search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lying case"

    பெண்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்த டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
    சென்னை:

    கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நவேதிதா என்பவர் தனது நண்பர்கள் ஹரினி, சுமதி, ஷீலா உள்ளிட்டோர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று இருந்தார்.

    அவர்கள் அங்குள்ள ரீசார்ட்டில் இரண்டு அறைகள் எடுத்து தங்கி இருந்தனர். அப்போது டி.எஸ்.பி. மோகன்குமார், கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் அங்கு வந்தனர்.

    அறைகளில் இருந்த நிவேதிதா உள்பட பெண்களை ஓட்டலில் நடனம் ஆட வந்ததாக கூறி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இதுகுறித்து நிவேதிதா மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். அதில், நான், எனது தோழிகளுடன் கொடைகானலுக்கு சுற்றுலா சென்ற போது அங்கு பணியாற்றிய டி.எஸ்.பி. மோகன்குமார், இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் எங்களை ஆபாச நடனம் ஆடவந்ததாக கூறி வெளியே இழுத்து வந்து தாக்கினர். நாங்கள் சுற்றுலாவுக்கு வந்து இருக்கிறோம் என்று கூறியும் கேட்கவில்லை. எங்களை டி.எஸ்.பி. அலுவலகம் வெளியே இரவு முழுவதும் அமர வைத்தனர்.

    விசாரணை என்ற பெயரில் அவதூறாக பேசி அத்துமீறி நடந்து கொண்டனர். பெண்களிடம் விசாரணை நடத்தும்போது பெண் போலீசார் உடன் இருக்க வேண்டும் என்று விதி உள்ளது.

    ஆனால், அதுபோன்று பெண் போலீசார் யாரும் இல்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்த போதும் அதை ஏற்க போலீசார் மறுத்துவிட்டனர். ரூ.7 லட்சம் லஞ்சமாக கொடுத்தால் விடுவித்து விடுவதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர். நாங்கள் பணம் கொடுக்க மறுத்ததால் எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்தனர். எனவே, போலீஸ் அதிகாரிகள் மோகன்குமார், கருணாகரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது போலீஸ் அதிகாரிகள் மோகன்குமார், கருணாகரன் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவர்கள் இருவருக்கும் சேர்த்து ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்தில் வழங்கி விட்டு போலீஸ் அதிகாரிகள் இருவரின் சம்பளத்தில் இருந்து தலா ரூ.1 லட்சம் பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும், அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
    அதிகாரத்தை மீறி செயல்பட்ட தமிழக பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுவை கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை அரும்பார்த்த புரத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என்ஜினீயர் செங்குட்டுவன் (வயது 45). இவரது மனைவி பாரதி (42). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    பாரதியின் சொந்த ஊர் சீர்காழி அருகே உள்ள திருவேற்காடு ஆகும். அவர், மயிலாடுதுறை போலீசில் தனது கணவர் குடும்பத்தினர் தன்னை துன்புறுத்துவதாக புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது சுகுணா புதுவை வந்து செங்குட்டுவனின் அண்ணன் பாரி மற்றும் செங்குட்டுவனின் பெற்றோரிடம் விசாரித்தார். அப்போது அவர்களை கடுமையாக தாக்கியதாகவும், தவறான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாகவும் புகார் கூறப்பட்டது.

    மேலும் பாரியை மயிலாடுதுறைக்கு அழைத்து சென்று அங்கு வைத்து அவமதிப்பு செயலில் ஈடுபட்டதாகவும், காயங்கள் ஏற்படும் வகையில் தாக்கியதாகவும் கூறப்பட்டது.

    இது சம்பந்தமாக பாரி புதுவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், சம்பந்தமே இல்லாத போலீஸ் நிலைய அதிகாரி தவறான புகாரின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளார்.

    அவருடைய போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சம்பவம் நடந்ததாக புகார் கூறப்படாத பட்சத்தில் விதிமுறைகளை மீறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த போலீஸ் அதிகாரி மீதும், பொய் புகார் கொடுத்த பாரதி மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரி தனது புகாரில் கூறி இருந்தார்.

    இதை விசாரித்த ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு ரெட்டியார்பாளையம் போலீசார் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா, செங்குட்டுவன் மனைவி பாரதி ஆகியோர் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பொய் புகார் கொடுத்தல், பொய் வழக்கு பதிவு செய்தல், விதிமுறைகளை மீறி அதிகாரத்தை பயன்படுத்துதல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ×