என் மலர்
காஞ்சிபுரம்
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது கோழைத்தனமானது, காட்டு மிராண்டித்தனமானது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இது போன்ற ஆட்களை காவல்துறை கைது செய்ய வேண்டும்.
ராமர் ரத யாத்திரை தமிழகத்துக்கு வந்துள்ளது. அத்வானி ரத யாத்திரை கேரளா வழியாகதான் சென்றது. இங்கு வரவில்லை.
தமிழ்நாட்டில் மத வழிபாடு உரிமை என்பது வேறு, மத தேசம் என்று பரப்புவது என்பது வேறு.

தமிழ்நாட்டில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஒரே குடும்பமாக, சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
பா.ஜனதாவின் துணை அமைப்புகளான இந்துத்துவா அமைப்புகள் பிரித்தாளும் முயற்சி கண்டிக்கத்தக்கது. ரத யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்க கூடாது.
ரத யாத்திரைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
சட்டசபையில் ரதயாத்திரை பற்றி பேசுவதற்கு தி.மு.க., காங்கிரசுக்கு வாய்ப்பு தராததால் மறியலில் ஈடுபட்டனர். இதை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டும். பழிவாங்ககூடாது.
ரஜினி தன் பின்னால் பா.ஜனதா இல்லை என்று கூறியதை வரவேற்கிறேன்.
தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு அஸ்திவாரமும் இல்லை, வாய்ப்பும் கிடையாது.
அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ராகுல்காந்தியின் பேச்சு காங்கிரசாரை உற்சாகமாக வைத்துள்ளது.
புதிய தலைமைகள் வரும் போது மாற்றங்கள் இருக்கும். தமிழ்நாடு காங்கிரசிலும் தேவையான நேரத்தில் மாற்றங்கள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு அனுமதி பெற்று முறையாக யார் வேண்டுமானாலும் யாத்திரை நடத்தலாம். அரசியல் கட்சிகளாக நாங்கள் காவிரி சம்பந்தமாக அமைதியான முறையில் அனுமதி பெற்று யாத்திரை நடத்துவோம். சட்டம்-ஒழுங்கு காப்பது அரசின் கடமை.
தமிழ்நாட்டை 50 ஆண்டுகள் நடிகர்கள் நாசமாக்கியது போதும். இனி தமிழக அரசியலுக்கு நடிகர்கள் தேவையில்லை. படித்தவர்கள், இளைஞர்கள், சாதனையாளர்கள்தான் தேவை.
பெரியாரை காந்தி அளவுக்கு நாங்கள் மதிக்கிறோம். பெரியார் சிலையை உடைத்தவர்களை, அதை தூண்டுவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

எச்.ராஜா மீதும் அவரது அட்மின் மீதும் வழக்கு பதிவு செய்யவேண்டும். அப்படி செய்து இருந்தால் பெரியார் சிலை உடைப்பு தொடர்ந்து நடந்து இருக்காது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு வருகிற 29-ந்தேதி வரை காலஅவகாசம் இருக்கிறது.
மத்திய அரசு இதற்குள் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் நாடு எதிர்பார்க்காத போராட்டம் வெடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம் அடுத்த கருமாரப்பாக்கத்தை சேர்ந்தவர் திருலோகம். இவர் நிலத்தை விற்ற ரூ.4 லட்சத்தை தனது மோட்டார் சைக்கிளின் பெட்டியில் வைத்துக்கொண்டு திருக்கழுகுன்றத்தில் உள்ள வங்கியில் செலுத்த வந்தார்.
அவர் மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு நின்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கள்ள சாவி போட்டு மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து திருக்கழுகுன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்:
செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ராஜா (40). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
ராஜா தினமும் குடிபோதையில் வேலைக்கு செல்லாமல் தன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். மனைவி செல்வி வீட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார்.
சம்பவத்தன்று காலை 5மணி அளவில் ராஜாவின் மனைவி செல்வி வீட்டு வேலைக்கு சென்று விட்டார். மனைவி வேலைக்கு செல்கிறார், தனக்கு வேலை கிடைக்கவில்லையே என்ற மன உளைச்சலில் அதிகாலையில் மதுஅருந்தி விட்டு வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக தகவல் அறிந்ததும் செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜாவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரத்தில் செயின்ட் ஜோசப் கருணை இல்லம் உள்ளது. கடந்த மாதம் கருணை இல்லத்து காய்கறி மூட்டைகள் ஏற்ற வந்த வேனில் முதியவர் சடலம் கொண்டு வரப்பட்டது. மேலும் அதே வேனில் 2 முதியவர்கள் அழைத்து வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பதாகவும், அவர்களது உடல்கள் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் வெளிநாடுகளில் விற்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் பொன்னையாவின் உத்தரவுப்படி, சமூக நலத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட 6 துறை அதிகாரிகள் கருணை இல்லத்தில் அதிரடி விசாரணை நடத்தினர்.
அப்போது உரிய பராமரிப்பு இன்றி முதியோர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் கான்கிரிட் சுவரில் உள்ள சிறிய அறை போன்ற துளையில் அடைத்து அடக்கம் செய்யப்படுவதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கருணை இல்லத்தில் இருந்த முதியவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்கள் தொழுப்பேடு, பனையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயங்கி வரும் அரசு அனுமதி பெற்ற காப்பங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். உடல்நலம் குன்றியவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு இளைஞர் நீதி குழுமம் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் சார்பில் கருணை இல்ல நிர்வாகி தாமஸ் மீது சாலவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதில், “பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் எமா (4), ஜெசி (2), இளவரசி (11), 1½ வயது ஏஞ்சலினா, ஜெஸ்லின் (7), சபிதா நான்சி (9), ரோஸ்லின் ஜேனோவா (8), சூரிய பிரகாஷ் (9), தேசி கபிரியன் (6) ஆகிய 9 குழந்தைகளை சட்ட விரோதமாக நிர்வாகி பாதிரியார் தாமஸ் அடைத்து வைத்துள்ளார்.
மேலும் சுகாதாரமற்ற முறையில் கருணை இல்லத்தை நடத்தி வருகிறார்” என்று கூறப்பட்டு இருந்தது. புகாரின் அடிப்படையில் சாலவாக்கம் போலீசார் பாதிரியார் தாமஸ் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாதிரியார் தாமஸ் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
கருணை இல்ல நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் இந்த விவகாரம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர்பாசு நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது கூடங்குளத்தில் 1 மற்றும் 2-வது அணு உலைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இரு உலைகளிலும், 1,000 மெகாவாட் வீதம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்குள் (2018) மூன்றாவது அணு உலை செயல்பட தொடங்கும். இவ்வாறு ஆண்டிற்கு ஒரு அணு உலை வீதம் மொத்தம் உள்ள 6 அணு உலைகளும் செயல்பாட்டுக்கு வந்துவிடும். இதன்மூலம் கூடங்குளத்தில் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
நாடு முழுவதும் ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், அரியானா உள்பட 16 இடங்களில் அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். துபாயில் இருந்து வந்த விமானத்தில் இறங்கிய பயணிகளை கண்காணித்தபோது சந்தேகத்திற்கு இடமாக இருந்த சென்னையை சேர்ந்த சிக்கந்தர் சம்சுதீன்்(வயது40) என்பவரை சோதனை செய்தபோது அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து 16 தங்க கட்டிகளை கண்டுபிடித்தனர்.
ரூ.48 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை அவரிடம் இருந்து கைப்பற்றினார்கள்.
அதேபோன்று துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த முகமது செரீப்(48) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது, அவரது சூட்கேசில் செல்போன் பெட்டிகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது, அதில் 11 தங்க கட்டிகள் இருந்தன.
