என் மலர்
மதுரை
- கடந்த ஐபிஎல்-இல் நன்றாக செயல்பட்டேன்.
- டிஎன்பிஎல் கிராமப்புற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். யார்க்கர் பந்துவீச்சில் புகழ்பெற்ற நடராஜன் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருப்பூர் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிசிசிஐ தன்னை புறக்கணிக்கிறதா, கிரிக்கெட் வாரியத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது பேசிய அவர், "பிசிசிஐ-இல் எனக்கு வாய்ப்பு மறுக்கப்படவில்லை. அதனால் தான் நான் இங்கு நடராஜனாக அமர்ந்து இருக்கிறேன். காயத்தால் என்னால் சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. கிரிக்கெட்டில் அரசியல் இல்லை. நான் நல்ல முறையில் தயாராகி வருகிறேன். கடந்த ஐபிஎல்-இல் நன்றாக செயல்பட்டேன்."
"பிசிசிஐ வீரர்களிடம் ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பதில்லை. கிரிக்கெட் வாரியம் மற்றும் சக வீரர்கள் ஒத்துழைப்பு இருந்ததால், தான் என்னால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடிந்தது. ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு, பலரும் டிஎன்பிஎல் போட்டிகளை பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎல் சிறப்பாக வளர்ச்சி பெற்று வருகிறது."
"அதிகளவு இளம் வீரர்கள் ஒவ்வொரு முறையும் டிஎன்பிஎல்-இல் சிறப்பாக செயல்படுகின்றனர். டிஎன்பிஎல் மூலம் கிராமப்புற வீரர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. கஷ்டப்பட்டால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். கடின உழைப்புடன், எப்போதும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.
- 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில் விதிகளை மீறி ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.
முள்ளிபள்ளம் அய்யப்பன் கோவில் முதல் இளங்காளியம்மன் கோவில் வரை ஆக்கிரமித்து 128 வீடுகள் கட்டப்பட்டுள்ள தாகவும், இதனை அகற்ற வேண்டுமென தனி நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டின் ஆக்கிரமிப்பாளர்களுக்கு காலி செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்யாமல் அகற்றக் கூடாது என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனாலும் கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ராதா முத்துக் கிருஷ்ணன், வாடிப்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன், சமயநல்லூர் டி.எஸ்.பி. ஆனந்தராஜ், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் 4 ஜே.சி.பி. எந்திரங்களின் உதவியுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
வீடுகளை இடிக்கும் போது அந்தப்பகுதிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் சிலர் அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் கோர்ட்டு உத்தரவுப்படி இன்று மதியம் வரை ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டது. முள்ளிப்பள்ளம் அய்யப்பன் கோவில் முதல் இளங்காளியம்மன் கோவில் வரை 1.2 கிலோ மீட்டரில் கட்டப்பட்டிருந்த 128 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று மதியம் வரை ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படும். நாளையும் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சுமார் 50 ஆண்டுகாலம் குடியிருந்து வந்த வீடுகள் இடிக்கப்பட்டதால் அந்தப்பகுதி பொதுமக்கள் சோகத்துடன் காணப்பட்டனர். தொடர் ந்து முள்ளிப்பள்ளத்தில் பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகத்தை அடித்து உடைத்தனர்.
- ஒரே சாதனை கடன் சுமையை தமிழக மக்கள் தலையில் சுமத்தியது.
மதுரை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
3 வேளையும், குறைந்த விலையில் ஏழை, எளியவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரும் வயி ராற சாப்பிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், அம்மா 2013-ம் ஆண்டு அம்மா உணவங்களை தொடங்கி மலிவு விலையில் தரமான உணவு வழங்கினார்கள்.
ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் ஏகோபித்த ஆதரவு காரணமாக தமிழகம் முழுவதும் அம்மா உணவுகள் தொடங்கப்பட்டன.
ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடியார் ஆட்சியிலும், அம்மா உணவங்கள் தரமான, சுவையான உணவு மக்களுக்கு அளித்து வரப்பட்டன. குறிப்பாக கொரோனா பெரும் தொற்று காலகட்டத்தில் அனைத்து தொழில்களும் முடங்கிய போது, தமிழக முழுவதும் அம்மா உணவுகளுக்கு வருகை தரும் அனைவருக்கும் விலையில்லாமல் 3 வேளையும் உணவுகள் வழங்கப்பட்டது. இதை மக்கள் இன்னும் மறக்க வில்லை.
