என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    பள்ளிக்கரணை அருகே மீன் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    மேடவாக்கம், காந்தி நகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது52). மீன் வியாபாரி.

    இன்று அதிகாலை அவர் வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றார். மேடவாக்கம கூட்டு ரோடு அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 2 மர்ம வாலிபர்கள் பின்னால் நடந்து வந்தனர். திடீரென அவர்கள் அரிவாளால் சீனிவாசனின் கழுத்தில் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்து அவ்வழியே நடைபயிற்சி சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். கொலை திட்டத்தை அரங்கேற்றிய வாலிபர் பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    சீனிவாசன் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் குறித்து உடனடியாக தெரியவில்லை.சீனிவாசனுக்கு யாருடனும் மோதல் உள்ளதா? என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    நடைபயிற்சி சென்ற மீன் வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    விஜயகாந்துடன் கூட்டணி வைக்கும் நிலை வரலாம் என்று படப்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரத்குமார் பேசினார். #Vijayakanth
    ஸ்ரீபெரும்புதூர்:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கலைத் துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி சாதனை விழாவும், தே.மு.தி.க. மண்டல மாநாடும், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த படப்பை அருகே உள்ள கரசங்காலில் நடைபெற்றது. காஞ்சி வடக்கு மாவட்ட தே.மு.க. செயலாளர் அனகை முருகேசன் தலைமை தாங்கினார்.

    கலைத்துறை என் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளது என்பதற்கு இங்கு வந்துள்ள கூட்டமே சாட்சி. கலைதுறை மிகவும் மோசமான சூழலில் உள்ளது.

    அதை விரைவில் மீட்பேன். கலைத்துறைக்கு எந்த பிரச்சனை என்றாலும் முன்னின்று தீர்த்து வைப்பேன். இந்த துறையினருக்கு என்றும் கை கொடுப்பேன். எந்த பிரச்சனை என்றாலும், பேசி தீர்க்க முடியும். அதற்கு நானும் உதவ தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

    கேப்டன் கலை துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. அவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நடிகர் சங்க கட்டிடம் கடனில் இருந்தது. அவர் கஷ்டப்பட்டு அதை கடனில் இருந்து மீட்டார். அதை பொக்கி‌ஷமாக பாதுகாக்க வேண்டும்.

    தற்போது நடிகர் சங்கம் மிக மோசமான சூழலில் உள்ளது. இதுபற்றி பலர் கோரிக்கை வைத்துள்ளனர். இக்கட்டான சூழலில் இருந்து அதை மீட்டு கேப்டன் கலைத்துறைக்கு நல்லது செய்வார்.

    கலைத்துறையில் அனைவருடனும் நட்பாக இருப்பவர் கேப்டன். கேப்டனின் 50 ஆண்டு கலைத்துறை விழா சிறப்பாக அமைய வேண்டும். அவர் ஏழை எளிய மக்களுக்கு அள்ளி வழங்கும் வள்ளலாக திகழ்ந்து வருகிறார்.

    எனக்கு திரைப்பட துறையில் மறக்க முடியாத நபர் கேப்டன். நான் திரை துறையில் இந்த அளவுக்கு முனனேறியதற்கு கேப்டன் தான் காரணம். அவருடன் சேர்ந்து நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடி உள்ளது.

    அரசியலில் வேறு வேறு பாதையில் இருந்தாலும் நன்றாக பழக கூடிய நல்ல நண்பர் கேப்டன். நான் இங்கு வந்து பேசுவதால் கேப்டனுடன் கூட்டணி வைப்பேன் என நினைத்தால் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். கேப்டனுடன் அரசியலில் இணையும் சூழல் வந்தால் இணைந்து மக்களுக்கு பணியாற்றுவேன். விஜயகாந்துடன் கூட்டணி வைக்கும் நிலை வரலாம்.


    இவ்வாறு சரத்குமார் பேசினார்.

    நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியதாவது:-

    கேப்டன் எல்லோருக்கும் நல்ல நண்பர். மனித நேயம் மிக்க நல்ல மனிதர். உதவி என்று வந்தால் இல்லை என்று சொன்னதில்லை.

    கலைத்துறையில் அவரால் வாழ்ந்தவர்கள் பல பேர் உள்ளனர். அவருடன் வாழும் இந்த காலம் பொற்காலம்.

    கேப்டன் 1978-ல் திரைப்பட துறைக்கு வந்ததில் இருந்து அவருடன் ஒன்றாக நடித்து உள்ளேன். கலை துறைக்கு எத்தனையோ நல்ல பல வி‌ஷயங்களை செய்துள்ளார். அவர் நடிகர் சங் தலைவராக இருந்த போது சங்கம் கடனில் இருந்தது. அதை கடனில் இருந்து போராடி மீட்டார். கலை நிகழ்ச்சிகளை வெளிநாட்டில் நடத்தி கலை துறையில் இருந்தவர்களுக்கு பெரும் உதவினார். சண்டை காட்சியில் டூப் இல்லாமல் பல காட்சியில் துணிச்சலாக நடித்துள்ளார்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    திரைப்பட விநியோ கஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, இயக்குனர்கள் எஸ்.பி.முத்து ராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், மனோபாலா, விக்ரமன், நடிகர் மயில்சாமி நடிகைகள் ராதா, அம்பிகா, காஞ்சி மாவட்ட தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் போந்தூர் சிவா, மாவட்ட செயலாளர் போந்தூர் திருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மதுராந்தகம் அருகே கார் இருக்கை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்துக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள சாத்தமை கிராமத்தில் கார் இருக்கை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.

    இங்கு தயார் செய்யப்படும் கார் இருக்கைகள் உள்நாடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குள்ள கழிவு பொருட்களை தொழிற் சாலையின் அருகே கொட்டி வைத்திருந்தனர். இதில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. இப்பகுதியை சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும்மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், செங்கல்பட்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    அவர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். எனினும் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

    தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. நாச வேலை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலையூர் அருகே பெண்ணை மோட்டார் சைக்கிளில் கடத்தி நகை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி, இவரது மனைவி பார்வதி. கட்டிட தொழிலாளி. இவர் மேடவாக்கம் கூட்டு சாலையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பார்வதியிடம் பேச்சு கொடுத்தார். வீடு கட்டுமான பணியில் வேலை இருக்கிறது. உடன் வரவேண்டும் என்று தெரிவித்தார்.

    இதனை நம்பிய பார்வதி அந்த வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். மாம்பாக்கம் மெயின் ரோடு வேங்கைவாசல் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இறங்கினார்.

    திடீரென பார்வதியை தாக்கி அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார்.

    அதிர்ச்சி அடைந்த பார்வதி இதுபற்றி சேலையூர் போலீசில் புகார் செய்தார். நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஷேர் ஆட்டோ மோதலில் சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூர் அருகே உள்ள வேங்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (35). அதே பகுதியில் மளிகைகடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா, மகள் அன்ஷிகா, 3 வயது மகன் தேசுகிருஷ்ணன்.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சாமி கும்பிட அய்யப்பன் மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் காஞ்சீபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    ஓரிக்கை பகுதியில் வந்தபோது எதிரே வந்த ஷேர் ஆட்டோ திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பெற்றோர் கண் முன்ணே தேசுகிருஷ்ணன் பரிதாபமாக பலியானான்.

    அய்யப்பன், அவரது மனைவி கவிதா, மகள் அன்ஷிகா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 3 பேரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்தினை ஏற்படுத்திய ஷேர் ஆட்டோ டிரைவரை காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் கைது செய்தனர்.

