என் மலர்tooltip icon

    மதுரை

    • வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்குமாறு செங்கோட்டையன் கேட்டாரா?
    • த.வெ.க. தலைவர் விஜய் தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது.

    மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. சின்னத்தை யாராலும் முடக்க முடியாது.

    * எடப்பாடியார் நல்லதை செய்வார். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆட்சியை 2026-ல் கொண்டு வரப்போகிறார்.

    * எடப்பாடியார் செல்வாக்கு கூடிக்கொண்டு இருக்கிறது. அந்த செல்வாக்கை மறைப்பதற்காக ஆளுங்கட்சியினர் முயற்சிக்கின்றனர்.

    * வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்குமாறு செங்கோட்டையன் கேட்டாரா?

    * இந்த ஆட்சியில் எங்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுக்கவில்லை. கேட்காத ஒருத்தருக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளார்கள்.

    * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் என கூறிய முதலமைச்சர் தற்போது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை.

    * முதலமைச்சர் சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. த.வெ.க. தலைவர் விஜய் தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது.

    * உறுதியாக, இறுதியாக எடப்பாடியார் தலைமையில் ஆட்சி மலரும். அவர் தலைமையில் அ.தி.மு.க. மலரும் என்று கூறினார்.

    • இயக்கத்திற்கு சோதனைகள் வரலாம், தொண்டர்கள் அதனை மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
    • ஜெயலலிதாவின் மறுவடிவமாக மீண்டும் அவரது ஆட்சியை மலரச் செய்ய ஒரு தியாக வேள்வியை எடப்பாடியார் நடத்திக் கொண்டு வருகிறார்.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியை நாம் பார்க்கின்ற பொழுது, தென்னிந்திய நல உரிமை சங்கத்தில் தொடங்கி, நீதிக் கட்சி பரிணாம வளர்ச்சியில் திராவிட இயக்கம் தந்தை பெரியார் தலைமையில் தொடர்ந்து, தேர்தல் அரசியல் என்கிற அடிப்படையிலே பேரறிஞர் அண்ணா கொட்டுகிற மழையில் ராவிட்சன் பூங்காவிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள் உருவாக்கினார்.

    அதனைத் தொடர்ந்து அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கேள்விக்குறியான திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்த மிகப்பெரிய பங்கு வகித்த புரட்சித்தலைவர், ஜனநாயகத்தை காக்கும் வகையில் ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாய மக்கள், தொழிலாளர்கள் என அனைத்து தர மக்களையும் வாழ்வில் ஒளியேற்ற 1972-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார்.

    அப்போது அவர் சந்தித்த விமர்சனம், அவமானங்களை எல்லாம் தூள், தூளாக்கி மன வலிமையோடு, மக்கள் பேராதரோடு ஆட்சியை அமைத்தார். எம்.ஜி.ஆர். இருக்கும் போது 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அதனைத் தொடர்ந்து அவரது மறைவுக்கு பின் ஜெயலலிதா இந்த இயக்கத்தையும், தமிழகத்தையும் பாதுகாக்கின்ற பொறுப்பினையும், தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்கின்ற பொறுப்பையும் ஏற்றார்.

    அத்தனை வேதனைகளையும், கஷ்டங்களையும் தனதாக்கிக் கொண்டு, ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி, மூன்றாம் பெரிய இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கினார். எங்களைப் போன்ற சாமானிய தொண்டர்களை எல்லாம் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக உருவாக்கி சேவை செய்யும் அரிய வாய்ப்பினை அளித்தார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை மீட்டெடுத்து, இந்த இயக்கத்தை காப்பாற்றி, இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ள எடப்பாடியார் சந்தித்த சோதனைகளை எல்லாம் தவிடு, பொடியாக்கி அனைவரும் தாயை போல அரவணைத்து இன்றைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவமாக உள்ளார். அதனால் தான் மக்கள் மீண்டும் அவருக்கு மகுடம் சூட்ட காத்து இருக்கிறார்கள்.

    இன்றைக்கு தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாய் மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் எடப்பாடியார் திகழ்ந்து உரிமை குரல் எழுப்பி, எட்டு கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். இன்றைக்கு இந்த இயக்கதிற்கு கிடைத்த இறையருள் தான் எடப்பாடியார்.