ரூ.36 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
மேலும் துபாயில் இருந்து வந்த வேறு ஒரு விமானத்தில் பயணம் செய்த சிவகங்கையை சேர்ந்த அசாருதீன்(25) என்பவரின் சூட்கேசில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று குவைத்தில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த தஞ்சாவூரை சேர்ந்த ஜன்னத்துல்லம்சா(50) என்பவரிடம் இருந்து ரூ.16 லட்சம் மதிப்புள்ள 550 கிராம் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று ஒரே நாளில் 4 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 650 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
இந்த கடத்தல் தொடர்பாக கேரளா வாலிபர் முகமது செரீப், சிக்கந்தர் சம்சுதீன் ஆகியோரை கைது செய்தும், மற்றவர்களிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர். #tamilnews
காஞ்சீபுரத்தில் நடந்த பா.ம.க. கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:-
தமிழகத்தில் உச்சக்கட்ட ஊழல் ஆட்சி நடைபெற்று வருகின்றது. தமிழக அரசின் ஒவ்வொரு ஊழல் குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே முழுமையாக மக்களிடம் கொண்டு செல்கின்றது.
தமிழக அரசின் ஊழல்கள் குறித்து கவர்னரிடம் பா.ம.க. சார்பில் இரண்டு முறை மனு அளிக்கப்பட்டது. அதனை உன்னிப்பாகப் படித்த கவர்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆந்திராவில் நேர்மையான ஆட்சி நடந்து கொண்டிருப்பதால் அவர்களால் மத்திய அரசினை தைரியமாக எதிர்க்க முடிகின்றது. ஆனால் தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருவதனால் மத்திய அரசினை எதிர்க்க முடியவில்லை.
தமிழக அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்த ஆட்சி விரைவில் கவிழும்.
இந்தக் காஞ்சி மண்ணிலே பிறந்த அறிஞர் அண்ணா மதுவினால் வரும் பணம் அரசுக்கு தேவையில்லை என உறுதியாக இருந்தார் ஆனால் அவர் வழியிலே செல்வதாகக் கூறும் தி.மு.க.தான் தமிழகத்திற்கு மதுவினை அறிமுகப்படுத்தியது.
எம்.ஜி.ஆர். மதுக்கடைகளை அதிகப்படுத்தினார். ஜெயலலிதா அரசாங்கமே மதுவினை விற்கும் நிலைக்கு கொண்டு வந்தார், ஆனால் அறிஞர் அண்ணாவின் கொள்கையினை பா.ம.க. மட்டுமே கொண்டுள்ளது.
குடியரசு தினத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். விஜயகாந்த் அரசியலில் இருந்து காணாமல் போய் விட்டார்.
ரஜினி, கமல் போன்றவர்கள் துளியும் அரசியல் அறிவு இல்லாமல் மக்கள் சேவையாற்றப் போவதாகக் கூறுகின்றனர். இவர்களால் எந்த மாற்றத்தினையும் கொண்டு வர முடியாது.
தினகரன் ஹவாலா பணத்தில் சுற்றி வருகின்றார். இவர்களால் மக்களுக்கு எந்தப்பயனும் இல்லை.
நல்ல ஆட்சியினை பா.ம.க. வினால் மட்டுமே தர முடியும். காவிரி விவகாரத்தில் ராஜினாமா என்பது தேவையில்லை, அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதி அ.தி.மு.க. சார்பில், நங்கநல்லூரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு பிரியாணி வழங்கும் விழா நடந்தது. வட்ட செயலாளர் ராஜா தலைமையில் நடந்த இந்த விழாவில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மைத்ரேயன் கலந்து கொண்டு பிரியாணிகளை வழங்கினார்.
பின்னர் மைத்ரேயன் எம்.பி. கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் அ.தி.மு.க.வின் 50 எம்.பி.க்களும் தினமும் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தி வருகிறோம். 2 வாரங்களாக பாராளுமன்ற அவை செயல்பட முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கி வருகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அ.தி.மு.க. எம்.பி.க்களின் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
காஞ்சீபுரம் கோட்ராம் பாளையம் தெருவில் புதிய தொழிலாளர் நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
இதையொட்டி காஞ்சீபுரம் காந்திரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நீதிமன்றத்திற்கான கல்வெட்டை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி திறந்து வைத்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஏராளமான தொழில் நிறுவனங்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்த வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய தொழிலாளர்களின் நலன் கருதி காஞ்சீபுரத்தின் நீண்டகால கோரிக்கையை கருத்தில் கொண்டு தொழிலாளர் நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் நலனை காக்கும் வகையில் அவர்கள் பிரச்சனை தொடர்பான வழக்குகளை விரைந்து தீர்வு காண வேண்டும். அந்த வழக்களில் வாதாடும் வக்கீல்களும் பொறுப்புடன் செயல்பட்டு அவர்களுக்கு உதவிட வேண்டும்.
