என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
    X

    ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

    ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தாம்பரம் செல்லும் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு வட்டார போக்குவரத்து அலுவலராக வெங்கடேசன், ஆய்வாளராக கண்ணன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்த ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், ஆய்வாளர் கண்ணன் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். பணம் சிக்கியது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பத்திரப் பதிவுத் துறை மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தின் கீழ் 11 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. மாவட்ட பத்திரப் பதிவு அலுவலராக கடலூர் செம்மண்டலத்தைச் சேர்ந்த குமரேசன் பணியாற்றி வருகிறார்.

    பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் 25 சார்பதிவாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் இருந்து மாவட்ட பத்திரப் பதிவு அலுவலர் குமரேசன் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    நேற்று மதியம் 2 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றனர்.

    அங்கு ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். அப்போது பத்திரப்பதிவு அலுவலர் குமரேசனின் அறையில் ரூ.42 ஆயிரத்து 630 இருந்தது. அவரது காரையும் போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.50 ஆயிரம் இருந்தது. இந்த சோதனையில் மொத்தம் ரூ.92 ஆயிரத்து 630 சிக்கியது.

    இந்த பணத்துக்கு உரிய கணக்கை குமரேசனால் காட்ட முடியவில்லை. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த பணத்தை கைப்பற்றினர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இந்த சோதனை இரவு 10 மணி வரை நடைபெற்றது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் பலவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும், லஞ்ச பணத்தையும் பைகளில் வைத்து எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சோதனை 8 மணி நேரம் நடைபெற்றது.

    இதையடுத்து பத்திரப் பதிவு அலுவலர் குமரேசன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். #tamilnews

    Next Story
    ×