    அ.தி.மு.க. என்று சொன்னாலே சோதனையை சந்தித்த இயக்கம். அ.தி.மு.க. என்று சொன்னாலே அது எல்லோருடைய கண் திருஷ்டி பெற்று சோதனைகளை சந்தித்து சாதனைகளாக மாற்றிய இயக்கம். இயக்கத்திற்கு சோதனைகள் வரலாம், தொண்டர்கள் அதனை மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

    இன்றைக்கு எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள், துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் அனைத்தும், அ.தி.மு.க.வை அசைத்துப் பார்க்க முடியாது. எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்களால் அ.தி.மு.க.வுக்கு எந்த சேதாரமும் இல்லை, இது மக்களால் பாதுகாக்கப்படுகிற இயக்கம்.

    ஜெயலலிதாவின் மறுவடிவமாக மீண்டும் அவரது ஆட்சியை மலரச் செய்ய ஒரு தியாக வேள்வியை எடப்பாடியார் நடத்திக் கொண்டு வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனால் தற்போது அ.தி.மு.க.வில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதில் கூறும் வகையில் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளதாக கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள்.

    • அலங்கார நினைவு வாயிலை இடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
    • விபத்தில் ஒப்பந்ததாரரும் படுகாயம் அடைந்தார்.

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணி எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் நுழைவு வாயிலை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியது.

    இதையடுத்து, அலங்கார நினைவு வாயிலை இடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்றிரவு நினைவு வாயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

    அப்போது திடீரென அலங்கார நினைவு வாயில் பொக்லைன் இயந்திரம் மீது விழுந்ததில் பொக்லைன் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் ஒப்பந்ததாரரும் படுகாயம் அடைந்தார்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் நுழைவு வாயிலை இடித்ததால் விபத்து நேரிட்டதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    பொக்லைன் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதற வைக்கிறது. 



    • இ.பி.எஸ். பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • அதிமுகவிற்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கொண்டுவரப்பட்டது தொடர்பாக கோவை அருகே முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கத்தால் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய செங்கோட்டையன், "அந்த நிகழ்ச்சியை தான் புறக்கணிக்கவில்லை என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் கலந்து கொள்ளவில்லை" என்று பூசி முழுகினார்.

    இதனையடுத்து, "பாராட்டு விழா கட்சி சார்பற்று நடத்தப்பட்ட நிகழ்ச்சி, ஆதலால் அங்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் வைக்கப்படவில்லை" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில், இன்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக உட்கட்சி பூசல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, "அதிமுகவையோ எடப்பாடி பழனிசாமியையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை. கட்சிக்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை" என்று தெரிவித்தார். 

    • விசாரணை சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய மறுபிரேத பரிசோதனை செய்வதும், அதனை வீடியோ பதிவு செய்வதும் அவசியம்.
    • உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள், இந்த நடவடிக்கைகளை முடித்து மனுதாரரிடம் உடலை ஒப்படைக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடியைச் சேர்ந்த லிங்கசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மர்மமான முறையில் உயிரிழந்த எனது மகன் காளையனின் உடலை மூத்த தடய அறிவியல் மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரரின் மகன் காளையன், மாற்று சமூகத்தை சேர்ந்த வனிதா என்ற பெண்ணுடன் பேசியதால் அவரது உறவினர்கள் காளையனை மிரட்டியதாகவும், இது தொடர்பாக புகார் அளித்த நிலையில், மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தனது மகனை கொலை செய்து உள்ளனர்.

    இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. மனுதாரர் மகன் உடலை பிரேத பரிசோதனை செய்வது சம்பந்தமாக மனுதாரர் தரப்பினருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என வாதாடினார்.

    பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி , மூத்த தடய அறிவியல் மருத்துவர்களைக் கொண்டு மனுதாரர் மகன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடல் அழுகும் நிலையில் உள்ளது. ஆகவே மறு பிரேத பரிசோதனை செய்வது சாத்தியமில்லை என தெரிவித்தார்.

