என் மலர்
செய்திகள்

ஏடிஎம்-ல் நவீன கருவி பொருத்தி வாடிக்கையாளர்களின் ரகசிய எண்களை திருட முயன்ற 2 பேர் கைது
தாம்பரம்:
வங்கி ஏ.டி.எம். பின் எண், ரகசிய குறியிடு எண், ஏ.டி.பி. எண் போன்றவற்றை முறைகேடாக பயன்படுத்தி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் செயல்பட்டு வருகிறது.
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து வங்கியில் இருந்து கேட்பது போல கேட்டு ரகசிய எண்களை தெரிந்து கொண்டு கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
தாம்பரத்தில் ஆக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தில் “ஸ்டிம்மர்” கருவியை பொறுத்தி வாடிக்கையாளர்களின் பின் நம்பர், ரகசிய எண்களை பதிவு செய்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற வாடிக்கையாளர்கள் அதில் மாற்றம் இருப்பதை கண்டு வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
வங்கி அதிகாரி ராஜேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் ஏ.டி.எம். மையத்தின் சி.சி.டி.வியை ஆய்வு செய்தனர். “ஸ்டிம்மர்” கருவியை 2 பேர் ஏ.டி.எம். எந்திரத்தில் பொறுத்தி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் ஒரு நாள் முழுவதும் காத்திருந்தனர்.
அப்போது 2 வாலிபர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு வந்து அந்த கருவியை எடுத்த போது பிடிபட்டனர். திருநெல்வேலியை சேர்ந்த சுல்தான் (50), சுலைமான் (40) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
ஏ.டி.எம். எந்திரத்தில் பொறுத்தப்பட்ட அந்த கருவி மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தக் கூடிய ரகசிய எண்களை பதிவு செய்து பின்னர் அதன் மூலம் அவர்களது கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவும் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அக்கருவி வைக்கப்பட்டதை அறிந்து சாதுர்யமாக செயல்பட்டதால் கொள்ளையர்கள் சிக்கினர்.
இதுபோல வேறு ஏ.டி.எம்.களில் அவர்கள் கைவரிசை காட்டினார்களா? எத்தனை வங்கிகளில் தகவல் தொழில் நுட்ப மோசடியில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.






