என் மலர்
காஞ்சிபுரம்
பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரத்தில் தி.மு.க.வினர் தங்களது வீடுகள் மற்றும் கட்சி அலுவலகங்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.
காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ., எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோரின் வீடுகள் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் சின்ன காஞ்சீபுரம் மற்றும் மேட்டுத் தெரு பகுதிகளில் உள்ள திமுக அலுவலகங்கள் என மாவட்டம் முழுவதும் திமுகவினர் வீடுகளிலும், கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றி இருந்தனர்,
பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், தேரடி தெரு பகுதிகளில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏற்றி இருந்தனர்.
காஞ்சீபுரம் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில தலைவர் தியாக ராஜன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட துணைத் தலைவர்கள் ராகவன், குமரவேல், தியாகு, வெங்கடபதி, செல்வக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், கோபாலகிருஷ்ணன், துணை செயலாளர் சேவியர், மாநில அமைப்பு செயலாளர் தாமோதரன் உள்பட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சரக்கு ஏற்றிய லாரி இன்று அதிகாலை மதுராந்தகம் அருகே வந்து கொண்டு இருந்தது. டிரைவர் நீலமேகம் லாரியை ஓட்டினார்.
மதுராந்தகத்தை அடுத்த செங்குந்தர்பேட்டை அருகே லாரி வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
சாலையின் தடுப்புச்சுவரை தாண்டி எதிர்புறம் வந்த மினி லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் மினி லாரியில் இருந்த டிரைவர் ஏழுமலை (37) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் அதில் வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மீத்து (25), விஜய் (22) மற்றும் 2 பேர், லாரி டிரைவர் நீலமேகம் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மீத்து, விஜய் ஆகியோர் இறந்தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் பலியான பீகார் வாலிபர்கள் மதுராந்தகம் அருகே உள்ள ரைஸ்மில்லில் வேலை பார்த்து வந்தனர். இன்று அதிகாலை நெல் மூட்டைகள் ஏற்றுவதற்காக மேல்மருவத்தூர் நோக்கி மினி லாரியில் சென்ற போது விபத்தில் சிக்கி பலியாகி விட்டனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து மராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மெஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழக வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் போட்டித் தேர்வுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் சார்பில் இங்கு நடைபெறும் நீட் தேர்வு பயிற்சி முகாமில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் இருந்து 63 மாணவர்கள், 287 மாணவிகள் என 350 மாணவர்கள் இங்கு பயிற்சி பெறுகின்றனர்.
மாணவ மாணவிகளை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கும் பயிற்சி குறித்தும், அவர்களுடனும் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்பொழுது மாணவ மாணவிகளின் குறை மற்றும் நிறைகளை அமைச்சர் கேட்டறிந்தார். உடன் சத்திபாமா நிகர்நிலை பல்கலைக்கழக இணை வேந்தர் மரியஜினா ஜான்சான், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் உள்ளிட்டோர் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே முதன்முறையாக நீட் தேர்வுக்கு உண்டான முகாம் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இப்பயிற்ச்சியினால் மாணவர்கள் நீட் தேர்வை துணிச்சலுடன் எதிர்கொள்வார்கள்” என்று தெரிவித்தார். #TamilNews
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
காஞ்சீபுரம் நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பட்டு சேலை விற்பனைக் கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவைகள் அடைக்கப்பட்டன.
காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்தில் திருமால்பூர்-சென்னை கடற்கரை ரெயிலை மாநில துணைப் பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன் தலைமையில் பா.ம.க.வினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மேற்கு மாவட்டச் செயலாளர் உமாபதி, நிர்வாகிகள் சக்தி கமலாம்பாள், மகேஷ்குமார், செந்தில்குமார், செல்வராஜ், வரதராஜ், துரை, வாசு, சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தினை முன் னிட்டு ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகர் முழுவதும் அசம்பாவிதங் களை தடுக்க காவல் துறை யினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
மாமல்லபுரத்தில் கிழக்கு ராஜவீதி, திருக்கழுக்குன்றம் சாலை, ஐந்து ரதம் சாலையில் கடைகள், சிற்பக்கூடங்கள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருந்தது.
செங்கல்பட்டு ராஜாஜி தெரு, மார்க்கெட் உள் ளிட்ட பகுதிகளில் சில கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிங்கப்பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
செங்கல்பட்டு பஸ்நிலையத்தில் இருந்து மாவட்ட செயலாளர் வாசு, கணேச மூர்த்தி தலைமையில் ஏராளமானோர் ஊர்வலமாக சென்று புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவள்ளூரில் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி .சார்பில் ரயில் மறியல் போராட்டம் மாநில துணை பொது செயலாளர் பாலயோகி தலைமையில் நடைபெற்றது. மணவாளநகரிலிருந்து பேரணியாக வந்த பா.ம.க.வினர் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் பா.ம.க.வினர் போலீசாரின் தடுப்பையும் மீறி ரயில் நிலையத்திற்குள் புகுந்து தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரையும் போலீசார் கைது செய்தனர். ரெயில் மறியல் போராட்டத்தில் மாநில அமைப்பு துணை செயலாளர் வெங்கடேசன், மாநில இளைஞரணி செயலாளர் இ.தினேஷ்குமார், மாவட்ட செயலாளர் பூபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #tamilnews
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அருகே வளத்தோட்டம் பாலாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக மாநகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமாருக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து அவர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரிய வந்தது.
மணல் கடத்தலில் ஈடுபட்ட குரங்கணி மாவட்டம் பகுதியை சேர்ந்த முருகன், திருவண்ணாமலை மாவட்டம் தூசி பகுதியை சேர்ந்த ஜெயராமன், சக்திவேல் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.
உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் உத்திர மேரூர்-காஞ்சீபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவர்களை போலீசார் மறித்தனர். அதில் ஒருவர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். மற்றொருவரை பிடித்தனர். அவர் உத்திரமேரூர் அடுத்த மருதம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மு.க.ஸ்டாலின் நடைபயணத்தை பெங்களூரு நோக்கி செல்ல வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் எந்த அடிப்படையில் சொல்லி இருக்கிறார்? என தெரியவில்லை. பெங்களூரு போய் அணையை திறக்க சொல்கிறாரா? அல்லது அங்குள்ள மக்களுடன் சண்டை போட சொல்கிறாரா?. பெங்களூரு செல்ல சொல்வது பிரச்சினையை திசை திருப்ப, கேலியாகவோ, கிண்டலாகவோ சொல்லி இருக்கலாம். மக்களை பற்றி கவலைப்படாமல் கூறியிருக்கலாம்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது அங்கு போய் பேச வேண்டியது தானே என்றும், சோனியாகாந்தி, ராகுல்காந்தியிடம் கூறி தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே என்று கூறுவது காவிரி பிரச்சினையை திசை திருப்பும் செயல். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு மதித்து அரசாணை வெளியிட வேண்டும். அப்போது கர்நாடக அரசு கேட்கவில்லை என்றால் எங்களிடம் சொல்லட்டும். அதை செய்யாமல் கர்நாடக அரசிடம் சொல்லச்சொல்வது அர்த்தம் இல்லை.
பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை, விவசாயிகள் நலனை புறக்கணித்த மோடி வருவதால் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை தி.மு.க., காங்கிரஸ் உள்பட ஒத்த கருத்துடைய கட்சிகள் அறிவித்தோம்.
ஆனால் பிரதமர் சாலை வழியாக செல்லாமல் ஹெலிகாப்டரில் செல்கிறார். அவர் வரும்போது கருப்புக்கொடி காட்ட வாய்ப்பு இல்லாததால் கருப்பு உடை அணிந்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவது என அறிவித்து உள்ளோம். இதை தமிழக மக்கள் செய்வார்கள்.
சென்னையில் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. கிரிக்கெட் போட்டியை விரும்பி பார்ப்பவர்கள் பார்க்கட்டும். பிடிக்காதவர்கள் போகாமல் இருக்கட்டும். சந்தோசம் என்று விரும்பி இளைஞர்கள் கிரிக்கெட் பார்க்க போகலாம். அதை போய் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் காவிரி தண்ணீர் வரும் வரை தமிழகத்தில் உள்ள 6 ஆயிரம் மதுக்கடைகளையும் மூட வேண்டும். ஒரு நாள் விளையாடப்போகிறார்கள். இஷ்டப்பட்டவர்கள் தான் போக போகிறார்கள்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். #CauveryMangementBoard #PonRadhakrishnan #Tirunavukarasar
மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் ராணுவ கண்காட்சி நாளை முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்காக ரஷ்யாவை சேர்ந்த ராணுவ தளவாட விற்பனை பிரிவில் பணியாற்றி வந்த இகோர் (வயது 55) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாமல்லபுரம் வந்தார். அவர் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே உள்ள ரிசார்ட்டில் உடன் வந்த ஊழியர்களுடன் தங்கி இருந்தார்.
இன்று மதியம் இகோர், தன்னுடன் பணிபுரியும் பெண் ஒருவருடன் ரிசார்ட் அருகே கடலில் குளித்தார்.
அப்போது ராட்சத அலை இகோரை கடலுக்குள் இழுத்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த, உடன் இருந்த பெண் கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக இகோரை மீட்டனர். மயக்க நிலையில் இருந்த அவரை மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே இகோர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
இகோர் பலியானது குறித்து ரஷ்ய நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராணுவ கண்காட்சி நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் ரஷ்ய நாட்டு அதிகாரி கடலில் மூழ்கி பலியான சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை இலங்கைக்கு செல்ல விமானம் தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் உள்ளாடைக்குள் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை மறைத்து கடத்தியது தெரிந்தது. அதன் மதிப்பு ரூ.6½ லட்சம் ஆகும்.
விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த சாகுல் அமீது என்பது தெரிந்தது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை 12-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இதையொட்டி மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையிலும், பழைய மாமல்லபுரம் சாலையிலும் 500-க்கும் மேற்பட்ட விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.
பிரதமர் மோடி வருகைக்கு தி.மு.க. உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராணுவ கண்காட்சி குறித்து கிழக்கு கடற்கரை சாலையில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்று விட்டனர்.
பேனர்கள் கிழிக்கும் நபர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே ராணுவ கண்காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்த பேனர் மீண்டும் கிழிக்கப்பட்டு உள்ளது. கோவளம்- திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் மோடி வந்திறங்கும் ஹெலிபேடு தளம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனரை பைக்கில் வந்த மர்ம நபர்கள் கத்தியால் கிழித்து சென்றுள்ளனர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் தற்போது பேனருக்கு ஒரு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, “இதுவரை பேனர்கள் கிழித்திருப்பதாக கட்சியினரோ, ராணுவத்தினரோ புகார்கள் தரவில்லை. பேனர்கள் அனைத்தும் காற்றில் கிழிந்துள்ளது” என்று தெரிவித்தனர். #tamilnews
மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ராணுவ கண்காட்சி நாளை (11-ந் தேதி) தொடங்குகிறது. 14-ந் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது.
இதனை பிரதமர் மோடி 12-ந் தேதி முறைப்படி தொடங்கி வைக்கிறார். கண்காட்சிக்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட நிலத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் பீரங்கிகள், டாங்கிகள் மற்றும் நவீன ரக பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
தொழில் நிறுவனங்கள் சார்பில் கருத்தரங்குகள், முப்படையினரின் சாகச நிகழ்ச்சிகள் நடக்கிறது. கண்காட்சி நடைபெறும் இடம் முழுவதும் ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. ராணுவ கண்காட்சியை வருகிற 14-ந் தேதி பொதுமக்கள் பார்க்கலாம்.