    விசாரணை முடிவில், மனுதாரர் மகன் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டாலும், அது வீடியோ பதிவு செய்யப்படவில்லை. மனுதாரரிடம் தகவல் தெரிவிக்காமலேயே இது நடைபெற்றுள்ளது. ஆகவே விசாரணை சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய மறுபிரேத பரிசோதனை செய்வதும், அதனை வீடியோ பதிவு செய்வதும் அவசியம்.

    ஆகவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் காளையனின் உடல், மறு பிரேத பரிசோதனை செய்யும் நிலையில் உள்ளதா? என்பதை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு மறு பிரேத பரிசோதனை செய்ய முடியும் என்றால், தகுதி வாய்ந்த மருத்துவ அலுவலர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும்.

    அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இந்த உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள், இந்த நடவடிக்கைகளை முடித்து மனுதாரரிடம் உடலை ஒப்படைக்க வேண்டும். அவரும் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா தொடங்கிய நாளில் இருந்தே தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் சித்திரை வீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    கடந்த 10-ந்தேதி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது. 11-ம் நாளான நேற்று தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.


    அதனைத்தொடர்ந்து கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, காமராஜர் சாலை வழியாக சிந்தாமணியில் உள்ள கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு கதிர் அறுப்பு திருவிழா நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அதிகாலை 5 மணிக்கு வெள்ளி அவுதா தொட்டில், வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி, பிரியா விடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் எழுந்தருளினர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, விளக்குத்தூண், கீழவாசல், காமராஜர் சாலை வழியாக மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு சென்றடைந்தனர்.


    அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காலை 10.40 மணியளவில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தெப்பக்குளத்தின் வெளிப்புறமாக நின்று வடம் பிடித்து தெப்பத்தை இழுத்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவும் தெப்பத்தில் சுவாமி-அம்மாள் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளனர். தெப்பத்திரு விழாவை முன்னிட்டு மாரியம்மன் தெப்பக்குளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இன்று இரவு நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தை தெப்பத்திரு விழாவை முன்னிட்டு சுவாமி-அம்பாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளியதால் மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டிருந்தது. இதனால் கோவிலுக்கு வந்த வடமாநில பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். 

    • 80 வயது மூதாட்டி வீராயி, வயது மூப்பு காரணமாக நள்ளிரவு தூக்கத்திலேயே உயிரிழந்தார்.
    • மறுநாள் வீராயியின் கணவர் முத்து அம்பலமும் (85) தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    மதுரை மாவட்டம் கருப்பாயூரணியில் 80 வயது மூதாட்டி வீராயி, வயது மூப்பு காரணமாக பிப்ரவரி 8 நள்ளிரவு உடல்நலக்குறைவால் தூக்கத்திலேயே உயிரிழந்தார்;

    இந்நிலையில் இவருடைய கணவரான 85 வயதுடைய முத்து அம்பலம் மனைவியின் பிரிவு தாங்காது தவித்த நிலையில், நேற்று இரவு தூக்கத்திலேயே உயிரிழந்தார்.

    67 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்த தம்பதி இறப்பிலும் இணைபிரியாது அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    • பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

    மேலும் பஸ் மற்றும் ரெயில்களிலும் வந்து குவிந்து வருவதால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.

    பழனி தண்டாயுதபாணி கோவிலில் நாளை தைப்பூச திருவிழா நடைபெவுள்ள நிலையில் சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி, மதுரை- பழனி இடையே நாளை மற்றும் நாளை மறுநாள் இரு நாட்களும் சிறப்பு ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிறப்பு ரெயில் 2 நாட்களும் மதுரையில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு பழனி சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் சிறப்பு ரெயில் பழனியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மதுரை சென்றடைகிறது.

    • திருப்பரங்குன்றம் சமண மத நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகும்.
    • திருப்பரங்குன்றம் மலையை பிறர் உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கது அல்ல.

    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டில் விழுப்புரம் ஸ்வஸ்தி லட்சுமி சேன சுவாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் சமணர் நினைவுச்சின்னங்கள் பல உள்ளன. திருப்பரங்குன்றம் கோவில் சமண சமயத்திற்கான பல கட்டமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால் தற்போது திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது என பல இந்து அமைப்புகள் கூறிவருகின்றன.

