாமி. நாங்கள் செய்வதை பின்பற்றி செய்து அதில் தோல்வியை தழுவக்கூடிய ஒரு வெற்றிகரமான நபர்தான் எடப்பாடி பழனிசாமி.

    இதுவரை தோல்வி கண்ட எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தோல்வி காண்பார். நாங்கள் எடுத்து இருக்கக்கூடிய நடவடிக்கைகள் இன்னும் எங்கள் பலத்தை அதிகரித்து இருக்கிறதே தவிர நாங்கள் பலவீனமாக ஆகவில்லை. எங்களுடைய பலம் அதிகரிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உண்டியல் கிடப்பதைப் பார்த்து பொது மக்கள் கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
    • தொடர் உண்டியல் உடைப்பு சம்பவங்கள் தொடர்பாக கீரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்துத் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் திருட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி, கோவில் உண்டியல்கள் உடைப்பு எனத் திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இத்தகைய சூழலில் தான் கீரமங்கலம் காவல் சரகத்தில் உள்ள வேம்பங்குடி மேற்கு கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் கோவில், கொத்தமங்கலம் கூலாட்சி கொல்லை காமாட்சியம்மன் கோவில் உண்டியல்கள் உடைத்துத் திருடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சேந்தன்குடி பெரியாத்தாள் ஏரிக்கு வடக்குப் பக்கம் உள்ள புதருக்குள் ஒரு சில்வர் உண்டியல் கிடப்பதைப் பார்த்து பொது மக்கள் கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரித்ததில் அது நகரம் காளியம்மன் கோவில் உண்டியல் என்பது தெரிய வந்துள்ளது.

    கீரமங்கலம் காவல் சரகத்தில் மட்டும் கடந்த 27-ம் தேதி ஒரே இரவில் 3 ஊர்களில் 3 கோவில் உண்டியல்களை உடைத்துக் கொள்ளையடித்துள்ளனர்.

    இதனால் கீரமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் உண்டியல் உடைப்பு சம்பவங்கள் தொடர்பாக கீரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தடயவியல் துறையினர் கைரேகை பதிவுகளைச் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

    • காரின் முகப்பு பகுதியில் போலீஸ் என்ற 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருந்தது.
    • பெண் போலீஸ் அபராதம் விதித்ததுடன் அந்த காரை உடனடியாக நகர்த்தவும் நடவடிக்கை எடுத்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்ராக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் தினேஷ். இவர் புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள தனியார் விடுதிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக தனக்கு சொந்தமான காரில் வந்தார்.

    காரை வேறு ஒரு டிரைவர் ஓட்டினார். தினேஷ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்ட நிலையில் டிரைவர் அந்த காரை போக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்தி இருந்ததாக தெரிகிறது. அந்த இடத்தில் கார் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. காரின் முகப்பு பகுதியில் போலீஸ் என்ற 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருந்தது.

    பொதுமக்கள் சத்தம் போட்டும் அந்த காரில் இருந்த டிரைவர் வாகனத்தை விட்டு இறங்காமல் இருந்ததோடு, வாகனத்தை நகர்த்தாமலும் இருந்ததாக கூறப்படுகிறது.

    அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ் கஸ்தூரி அங்கு வந்தார். காரை எடுக்க சொல்லி கஸ்தூரி வற்புறுத்தினார். அதற்கு இது போலீஸ்காரர் கார் என்று டிரைவர் கூறியதாக தெரிகிறது.

    உடனே பெண்போலீஸ் காயத்ரி யார் காராக இருந்தாலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியது தவறு என கூறி 2 பிரிவுகளில் அந்த வாகனத்துக்கு ரூ.2,500 அபராதம் விதித்தார். அந்த காரில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் இருந்தபோதிலும் தனது கடமையில், கருத்தாக செயல்பட்டு பெண் போலீஸ் அபராதம் விதித்ததுடன் அந்த காரை உடனடியாக நகர்த்தவும் நடவடிக்கை எடுத்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதனால் அந்த பெண் போலீஸ் காயத்ரிக்குக்கு பாராட்டுகள் குவிகிறது. விழா முடிந்து வந்த போலீஸ்காரர் தினேஷ் தனது டிரைவரை கண்டித்தார். பின்னர் அங்கிருந்து காரை எடுத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
    • கூட்டணியில் யாருக்கு எவ்வளவு சீட் என்பதை எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார்.

    புதுக்கோட்டை:

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

    இருப்பினும், அதிமுக- பாஜக கூட்டணி ரெய்டுக்கு பயந்து அமைந்த கூட்டணி என கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில், 'தினத்தந்தி' நாளிதழுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும். தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதலமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார்.

    மேலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள். அனைத்தும் தெளிவாகிவிடும் என்று கூறினார்.

    அமித்ஷாவின் இந்த பேட்டி தமிழக அரசியல் மட்டுமின்றி அதிமுக தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்டளை தளபதி எடப்பாடி பழனிசாமி தான். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். கூட்டணியில் யாருக்கு எவ்வளவு சீட் என்பதை எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க இணைவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கான நகர்வுகள் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

    • இந்து சமய அறநிலையத்துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது.
    • தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் போலி வேடம் எடுபடாது.