ராணுவ கண்காட்சியை யொட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ராணுவ தளவாட கண்காட்சிக்கு அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் நாளை முதல் 14-ந் தேதி வரை போக்குவரத்து மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு நேரடியாக செல்லும் வாகனங்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை சோதனைச்சாவடியிலிருந்து பழைய மகாபலிபுரம் சாலை வழியாகவும், கோவளம் சந்திப்பில் இருந்து கேளம்பாக்கம் இணைப்பு சாலை வழியாகவும் பழைய மகாபலிபுரம் சாலையை அடைந்து திருப்போரூர் பூஞ்சேரி வழியாக புதுச்சேரி செல்லலாம்.
புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை வரும் வாகனங்கள், வெங்கம்பாக்கத்தில் இருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாகவும், பூஞ்சேரி சந்திப்பு வழியாகவும் சென்னை செல்லலாம்.
11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை கண்காட்சிக்கு வர்த்தகம் தொடர்பாக சென்னையில் இருந்து வரும் வாகனங்கள், கோவளம் சந்திப்பு வழியாக அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள திருவிடந்தை வாகன நிறுத்தத்தை சென்றடையலாம். மாமல்லபுரம் பகுதியிலிருந்து வரும் வர்த்தகம் தொடர்பான வாகனங்கள், பேரூர் சந்திப்பைத் தாண்டி கண்காட்சியின் பின்புறமுள்ள வாகன நிறுத்தங்களை வந்தடையலாம்.
14-ந் தேதியன்று கண்காட்சியைக் காணவரும் பொதுமக்கள், கோவளம் மற்றும் பேரூர் சந்திப்பு வழியாக கண்காட்சி திடலை அடைந்து இருசக்கர வாகனம், கார்களுக்கென ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தத்தை வந்தடையலாம். அரசு பேருந்துகளின் மூலம் வருவோர், கண்காட்சிக்கு அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்தடையலாம்.
கண்காட்சி திடலை ஒட்டிய திருவிடந்தை, கோவளம், வடநெம்மேலி மற்றும் தெற்குப்பட்டு கிராம மக்களின் வாகனங்களும், பேருந்துகளும் சென்று வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம் மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளன. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பு அருகிலேயே உள்ளது. இப்பகுதியில் சுமார் ஆயிரம் வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி சி.ஐ.எஸ்.எப் அலுவலக முதல் மாடியில் உள்ள அறையில் தலைமைக் காவலர் மோகன்சிங் (57) கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது காலை நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக அதிகாலை 5:15 மணிக்கு பாதுகாப்புப் படை வீரர் விஜய்பிரதாப்சிங் (40) அங்கு வந்தாதுள்ளார்.
ஆயுதக்கிடங்கில் 9 எம்எம் ரக துப்பாக்கியை பெற்றுக்கொண்டு மாடிக்குச் சென்ற அவர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த மோகன்சிங் மீது திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் மோகன் சிங் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.
துப்பாக்கி சத்தம் கேட்டதும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற வீரர்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஆங்காங்கே பதுங்கினர். மோகன்சிங்கை கொன்றுவிட்டு மாடியில் இருந்து கீழே வந்த விஜய்பிரதாப்சிங், அங்கு பதுங்கியிருந்த பாதுகாப்பு படையின் கூடுதல் உதவி ஆய்வாளர் கணேசன் (54), சக வீரர்கள் கோவர்தணன் பிரசாத் (42), பிரதாப்சிங் (57) மற்றும் தலைமை காவலர் சுப்புராஜ் (58) ஆகியோரை நோக்கி துப்பாக்கியால் 20 ரவுண்டுகள் சரமாரியாக சுட்டார்.
இதில் கணேசன், சுப்புராஜ் ஆகியோர் அதே இடத்திலேயே இறந்தனர். பிரதாப்சிங்குக்கு அடி வயிற்றில் மூன்று குண்டுகள் பாய்ந்தது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு வந்த மற்ற வீரர்கள் விஜய் பிரதாப் சிங்கை மடக்கி பிடித்து துப்பாக்கியை பறித்தனர்.
விஜய் பிரதாப் சிங் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இந்த வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட விஜர் பிரதாப் சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி, மூன்று ஆயுள் தண்டனையுடன் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். #CSIF #TamilNews






