என் மலர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு:
கடலூரில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அதில் 40 பயணிகள் இருந்தனர். இன்று காலை 7.30 மணிக்கு செங்கல்பட்டை அடுத்த புலிபாக்கம் என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே தாம்பரத்தில் இருந்து மதுராந்தகத்துக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
குறுக்கே வந்த வாலிபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மோதாமல் இருக்க லாரியை டிரைவர் திருப்பினார். இதில் எதிரே வந்த அரசு பஸ் மீது லாரி மோதியது. மோதிய வேகத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினார்கள்.
உடனே அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஓடிவந்து பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் பஸ் டிரைவர் தேவநாதன், கண்டக்டர் ராதாகிருஷ்ணன், மஞ்சகுப்பத்தை சேர்ந்த தமிழரசன், பாண்டிச்சேரியை சேர்ந்த ராமலிங்கம், அவரது மகன் நரேந்திரன் (12), பெரம்பூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்த ஜெயந்தி, அவரது மகள் சந்தியா, மகன் நவீன் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மடிப்பாக்கம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 52) ஆலந்தூர் சிமெண்ட் ரோடு பணிமனை டெப்போவில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று அதிகாலை 5.45 மணியளவில் யுவராஜ் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
ஆதம்பாக்கம் ஏரி அருகே 200 அடி சாலையில் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் யுவராஜின் மோட்டார் சைக்கிளை இடித்து கீழே தள்ளினார்கள். பின்னர் யுவராஜை 3 பேரும் அரிவாளால் வெட்டினார்கள். அவரது கைகள், கால்களில் வெட்டு விழுந்தது.
அவர் கூச்சல் போட்டபடி கதறினார். உடனே அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் அங்கு ஓடி வந்தனர். இதைப்பார்த்ததும் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.
உயிருக்கு போராடிய யுவராஜை ஆதம்பாக்கம் போலீசார் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கண்டக்டர் யுவராஜை வெட்டியது யார்? முன் விரோதம் காரணமாக அவரை வெட்டினார்களா? என்று ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கிறார்கள். அவரை வெட்டியவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து வருகிறார்கள்.
மாமல்லபுரம்
கல்பாக்கத்தை அடுத்த விட்டிலாபுரம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது23) கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியும், 3 வயதில் மகனும் உள்ளனர்.
வெங்கடேசனின் மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி தெரிந்ததும். வெங்கடேசன், மனைவியை கண்டித்தார். எனினும் கள்ளக்காதல் ஜோடி எதையும் கண்டுகொள்ளாமல் சுற்றி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு வெஙக்டேசனின் மனைவி கள்ளக்காதலனுடன் திடீரென ஓட்டம் பிடித்தார். இதனால் வெங்கடேசன் மனவேதனை அடைந்தார்.
அவரது மனைவி ஓட்டம் பிடித்தது குறித்து உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் கேலி பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தி.மு.க. எம்.பி.கனிமொழி சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்த ஒரு செயலுக்காக எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தோம் பத்திரிகையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்படிப்பட்ட சூழலில் அந்த பெண் பத்திரிகையாளர் மட்டுமின்றி அனைத்து பத்திரிகையாளர்களையும் மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக ஒரு கருத்தை எஸ்.வி.சேகர் பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது.

இந்த கருத்தை அவர் நீக்கினாலும் பதிவு செய்ததற்காக அவர் மீது பா.ஜனதா கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கம் போல் இதுவும் அவரது சொந்த கருத்து என்று நழுவக்கூடாது. அந்த கருத்து தவறு என்று அந்த கட்சியின் தலைவர்கள் நினைத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ‘நோக்கியா’ தொழிற்சாலை உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலை ஆகும். தமிழக அரசுக்கும் நோக்கியா நிறுவனத்திற்கும் இடையே 2005-ம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தமிழக அரசின் உதவியோடு ஒரு சர்வதேச மின்னணு தயாரிப்பு மையம் உருவாக்கப்பட்டது.
கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த அரசு வரி விதிப்புக் கொள்கை காரணமாக 2014-ம் ஆண்டு நவம்பரில் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது. இதனால் 15 ஆயிரம் நேரடி தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழந்தனர்.
2015-ம் ஆண்டு மேல்-சபையில் நோக்கியா தொழிற்சாலை புனரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று மத்திய அரசு அறிவித்தது. அப்போது, நோக்கியா நிறுவனம் 1600 கோடி ரூபாய் வரி பாக்கியை இந்திய அரசுக்கு செலுத்த வேண்டும். அதன் பின்னரே அந்த நிறுவனத்தின் மீதான சட்ட நடவடிக்கை திரும்ப பெறப்படும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்தியதால் நோக்கியா நிறுவனத்தின் மீதான சட்ட நடவடிக்கைகள் விரைவில் திரும்ப பெறப்படும் என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா நிறுவனம் வரி பாக்கி தொடர்பாக இந்தியா, பின்லாந்து அரசுகளுக்கிடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோக்கியா நிறுவனம் 1600 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்தியது.
