என் மலர்
காஞ்சிபுரம்
தாம்பரம்:
கடந்த 2015-ம் ஆண்டு பெய்த தொடர் மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாம்பரம், முடிச்சூர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஏராளமானோர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். பலரது நிலைமை என்ன ஆனது என்றே இதுவரை தெரியாமல் உள்ளது.
இந்த பெருவெள்ளத்தின் போது முடிச்சூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஏ.சி.மெக்கானிக்காக பணியாற்றி வந்த அருண்குமார் (வயது 24) தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து அவர் வேலை பார்த்த நிறுவனத்தினர் பீர்க்கண்கரணை போலீசில் புகார் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் சமத்துவபெரியார் நகர் பகுதியில் உள்ள அடையாறு ஆற்று கரையோர முட்புதரில் மனித எலும்புக்கூடு கிடந்தது.
இதுபற்றி அப்பகுதி மக்கள் பீர்க்கண்கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து எலும்புக் கூடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
அப்போது அங்குள்ள முட்புதரில் கிடந்த அடையாள அட்டையை கைப்பற்றினார். அதில் அருண் குமார் என்று குறிப்பிட்டு இருந்தது.
எனவே மீட்கப்பட்ட எலும்புக்கூடு பெருவெள்ளத்தின்போது மாயமான அருண்குமாருடையதாக இருக்கலாம் என்று போலீசார் நம்புகிறார்கள். மாயமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு எலும்புக்கூடுகள் சிக்கி உள்ளது.
அருண்குமாரின் சொந்த ஊர் புதுக்கோட்டை ஆகும். இதுபற்றி அங்குள்ள அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ரசாயன பரிசோதனைக்கு பின்னர் அவை அருண்குமாரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
பெருவெள்ளத்தின் போது மாயமானவரின் எலும்புக் கூடுகள் 3 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ChennaiFloods #chennairains
தாம்பரம்:
பல்லாவரம் அடுத்த திருநீர்மலை, புலி கொரடு சாலையில் புதிதாக ‘டாஸ்மாக்’ மதுக்கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் மதுக்கடை திறப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன.
நேற்று இரவு 10.30 மணியளவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள மதுக்கடைக்கு, மதுபாட்டில்களை லாரியில் கொண்டு வந்து ஊழியர்கள் இறக்கினர்.
இது பற்றி அறிந்த அப்பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
திடீரென அவர்கள் மதுக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியர்களை வெளியே விரட்டியடித்தனர். பின்னர் மதுக்கடையை அடித்து நொறுக்கினர்.
மதுபாட்டில்களை உடைத்து சாலையில் வீசி எறிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சங்கர் நகர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் ரூ.1½ லட்சம் மதுப்பாட்டில்கள் சேதம் அடைந்தன.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, திருமுடிவாக்கத்தில் செயல்பட்ட மதுக்கடையை மூடிவிட்டு அதனை இங்கு திறக்க ஏற்பாடு நடக்கிறது. மதுக்கடை வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு தெரிவித்தும் கேட்கவில்லை. எங்களுக்கு மதுக்கடை வேண்டாம். உடனே அகற்ற வேண்டும்” என்றனர்.
இது குறித்து டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் சிவக்குமார் சங்கர்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tasmac
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் கூடுவாஞ்சேரி. திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகன் (வயது 25). ஆந்திராவில் கவரிங் நகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரோஜா. இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.
இவர்கள் ஆந்திராவில் தங்கி வியாபாரம் செய்து வந்தனர். மாதத்துக்கு ஒருமுறை நந்திவரம் கூடுவாஞ்சேரியில் உள்ள பெற்றோரை பார்க்க ஜெகன் குடும்பத்துடன் வருவது வழக்கம்.
கடந்த 21-ந் தேதி ஜெகன், குடும்பத்துடன் பெற்றோரை பார்க்க இங்கு வந்து இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் மாடியில் ஜெகன் மட்டும் இருந்தார். வீட்டில் உள்ள அறையில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது ஜெகனை பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் குட்டா கார்த்திக் உள்பட 10 பேர் வீட்டுக்கு வந்தனர். ஜெகன் மாடியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றனர்.