அம்மா என்ற சொல்லை கேட்டாலே காதில் ஈயம் காய்ச்சி ஊற்றுவது போல் பதறும் இந்த விடியா தி.மு.க. அரசின் ஆட்சியாளர்கள், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே தமிழக முழுவதும் அம்மா உணவகங்களை அடித்து நெருக்கியும், பணிபுரியும் பெண்கள் எண்ணிக்கையை 3-ல் ஒரு பங்காகக் குறைத்தும் படிப்படியாக அம்மா உணவகங்களுக்கு மூடு விழா நடத்தினர்.
அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் 90 சதவீதம் குறைக்கப்பட்டது, பழுதடைந்த உபகரணங்கள் சீர் செய்யப்படவில்லை, சென்னையில் சுகாதாரத் துறை மற்றும் நகராட்சிக்கு இடம் தேவை என்று பல அம்மா உணவகங்கள் மூடப்பட்டன.
உண்மை நிலை இவ்வாறு இருக்க, எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தலை கருத்திற்கொண்டு, நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசின் முதலமைச்சர் கடந்த 19-ந்தேதி அன்று தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, தனது எக்ஸ் வளைதளத்தில் அம்மா உணவகங்களை மூடி விடுவோம் என எதிர்க்கட்சிகள் புரளிகளைக் கிளப்பியதாக முதலை கண்ணீர் வடித்துள்ளார். அம்மா உணவகங்கள் மீது திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கறை காட்டுவது ஏன்?

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது என்று, கடந்த 3 ஆண்டுகளாக மாற்றி மாற்றி ஒரே குரலில் பேசிய பொய்யை நம்பி, பருவ மழையின் போது பெய்த சிறு மழைக்கே சென்னையில் பல இடங்களில் தேங்கிய தண்ணீராலும், ஐந்து நாட்கள் மின்சாரம் இல்லாமலும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பருவமழை காலங்களில் இப்படி பொய் கூறி சென்னை மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியவர் தான் இந்த சேகர் பாபு.
இந்த விடியா தி.மு.க. அரசு செய்த ஒரே சாதனை, ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், சுமார் 3.50 லட்சம் கோடி அளவில் கடன் சுமையை தமிழக மக்கள் தலையில் சுமத்தியது தான்.
இந்த 3.50 லட்சம் கோடி கடனில் எவ்வளவு மூலதனச் செலவு செய்திருக்கிறார்கள் என்று நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரும், சேகர்பாபுவும் தமிழக மக்களிடம் விளக்கத் தயாரா? தற்போது அமைச்சர் சேகர்பாபு தவறான தகவல்களை கூறி சூழ்நிலையை மடைமாற்ற பார்க்கிறார். இது தமிழக மக்களிடம் எடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தோழிகள் 3 பேரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு மதுரையில் இருந்து புறப்பட்டனர்.
- பெண்ணுக்காக உருவான தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.
அலங்காநல்லூர்:
மதுரை தல்லாகுளம் ஆசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் மகன் காதர் இஸ்மாயில் (வயது 29). இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் முருகன், ராஜா உசேன் ஆகியோரும் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்தநிலையில் காதர் இஸ்மாயிலின் நண்பரான சரவணக்குமார் என்பவர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த சசிகலா (24) என்பவரை காதலித்து வருகிறார். நேற்று சசிகலாவுக்கு பிறந்த நாளாகும். இதனை கொண்டாடுவதற்காக அவரது தோழிகளான சிக்கந்தர்சாவடியை சேர்ந்த வினோதினி, அண்ணா நகரை சேர்ந்த பபிதா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.
இதையடுத்து தோழிகள் 3 பேரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு மதுரையில் இருந்து புறப்பட்டனர். அந்த காரில் அவர்களுடன் பரவை பொற்கூடல் நகரை சேர்ந்த முருகன் (32), கே.புதூர் அல் அமீன் நகரை சேர்ந்த ராஜா உசேன் (24) ஆகியோரும் சென்றிருந்தனர். தனது காதலி பிறந்த நாளுக்கு முருகன், ராஜா உசேன் சென்றதை அறிந்த சரவணக்குமார் கடும் ஆத்திரம் அடைந்தார்.
