என் மலர்
ஈரோடு
விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவனின் 302-வது பிறந்தநாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அடுத்த நெற்கட்டும் செவலில் அவரது அரண்மனை வளாகத்தில் உள்ள சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பூலித்தேவனின் குலதெய்வ கோவிலான உள்ளமுடையார் கோவிலில் இருந்து இன்று காலை பூலித்தேவனின் வாரிசான கோமதி முத்துராணி துரைச்சி தலைமையில் பால்குட ஊர்வலம் எடுத்துவரப்பட்டு பூலித்தேவனின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பூலித்தேவன் சிலைக்கு கோமதி முத்துராணி துரைச்சி மாலை அணிவித்தார். தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதியம் சுமார் 11.45 மணிக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அங்குள்ள அரண்மனையை சுற்றிபார்த்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘அ.தி.மு.க. சார்பில் வருகிற 12-ந் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடியும்’ என்று கூறினார்.
அப்போது அவருடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, பாஸ்கரன், முன்னாள் அமைச்சர்கள் மா.பா.பாண்டியராஜன், கண்ணப்பன், முனுசாமி, மற்றும் மனோஜ்பாண்டியன், மனோகரன் எம்.எல்.ஏ., ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பூலித்தேவன் பிறந்தநாள் விழாவை யொட்டி நெல்லை- தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நெற்கட்டும் செவல் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், ஏ.டி.எஸ்.பி. மாதவநாயர் தலைமையில் 10 டி.எஸ்.பி.க்கள், 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளான ஊட்டி, கோத்திகிரி, அப்பர் பவானி, கொடநாடு மற்றும் கூடலூர் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பெய்து வருகிறது.
இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. வறட்சியின் போது 37 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.
அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. கடந்த 28-ந் தேதி மழை குறைந்து அணைக்கு வினாடிக்கு 647 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. 29-ந் தேதி நீர்பிடிப்ப பகுதிகளான ஊட்டி, கொடநாடு, கூடலூர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்தது.
இதனால் அணைக்கு வினாடிக்கு 1526 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று காலை மேலும் அதிகரித்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்தது.
ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி 58.58 அடியாக அணையின் நீர் மட்டம் இருந்தது. நேற்று பகலில் பல இடங்களில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்தது. 8 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 60 அடியை தாண்டியது. நேற்று ஒரே நாளில் மட்டும் நீர்மட்டம் 1½ அடி உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 60.15 அடியாக இருந்தது. அணைக்கு 5900 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
அணையின் நீர்மட்டம் 60 அடியை தாண்டி இருப்பது ஈரோடு மாவட்ட விவசாயிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வாய்க்காலில் உயிர்நீர் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி(65) என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை பெரிய வீர சங்கிலி ஊர்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ளது.
இந்த பண்ணையில் 7 லட்சம் கோழிகள் உள்ளது. இந்த கோழியின் கழிவுகளால் தோன்றும் ஈக்கள் பெரிய வீர சங்கிலி ஊர்பகுதியில் உள்ள வீடுகள், அரசு பள்ளிகள், பால் சொசைட்டி மற்றும் கடைகளிலும் மொய்ப்பதால் பெரிதும் அவதிப்பட்ட பொதுமக்கள் இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த 2008-ம் ஆண்டு இதே பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்த போது, கோழிப்பண்ணை உரிமையாளர் உறுதிமொழிப்பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளார். அதில் இருந்த 2 ஆண்டுகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து வந்தது.
தற்போது இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவின் அடிப்படையில் இரு தரப்பினரையும் அழைத்துப்பேச பெருந்துறை தாசில்தாருக்கு உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக தாசில்தாரின் அழைப்பை ஏற்க மறுத்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இடத்திலேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அதிகாரி அனைவரும் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறியும் கோழிப்பண்ணையின் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தான மூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை தாசில்தார் செந்தில்ராஜ், கோழிநோய் புலனாய்வு துணை இயக்குனர் பொன்வேல் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த கோழிக்கழிவுகளினால் பரவும் ஈக்கள் மற்றும் கொசுக்களால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு எங்களுக்கு உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் இங்குள்ள இந்த கோழிப்பண்ணைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக கோழிப்பண்ணை உரிமையாளரிடம் பேசியதில் அடுத்த 30 நாட்களுக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் இந்த குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் தொடர்ந்து இந்த பிரச்சினை இருந்தால் கோழிப்பண்ணையை தாமாகவே அகற்றி கொள்வதாக உறுதிமொழிப்பத்திரம் எழுதி கொடுத்தார்.
இதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஈரோடு:
ஈரோட்டில் நடந்த அ.தி. மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த சசிகலாவின் தம்பி திவாகரன் நிருபர்களி டம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனு கொடுத்தனர். ஆனால் கவர்னர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் 48 எம்.எல்.ஏ.க் கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். கொங்கு மண்டலத்தை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
ஜெயலலிதா மிகப்பெரிய சக்தியாக இருந்தார். எடப்பாடி பழனிச்சாமி திறமையான நிர்வாகியாக இருந்தாலும் அவரால் கட்சியையும் ஆட்சியையும் நடத்த முடியாது.
தமிழகத்தில் ஊழல் அதிகமாக காணப்படுகிறது. சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ரூ. 2 லட்சமும், வனத்துறை பணி இட மாறுதல், உயர் பதவிகளுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையும் லஞ்சம் பெறப்படுகிறது.
தமிழகத்தை கடந்த 63 ஆண்டுகளாக ஆண்ட தி.மு.க.-காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி கடனாக இருந்தது. ஆனால் கடந்த 2011 முதல் 2016 வரை அது ரூ. 2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மின் துறை அமைச்சர் தங்கமணி தட்கல் முறையை அமல்படுத்தி ஊழல் செய்கிறார். தமிழகத்தை மின் மிகை மாநிலம் என்று அவர் கூறுகிறார். ஆனால் மின்சாரமே இல்லை.
விவசாயிகளுக்கு மும்முனை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் பகலில் 3 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் மட்டுமே மின்சாரம் உள்ளது.
சசிகலா சிறையில் இருப்பதற்கு தி.மு.க. தொடர்ந்த வழக்குதான் காரணம். ஆனால் தற்போது ஆளும் கட்சியினர் மீது தி.மு.க. ஏன் வழக்கு தொடரவில்லை?
எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்டபட 5 அமைச்சர்கள் ஊழலில் திளைத்திருக்கிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மூழ்கிப்போன கப்பலின் கேப்டன் போல உள்ளார்.

சபாநாயகர் தனபால் முதல்-அமைச்சராக வர வேண்டும். அப்போதுதான் கட்சியிலும், ஆட்சியிலும் உள்ள பிரச்சினை ஒழியும்.
இவ்வாறு திவாகரன் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி, தொழிற்சாலையில் இருந்து சாய கழிவுநீரை சுத்திகரிக்காமல் நீர் நிலைகளில் வெளியேற்றுவதாக புகார் வந்ததை தொடர்ந்து கடந்த 10 நாளில் 6 சாய தோல் ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கூறியதாவது.-
ஈரோட்டில் 10 நாட்களில் விதிமுறைகளை மீறி, கழிவுநீரை சுத்திகரிக்காமல் தொழிற்சாலைகளில் இருந்து நீர்நிலைகளில் வெளியேற்றிய 6 சாய மற்றும் தோல் ஆலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 ஆலைகளுக்கு கழிவு நீர் வெளியேற்றுவது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் கழிவுநீரை வெளியேற்றாமல் இரவில் வெளியேற்றுவதாக நிறைய புகார்கள் வருகின்றன. கழிவுநீர் வெளியேற்றப்படும் பகுதிகளில் உள்ள மக்களிடம் கழிவுநீர் திறக்கப்படும் நேரத்தில் தகவல் தருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து சாய, தோல் தொழிற்சாலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணை நீர்மட்டம் வறட்சியின் காரணமாக அதால பாதாளத்துக்கு சென்றது.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளான ஊட்டி, கோத்திகிரி, அப்பர் பவானி, கொடநாடு மற்றும் கூடலூர் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் இந்த மழை பெய்து வருகிறது.
இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மழைக்கேற்ப அதிகரித்தது. வறட்சியின்போது 37 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 50 அடியை தொட்டு 57 அடியானது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இதில் 15 அடி சேறும் சகதியும் கொண்டது. 105 அடிக்கு தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
நேற்று முன்தினம் மழை குறைந்து அணைக்கு வினாடிக்கு 647 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நேற்று மதியத்துக்கு நீர்பிடிப்பு பகுதிகளான ஊட்டி, கொடநாடு, கூடலூர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
இந்த மழை எதிரொலியால் நேற்று மதியம் அணைக்கு வினாடிக்கு 1526 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று காலை அது மேலும் அதிகரித்து 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
நேற்று மதியம் 57.24 அடியாக இருந்த பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 58.58 அடியாக அணையின் நீர்மட்டம் உள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்னும் ஓரிரு நாளில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பவானிசாகர் அணைக்கு மேலும் அதிகளவில் தண்ணீர் வந்து நீர்மட்டமும் உயரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதனால் ஈரோடு மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஈரோடு:
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம், சூர நாய்க்கனூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 56). விவசாயியான இவர் சீனாபுரத்தில் இருந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக இவரது மொபட்டின் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரங்கசாமி தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர்.
அவரை மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் காரை ஓட்டி வந்த சென்னிமலை ஒட்டவலசு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மீது வழக்குபதிவு செய்து பெருந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் பலியான விவசாயி ரங்கசாமிக்கு திருமணமான 2 மகள்கள் மற்றும் திருமணமாகாத ஒரு மகளும் உள்ளனர்.
கோபி:
கோபி அருகே உள்ள தெற்குபதி, எழத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவரது மனைவி சுகன்யா என்கிற சுகுமாரி (வயது 27).
இவர்கள் 2 பேரும் திருப்பூரில் உள்ள தனியார் மில்லில் பணிபுரிந்தனர். அப்போது அவர்கள் காதல் வயப்பட்டனர். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 12-3-2014 அன்று திருமணம் நடந்தது.
2 வயதில் நிவாஸ் என்ற மகன் உள்ளார். ஈஸ்வர மூர்த்தி குடித்துவிட்டு வந்து சுகன்யாவிடம் தகராறு செய்து வருவாராம். இதனால் சுகன்யா கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விடுவார்.
பின்னர் சமாதானம் செய்து அனுப்பி வைப்பார்கள். இது தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 28-ந் தேதியும் தகராறு ஏற்பட்டது. இரவில் அனைவரும் தூங்க சென்றனர்.
மறுநாள் அதிகாலை குழந்தை நிவாஸ் அழும் சத்தம் கேட்டது. தூங்கிக் கொண்டிருந்த ஈஸ்வர மூர்ததி எழுந்து பார்த்தார். அப்போது சுகன்யா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுகன்யாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுபற்றி டி.எஸ்.பி. செல்வம் விசாரித்தார். சுகன்யாவுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
பெருந்துறை அருகே உள்ள திங்களூர் எஸ்.பி. நகரை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 32). மனைவி பெயர் ஜான்சிராணி (29) இந்த தம்பதியினருக்கு கனிஷ்கா (6), ஹாசினி (4) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
அருண்குமாரின் சொந்த ஊர் கரூர் ஆகும். திங்களூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி கட்டிட மேஸ்திரி வேலை பார்த்து வந்தார்.
மூத்த மகள் கனிஷ்கா தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் தனது 2-வது மகளை அதே பள்ளியில் சேர்க்க அருண்குமார் எண்ணினார். 2-வது மகள் ஹாசினியை பிரி.கே.ஜி. வகுப்பில் சேர்த்தார்.
நேற்று முதல் நாளில் பள்ளி வேனில் தங்களது 2-வது மகளை ஆசை... ஆசையாக பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த குழந்தையும் உற்சாகத்துடன் வேனில் ஏறி பள்ளிக்கு சென்றது. பள்ளி முடிந்து அதே வேனில் வீட்டுக்கு திரும்பினாள் சிறுமி ஹாசினி.
முதல் நாள் பள்ளிக்கு சென்று திரும்பும் செல்ல மகளை வரவேற்க ஆவலுடன் இருந்தனர் பெற்றோர். தனது அக்கா கனிஷ்காவுடன் வேனில் ஏறி இருவரும் வேனில் வீட்டுக்கு வந்தனர்.
வேன் மீண்டும் புறப்பட்ட போது வேனை எடுத்த டிரைவர் ரோட்டில் ஹாசினி நிற்பதை கவனிக்காமல் எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஹாசினி வேனின் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தாள்.
ரோட்டின் எதிர்புறம் மகளை அழைத்து செல்ல காத்திருந்த அவரது தாயார் ஜான்சிராணி கண் எதிரே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
தன் கண் முன்னாலேயே தன் மகள் உயிர் இழந்ததை கண்ட ஜான்சிராணி கதறி அழுதார். மகளின் உடலை வாரி அணைத்து அழுது புரண்டார். அதே சமயம் அங்கு கூட்டம் கூடியது. இதை கண்ட வேன் டிரைவர் ராசா கவுண்டன்பாளையத்தை சேர்ந்த கோகுலநாதன் வேனில் இருந்து இறங்கி ஓடி விட்டார்.
பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலேயே சிறுமி ஹாசினி பலியான சம்பவம் அந்த ஊரையே சோகத்தில் ஆழ்த்தியது.
இது குறித்து திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாரதிய ஜனதா கட்சி நெசவாளர் அணி சார்பில் ஈரோட்டில் இன்று மாலை கூட்டம் நடக்கிறது. இதில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் கலந்து கொள்கிறார்.
இதற்காக ஈரோடு வந்த இல.கணேசன் இன்று சம்பத் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளிததார்.
நீட் இந்தியா திட்டம் மூலம் இந்தியாவை தூய்மையாக வைத்திருந்தது போல பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வரும் மாநிலங்களில் லஞ்ச- லாவண்யமற்ற ஆட்சி நடந்து வருகிறது.
ஒரே கட்சியாக இருந்த அ.தி.மு.க. 2 ஆக பிரிந்தது. அந்த 2 அணியும் இப்போது பா.ஜனதாவால் இணைந்து உள்ளது. விரைவில் மத்திய மந்திரி சபையில் மாற்றம் வரும் என எதிர் பார்க்கிறேன். மத்திய மந்திரி சபையில் மாற்றம் வந்த பிறகு தமிழ் நாட்டுக்கு நிரந்தர கவர்னர் நியமிக்கப்படுவார் என எதிர் பார்க்கிறோம்.
தேர்தல் ஆணையம் இரட்டை இலை சினனத்தை நிர்ணயிப்பதன் மூலம் நல்ல ஆட்சி தமிழகத்தில் நடைபெறும்.

பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை. வாய்ப்பு தரவில்லை என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். அவர் முறையான கோரிக்கை வைத்தால் நிச்சயம் பிரதமர் மோடி அவரை சந்திப்பார்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லியில் போராட்டம் நடத்துவது மட்டும் விவசாய பிரதிநிதிகள் அல்ல. தமிழகத்தில் விவசாய பிரதிநிதிகள் நிறைய பேர் உள்ளனர்.
இன்று எல்லையில் இந்தியா- சீனா படைகள் குவிக்கப்பட்டு போர் பதட்டம் இருந்து வந்தது. இதில் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது. சீனா படைகள் வாபஸ் பெற்று விட்டது. இந்திய படைகளும் திரும்ப வந்து விட்டது.
போர் மூலம் மட்டும் தான் வெற்றி பெற முடியும் என்பது அல்ல. இப்படி சுமூகமான இணக்கமாக செயல்பட்டால் போர் இல்லாமலேயே வெற்றி பெற முடியும் என்பதை பிரதமர் மோடி சாதித்துள்ளார்.
இவ்வாறு இல.கணேசன் கூறினார்.
பேட்டியின் போது பா.ஜனதா மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், செய்தி தொடர்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
பவானி அருகே உள்ள சித்தோடு - நசியனூர் பஸ் நிறுத்த பகுதியில் பைபாஸ் செல்லும் சாலை ரோட்டோரம் 12 சாக்கு மூட்டைகள் கேட்பாரற்று அனாதையாக கிடந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இதை வேடிக்கை பார்த்து கொண்டே சென்றனர்.
சிலர் அந்த மூட்டைகளில் அப்படி என்ன இருக்கும்? என எண்ணியப்படியே சென்றனர். ஆனால் அதன் அருகே சென்று மூட்டையை பிரித்து பார்க்க முன் வரவில்லை.
இது பற்றி பவானி போலீசுக்கு தகவல் பரவியது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அந்த மூட்டைகள் ஒவ்வொன்றையும் பிரித்து பார்த்தனர்.
ஒவ்வொரு மூட்டையிலும் பான்பராக், ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இந்த புகையிலை போதை பொருட்களை யாரோ நள்ளிரவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் போட்டு சென்றது தெரியவந்தது.
இப்படி போதை பொருட்கள் மூட்டைகளை ரோட்டில் வீசி சென்றது யார்? உள்ளூரை சேர்ந்தவர்களா? அல்லது வெளியூரை சேர்ந்தவர்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளி மாணவர்களின் வருகையை பதிவு செய்து கண்காணிப்பதற்கு தமிழக அரசு புதிய முறையை அறிமுகப்படுத்தப் போவதாக கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது, ‘பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்மாட் கார்டு வழங்கப்படும். அதில் ஒரு சிம் கார்டு இணைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் மாணவர்களின் வருகையானது பதிவு செய்யப்படும். மேலும் இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சென்றார்களா, இல்லையா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.
மேலும், இந்த ஸ்மாட் கார்டு திட்டம் வடமாநிலங்களில் உள்ள பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது. விரைவில் தமிழ்நாட்டிலும் நடைமுறைக்கு வரும் என அவர் கூறினார்.