திடீரென ஜெகனுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. ஆத்திரம் அடைந்த நண்பர்கள் ஜெகனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஜெகன் பரிதாபமாக இறந்தார்.
அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த குடும்பத்தினர் மாடிக்கு வந்து பார்த்தனர். அப்போது ஜெகன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு கதறி துடித்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெகன் நண்பர்களுடன் மது அருந்த சென்று உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் நண்பர் ஒருவரை தாக்கியதாக தெரிகிறது.
இந்த மோதலில் ஜெகனை நண்பர்களே தீர்த்து கட்டி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக குட்டா கார்திக் உள்பட சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். குட்டா கார்த்திக் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாக தெரிகிறது.
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, தலித் சமுதாய மக்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்ந்து நடந்து வருகிறது.
பா.ஜனதா ஆளும் மாநிலங்களான குறிப்பாக உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை.
ஏப் 2-ந்தேதி நடந்த போராட்டத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 16 பேர் கொல்லப்பட்டனர். இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. பா.ஜனதா ஆட்சியில் ஒட்டு மொத்த பொதுமக்களுக்கே பாதுகாப்பு இல்லை.

தென் மாநிலங்களில் இருந்து நிதி எடுத்து வட மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு செலவழிப்பது சரியல்ல. மாநில உரிமைகளை பறிக்கும் செயல்களில் பா.ஜனதா அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கல்வி, மருத்துவம், தண்ணீர் ஆகிய விஷயங்களை கையில் எடுத்து உள்ளது.
மாநில அரசுகளை ‘டம்மி’ யாக்குவதற்கு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தென் மாநில உரிமைகளை பறிக்க கூடாது என்பதற்காக மத்திய அரசை எதிர்த்து அனைத்து முதல்-அமைச்சர்கள் மாநாடு நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மனோகரன். கடந்த 2007-ம் ஆண்டு அதே பகுதியில் ‘ஸ்வீட் ஸ்டால்’ கடை நடத்தி வந்தார்.
கடைக்கு இனிப்பு, பலகாரம் தயார் செய்ய அதே பகுதியில் சென்னையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து இருந்தார்.
இந்த நிலையில் மனோகரன், தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவரிடம் குத்தகைக்கு எடுத்துள்ள இடத்தினை விலைக்கு வாங்க விரும்புவதாகவும் இது குறித்து பாலசுப்பிரமணியத்திடம் பேசும்படியும் கூறினார்.
சில நாட்கள் கழித்து வந்த ஏகாம்பரம், அந்த இடத்தினை பாலசுப்பிரமணியன் தனக்கு விற்று விட்டதாகவும் எனவே உடனடியாக இடத்தினை காலி செய்யும்படியும் மனோகரனிடம் கூறியுள்ளார். மேலும் கடையில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது.
இது குறித்து சின்னகாஞ்சீபுரம் போலீசில் மனோகரன் புகார் செய்தார். இதையடுத்து ஏகாம்பரத்தை அழைத்து சப்-இன்ஸ்பெக்டராக இருந்த மாரியப்பன் விசாரணை நடத்தினார்.
அப்போது, வீட்டில் இருந்த தனது மனைவியை பாலியல் ரீதியாக மனோகரன் துன்புறுத்தியதாக தெரிவித்தார். இதுபற்றி மனோகரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தன.
இந்த நிலையில் மனோகரன், எந்த தவறும் செய்யாத என்னை சிறையில் அடைத்துடன், மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
வழக்கினை விசாரித்த நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், புகார் தாரரின் வழக்கினை முறையாக விசாரிக்காமல் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்ட தற்போது ஓய்வு பெற்றுள்ள சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வித்தார்.
மேலும் இத்தொகையினை எட்டு வாரத்திற்குள் மனுதாரருக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். அந்தத் தொகையினை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பனிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தார்.