இதற்கிடையே டிராவல்ஸ் நிறுவன ஊழியர்களான முருகன், ராஜா உசேன் ஆகிய இருவரும் சரவணகுமாரின் காதலியான சசிகலாவுடன் மதுரை-நத்தம் சாலையில் காஞ்சாரம் பேட்டை பகுதியில் உள்ள ஒரு சாலையோர உணவகத்திற்கு சென்றிருந்தனர். இதையடுத்து சரவணக்குமார் தனது நண்பர் காதர் இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு காதலி சென்றிருந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார்.
முன்னதாக டிராவல்ஸ் நிறுவன ஊழியர்களான முருகன், ராஜா உசேன் இருவரும் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததோடு, சசிகலா மற்றும் அவரது தோழிகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த சரவணக்குமார், அவர்களை தட்டிக்கேட்டதோடு, என்னுடைய காதலியை நீ ஏன் காரில் அழைத்து வந்தாய் என்று கேட்டு வாக்கு வாதம் செய்தார். அவருக்கு ஆதரவாக காதர் இஸ்மாயிலும் முருகனை தட்டிக் கேட்டார்.
இந்தநிலையில் உணவகத்தை பூட்ட வேண்டும் என்று கூறிய அதன் நிர்வாகத்தினர் தகராறில் ஈடுபட்டவர்களை வெளியே செல்லுமாறு கூறினர். அதே சமயம் பெண்ணுக்காக உருவான தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது ஒருவரையொருர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதர் இஸ்மாயிலை சரமாரியாக குத்தினார்.
தடுக்க சென்ற சரவணக்குமாருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்களை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே காதர் இஸ்மாயில் பரிதாபமாக இறந்தார். சரவணக்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண்ணுக்காக நடந்த மோதலில் டிராவல்ஸ் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- டிரைவர் எதற்காக தாக்கப்பட்டார்? கையை கட்டி யார் தாக்கினார்கள்? என தெரியவில்லை.
மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் உள்ள ஆம்னி பஸ் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவரை ஜன்னலில் கையை கட்டி விட்டு அவரை மர்மநபர்கள் சரமாரியாக தாக்குகின்றனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரைவர் எதற்காக தாக்கப்பட்டார்? கையை கட்டி யார் தாக்கினார்கள்? என தெரியவில்லை.
இணையத்தில் பரவி வரும் வீடியோ தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக மாட்டுத்தாவணி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
- என்னை இந்த வழக்கில் தொடர்புப்படுத்தி அவரது கணவருக்கும் எனக்கு தொர்பு உள்ளதாக ஜெயலட்சுமி பொய் புகார் கொடுத்துள்ளார்.
- மீண்டும் ராஜலட்சுமியிடம் எனது சொத்தில் ஒரு பகுதியை அடமானம் வைத்து ரூ. 15 லட்சம் பெற்றுக் கொண்டேன்.
மதுரையில் ரூ. 2 கோடி கேட்டு பள்ளி மாணவர் கடத்தப்பட்ட வழக்கு விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி குஜராத்தில் தனது கணவர் குடியிருந்து வரும் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தனது சாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என தற்கொலைக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டானின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பெயர்களை குறிப்பிட்டு மரண வாக்குமூலம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த மரண வாக்குமூலத்தில் எழுதியிருப்பதாவது:-
எனது பெயர் சூர்யா என்றும், மதுரையில் கடந்த 11-ம் தேதி மாணவன் கடந்தப்பட்ட வழக்கில் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. தனக்கு அந்த சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதில் சம்பந்தப்பட்டவர்களை நான் இதுவரை பார்த்ததுகூட இல்லை. என்னை ஏன் இந்த வழக்கில் ராஜலட்சுமி சம்பந்தபடுத்தினார் என்று புரியவில்லை. என்னை இந்த வழக்கில் தொடர்புப்படுத்தி அவரது கணவருக்கும் எனக்கு தொர்பு உள்ளதாக ஜெயலட்சுமி பொய் புகார் கொடுத்துள்ளார்.