    புதுக்கோட்டையில் கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * திராவிடத்திற்கு எதிரான மாநாட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது.

    * இந்து சமய அறநிலையத்துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது.

    * இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சிறுபான்மையினருக்குதான் பாதுகாப்பு தேவை.

    * முருகனை தமிழ்நாட்டை விட்டு கடத்திச்செல்ல முடியாது அவர் நம்மோடுதான் இருப்பார்.

    * யார் தமிழ்நாட்டை ஆண்டால் பாதுகாப்பு என தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு தெரியும்.

    * தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் போலி வேடம் எடுபடாது.

    * அ.தி.மு.க. என்று பெயர் வைத்துக்கொள்ளவே தகுதியற்றவர்களாக ஆகி விட்டார்கள்.

    * திராவிடத்தை வீழ்த்துவோம் என்று சொல்லி தான் இந்த முருகன் மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் கட்சியின் பெயரிலேயே திராவிடம் இருப்பதை எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டார். மற்றவர்களும் இன்றைக்கு மறந்துவிட்டு பா.ஜ.க.வின் கொத்தடிமைகள் நாங்கள் என்பதை நிருபித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு கிடைத்து இருக்கும் அருமையான அடிமைகள் அவர்கள்.

    * இங்கு எந்த ஒரு மத கலாச்சாரத்திற்கு நாங்கள் இங்கு இடம் கொடுக்க மாட்டோம். எல்லா மாணவர்களும் ஒன்றுதான். அவர்கள் அண்ணன் தம்பிகளாக தான் தமிழ்நாட்டின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருக்கிறார்கள். எல்லா மாநிலத்திலும் கலாட்டாவை உருவாக்கி, அங்கே பயங்கரவாதங்களை உருவாக்கி, சண்டை சச்சரவுகளை உருவாக்கி நுழைந்தார்கள். இங்கே அப்படி நுழைய திராவிட மாடல் அரசு பா.ஜ.க.வை எந்த காலத்திலும் அனுமதிக்காது. அடித்து விரட்டப்படுவார்கள்.

    * இங்கே எப்போதும் single engine தான். ஒரே இயக்குபவர் தான் எங்கள் தலைவர் தளபதி தான். எங்கள் தோழமை கட்சிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

    * சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரைவில் சட்டப்படி மணல் குவாரிகள் திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இவ்வளவு நாள் முருகனுக்கு ஏன் மாநாடு நடத்தவில்லை?
    • அரசியலுக்காக முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள என்றார் சீமான்.

    புதுக்கோட்டை:

    மதுரை மாவட்டத்தில் வரும் 22-ம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண், மத்திய மந்திரிகள், பா.ஜ.க. தேசிய தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அவர்கள் ஒப்புக்கு பேசுகிறார்கள். நான் உளமாற முருகனை பற்றி பேசுகிறேன். நான் முருகனின் பேரன்.

    நான் செய்வதற்கும், அவர்கள் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பா.ஜ.க. நேற்று ஆரம்பிக்கப்பட்ட கட்சி இல்லை. இவ்வளவு நாள் முருகனுக்கு ஏன் அவர்கள் மாநாடு நடத்தவில்லை?

    தமிழ்நாட்டில் முருகனுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. முருகனை தொட்டால் ஓட்டு வருமா என பா.ஜ.க. பார்க்கிறது.

    அரசியலுக்காக முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள். அவர்களின் அரசியலுக்காக உத்தர பிரதேசத்தில் ராமரை தொடுவார்கள், கேரளாவில் ஐயப்பனை தொடுவார்கள், ஒடிசாவில் பூரி ஜெகன்நாதரை தொடுவார்கள், தமிழ்நாட்டில் முருகனை தொட்டிருக்கிறார்கள்.

    இதற்கெல்லாம் ஏமாறும் கூட்டம் என்று நம்மை நினைத்துவிட்டார்களா? பா.ஜ.க. மத அரசியல் செய்கிறார்கள், மக்கள் நல அரசியல் செய்யவில்லை என தெரிவித்தார்.

    • 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.
    • கமலுக்கோ அவரது கட்சிக்கோ பா.ஜ.க. ஆதரவு கிடையாது. ஆனால் தமிழுக்கு எப்போதும் ஆதரவு உண்டு.

    புதுக்கோட்டையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. யார் அந்த சார்? என்று ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. ஆனால் காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை.

    குற்றப்பத்திரிகை தெளிவில்லாமல் இருக்கிறது. தெளிவுபடுத்த வேண்டியது தமிழ்நாடு முதலமைச்சரின் பொறுப்பு.

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மோசமாக உள்ளது. நவீன வகையான போதை மருந்து நடமாட்டம் தமிழகத்தில் தான் இருக்கிறது.

    தி.மு.க. தோல்வி பயத்தில் இருக்கிறது. அதனால் தான் எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் உறுதியாக இருந்தால் எங்கள் கூட்டணியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.

    தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்கள் இருக்கின்றனர். வரக்கூடிய தேர்தலை அனைவரும் சேர்ந்து சந்திக்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களிடம் பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

    தமிழை உயர்த்தி பேசினால் நாங்கள் வரவேற்போம் . ஆனால் ஒரு மொழியை சிறுமைப்படுத்தி, ஒரு மொழியை உயர்த்திப் பேசினால் தேவையில்லாத விவகாரங்கள் வரும் அதை தான் கமல்ஹாசன் செய்துள்ளார்

    தமிழ் 5000 வருடத்திற்கு முன்பானது என்பதை யாரும் மறுப்பதற்கு கிடையாது. ஆனால் அதற்காக மற்றொரு மொழி சிறுமை என்று கூற முடியாது. அனைத்து மொழியுமே உயர்ந்தது. கமலுக்கோ அவரது கட்சிக்கோ பா.ஜ.க. ஆதரவு கிடையாது. ஆனால் தமிழுக்கு எப்போதும் ஆதரவு உண்டு.

    மத்திய மந்திரி அமித்ஷா வருகின்ற 8-ந் தேதி மதுரைக்கு வருகை தர உள்ளார். ஒவ்வொரு நிர்வாகிகளையும் சந்தித்து பேச உள்ளார். அண்ணா மலை குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்று திரும்பி உள்ளார். தொடர்ந்து இனி வரக்கூடிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார்.

    அனைத்து எதிர்கட்சிகளும் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும். தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகளை செல்வப் பெருந்தகை அழைத்து உள்ளார். இது குறித்து அந்தந்த கட்சிகள்தான் முடிவு எடுக்க வேண்டும்.

    இதுவரை தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை. வரக்கூடிய காலங்களில் அது சாத்தியமா என்று பார்க்கலாம். ஆனால் 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாமலை மாநில தலைவராக இருந்தபோது தமிழ்நாடு அரசியல் களம் அதிரடியாக இருந்தது. தற்போது அமைதியாக உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை உண்டு அவர் அதிரடியான அணுகுமுறை கையாண்டார். நான் அமைதியான அரசியல் செய்ய விரும்புகிறேன். அதிரடி அரசியல் வேண்டாம் என்றார்.

    • ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
    • வரும் காலங்களில் நிச்சயம் ஆட்சியில் பங்கு என்ற நிலை உருவாகும்.

    புதுக்கோட்டை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2024 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்த போது 5 எம்.பி. சீட்டுகளும், ஒரு ராஜ்ய சபை சீட்டு தருவதாக அ.தி.மு.க. ஒப்புக்கொண்டது. அதன்படி தற்பொழுது எங்களுக்கு அ.தி.மு.க. ராஜ்ய சபை சீட்டு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தே.மு.தி.க.வுக்கு மேல்-சபை எம்.பி. பதவி கொடுக்கவேண்டியது அ.தி.மு.க.வின் கடமை.

    பொறுத்தார் பூமி ஆள்வார், என்பதற்கிணங்க பதட்டமோ, அவசரமோ இல்லாமல் தே.மு.தி.க. உள்ளது. அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம். உறுதி அளித்தபடி மேல் சபை எம்.பி. சீட் தரவில்லை என்றால் என்ன செய்வது என்று தே.மு.தி.க. பிறகு பார்த்துக்கொள்ளும்.

    தேர்தலுக்கு கால அவகாசம் உள்ளது. வரும் ஜனவரிக்குள் எல்லாம் முடிவு செய்யப்படும். 234 தொகுதிகளுக்கும் பூத் வாரியாக கமிட்டி நியமித்து 2 நாளில் தெரிவிக்கப்பட உள்ளது. தே.மு.தி.க. வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை கொடுப்பதும் இல்லை, யாரிடமும் அட்வைஸ் பெறுவதும் இல்லை.

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். வரும் காலங்களில் நிச்சயம் ஆட்சியில் பங்கு என்ற நிலை உருவாகும்.

    தமிழர்களுக்கு அன்னை தமிழ் மொழி தான். அந்தந்த மாநிலத்திற்கு அவர் அவர்களின் மொழிகள் தாய்மொழி. நமக்கு ஆதி மொழி தமிழ் மொழி. அண்ணா பல்கலைக்கழக பிரச்சனையில் ஞானசேகரன் தண்டனை கொடுத்தது வரவேற்கத்தக்கது.

    இருப்பினும் ஞானசேகரன் பின்னணியில் யார்? யார்? உடந்தையாக இருந்தார்களோ, அவர்களுக்கும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நடிகர் ராஜேஷ் காலமானார் என்று செய்தி வேதனை அளிக்கிறது. விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர் ராஜேஷ்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நகரச் செயலாளர் பரமஜோதி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜாகிர் உள்பட பலர் இருந்தனர்.

    ×