    திருப்பரங்குன்றம் மலையிலும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள தமிழ்-பிராமி எழுத்துக்கள், அவை சமண காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிபடுத்துகிறது.

    திருப்பரங்குன்றம் சமண மத நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகும். திருப்பரங்குன்றம் மலையின் ஒரே இடத்தில் பாறையின் சுமார் 1 அடி உயரத்தில் இரண்டு சமண பாறைகள் செதுக்கப்பட்டுள்ளன.

    இந்த மலைகள் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பதட்டம் காரணமாக, மற்ற மதங்களைச் சேர்ந்த சிலர் இந்த மலைகளில் உள்ள சமணர் குகைகளை சீர்குலைப்பது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    இது அவமரியாதை செய்யும் வகையில் உள்ளது. இது சமண மக்களின் மத உணர்வுகளை பாதித்துள்ளது. இந்த சட்ட விரோத செயல்களால் திருப்பரங்குன்றம் பகுதியில் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.

    அதோடு சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை பிறர் உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கது அல்ல.

    ஆகவே திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவித்து, சமண கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிப்பதோடு, திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுத்து, பராமரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, விக்டோரியா கவுரி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதோடு, அரசு யாரிடமும் மதபாகுபாட்டை காட்ட விரும்பவில்லை, நல்லிணக்கத்தையே விரும்புகிறது என தெரிவிக்கப்பட்டது.

    மேலும், தமிழக தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தமிழக தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், இந்த வழக்கை நிலுவையில் உள்ள அணைத்து வழக்குகளோடு சேர்த்து பட்டியலிடவும் உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

    • தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி கோயில் உண்டியலில் போட வேண்டும்.
    • உத்தரவை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோயில்களில் ஆரத்தித் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது என்று மதுரை பாலதண்டாயுத சுவாமி கோயில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    மேலும், தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி கோயில் உண்டியலில் போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனை கோயிலை கண்காணிக்கும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், உத்தரவை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அர்ச்சகர்களுக்கு பொது மக்கள் கொடுப்பதை தட்டடில் போடுவதை பிடுங்கி எந்த அரசாங்கத்திற்கும் உரிமையில்லை.

    மதுரை பாலதண்டாயுத சுவாமி கோயில் அறங்காவலர் சுற்றறிக்கையால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • மக்கள், பத்திரிக்கையாளர்களை விஜய் சந்தித்து பேச வேண்டும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
    • யாரோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போகிறார் என்பதை விஜய் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

    மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாட்டில் முதல்முறையாக யாருடைய கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு சாதனை செய்தது தேமுதிக மட்டும்தான்.

    தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    விஜயை செந்தூரப்பாண்டி படம் மூலம் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் கேப்டன் விஜயகாந்த். விஜய் எங்கள் வீட்டு பிள்ளை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சினிமா வேறு அரசியல் வேறு.

    மக்களை சந்தித்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினால் தான் அரசியலில் விஜய் நிலைத்து நிற்க முடியும். யாரோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போகிறார் என்பதை விஜய் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் கால் முறிவும் ஏற்பட்டது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவர் தனக்கு சொந்தமான பழைய ஓட்டு வீட்டை இடிக்க இன்று காலை அதே ஊரை சேர்ந்த 3 பேரை வேலைக்கு அழைத்திருந்தார். அதன்பேரில் 3 பேர் வந்திருந்தனர். அவர்கள் காலையிலேயே பணிகளை தொடங்கினர்.

    வீட்டின் சுவரை இடித்து கொண்டிருந்த போது பக்கவாட்டு சுவர் இடிந்து அவர்களது மேலேயே எதிர்பாராத விதமாக விழுந்தது. இதில் வலசை, கருப்பு கோவில் தெருவை சேர்ந்த அரியமலை (வயது 35) என்பவர் மீது சுவர் முழுவதுமாக இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் இந்த வீடு இடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கார்த்திக் (35), கருப்புசாமி (32) ஆகியோருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் கால் முறிவும் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

    பின்னர் அவர்களை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×