அவரது கணவர் பெயர் கூட எனக்கு தெரியாது. கடந்த ஆண்டு ஐகோர்ட்டு மகாராஜா மூலமாகதான் ராஜலட்சுமி எனக்கு அறிமுகம் ஆனார். அவர்கள் இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் வட்டி தொழில் உள்ளது. ராஜலட்சுமி வட்டி தொழில் செய்பவர். எனது பெயர் உபயோகித்து ராஜலட்சுமியிடம் ஐகோர்ட்டு மகாராஜா ரூ. 60 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஓடிவிட்டார்.
அந்த பணம் குறித்து எனது கணவரிடம் கூறுவதாக ராஜலட்சுமி தெரிவித்ததால் மகாராஜா வாங்கிய ரூ. 60 பணத்தை நான் தருகிறேன் என்று ஒப்புக் கொண்டதன் பேரிலும் மேலும் எனக்கு கடன் பிரச்சனை இருந்ததால், மீண்டும் ராஜலட்சுமியிடம் எனது சொத்தில் ஒரு பகுதியை அடமானம் வைத்து ரூ. 15 லட்சம் பெற்றுக் கொண்டேன்.
அந்த பணத்திற்கு வட்டி எடுத்துக் கொண்டு பணத்தை கொடுத்தது மட்டுமல்லாமல், ஐகோர்ட் மகாராஜா வாங்கிய ரூ. 60 லட்சம் மற்றும் நான் வாங்கிய ரூ. 15 லட்சம் ஆகியவற்றை வட்டியும் முதலுமாகராஜலட்சுமி தனது மாமன் மகன் ஒருவரை அழைத்துவந்து 1.35 கோடி தரவேண்டும் என மிரட்டியதுடன் எனது பியூட்டி பார்லரையும் எழுதி வாங்கி கொண்டார்.
அதன் பின்பும் எனது பியூட்டி பார்லர் 80 லட்சம் வரும் மீதம் உள்ள பணத்தை கொடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்தனர்.
இதனால் எனது வாழ்வாதாரம் இழந்து கணவர் மற்றும் குழந்தைகளை இழந்து பெங்களூர் சென்று படிக்க நினைத்தேன். தொடர்ச்சியாக என்னை பணம் கேட்டு சித்திரவதை செய்தார்கள். என்னிடம் உள்ள அனைத்தையும் எழுதி வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றும் நோக்கில் தற்போது சிறுவன் கடத்தல் வழக்கில் எனது பெயரை ராஜலட்சுமி சேர்த்துள்ளார். இதில் யார் ஈடுபட்டார்கள் என்றும், அவர்களது பெயர் கூட எனக்கு தெரியாது. வேண்டுமென்றால் எனது செல்போன் உரையாடலை சேகரித்து சோதனை செய்து பாருங்கள்.
மேலும் இறந்து போன மைதிலி ராஜலட்சுமி கணவர் ராஜ்குமாருக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
அப்படி புகார் தெரிவித்திருக்கும் பட்சத்தில் எனது செல்போன உரையாடலை ஆய்வுபடுத்துங்கள், ஐகோர்ட்டு மகாராஜா ஜெயிலில் இருந்து ஓடிபோன பிறகு ராஜலட்சுமியுடன் தொடர்பில் இருந்தார். ராஜலட்சுமியை பார்க்க கடந்த ஏப்ரல் 20 முதல் 25 வரை ராஜட்சுமி வீட்டிற்கு அடிக்கடி மகாராஜா வந்தார். அதுபற்றி சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தால் உண்மை தெரிந்துவிடும்.
மேலும் குழந்தை கடந்தல் எவ்வளவு பெரிய குற்றம் என்று எனக்கு தெரியும். எனக்கும் 2 குழந்தைகள் இருக்கு. குழந்தைகளை பிரிந்து வாழும் வலி என்ன என்று எனக்கு தெரியும். ஐயா நான் என் தவறை திருத்ததான் வெளியூர் சென்று படித்து பெரிய ஆள் ஆக வேண்டும் என நினைத்தேன். எனது கணவர் என் நன்னடத்தை பார்த்து மன்னித்து என்னை சேர்த்துக் கொள்வார். நான் குழந்தை கடத்தல் செய்தேன் என்று கூற ஆதாரம் வேண்டும். இன்று எனது கணவர் பெயர், எனது புகைப்படம் டிவியில் வந்துள்ளது.
