என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினியின் ஆன்மிக அரசியல் வெற்றிபெறும்- அர்ஜூன் சம்பத் பேட்டி
    X

    ரஜினியின் ஆன்மிக அரசியல் வெற்றிபெறும்- அர்ஜூன் சம்பத் பேட்டி

    வரும் தேர்தலில் ரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றி பெறும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். #arjunsampath #spiritualrajinikanth

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 10 நாட்கள் ஸ்ரீ தசா மகாவித்யா ஹோமம் நடக்கிறது.

    9-வது நாளான நேற்று ஸ்ரீ ராஜமதங்கி ஹோமம் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு ஏதோ இந்தியாவிலே ஒரு தனி நாடு என்பது போன்ற தோற்றத்தை ஒருசில பிரிவினைவாத சக்திகள் உருவாக்கி வருகிறார்கள். அந்த சக்திகள் ஆன்மிக அரசியல் நடத்தும் ரஜினி மீது அவதூறு கற்பிக்க முயற்சிக்கிறார்கள். வெறுப்பு அரசியல் நடத்துகிறார்கள். நிச்சயமாக வரும் தேர்தலில் ஆன்மீக அரசியல் வெற்றி பெறும். ராம ராஜ்ஜியம் உருவாகும்.

    காஞ்சீபுரம் அருகே செயல்படும் ஒரு சில அமைப்புகள் ஆன்மீக வாதிகள் மீது தாக்குவது, ஆன்மீக சின்னங்களை அழிப்பது, வன்முறையை தூண்டுவது, தீக்குளிப்பு காரியங்களை செய்ய மாணவர்களை, இளைஞர்களை தூண்டுவதால் உளவுத்துறையும், மத்திய அரசும் கண்காணித்து அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.

    பாரதிராஜா, ரஜினிகாந்த் மீது வெறுப்பு பிரச்சாரத்தை செய்கிறார். இன வெறி கொள்கையை பிரச்சாரம் செய்கிறார். இலங்கை தமிழர் பிரச்சினையிலும், காவிரி பிரச்சினையிலும் ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளார்.

    ஆனால் பாரதிராஜா, சீமான், வைகோ போன்றவர்களால் இப்பிரச்சினைகளில் கேடுதான் வந்துள்ளது. எனவே இப்பிரிவினை வாத இயங்கங்களை மாணவர்கள், இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும். ஆன்மீக, தேசிய அரசியலை ஆதரிக்க வேண்டும்.


    ரஜினிகாந்த் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு பிரச்சாரம் செய்யும் பாரதி ராஜாவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திட்டமிட்டு கெடுக்கப்படுகிறது. காவல் துறையை தாக்குவது, டோல் கேட்டை உடைப்பது, மத்திய அரசு அலுவலகங்களை தாக்குவோம், முற்றுகையிடப் போகிறோம் என அறிவிப்பது போன்ற தைரியம் வந்திருப்பது உளவுத்துறையின் இயலாமையை காட்டுகிறது.

    உளவுத்துறையையும், காவல் துறையையும் தன் கையில் வைத்துள்ள முதல்-அமைச்சர் தான் இத்தகைய பிரிவினை சக்திகளை இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக கோயிலுக்கு வந்த அர்ஜூன் சம்பத்தை கோயில் ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரிகள், நடனம் சாஸ்திரிகள் வர வேற்றனர். #tamilnews #arjunsampath #spiritualrajinikanth

    Next Story
    ×