என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் வீட்டின் முன்பு நின்ற மோட்டார் சைக்கிளை குடிபோதையில் வாலிபர் திருடி சென்றார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுலைமானை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

      ஈரோடு:

    ஈரோடு பி.பி.அக்ரஹாரம் முத்து தெருவை சேர்ந்தவர் பூசார்அலி (47). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். பின்னர் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்திருந்தார். இந்நிலையில் பூசார்அலி தனது நண்பர் அணீஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிள் தேடி பவானி ரோடு வழியாக, பி.பி.அக்ரகாரம் அடுத்த பேரஜ் பிரிவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக பூசார் அலியின் மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் ஓட்டிக்கொண்டு வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த வாலிபரை மோட்டார் சைக்கி ளுடன் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொ ண்டதில் அவர்பவானி சீனிவாசபுரத்தை சேர்ந்த சுலைமான் (20) என்பதும், குடிபோதையில் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுலைமானை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • நில அதிர்வு ஏற்படுவதற்கு முன்பு பயங்கர வெடிசத்தமும் கேட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.
    • சிறிய அளவில் நில அதிர்வு இருந்ததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வாய்ப்பாடி, மரப்பாளையம், காளிக்காவலசு, அய்யம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, எம்.பி.என். காலனி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் வீட்டின் சுவற்றில் மாட்டியிருந்த போட்டோ விழுந்து உள்ளது. மேலும் பல்வேறு வீடுகளில் பாத்திரங்கள் உருண்டு ஓடி உள்ளது.

    நில அதிர்வு ஏற்படுவதற்கு முன்பு பயங்கர வெடிசத்தமும் கேட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.

    இதுகுறித்து வரப்பாளையத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    இரவு 9 மணி அளவில் நாங்கள் வீட்டில் இருந்தபோது திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து எங்கள் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்து அருகில் உள்ள கோவிலில் தஞ்சம் அடைந்தோம். சிறிய அளவில் நில அதிர்வு இருந்ததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளில் பாத்திரம் உருண்டு ஓடியதாகவும், வீட்டின் சுவற்றில் இருந்த போட்டோக்கள் கீழே விழுந்ததாகவும் தகவல் பரவி உள்ளது. நில அதிர்வுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றார்.

    இந்த சம்பவம் சென்னிமலை மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் வேகமாக பரவியது. இதையடுத்து சென்னிமலை பகுதி மக்கள் விடிய விடிய அச்சத்துடன் காணப்பட்டனர்.

    • வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கருமுட்டை எடுக்கப்பட்டதாலும் கடந்த சில நாட்களாக சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சிறுமியின் வளர்ப்பு தந்தை அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுத்த ஜான் உள்பட 4 பேரை ஈரோடு சூரம்பட்டி போலீசார் போக்சோ உள்பட 9 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    தொடர்ந்து சிறுமியின் கருமுட்டை பெற்ற ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், திருப்பதி, திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள், ஊழியர்கள், நிர்வாகிகளிடம் ஈரோடு ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி விசாரணை நடத்தினார்.

    இதேபோல் உயர்மட்ட மருத்துவ குழுவினரும் தனியார் மருத்துவமனைகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பி அவர்களிடமும் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்போது ஈரோடு ஆர்.என். புதூர் அருகே உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கருமுட்டை எடுக்கப்பட்டதாலும் கடந்த சில நாட்களாக சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    காப்பகத்தில் அவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மேலும் இதுகுறித்து சிறுமி காப்பக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன. இறுதியில் சிறுமிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும், உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எதுவும் அவரது வயிற்றில் இல்லை என உறுதி செய்யப்பட்டது.

    காப்பகத்தில் இருந்த சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு செல்ல ஆசைப்பட்டு உள்ளார். ஆனால் தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதால் அவரை தொடர்ந்து காப்பகத்தில் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இதனால் சிறுமி மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என தகவல் வெளியானது.

    இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-

    தற்போது சிறுமி நலமாக உள்ளார். அவருக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. அவருக்கு சில கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.

    இன்று மீண்டும் சிறுமிக்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. அது முடிந்ததும் இன்று மதியம் அல்லது மாலைக்குள் சிறுமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் காப்பத்துக்கு அழைத்து செல்லப்படுவார் என்றனர். சிறுமி சிறிதளவே அமிலத்தை குடித்ததால் உயிர் தப்பினார்.

    • பெருந்துறையில் மின் கசிவு காரணமாக ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வர் வசந்தகுமார் (40). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வியாபரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் இரவு 11 மணிக்கு கடைக்குள் இருந்து புகை வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வசந்த குமாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் கடையை திறந்து பார்த்த போது கடைக்குள் இருந்த துணிகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதில் கடையின் முன் பகுதியில் இருந்த துணிகள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்தது.

    • பொது இடங்களில் வரும்போது முககவசம் அணிந்து வர வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
    • மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை களையும் முறையாக பின்பற்றுவது இல்லை. முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரத்திற்கும் மேலாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 777 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 989 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 22 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.இதையடுத்து மாவட்ட சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். பொது இடங்களில் வரும்போது முககவசம் அணிந்து வர வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    ஆனால் இதனை பெரும்பாலான மக்கள் கடைபிடிப்பதில்லை. கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக முககவசம் அணியாமல் அலட்சியமாக செல்கின்றனர். இதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முககவசம் அணியாமல் செல்கின்றனர்.

    மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை களையும் முறையாக பின்பற்றுவது இல்லை. முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் இன்னும் அபராதம் விதிக்கும் பணி தொடங்கவில்லை. பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் சுகாதார த்துறையினர் முககவசம் அணிந்து வரவேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் இதை பெரும்பாலானோர் காதில் வாங்கி கொள்வதாக தெரிய வில்லை. இது போன்ற அலட்சிய போக்கால் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் அரசு நிலை உருவாகியுள்ளது.

    எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
    • இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் இண்டேன் கேஸ் ஏஜென்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இரவு வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர். நள்ளிரவில் நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    பின் தரைத்தளத்தில் உள்ள கேஸ் ஏஜென்சியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனையடுத்து மறுநாள் காலை பணிக்கு வந்த ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சி.சி.டி.வி. பதிவுகளை ஆராய்ந்து விசாரணை நடத்தியதில் இச்சம்பவத்தில் 3 வாலிபர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    மேலும் அஸ்சூரன்ஸ் அலுவலகத்தில் பல ஆயிரமும், கேஸ் ஏஜென்சியில் பல ஆயிரமும் கொள்ளை அடிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    இந்நிலையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விட்டனர். சி.சி.டி.வி. கேமராவில் பதிவான உருவங்களை வைத்து வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த சென்னி மலை வட்டாரத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதன் அடிப்படையில் சென்னிமலை அருகில் உள்ள எம்.பி.என். நகரில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டது உறுதியானது.

    விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த அனோவார்ஹுசைன் (21), சைக்குள் இஸ்லாம் (29), மன்சூர் அலி (23) ஆகிய 3 வாலிபர்கள் கியாஸ் ஏஜென்சி மற்றும் அஸ்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் இருந்து மொத்தம் ரூ.45 ஆயிரம் கொள்ளையடித்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

    • மொடக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் கேபிள் கடை உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவரது மனைவி கோகிலா. இவர்கள் பெருந்துறையில் கேபிள் கடை வைத்து நடத்தி வந்தனர்.

    கார்த்திகேயனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும்அவர் தனது பெற்றோரிடம் சொத்தில் பங்கு கேட்டார். ஆனால் அவர்கள் தர மறுத்து விட்டனர். கடன் தொல்லையால் கார்த்திகேயன் மனவேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கார்த்திகேயன் வண்ணாம் பாறையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மனைவியுடன் வந்து தங்கி இருந்ததார். இதையடுத்து கோகிலா அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    வீட்டில் தனியாக இருந்த கார்த்திகேயன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அம்மாபேட்டை ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் மேட்டூர் உபரி நீர் திட்டமான அந்தியூர் பவானி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள தோனி மடுவு திட்டத்தினை விரைவில் தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எ.கேசவன் தலைமை தாங்கினார்.

    அம்மாபேட்டை பேரூராட்சி தலைவர் பாரதி என்கிற கே.என் வெங்கடாசலம், பேரூர் தி.மு.க. செயலாளர் எஸ்.பெரியநாயகம் மாவட்ட வழக்கறிஞர் தலைவர் ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சாமி என்கிற ரத்தினம், மாவட்டத் தலைவர் கந்தசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில் மேட்டூர் உபரி நீர் திட்டமான அந்தியூர் பவானி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள தோனி மடுவு திட்டத்தினை விரைவில் தொடங்க வேண்டும் மற்றும் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய ஒருசில காவலர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கிட மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் மேட்டூர், ஈரோடு, அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக அளவில் பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் நிலையில் அப்பகுதியில் பெண் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் மொபைல் கழிவறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஜனநாயக மக்கள் உரிமைக் கழகம் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பி.முருகேசன்,ரவிச்சந்திரன்,சண்முகசுந்தரம் நாச்சிமுத்து மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் டாக்டர்.அருணாசலம் தலைமை தாங்கினார். உழவர் விவாதக்குழு அமைப்பாளர் வெங்கடாசலபதி வரவேற்றுப்பேசினார். முன்னாள் செயலாளர் ஆசிரியர் விஸ்வநாதன், துணைச்செயலளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கவுந்தப்பாடி நுகர்வோர் அமைப்பு செயலாளர் விஸ்வநாதன் ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்லமுத்து வரவு-செலவு கணக்கு வாசித்தார். மாநில அளவில் கரும்பு விளைச்சலில் சாதனைபடைத்த அரியப்பம்பாளையம் விவசாயி குமார், வேம்பத்தி விவசாயி ஈஸ்வரன் ஆகியோருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    பெங்களூரில் இந்திய அளவில் நடைபெற்ற தட்டு எறியும் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலயாவில் நடைபெறும் சர்வதேசஅளவிலான தட்டெறிதல் போட்டிக்கு தேர்வு பெற்ற தலைமை காவலர் சரவணக்குமார், சென்னை நேருவிளையாட்டு அரங்கில் இந்திய அளவில் நடைபெற்ற 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 2-ம் பிடித்த சண்முகம் ஆகியோருக்கு பரிசுவழங்கி பாராட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சித்தா டாக்டர் வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியம், சலங்கபாளையம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் ராமலிங்கம், தலைைமயாசிரியர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் உள்ள அறையில் ராஜீவ்காந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ராஜீவ்காந்தி மனைவியை பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த முடுக்கன்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (31). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுஜி (27). கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    ராஜீவ்காந்தி எரங்கா ட்டூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு ராஜீவ்காந்தி சென்று மனைவியை பார்த்து வந்தார்.

    பின்னர் எரங்காட்டூரில் ராஜீவ்காந்தி தங்கியிருந்த வீட்டு நீண்ட நேரமாக கதவு திறக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

    இதையடுத்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் ராஜீவ்காந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ராஜீவ்காந்தி மனைவியை பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • கரட்டடிபாளையத்தில் உள்ள மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் பாக்கெட்டுகள், பான்மசாலா பாக்கெட்டுகள் என மொத்தம் 107 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • சூரம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் போன்றவற்றை விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கோபி கரட்டடிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை-ஹான்ஸ் பொருட்கள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் கரட்டடிபாளையத்தில் உள்ள மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் பாக்கெட்டுகள், பான்மசாலா பாக்கெட்டுகள் என மொத்தம் 107 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த குமார்(32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சூரம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 159 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
    • அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமி யாரிடமும் சரியாக பேசாமல் தனக்கு ஏற்பட்ட நிலையை கருதி அமைதியாக இருந்து வந்தார்.

    ஈரோடு:

    ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் வலுக்கட்டாயமாக கருமுட்டை எடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை மற்றும் பெண் புரோக்கர் மாலதி, போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பாக உயர்மட்ட மருத்துவ குழுவினர் மற்றும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் மற்றும் திருப்பதி, திருவனந்தபுரம் பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகிகள் மற்றும் டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் பெண் புரோக்கர் மாலதியை போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது வளர்ப்பு தந்தை மூலம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும் இவருக்கு வலுக்கட்டாயமாக கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்தார். யாரிடமும் சரியாக பேசாமல் தனக்கு ஏற்பட்ட நிலையை கருதி அமைதியாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் பெற்ற தாயே தனது வாழ்க்கையை சீரழித்ததால் மனம் உடைந்த சிறுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி இன்று காலை சிறுமி கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் அமிலத்தை (விஷம்) குடித்து மயங்கினார்.

    இதுபற்றி தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்த காப்பக நிர்வாகிகள் சிறுமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×