என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி பிரச்சினையை பொன்.ராதாகிருஷ்ணன் திசை திருப்புகிறார் - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
    X

    காவிரி பிரச்சினையை பொன்.ராதாகிருஷ்ணன் திசை திருப்புகிறார் - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

    காவிரி பிரச்சினையை பொன்.ராதாகிருஷ்ணன் திசை திருப்புகிறார் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி உள்ளார். #CauveryMangementBoard #PonRadhakrishnan #Tirunavukarasar
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மு.க.ஸ்டாலின் நடைபயணத்தை பெங்களூரு நோக்கி செல்ல வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் எந்த அடிப்படையில் சொல்லி இருக்கிறார்? என தெரியவில்லை. பெங்களூரு போய் அணையை திறக்க சொல்கிறாரா? அல்லது அங்குள்ள மக்களுடன் சண்டை போட சொல்கிறாரா?. பெங்களூரு செல்ல சொல்வது பிரச்சினையை திசை திருப்ப, கேலியாகவோ, கிண்டலாகவோ சொல்லி இருக்கலாம். மக்களை பற்றி கவலைப்படாமல் கூறியிருக்கலாம்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது அங்கு போய் பேச வேண்டியது தானே என்றும், சோனியாகாந்தி, ராகுல்காந்தியிடம் கூறி தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே என்று கூறுவது காவிரி பிரச்சினையை திசை திருப்பும் செயல். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு மதித்து அரசாணை வெளியிட வேண்டும். அப்போது கர்நாடக அரசு கேட்கவில்லை என்றால் எங்களிடம் சொல்லட்டும். அதை செய்யாமல் கர்நாடக அரசிடம் சொல்லச்சொல்வது அர்த்தம் இல்லை.

    பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை, விவசாயிகள் நலனை புறக்கணித்த மோடி வருவதால் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை தி.மு.க., காங்கிரஸ் உள்பட ஒத்த கருத்துடைய கட்சிகள் அறிவித்தோம்.

    ஆனால் பிரதமர் சாலை வழியாக செல்லாமல் ஹெலிகாப்டரில் செல்கிறார். அவர் வரும்போது கருப்புக்கொடி காட்ட வாய்ப்பு இல்லாததால் கருப்பு உடை அணிந்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவது என அறிவித்து உள்ளோம். இதை தமிழக மக்கள் செய்வார்கள்.

    சென்னையில் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. கிரிக்கெட் போட்டியை விரும்பி பார்ப்பவர்கள் பார்க்கட்டும். பிடிக்காதவர்கள் போகாமல் இருக்கட்டும். சந்தோசம் என்று விரும்பி இளைஞர்கள் கிரிக்கெட் பார்க்க போகலாம். அதை போய் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் காவிரி தண்ணீர் வரும் வரை தமிழகத்தில் உள்ள 6 ஆயிரம் மதுக்கடைகளையும் மூட வேண்டும். ஒரு நாள் விளையாடப்போகிறார்கள். இஷ்டப்பட்டவர்கள் தான் போக போகிறார்கள்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.  #CauveryMangementBoard #PonRadhakrishnan #Tirunavukarasar
    Next Story
    ×