என் மலர்
செய்திகள்

காவிரி நீர் பிரச்சினைக்கு திமுக, காங்கிரஸ் தான் மூலகாரணம் - ஓ.பன்னீர்செல்வம்
ஆலந்தூர்:
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக போராடி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு நிதிஉதவி, வேலை வாய்ப்பு குறித்து அரசு பரிசீலிக்கும். யாரும் உணர்ச்சி வசப்படக்கூடாது. மனஉறுதியுடன்தான் போராட வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா தான் வலுவான அடித்தளம் அமைத்தார். ஸ்டாலின் மற்ற கட்சிகளை அழைத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார். அவரிடம் இரு கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.
2007-ம் ஆண்டு காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு வந்தது. அப்போது காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. இடம் பிடித்து பதவியில் இருந்தது. தி.மு.க. நினைத்து இருந்தால் உடனடியாக அரசாணை வெளியிட்டு இருக்கலாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து இருக்கலாம். நீர் முறைப்படுத்தும் குழு ஏற்படுத்தி இருக்கலாம்.
ஆனால் அதையெல்லாம் செய்ய தவறிவிட்டார்கள். இந்த பிரச்சினை இவ்வளவு பெரிதானதற்கு மூல காரணமே தி.மு.க.-காங்கிரஸ் தான். 2011-ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பு நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு சென்று அரசாணை பெற்றார் என்பது வரலாறு. அதை மறந்து விட்டு பிரச்சினைக்கு வலு சேர்க்க மாயையாக போராடி வருகிறார்கள்.
இப்போது மத்திய அரசு கால அவகாசம் கேட்டாலும் இறுதியில் நல்ல தீர்ப்பு வரும் என உறுதியாக நம்புகிறேன்.
உரிமைக்காக போராடு பவர்கள் எந்த வழியை தேர்ந்து எடுக்கிறார்கள் என்பதை பொறுத்து இருக்கிறது. அ.தி.மு.க. எப்போதும் அறவழியில்தான் போராட்டம் நடத்தும். காவிரிக்காக இப்போது நடந்த போராட்டம் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தான் இருந்தது. எதிர்கால சந்ததியினர் இப்படிப்பட்ட போராட்டத்தை கையில் எடுத்தால் எதிர்காலம் என்னாகும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Cauveryissue