இதையடுத்து, நோக்கியா நிறுவனத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் விரைவில் திரும்பப் பெறப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நோக்கியா நிறுவனம் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த எங்களது தொழிற்சாலை விரைவில் வேறு நிறுவனத்திற்கு விற்கப்படும் என அறிவித்துள்ளது. #Sriperumbudur #Nokia #Tamilnews
ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் சமீபத்தில் நடந்த காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக பளு தூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் சென்றார்.
77 கிலோ உடல் எடை பிரிவில் அவர் தங்கம் பெற்றார். 2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த்திலும் சதீஷ் தங்கம் வென்று இருந்தார்.
தமிழகத்துக்கு பெருமை சேர்ந்த வேலூரைச் சேர்ந்த 25 வயதான சதீஷ் சிவலிங்கம் இன்று காலை சென்னை திரும்பினார். காமன்வெல்த்தில் தங்கம் வென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது பெற்றோர், நண்பர்கள், விளையாட்டு வீரர்கள் திரண்டு வரவேற்றனர்.
பின்னர் சதீஷ்குமார் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பதக்கம் வென்ற எனக்கு பரிசு அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தும். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது அடுத்த இலக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தங்கம் வென்ற சென்னை வீரர் அமல்ராஜும் திரும்பினார். அவருக்கும் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரது பெற்றோர் அற்புதராஜ்- மேரி ஸ்டெல்லா மற்றும் உறவினர்கள், டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் திரண்டு வந்து வரவேற்றனர். அமல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீண்ட இடைவெளிக்கு பிறகு காமன்வெல்த்தில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் ஊக்கத்தால் என்னால் தங்கம் வெல்ல முடிந்தது. தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவித்து உள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி பதக்கம் வெல்லும் ஆர்வத்துடன் உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
32 வயதான அமல்ராஜ் காமன்வெல்த் போட்டியில் பெறும் 3-வது பதக்கமாகும். 2010-ல் அணிகள் பிரிவில் வெண்கலமும், 2014-ல் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்று இருந்தார். #commonwealthgames2018
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 10 நாட்கள் ஸ்ரீ தசா மகாவித்யா ஹோமம் நடக்கிறது.
9-வது நாளான நேற்று ஸ்ரீ ராஜமதங்கி ஹோமம் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு ஏதோ இந்தியாவிலே ஒரு தனி நாடு என்பது போன்ற தோற்றத்தை ஒருசில பிரிவினைவாத சக்திகள் உருவாக்கி வருகிறார்கள். அந்த சக்திகள் ஆன்மிக அரசியல் நடத்தும் ரஜினி மீது அவதூறு கற்பிக்க முயற்சிக்கிறார்கள். வெறுப்பு அரசியல் நடத்துகிறார்கள். நிச்சயமாக வரும் தேர்தலில் ஆன்மீக அரசியல் வெற்றி பெறும். ராம ராஜ்ஜியம் உருவாகும்.
காஞ்சீபுரம் அருகே செயல்படும் ஒரு சில அமைப்புகள் ஆன்மீக வாதிகள் மீது தாக்குவது, ஆன்மீக சின்னங்களை அழிப்பது, வன்முறையை தூண்டுவது, தீக்குளிப்பு காரியங்களை செய்ய மாணவர்களை, இளைஞர்களை தூண்டுவதால் உளவுத்துறையும், மத்திய அரசும் கண்காணித்து அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.
பாரதிராஜா, ரஜினிகாந்த் மீது வெறுப்பு பிரச்சாரத்தை செய்கிறார். இன வெறி கொள்கையை பிரச்சாரம் செய்கிறார். இலங்கை தமிழர் பிரச்சினையிலும், காவிரி பிரச்சினையிலும் ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளார்.
ஆனால் பாரதிராஜா, சீமான், வைகோ போன்றவர்களால் இப்பிரச்சினைகளில் கேடுதான் வந்துள்ளது. எனவே இப்பிரிவினை வாத இயங்கங்களை மாணவர்கள், இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும். ஆன்மீக, தேசிய அரசியலை ஆதரிக்க வேண்டும்.

ரஜினிகாந்த் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு பிரச்சாரம் செய்யும் பாரதி ராஜாவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திட்டமிட்டு கெடுக்கப்படுகிறது. காவல் துறையை தாக்குவது, டோல் கேட்டை உடைப்பது, மத்திய அரசு அலுவலகங்களை தாக்குவோம், முற்றுகையிடப் போகிறோம் என அறிவிப்பது போன்ற தைரியம் வந்திருப்பது உளவுத்துறையின் இயலாமையை காட்டுகிறது.