தொழிலாளர்களின் பிரச்சினைகளை கண்டுபிடித்து அவர்களுக்கான உரிமைகளையும் பாதுகாப்புகளை வழங்குவதற்கு இதுபோன்ற தொழிலாளர்கள் நீதிமன்றங்கள் இன்றியமையாதவை.
விரைவான, தரமான தீர்ப்புகளை பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிபதிகள் வழங்கவேண்டும். நீதித்துறை நீதிபதிகள் மட்டும் கொண்டுள்ளது அல்ல.
வழக்கறிஞர்களும் நன்கு தயார்செய்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்க நீதிபதிகளுக்கு உதவவேண்டும். நிறைய தரமான, விரைவான தீர்ப்புகள் வழக்கறிஞர்களின் உதவியால்தால் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறப்பணிப்பதால் நீதிபதிகள் நஷ்டமடைவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடுத்தவர்கள் நஷ்டமடைகிறார்கள். இளம் வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த முழுநேர வழக்கறிஞர் தொழிலையே நம்பியிருக்கும் வழக்கறிஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நீதிபதிகள் விரைவான தரமான தீர்ப்புகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.ராஜா, என்.சேஷாயி, காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.செல்வகுமார், காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி எண்-2 ஜி.கருணாநிதி, சார்பு நீதிபதி பாக்கியஜோதி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி, நீதிபதி வேல் முருகன்.
காஞ்சீபுரம் பார் அசோசியேசன் தலைவர் கே.விஜயசுந்தரம், வக்கீல் சங்க தலைவர் பி.ஆசைத் தம்பி, காஞ்சீபுரம் அட்வ கேட் அசோசியேசன் தலைவர் கே.ரவிச்சந்திரன், அரசு வழக்கறிஞர்கள் கே.சம்பத், காமேஷ் குமார், இளவரசு, மூத்த வழக்கறிஞர்கள் ராஜகோபால், ஒய்.தியாகராஜன், சத் தியமூர்த்தி, தாங்கி க.பழனி, ஆர்.வி.உதயன் கலந்து கொண்டனர்.
கிண்டி ஈக்காட்டுதாங்கல், அச்சுதன் நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் அலமேலு (65). இவர் மகள், மருமகளுடன் வசித்து வருகிறார்.
சொத்து வரி கட்டுவதற்காக மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பீரோவை பார்த்தார். அதில் இருந்த 150 பவுன் நகை மாயமாகி இருந்தது. வீட்டில் இருந்த மகள், மருமகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துவிட்டனர்.
இதுகுறித்து கிண்டி போலீசில் அலமேலு புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
கோயம்பேடு நியூ காலனி 8-வது தெருவைச் சேர்ந்தவர் கணபதி டெய்லர். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் மதன் (வயது 17) தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறான்.
சரஸ்வதிக்கும் ஆட்டோ டிரைவர் அய்யப்பன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் மனைவியை பிரிந்து கணபதி தனியாக சென்றுவிட்டார்.
சரஸ்வதியும் அய்யப்பனும் கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் ஒன்றாகவே வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சரஸ்வதியின் வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது.
உடனடியாக அக்கம்பக்கம் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த சரஸ்வதி, அய்யப்பன் மற்றும் மதன் ஆகிய 3 பேரும் பலத்த தீக்காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யப்பன் இன்று காலை இறந்தார்.
சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியதால் தீப்பிடித்ததாக தெரிகிறது. கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews






