என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலேயே விபத்தில் பலியான சிறுமி ஹாசினி.
    X
    பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலேயே விபத்தில் பலியான சிறுமி ஹாசினி.

    பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலேயே சிறுமி பலியான பரிதாபம்

    பெருந்துறை அருகே பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலேயே வேன் மோதிய விபத்தில் சிறுமி ஹாசினி பலியான சம்பவம் அந்த ஊரையே சோகத்தில் ஆழ்த்தியது.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள திங்களூர் எஸ்.பி. நகரை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 32). மனைவி பெயர் ஜான்சிராணி (29) இந்த தம்பதியினருக்கு கனிஷ்கா (6), ஹாசினி (4) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    அருண்குமாரின் சொந்த ஊர் கரூர் ஆகும். திங்களூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி கட்டிட மேஸ்திரி வேலை பார்த்து வந்தார்.

    மூத்த மகள் கனிஷ்கா தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் தனது 2-வது மகளை அதே பள்ளியில் சேர்க்க அருண்குமார் எண்ணினார். 2-வது மகள் ஹாசினியை பிரி.கே.ஜி. வகுப்பில் சேர்த்தார்.

    நேற்று முதல் நாளில் பள்ளி வேனில் தங்களது 2-வது மகளை ஆசை... ஆசையாக பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த குழந்தையும் உற்சாகத்துடன் வேனில் ஏறி பள்ளிக்கு சென்றது. பள்ளி முடிந்து அதே வேனில் வீட்டுக்கு திரும்பினாள் சிறுமி ஹாசினி.

    முதல் நாள் பள்ளிக்கு சென்று திரும்பும் செல்ல மகளை வரவேற்க ஆவலுடன் இருந்தனர் பெற்றோர். தனது அக்கா கனிஷ்காவுடன் வேனில் ஏறி இருவரும் வேனில் வீட்டுக்கு வந்தனர்.

    வேன் மீண்டும் புறப்பட்ட போது வேனை எடுத்த டிரைவர் ரோட்டில் ஹாசினி நிற்பதை கவனிக்காமல் எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஹாசினி வேனின் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தாள்.

    ரோட்டின் எதிர்புறம் மகளை அழைத்து செல்ல காத்திருந்த அவரது தாயார் ஜான்சிராணி கண் எதிரே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

    தன் கண் முன்னாலேயே தன் மகள் உயிர் இழந்ததை கண்ட ஜான்சிராணி கதறி அழுதார். மகளின் உடலை வாரி அணைத்து அழுது புரண்டார். அதே சமயம் அங்கு கூட்டம் கூடியது. இதை கண்ட வேன் டிரைவர் ராசா கவுண்டன்பாளையத்தை சேர்ந்த கோகுலநாதன் வேனில் இருந்து இறங்கி ஓடி விட்டார்.

    பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலேயே சிறுமி ஹாசினி பலியான சம்பவம் அந்த ஊரையே சோகத்தில் ஆழ்த்தியது.

    இது குறித்து திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×