உளவுத்துறையையும், காவல் துறையையும் தன் கையில் வைத்துள்ள முதல்-அமைச்சர் தான் இத்தகைய பிரிவினை சக்திகளை இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக கோயிலுக்கு வந்த அர்ஜூன் சம்பத்தை கோயில் ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரிகள், நடனம் சாஸ்திரிகள் வர வேற்றனர். #tamilnews #arjunsampath #spiritualrajinikanth
சோழிங்கநல்லூர்:
கொட்டிவாக்கம், ராஜீவ் காந்தி சாலையை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 73). இவரது மனைவி வள்ளி நாயகி (68). இவர்கள் 3 மாடி கட்டிடத்தில் வசித்து வந்தனர்.
கீழ்தளத்தில் தங்கும் விடுதி உள்ளது. 3-வது தளத்தில் மாயாண்டி மனைவியுடன் தங்கி இருந்தார்.
நேற்று இரவு மாயாண்டியின் வீட்டுக்கு அவரது உறவினர்கள் வந்தனர். அப்போது வீட்டில் உள்ள அறையில் மாயாண்டியும், வள்ளிநாயகியும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
உருட்டுக்கட்டையால் தாக்கி அவர்கள் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் வள்ளி நாயகி அணிந்திருந்த 13 பவுன் நகையும் மாயமாகி இருந்தது.
இது குறித்து துரைப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
கீழ்தளத்தில் உள்ள தங்கும் விடுதியில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது கொலை நடந்த நேரத்தில் மேல் தளத்தில் உள்ள மாயாண்டி வீட்டிற்கு வாலிபர் ஒருவர் செல்வதும், சிறிது நேரத்தில் அவர் இறங்கி போவதும் பதிவாகி இருந்தது.
இதனை வைத்து போலீசார் துப்பு துலக்கியபோது மாயாண்டியையும், வள்ளி நாயகியையும் கொலை செய்தது டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான வட மாநிலத்தை சேர்ந்த ஆலன் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 13 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
டைல்ஸ் ஓட்டிய பணிக்கு பேசிய கூலிப்பணம் தராததால் மாயாண்டியை அடித்து கொலை செய்ததாகவும் இதனை தடுக்க முயன்ற அவரது மனைவியையும் அடித்து கொன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? கொலைக்கு அவரது நண்பர்கள் யாரேனும் உதவினார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
கர்நாடக மாநிலம் பூஜ்நல்லி பகுதியை சேர்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் 40க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரத்துக்கு நேற்று மாலை சுற்றுலா வந்தனர்.
இவர்கள் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் அபிராம் (வயது14), சதீஷ், தர்ஷன் ஆகியோர் ராட்சத அலையில் சிக்கினர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் சதீசையும், தர்சனையும் மீட்டனர். அபிராம் மாயமானார் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கடற்கரையில் அபிராம் உடல் பிணமாக கரை ஒதுங்கியது.
சென்னையை அடுத்த புறநகரில் கண்ணகிநகர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து கஞ்சா விற்பவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கஞ்சா விற்பவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் கண்ணகி நகர் போலீசார் காரப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் கஞ்சா விற்றதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று மாணவர்களுக்கு கஞ்சா விற்றுக்கொண்டு இருந்த காரப்பாக்கத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 26), ரவீந்திரன் (22), சோழிங்கநல்லூரை சேர்ந்த வினாயகமூர்த்தி (22) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 3 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் கைலாசபுரம் பகுதிகளில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தாம்பரம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.
தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்த வசந்தா (72), அவரது பேத்தி சாலி (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
மாங்காடு வைகுண்ட பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி (70) தொழிலதிபர். இவர் தனது மனைவி வரலட்சுமி பெயரில் 40 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு ரூ.1 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தப்பட்டு வருகிறது.
பழனி மீதுள்ள நம்பிக்கையில் இப்பகுதியை சேர்ந்த மக்கள் பலர் இவரிடம் சீட்டுக்காக பணம் செலுத்தினர். இந்த நிலையில் கடந்த 15 மாதங்களாக இவர் சீட்டு போட்டவர்கள் யாரையும் ஏலம் எடுக்க விடவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்து பணத்தை திருப்பி கேட்ட போது காலதாமதம் செய்து வந்தார். இந்த நிலையில் பழனி திடீரென தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். அவரது வீடு மற்றும் அலுவலகம் பூட்டப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் 200 பேர் கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவு போலீஸ் அலுவலகத்தில் திரண்டு புகார் செய்தனர். அதில் பழனி என்பவர் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி அளவில் மோசடி செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
ஏலச்சீட்டு மோசடி குறித்து புகார் செய்தவர்களில் மாங்காடு ஊராட்சி முன்னாள் தலைவர் சீனிவாசனும் ஒருவர். தி.மு.க. பிரமுகரான இவரிடம் இந்த ஏலச்சீட்டு நிறுவனம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது.