சென்னை, பெசன்ட்நகர் ஓடைக்குப்பம், வேளாங்கண்ணி தெருவை சேர்ந்தவர் ரகுபதி. நேற்று இரவு அவர் வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கினார்.
நள்ளிரவில் வந்த 2 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனை திருடிக் கொண்டு தப்பி செல்ல முயன்றனர்.
சத்தம் கேட்டு எழுந்த ரகுபதி கொள்ளையர்கள் நிற்பதை கண்டு கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து கொள்ளையர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த குமார், வசந்த் என்பது தெரிந்தது.
சென்னை செனாய்நகர் 8-வது தெருவில் செல்போன் கடை நடத்தி வருபவர் மாரியப்பராஜ். இன்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. கடையில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் சுருட்டி சென்று இருந்தனர்.
இதேபோல் அருகில் உள்ள மருந்து கடையில் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.
சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்தவர் ஸ்டாலின் (35).பிரபல ரவுடி.
இவர் மீது தாம்பரம், மண்ணிவாக்கம் சோமங்கலம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இவர் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தாம்பரம் முடிச்சூர் பாலம் கீழே ரவுடி ஸ்டாலின் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலை, கழுத்து, கை என உடல் முழுவதும் வெட்டுக் காயங்கள் இருந்தன.
அதை பார்த்த பொது மக்கள் சோமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று ஸ்டாலின் உடலை கைப்பற்றினார்கள். அவரை கொலை செய்தது யார் என தெரியவில்லை.
ஸ்டாலின் சொந்த ஊர் கொருக்குபேட்டை. ஆனால் அவர் முடிச்சூர் பாலத்தின் அடியில் பிணமாக கிடந்தார். எனவே முன்விரோதம் காரணமாக அவரை யாராவது கடத்திச் சென்று கொலை செய்து உடலை பாலத்தின் அடியில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
அவரது கொலையில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது? பெண் பிரச்சனையில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது பணத்தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி நடுநிலையுடன் செயல்பட வேண்டியவர். ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கிறார் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று துணை ஜனாதிபதியிடம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மனு தந்து உள்ளன.
இதில் சில கட்சிகள் கையெழுத்து போட்டன. சில கட்சிகள் கையெழுத்து போடவில்லை. தி.மு.க. ஏன் கையெழுத்து போடவில்லை?. என்பதை அவர் களிடம்தான் கேட்க வேண்டும்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்துக்கு விரோதமான நாடகங்களை நடத்தி வருகின்றனர். அவர்களது கனவு நிறைவேற போவதில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறும்.
கவர்னர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படவேண்டும். அவர் மீது உள்ள விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு தி.மு.க. மீது அரசியல்வாதியை போல் குற்றம்சாட்டுவது அந்த பதவிக்கு அழகல்ல.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பார்கள். இதற்கு பொது மக்கள் ஆதரவு தரவேண்டும். சட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தி இருந்தால் போராட்டங்கள் நடந்திருக்காது.
அந்த உத்தரவை மத்திய அரசு மதிக்காததால்தான் எதிர்க்கட்சிகள் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதை தமிழிசை சவுந்தரராஜன் புரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எந்த ஊரில், எங்கு பயங்கரவாத முகாம் நடக்கிறது. எந்த மாநிலத்தில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு மாநில அரசுக்கு உதவ வேண்டும்.
பயங்கரவாதம் நடப்பதாக மக்களை அச்சுறுத்துவதற்கு பதிலாக அதை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என தெரிவிக்க வேண்டும். மராட்டிய மாநிலத்தில் உள்ள சிறிய கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே, அ.தி.மு.க.வை காணாமல் போக செய்யவே பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர யோசனை கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக மாநில தேர்தல் பணிக்காக சென்று கொண்டிருக்கிறேன். தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொன்ன காங்கிரஸ் கட்சியின் முதல்-மந்திரி சித்தராமையாவின் அரசு கர்நாடகத்தில் தொடரக் கூடாது. அது தொடர்வது 2 மாநிலத்துக்கும் தீங்கு விளைவிக்கும்.

