என் மலர்tooltip icon

    ஈரோடு

    • செவ்வாழைகள் குலை தள்ளி அறுவடைக்கு தயாராக உள்ளது.
    • 3 ஏக்கர் செவ்வாழை, கரும்பு தோட்டம் முற்றிலும் சேதம் அடைந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூர் வனச்சரகத்தில் கடம்பூர் ஏரி தோட்டம் என்ற பகுதி உள்ளது. வனப்பகுதியைெயாட்டிய இந்த பகுதியில் செல்வம் என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    இதில் செவ்வாழை மற்றும் கரும்பு பயிரிட்டுள்ளார். செவ்வாழைகள் குலை தள்ளி அறுவடைக்கு தயாராக உள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை செவ்வாழை, கரும்பு தோட்டத்துக்குள் நுழைந்தது. அந்த யானை செவ்வாழை மற்றும் கரும்புகளை ருசித்தது. அப்போது சத்தம் கேட்டு செல்வம் தனது தோட்டத்துக்கு சென்றார். அங்கு ஒற்றை யானை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அவர் பட்டாசு வெடித்தும், டார்ச் லைட் அடித்தும் யானையை விரட்ட முயன்றார். ஆனால் எவ்வளவு முயன்றும் யானை தோட்டத்தை விட்டு வெளியேறாமல் விடிய, விடிய கரும்பு, செவ்வாழை தோட்டத்தை சேதப்படுத்தியது.

    இதையடுத்து இன்று காலை 7 மணி அளவில் யானை மீண்டும் தானாகவே வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனால் 3 ஏக்கர் செவ்வாழை, கரும்பு தோட்டம் முற்றிலும் சேதம் அடைந்தது.

    • திடீரென மாணவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேன் முன்பு இருந்த பம்பர் மோதியது.
    • பலியான மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி எல்.பி.எஸ். தெருவை சேர்ந்தவர் மருதாசலம். இவரது மனைவி சுலோச்சனா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் கிரண் (16) என்பவர் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இன்று காலை மாணவர் கிரண் வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டார். பள்ளிக்கு சென்ற அவர் தனது வகுப்பறையில் பேக்கை வைத்துவிட்டு தனது தம்பியிடம் மோட்டார் சைக்கிளை கொடுக்க மீண்டும் பள்ளியில் இருந்து அருகில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு புறப்பட்டார்.

    மாணவர் கிரண் சிவகிரி அம்மன் கோவில் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிவகிரியில் இருந்து கொடுமுடி நோக்கி ஒரு வேன் சென்றது. எதிர்திசையில் கொடுமுடியில் இருந்து சிவகிரியை நோக்கி 2 லாரிகள் வந்து கொண்டிருந்தது.

    திடீரென மாணவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேன் முன்பு இருந்த பம்பர் மோதியது. இதில் நிலைதடுமாறிய மாணவர் கீழே நடுரோட்டில் விழுந்தார். அந்த நேரத்தில் கொடுமுடியில் இருந்து வந்த ஒரு லாரி கண் இமைக்கும் நேரத்தில் மாணவரின் தலை மீது ஏறி இறங்கியது. இதில் மாணவர் கிரண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தலை நசுங்கி பலியானார்.

    விபத்து பற்றி தெரிய வந்ததும் சம்பவ இடத்துக்கு சிவகிரி போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் பலியான மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் சிவகிரி அம்மன் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஷேர்சாட் மூலம் பழகிய மாணவியை ஆசை வார்த்தை கூறி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • பின்னர் மாணவியின் தந்தையிடம் ஜேசுதாஸ் நானும் உங்களது மகளும் ஒன்றாக இருக்கும் படத்தை அனுப்பி இருக்கிறேன். நீங்கள் பணம் தரவில்லை என்றால் இந்த ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தற்போது பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலகட்டம் என்பதால் இந்த மாணவி ஆன்லைன் மூலம் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வந்தார்.

    அப்போது ஷேர்சாட் என்ற செயலின் மூலம் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வயலூரை சேர்ந்த ஜேசுதாஸ் (21) என்ற வாலிபர் மாணவிக்கு பழக்கமாகி உள்ளார்.

    இதன் பின்னர் இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். இதையடுத்து அடிக்கடி இருவரும் செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வாலிபர் ஜேசுதாஸ் மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளார்.

    அப்போது ஜேசுதாஸ் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு முத்தம் கொடுத்து உள்ளார். அதனை அந்த மாணவிக்கு தெரியாமல் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

    பின்னர் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். அதன் பின்னர் ஜேசுதாஸ் பலமுறை மாணவியின் வீட்டிற்கு வந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    இந்நிலையில் ஜேசுதாஸ் நடவடிக்கை பிடிக்காததால் மாணவி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜேசுதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை வாட்ஸ்-அப்பிற்கு மாணவியுடன் தான் நெருக்கமாக இருக்கும் ஒரு போட்டோவை அனுப்பி உள்ளார்.

    இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தையிடம் ஜேசுதாஸ் நானும் உங்களது மகளும் ஒன்றாக இருக்கும் படத்தை அனுப்பி இருக்கிறேன். நீங்கள் பணம் தரவில்லை என்றால் இந்த ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    இதையடுத்து மாணவி மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஜேசுதாசை தேடி வந்தனர். அப்போது ஜேசுதாஸ் கோவையில் உள்ள ஒரு பிஸ்கட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஜேசுதாசை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததும், மாணவி தன்னுடன் இருக்கும் படத்தை அவரது தந்தைக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.

    இதையடுத்து ஜேசுதாஸ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சித்தோட்டில் வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் சிக்கினர்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    சித்தோடு:

    சித்தோடு மற்றும் லட்சுமி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்துவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து சித்தோடு போலீசார் பவானி அடுத்த லட்சுமி நகர் கோண வாய்க்கால் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் கஞ்சாவை பாலிதீன் கவரில் வைத்து விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சித்தோடு குமிளம்பரப்பு பகுதியை சேர்ந்த ராஜா (28), சித்தோடு கொங்கம்பாளையம் முரு கேசன் (34), சித்தோடு சொட்டையம்பாளையம் வெங்கடேஷ் (44) என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்க ளிடம் இருந்து 4.100 கிராம் கஞ்சாவை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் கஞ்சா விற்பனையில் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தினர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் அளுக்குளி திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 288 குடியிரு ப்புகளை மேலாண்மை இயக்குநர் ஆய்வு செய்தார்.
    • மேலும் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் அருகாமையில் உள்ள ேரஷன் கடை பற்றிய விபரங்களை மக்களிடம் கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 30 திட்டப்பகுதிகளில் 11,890 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு அதில் 1,184 குடியிருப்புகள் முடிவுற்று 997 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு குடியேற்றப் பட்டுள்ளார்கள்.

    பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 7689 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 6316 கட்டிட பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் அளுக்குளி திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 288 குடியிரு ப்புகளை ஆய்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புதாரர்களிடம் குறைகளை கேட்டறிந்து உடன் சரிசெய்ய அதிகாரி களிடம் அறிவுறித்தினார்.

    மேலும் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் அருகாமையில் உள்ள ேரஷன் கடை பற்றிய விபரங்களை மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஈரோடு மாநகராட்சி க்குட்பட்ட பவானி சாலை பகுதி திட்டப்பகுதியில் அனை வருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் 336 குடியிருப்புகள் கட்டும் பணிகளைஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் பெரும்பள்ளம் ஓடை, கருங்கல்பாளையம் மற்றும் பெரியார் நகர் திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 1072 குடியிருப்புகளை ஆய்வு செய்து குடியிருப்புகளை பயனாளிகளிடம் விரைவில் ஒப்படைக்க வீட்டுவசதி துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள ஆலமரத்து மேடு திட்டப்பகுதியில் ஆய்வு செய்து மக்களிடம் கலந்துரையாடி நிலுவை தொகையினை செலுத்தி விற்பனை பத்திரங்களை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுருத்தினார்.

    மேலும் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டப்பணிகளைஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 50 கிராம் கஞசாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டி–பாளையம் அருகே உள்ள கடத்தூர், காசிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி களில் கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது காசிபாளை யம் பஸ் நிறுத்தம் பகுதியில் 2 பேர் பையுடன் நின்று கொண்டு இருந்தனர். சந்தேகம் அடைந்த போலீ சார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிங்கிரி பாளையத்தை சேர்ந்த திலீப்குமார் (19), மாக்கணாங் கோம்பை பகுதியை சேர்ந்த விஜய் (21) எனவும், கஞ்சா விற்பனை கொண்டு சென்ற தும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 50 கிராம் கஞசாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரை கைது செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • அந்தியூர் பர்கூர் மலையில் உணவு தேடி வந்த காட்டுயானை 2வீட்டை சேதப்படுத்தி விட்டு சென்றது.
    • இடிந்து வீட்டிருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர்கள் கோர்க்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சி மேல் தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி மாதம்மாள் (65). இவர்களது மகன் முனியப்பன். மாதம்மாள் தனது மகளுடன் அருகாமையில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் அதிகாலை இவர்களின் வசிப்பி டத்துக்கு காட்டுயானை உணவு தேடி வந்துள்ளது. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு இவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தபோது யானை நின்றிருந்தது தெரியவந்தது. உணவு தேடி வந்த காட்டுயானை இவர்களின் வீட்டை சேதப்படுத்தி விட்டு சென்றது.