நாளை நான் குற்றமற்றவள் என்று நிருபிக்கப்பட்டால் எனது மானம், எனது கணவர் மானம் திரும்ப கிடைக்குமா ஐயா, ஏன்றாவது சேர நினைத்த எனது வாழ்க்கை திரும்ப கிடைக்குமா ஐயா.. நீதி வேண்டும் ஸ்டாலின் ஐயா உங்கள் ஆட்சியை நான் பார்த்து வருகிறேன்... நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். நான் உங்கள் வீட்டு பெண்ணாய் இருப்பின் என்னை என்றாவது ஒருநாள் மேடையில் சூர்யா நிரபராதி என்று ஸ்டாலின் ஐயா மற்றும் உதயநிதி ஐயா சொல்லுங்கள்.
எனது ஆத்மா ஸ்டாலின் ஐயா, உதயநிதி அண்ணாவை வாழ்த்தும். எனது கணவர் மிகவும் நல்லவர் அவரையும், குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளுங்கள். எனது குழந்தையிடம் உனது தாய் நல்லவள் என்று கூறுங்கள் என அந்த மரண வாக்கு மூலத்தில் கூறிபிட்டுள்ளார்.
- தங்கபாலு உள்ளிட்ட பலர் தலைவராக இருந்தபோது காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது வழக்கம் தான்.
- தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. இதில் எந்த மாற்றமும் கிடையாது.
மதுரை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 23-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட நீதிமன்றம் அருகே அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன்பின், பேசிய திருநாவுக்கரசர் கூறியதாவது:-
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பல்வேறு பாத்திரங்களை ஏற்றி நடித்தவர். அந்த பாத்திரமாகவே மாறி மக்களுக்கு பல நல்ல கருத்துகளை கூறி உள்ளார். தற்போது சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அ.தி.மு.க.வில் சும்மாவே பல பிரச்சனைகள் உள்ளன. இந்த நிலையில் நான் வாய் திறந்து கூறி மேலும் பல புதிய பிரச்சனைகளை உருவாக்க விரும்பவில்லை. நான் ஒரு கட்சியில் இருக்கும்போது மற்றொரு கட்சி குறித்து அதன் நிலைபாடுகளில் தலையிட விரும்பவில்லை.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 2026 தேர்தலுக்கு பிறகு அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதில் எந்த தவறும் இல்லை. அதே நேரத்தில் அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
இதற்கு முன்பு தி.மு.க. தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்தபோது கூட காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்காமல் வெளியில் இருந்தே ஆதரவளித்தது. கட்சியை வளர்ப்பதற்கு இளைஞர்களை கவரும் வகையில் இவ்வாறு பேசுவது நான் தலைவராக இருந்த கால கட்டத்தில் இருந்தே மேற்கொண்டு வரும் நடவடிக்கை ஆகும்.
தங்கபாலு உள்ளிட்ட பலர் தலைவராக இருந்தபோது காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது வழக்கம் தான். தேசிய அளவில் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியில் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. இதில் எந்த மாற்றமும் கிடையாது.
இந்தியா கூட்டணி உருவானபோது ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவர் மு.க.ஸ்டாலின். எனவே இரு கட்சிக்கும் இடையேயான கூட்டணி சிறப்பாக உள்ளது. எனவே அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படுமா? என்ற கேள்விக்கே இடமில்லை.
ஒழுங்காக குடும்பம் நடத்தும்போது பக்கத்து வீட்டுக்காரனை காட்டி அவனுடன் குடும்பம் நடத்த தயாரா? என்று கேட்பது போல் உள்ளது. விவாகரத்து ஏதும் ஏற்பட்டால் இதுபோன்ற கேள்வி சரியாக இருக்கும்.
மின்கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். எங்களை பொறுத்தளவில் வரி வசூலிக்காமல் ஆட்சி நடத்த முடியாது என்றாலும், வரி மக்களுக்கு சுமையாக இருக்க கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம்.
கர்நாடகத்தில் கன்னடர்களுக்கே வேலை என்ற நிலைபாடு சரியான கருத்து அல்ல. அந்தந்த மாநிலத்தில் உள்ளவர்களுக்கு 100 சதவீதம் வேலை என்று கூற தொடங்கினால் இந்தியா என்ற ஒன்று இருக்காது. தனித்தனி நாடாக ஆகிவிடும்.