    வந்தவாசியை சேர்ந்தவர் ரவிக்குமார் (32), வியாபாரி. இவர் காரில் சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை சித்தேரிமேடு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது முன்னால் சென்ற லாரி முறையான சிக்னல் போடாமல் சாலையில் திரும்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய கார் லாரி மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    சேலையூர் அருகே மொபட் மீது வேன் மோதலில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    சேலையூர் அருகே காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகலாதன் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரேமா, மகன் அதிரூபன் (8). பிரேமா மகன் அதிரூபனுடன் மொபட்டில் கடைக்கு சென்றார். காமராஜபுரம் பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற போது டெம்போ வேன் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    பிரேமா தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த சிறுவன் அதிரூபன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். இதுகுறித்து குரோம்பேட்டை போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் கார்த்திக்கை கைது செய்தனர்.

    தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு கோடை கால சிறப்பு ரெயில் இன்று இயக்கப்பட்டது. #specialtrain

    தாம்பரம்:

    தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு கோடை கால சிறப்பு ரெயில் இன்று இயக்கப்பட்டது. இந்த அந்தோதியா ரெயிலில் சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டிகள் தொழிற்சாலையில் தயாரான எச்.எல்.பி. எனும் அதிநவீன சிறப்பு பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    ஒரு பெட்டியில் 100 இருக்கைகள், எல்.ஈ..டி விளக்குகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன பயோ டாய்லெட், செல்போன் சார்ஜ் செய்ய வசதி, ஒரு பெட்டியில் ஏறினால் ரெயில் முழுவதும் இடம் மாறி அமரும் விதமாக பெட்டிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு உள்ளது.

    இந்த ரெயிலில் ரூ. 200-க்கு தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி செல்லலாம். வரவேற்பை பொருத்து தொடர்ச்சியாக சேவை அளிக்க தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    இந்த சிறப்பு ரயில் இன்று அதிகாலை 3 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டது.

    செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடு துறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுகல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய வழித் தடத்தில் நின்று மாலை 5.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

    ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறு மார்க்கத்தில் அதே ரெயில் நிலையங்களில் நின்று திங்கட்கிழமை காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    கடந்த ஒருமாதம் முன்பாக இதேபோல் அந்தியோதையா ரெயில் பெட்டிகளை இணைத்து தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு 200 ரூபாயில் செல்லும் பகல் நேர ரெயில் இயக்கப்பட்டது.

    ஆனால் இரண்டு சர்வீஸ் மட்டுமே சென்று திரும்பிய நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது. #tamilnews #specialtrain

    காவிரி நீர் பிரச்சினைக்கு திமுக, காங்கிரஸ் தான் மூலகாரணம் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #Cauveryissue

    ஆலந்தூர்:

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக போராடி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு நிதிஉதவி, வேலை வாய்ப்பு குறித்து அரசு பரிசீலிக்கும். யாரும் உணர்ச்சி வசப்படக்கூடாது. மனஉறுதியுடன்தான் போராட வேண்டும்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா தான் வலுவான அடித்தளம் அமைத்தார். ஸ்டாலின் மற்ற கட்சிகளை அழைத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார். அவரிடம் இரு கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.

    2007-ம் ஆண்டு காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு வந்தது. அப்போது காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. இடம் பிடித்து பதவியில் இருந்தது. தி.மு.க. நினைத்து இருந்தால் உடனடியாக அரசாணை வெளியிட்டு இருக்கலாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து இருக்கலாம். நீர் முறைப்படுத்தும் குழு ஏற்படுத்தி இருக்கலாம்.

    ஆனால் அதையெல்லாம் செய்ய தவறிவிட்டார்கள். இந்த பிரச்சினை இவ்வளவு பெரிதானதற்கு மூல காரணமே தி.மு.க.-காங்கிரஸ் தான். 2011-ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பு நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு சென்று அரசாணை பெற்றார் என்பது வரலாறு. அதை மறந்து விட்டு பிரச்சினைக்கு வலு சேர்க்க மாயையாக போராடி வருகிறார்கள்.