    இதுகுறித்த தகவலின்பேரில் பர்கூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். உணவு தேடி காட்டுயானை குடியிருப்புக்கு வந்து செல்வது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இடிந்து வீட்டிருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர்கள் கோர்க்கை விடுத்துள்ளனர். இதேபோல் அட்டகாசம் செய்யும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வேலை செய்யும் கம்பெனியில் கணக்கு எழுதுவதில் தவறு செய்துவிட்டதால் மனம் உடைந்து விரக்தியில் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • இதுகுறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீவலூர் திருப்பூண்டி, மன்மதன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரிமளா (28). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சசிகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரிமளா கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் பரிமளா தனது தங்கையுடன் ஈரோடு மாவட்டம் ஈங்கூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு கம்பெனியில் 3 வருடங்களாக தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பரிமளா திடீரென எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டார். இது குறித்து அவரை தங்கைக்கு தெரிய வந்ததும் அக்கா பரிமளாவை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அப்போது பரிமளா தான் வேலை செய்யும் கம்பெனியில் கணக்கு எழுதுவதில் தவறு செய்துவிட்டதால் மனம் உடைந்து விரக்தியில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பரிமளா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா வெங்கம்பூர் அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அளவுதீன். அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது தாய் ஆயிஷா பீவி (63). மகன் வீடு அருகே தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஆயிஷா பீவி கடந்த ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவ த்தன்று வயிற்றுவலியால் துடித்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்து அரளி விதையை அரைத்து குடித்து விட்டு மயங்கி னார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆயிஷா பீவி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    • தாளவாடி அருகே வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை புலி அடித்து கொன்றது.
    • மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தாளவாடி வனச் சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரசுவாமி (49)இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார் வழக்கம் போல் மாடுகளை அங்குள்ள மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார் நேற்று மதியம் மாடுகளை அழைத்தை வர சென்ற போது ஓரு பசு மாடு இறந்துகிடந்தது மாடு இறந்துகிடந்த இடம் கர்நாடக வனப்பகுக்கு உட்பட்டது.

    இதுபற்றி தாளவாடி வனத்துறை மற்றும் கர்நாடக வனத்துறைக்கு தகவல் அளித்தார் சம்பவயி–டத்திக்கு வந்த வனத்துறை இறந்த மாட்டை ஆய்வு செய்தனர் புலி தாக்கி பசு மாடு இறந்தது தெரியவந்தது.

    இதனால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். குறிப்பாக கால்நடை வளர்போர் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது:-

    கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்றனர்.

    • ஆசனூரில் அமைக்கப்பட்டிருந்த எடைமேடை பயனற்ற நிலையில் இருந்ததை வனத்துறையினர் சீரமைத்து நேற்று முதல் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எடை போட்டு அனுப்பி வைத்தனர்.
    • அனைத்து வாகனங்களும் எடை போட்ட பிறகே 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை உள்ளது.

    இந்த திம்பம் மலைப்பாதை திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடு ஞ்சாலையில் அமைந்து உள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலை ப்பாதை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரு கின்றன.

    வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி திம்பம் மலைப்பாதையை கடப்பது வழக்கம். அவ்வாறு சாலையை கடக்கும் வனவிலங்குகள், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன.

    இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    மேலும் இந்த வழியாக 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆசனூரில் அமைக்கப்பட்டிருந்த எடைமேடை பயனற்ற நிலையில் இருந்ததை வனத்துறையினர் சீரமைத்து நேற்று முதல் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எடை போட்டு அனுப்பி வைத்தனர்.

    நேற்று முதல் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். விரைவில் அனைத்து வாகனங்களும் எடை போட்ட பிறகே 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும். மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பபடும் என தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் மின் கம்பியாளர் உதவியாளர் (ஒயர்மேன் ஹெல்பர்) தகுதிக்கான தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25-ந் தேதி நடக்க உள்ளது.
    • விண்ணப்பத்தை, https://skilltraining.tn.gov.in/DET என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

    ஈரோடு:

    தமிழகத்தில் மின் கம்பியாளர் உதவியாளர் (ஒயர்மேன் ஹெல்பர்) தகுதிக்கான தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25-ந் தேதி நடக்க உள்ளது. இப்பணிக்கு தகுதியான 21 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பதாரர்கள் மின் ஒயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின் கம்பியாளர் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்கள், தேசிய புனரமைப்பு திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட மின்சார பணியாளர் மற்றும் கம்பியாளர் தொழில் பிரிவில் பயிற்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பத்தை, https://skilltraining.tn.gov.in/DET என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அடுத்த மாதம் 26-ந் தேதி மாலை 5:30 மணிக்குள், 'முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு –638009' என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஈரோடு அரசு ஐ.டி.ஐ.யை, 0424 2275244 என்ற எண்ணிலும், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் அலுவலகத்தை, 0424 2270044 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு கூடுதல் விபரம் அறியலாம்.

    • அந்தியூர் நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கார்த்தி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள சிந்தகவுண்டம்பாளையம் அடுத்த காட்டுபாளையம் ஏரி தோட்டத்தை சேர்ந்தவர் சொக்கப்பன். இவரது மகன் கார்த்தி ( 19). டிப்ளமோ படித்துள்ளார்.

    இந்த நிலையில் கார்த்தி சம்பவத்தன்று அந்தியூர் அருகே உள்ள பாட்டப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் சின்னபருவாச்சியில் அந்தியூர்-பவானி ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அந்தியூர் நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கார்த்தி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த கார்த்தியை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கார்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

    ×