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கும் அவசர சட்டத்துக்கு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது மகிழ்ச்சியான விஷயம்.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மே 3-ந்தேதிக்குள் மத்திய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. அதை பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ் நாட்டுக்கு சாதகமான நல்ல முடிவு அமையும்.
இவ்வாறு அவர் கூறினார். #CauveryMangementBoard #Ponradhakrishnan
மறைமலைநகரை அடுத்த சட்டமங்கலத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி லாவண்யா (வயது 35). இவர்களது 3½ வயது குழந்தை நிஷாந்த்.
நேற்று இரவு புஷ்பராஜ், மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் குழந்தையுடன் மறைமலைநகரை அடுத்த மகேந்திரா சிட்டி அருகில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய லாவண்யா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தூக்கி வீசப்பட்ட புஷ்பராஜும், அவரது மகன் நிஷாந்தும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து நடந்ததும் பஸ் டிரைவரும், கண்டக்டரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் லாவண்யாவின் உறவினர்கள் மற்றும் திருத்தேரி, மகேந்திரா சிட்டி பகுதியில் வசிக்கும் பொது மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்படுவதாக கூறி அவர்கள் சென்னை-திருச்சி சாலையில் இரு பக்கங்களிலும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுபற்றி அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமாலினி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகுமாறு கூறினர்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் விபத்து ஏற்படுத்திய பஸ்சின் கண்ணாடியையும் நொறுக்கினர்.

அப்போது கூட்டத்தில் இருந்து பறந்து வந்த கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியின் தலையில் விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தமும் கொட்டியது.
நேரம் செல்லச்செல்ல வன்முறை ஏற்பட்டு பதட்டமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
மறியலில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதன் பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது.
இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் இரவு 11 மணி வரை போக்குவரத்து நெரிசல் இருந்தது. அதன் பிறகு போக்குவரத்து சீரானது.
பொது மக்களின் கல்வீச்சில் 10-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதே போல் போலீசாரின் தடியடியில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
பலியான லாவண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடலில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடி தடை காலம் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இது வருகிற ஜூன் 14-ந் தேதி வரை 60 நாட்கள் நீடிக்கும்.
மீன்பிடி தடையால் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வரும் மீன்களின் வரத்து குறைந்து உள்ளது.
மீன் பிரியர்களின் தேவைகளை சமாளிக்க வியாபாரிகள் ஆந்திரா மற்றும் கேரளாவில் இருந்து மீன்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் கடல் மீன்களின் விலை இரு மடங்காக உயந்துள்ளது. மீன் சந்தை பகுதிகளான மாமல்லபுரம், கோவளம், அம்பாள்நகர், திருப்போரூர், திருக்கழுகுன்றம் வெங்கம்பாக்கம், புதுப்பட்டினம், சதுரங்கபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மீன்கள் விலை இரு மடங்காக உயந்து தட்டுப்பாடும் ஏற்பட்டது.
இதனால் சிறு வகை துடுப்பு படகுகளில் சென்று மீன்பிடித்து திரும்பிய மீனவர்களின் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.
பெரிய வகை மீன்களான சங்கரா, வஞ்சிரம், சுறா, கானாகத்தி, பாறை வகை மீன்கள் குறைந்த அளவே விற்பனைக்கு வந்து இருந்தது.
சிறிய வகை சங்கரா, சுறா உள்ளிட்ட மீன்கள் ஏராளமாக கொண்டு வரப்பட்டு இருந்தது. ரூ. 200-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ இறால் இன்று ரூ. 400 வரை விற்கப்படுகிறது.
திருவள்ளூரை அடுத்த வயலூரை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் (வயது 60), வெங்கடேசன் (48). பஜனை பாடும் குழுவை சேர்ந்தவர்கள்.
இவர்கள் 2 பேரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் கோவிலில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் பஜனை பாட வந்து இருந்தனர்.
இன்று அதிகாலை அவர்கள் அங்கிருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வயலூர் நோக்கி சென்றனர். ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செட்டிபுன்னியம் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணனும், வெங்கடேசனும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