மொழி வாரி மாநிலம் உருவாக்கப்பட்ட பின்னர் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கலாம். சலுகைகள் கொடுக்கலாம். 50 முதல் 90 சதவீதம் வரை கொடுக்கலாம். மீதமுள்ள இடத்தை இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கவுன்சிலர் தல்லாகுளம் முருகன், மலர்பாண்டியன், துரையரசன், பறக்கும் படை பாலு, சாவனாஸ் பேகம் உள்பட பலர் இருந்தனர்.
- கார்த்திக் வீட்டிற்கு சமாதானம் பேச ராஜேந்திர பிரசாத், சண்முகராஜ் ஆகிய இருவரும் சென்றனர்.
- போலீசார் கார்த்திக் மற்றும் சண்முகராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்:
மதுரை திருப்பரங்குன்றம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கார்த்திக் (வயது 29). திருப்பரங்குன்றம் மேலப்பச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திர பிரசாத் (21) மற்றும் சண்முகராஜ் (24). நண்பர்களான மூன்று பேரும் மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வருகின்றனர்.
இவர்களுக்கிடையே கடந்த தீபாவளி பண்டிகையின் போது ஏற்பட்ட வாக்கு வாதம் மோதலாக மாறி கைகலப்பில் முடிந்தது. அப்போது முதல் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. ஒருவருக்கொருவர் ஒரே இடத்தில் வேலை பார்த்தபோதும் பேசாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு கார்த்திக் வீட்டிற்கு சமாதானம் பேச ராஜேந்திர பிரசாத், சண்முகராஜ் ஆகிய இருவரும் சென்றனர். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது மீண்டும் தகராறு உருவானது. இதில் ராஜேந்திர பிரசாத், கார்த்திக்கை அருகில் இருந்த தராசு படிக்கல்லை எடுத்து தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் தனது வீட்டில் இருந்த சூரிக் கத்தியை எடுத்து வந்து ராஜேந்திர பிரசாதின் தோள்பட்டையில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திர பிரசாத் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திர பிரசாத் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் கார்த்திக் மற்றும் சண்முகராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மேட்டுத் தெருவில் சமாதானம் பேச சென்ற வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் அழகர்மலை அடிவாரத்தில் திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று புகழப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடிப்பெருந்திருவிழா சிறப்புடையதாகும்.
இந்த விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத கள்ளழகர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் தற்போது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இன்று இரவில் புஷ்ப பல்லக்கு சேவை நடைபெறும்.
நாளை தீர்த்தவாரி, 23-ந் தேதி உற்சவ சாந்தி நடக்கிறது. 4-ந் தேதி ஆடி அமாவாசை விழா நடைபெறும். இரவு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார். அத்துடன் ஆடிப்பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவும், கோவில் நிர்வாகமும் செய்து வருகின்றன.
- சென்னை உயர்நீதிமன்றம் ஆலமரம் போன்றது.
- மதுரை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை:
மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளை கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 24-ந்தேதி தொடங்கப்பட்டது. 14 மாவட்டங்களை சேர்ந்த வழக்குகளை மதுரை ஐகோர்ட்டு கிளை விசாரித்து வருகிறது. இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகளை முடித்து 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதற்கான நிறைவு விழா மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கில் இன்று காலை நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் வரவேற்றார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் தமிழில் காலை வணக்கம் எனக்கூறி தனது பேச்சை தொடங்கினார். அவர் பேசியதாவது:-
ஔவையார், அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல் என குறிப்பிட்டுள்ளார். எனது மராத்திய மொழியில் அறிந்து சொல்கிறேன். இயன்றவரை பிறருக்கு உதவுவது நல்லது. தமிழ் கலாசாரத்தின் நல்ல இயல்புகள் எப்போதுமே மகிழ்ச்சி அளிப்பவை. விருந்தோம்பல் பண்பு அழகானது. சென்னை உயர்நீதிமன்றம் ஆலமரம் போன்றது.
நேற்று நாலடியாரின் ஆங்கில பதிப்பு எனக்கு கிடைத்தது. அதில் நம்பிக்கை குறித்து குறிப்பிடப்பட்ட விசயம் உண்மையானது. வழக்கறிஞர்கள் பொதுமக்கள் என அனைவரும் உற்றுநோக்கும் வண்ணம் மதுரைக்கிளையின் பல உத்தரவுகள் உள்ளன. ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது, அது சமூகத்தின் பிரச்சனையை முன்னிறுத்தும் விதமாகவே அமைகிறது.