    இப்போது மத்திய அரசு கால அவகாசம் கேட்டாலும் இறுதியில் நல்ல தீர்ப்பு வரும் என உறுதியாக நம்புகிறேன்.

    உரிமைக்காக போராடு பவர்கள் எந்த வழியை தேர்ந்து எடுக்கிறார்கள் என்பதை பொறுத்து இருக்கிறது. அ.தி.மு.க. எப்போதும் அறவழியில்தான் போராட்டம் நடத்தும். காவிரிக்காக இப்போது நடந்த போராட்டம் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தான் இருந்தது. எதிர்கால சந்ததியினர் இப்படிப்பட்ட போராட்டத்தை கையில் எடுத்தால் எதிர்காலம் என்னாகும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Cauveryissue

    மாமல்லபுரம் அருகே ராணுவ கண்காட்சியை பார்க்க லட்சக்கணக்கில் குவிந்த பொதுமக்களால் சுமார் 7 கி.மீ. தூரத்துக்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் கண்காட்சியை நடக்கும் இடத்திற்கு 4 கி.மீ. தூரம் பொதுமக்கள் நடந்தே சென்றனர்.#DefenceExpo2018
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இந்த கண்காட்சியை பார்வையிட இன்று பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனவே கண்காட்சியை பார்வையிட ஏராளமானோர் ரூ.100 கொடுத்து ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தனர்.

    இதற்கிடையே இன்று கண்காட்சியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. எனவே இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் குவியத் தொடங்கினார்கள்.

    காலையிலேயே கண்காட்சியில் அதிக அளவில் மக்கள் திரண்டனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. ரூ.100 கொடுத்து ஆன் லைனில் முன்பதிவு செய்தவர்களையும், இலவசமாக பார்க்க வந்த பொதுமக்களையும் போலீசார் ஒரே வழியிலேயே அனுமதித்தனர். இதற்கு முன்பதிவு செய்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களை தனி வழியில் அனுமதிக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார் மறுத்து விட்டனர்.



    ராணுவ கண்காட்சியை பார்வையிட ஒரே நேரத்தில் பொதுமக்கள் திரண்டதால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. சுமார் 7 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கண்காட்சியை பார்க்க வாகனங்களில் வந்தவர்களும், வேலை வி‌ஷயமாக வெளியில் சென்றவர்களும் கிழக்கு கடற்கரை சாலையில் நெரிசலில் சிக்கித் திணறினார்கள்.



    கண்காட்சியை பார்வையிட சென்றவர்களின் வாகனங்கள் திருப்போரூர், கானத்தூர், கேளம்பாக்கம், நெம்மேலி ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தூரம் பொது மக்கள் நடந்தே சென்றனர். பள்ளிகளில் இருந்து அழைத்து செல்லப்பட்ட மாணவ- மாணவிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் அந்த பகுதியை சுற்றிலும் 5 கி.மீ. தொலைவுக்குள் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கி இருந்தனர். அவர்கள்தான் கண்காட்சியில் உள்ள ராணுவ கருவிகள் பற்றிய விவரங்களை பொதுமக்களுககு விளக்கி கூறுவார்கள்.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக அவர்களால் கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியவில்லை. அவர்களை போலீசார் தங்கள் வாகனங்களில் அழைத்து சென்றனர்.

    இன்று ஒருநாள் மட்டுமே கண்காட்சியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க கேமரா இணைக்கப்பட்ட 6 வாகனங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 108 ஆம்புலன்சு வண்டிகள் 6-ம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. #tamilnews
    ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தாம்பரம் செல்லும் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு வட்டார போக்குவரத்து அலுவலராக வெங்கடேசன், ஆய்வாளராக கண்ணன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்த ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், ஆய்வாளர் கண்ணன் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். பணம் சிக்கியது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பத்திரப் பதிவுத் துறை மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தின் கீழ் 11 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. மாவட்ட பத்திரப் பதிவு அலுவலராக கடலூர் செம்மண்டலத்தைச் சேர்ந்த குமரேசன் பணியாற்றி வருகிறார்.

    பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் 25 சார்பதிவாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் இருந்து மாவட்ட பத்திரப் பதிவு அலுவலர் குமரேசன் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    நேற்று மதியம் 2 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றனர்.

    அங்கு ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். அப்போது பத்திரப்பதிவு அலுவலர் குமரேசனின் அறையில் ரூ.42 ஆயிரத்து 630 இருந்தது. அவரது காரையும் போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.50 ஆயிரம் இருந்தது. இந்த சோதனையில் மொத்தம் ரூ.92 ஆயிரத்து 630 சிக்கியது.

    இந்த பணத்துக்கு உரிய கணக்கை குமரேசனால் காட்ட முடியவில்லை. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த பணத்தை கைப்பற்றினர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இந்த சோதனை இரவு 10 மணி வரை நடைபெற்றது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் பலவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும், லஞ்ச பணத்தையும் பைகளில் வைத்து எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சோதனை 8 மணி நேரம் நடைபெற்றது.

    இதையடுத்து பத்திரப் பதிவு அலுவலர் குமரேசன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். #tamilnews

    நீலாங்கரையில் பேராசிரியர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    நீலாங்கரை அருகேயுள்ள பாலவாக்கம் பல்கலை நகரில் 1-வது பிரதான சாலை 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ்(60), ஓய்வுபெற்ற அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர். இவர் தனது மகன் திருமணத்தையொட்டி உறவினர்களுக்கு பத்திரிகை கொடுக்க குடும்பத்துடன் திருச்சி சென்றிருந்தார். இந்தநிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு வேலைக்கார பெண் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வெளியூர் சென்றிருந்த பேராசிரியர் தங்கராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்தார் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் திருமணத்திற்காக வைத்திருந்த 80 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப் புடவையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இவர்கள் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த மர்ம நபர்கள் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏடிஎம் மையத்தில் நவீன கருவி பொருத்தி வாடிக்கையாளர்களின் ரகசிய எண்களை திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    வங்கி ஏ.டி.எம். பின் எண், ரகசிய குறியிடு எண், ஏ.டி.பி. எண் போன்றவற்றை முறைகேடாக பயன்படுத்தி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் செயல்பட்டு வருகிறது.

    டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து வங்கியில் இருந்து கேட்பது போல கேட்டு ரகசிய எண்களை தெரிந்து கொண்டு கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    தாம்பரத்தில் ஆக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தில் “ஸ்டிம்மர்” கருவியை பொறுத்தி வாடிக்கையாளர்களின் பின் நம்பர், ரகசிய எண்களை பதிவு செய்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

    ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற வாடிக்கையாளர்கள் அதில் மாற்றம் இருப்பதை கண்டு வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    வங்கி அதிகாரி ராஜேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் ஏ.டி.எம். மையத்தின் சி.சி.டி.வியை ஆய்வு செய்தனர். “ஸ்டிம்மர்” கருவியை 2 பேர் ஏ.டி.எம். எந்திரத்தில் பொறுத்தி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் ஒரு நாள் முழுவதும் காத்திருந்தனர்.

    அப்போது 2 வாலிபர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு வந்து அந்த கருவியை எடுத்த போது பிடிபட்டனர். திருநெல்வேலியை சேர்ந்த சுல்தான் (50), சுலைமான் (40) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் பொறுத்தப்பட்ட அந்த கருவி மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தக் கூடிய ரகசிய எண்களை பதிவு செய்து பின்னர் அதன் மூலம் அவர்களது கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவும் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அக்கருவி வைக்கப்பட்டதை அறிந்து சாதுர்யமாக செயல்பட்டதால் கொள்ளையர்கள் சிக்கினர்.

    இதுபோல வேறு ஏ.டி.எம்.களில் அவர்கள் கைவரிசை காட்டினார்களா? எத்தனை வங்கிகளில் தகவல் தொழில் நுட்ப மோசடியில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    ×