மதுரைக்கிளை நீதியை மட்டுமல்ல சமூக மாற்றத்தையும் வழங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் கலாசாரத்தின் அடையாளமாகவும் மதுரைக்கிளை அமைந்துள்ளது. நீதிமன்றங்களில் மொழி ஒரு சிக்கலாக வந்தபோது, அந்தத்த மாநில மொழிகளில் உத்தரவுகளை அறிந்து கொள்ளும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2000-க்கும் அதிகமான உத்தரவுகள் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து காணோலி காட்சி மூலம் மதுரை ஐகோர்ட்டு 20-வது ஆண்டு நினைவு சின்னத்தை திறந்து வைத்தார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், விஸ்வநாதன், மதுரை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ், சுந்தர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், தமிழக அட்வகேட் ஜெனரல் ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில் தமிழகத்தின் 100 இ-சேவை மையங்கள் காணோலி காட்சி மூலம் திறந்த வைக்கப்பட்டது. முடிவில் நீதிபதி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
இதில் மதுரை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- இணையதள பிரச்சனை காரணமாக நேற்று முழுவதும் 2 விமானங்கள் ரத்து மற்றும் 2 விமான சேவைகள் தாமதம் என மதுரை விமான நிலையம் அறிவித்துள்ளது.
- மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டு சென்றது.
மதுரை:
மைக்ரோசாப்ட் இணைய தள பிரச்சனை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டு நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை விமான நிலையத்திலும் இணையதளம் சேவை பிரச்சனை நேற்று முழுவதும் நீடித்து வருவதன் காரணமாக விமானங்கள் வருவதிலும், இங்கிருந்து புறப்பட்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டது.
மேலும் விமானத்தில் செல்லக்கூடிய போர்டிங் பாஸ் தற்காலிகமாக கைகளால் எழுதி பயணிகளிடம் வழங்கப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இணையதள பிரச்சனை காரணமாக நேற்று முழுவதும் 2 விமானங்கள் ரத்து மற்றும் 2 விமான சேவைகள் தாமதம் என மதுரை விமான நிலையம் அறிவித்துள்ளது.
இன்று காலை செல்லக்கூடிய சென்னை மற்றும் பெங்களூரு விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மதுரை விமான நிலையம் அறிவித்துள்ளது. இன்று காலை 6.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 7.20 மதுரை விமான நிலையத்திற்கு வந்தடையும்.
அதேபோல் 6.20 பெங்களூரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 7.35 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்தடையும். இந்த 2 விமான சேவையும் ரத்து என விமான நிலைய வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை இணையதள பிரச்சனைகள் சீரானதை தொடர்ந்து விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக இன்று காலை 8.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டு சென்றது.
இதனை தொடர்ந்து பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், துபாய் உள்பட வெளி நாடுகளுக்கும் விமான சேவைகள் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஜூன் 23-ந்தேதி நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்தனர்.
- தமிழகம் மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்குமான பிரச்சனை அதிகரித்து வருகிறது.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வக்கீல் தீரன் திருமுருகன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்குமான பிரச்சனை அதிகரித்து வருகிறது. ஜூன் 2-ம் வாரத்தில் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஜூன் 23-ந்தேதி நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்தனர்.
கடந்த 1-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் குற்றவாளிகள் போல கைது செய்வதோடு, கிருமி நாசினியை அவர்கள் மீது தெளித்து மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2021-ல் குஜராத்தை சேர்ந்த மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்கப்பட்டபோது மத்திய அரசு, பாகிஸ்தான் கடற்படையினருக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தது. ஆனால் தமிழக மீனவர்கள் விஷயத்தில் அதுபோன்ற நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில், இருக்கும் 26 மீனவர்களுக்கும் சட்ட உதவிகளை வழங்குமாறு அறிவுறுத்தவும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு, தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்களே. அவர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது என கருத்து தெரிவித்தனர். ஒன்றிய அரசுத்தரப்பில், மீனவர்களை விடுவித்து தமிழகம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த பிரச்சனை மற்றொரு நாட்டோடு தொடர்புடையது. ஆகவே, தேவையான நடவடிக்கைகளை விரைவாக மத்திய அரசு எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது எனக் குறிப்பிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.






