என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் இன்று நடக்கும் அரசு ஊழியர்கள் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு நிறைவு பெறும் வகையில் அமையும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று மாலை ஏ.ஈ.டி.பள்ளி வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் சபாநாயகர் தனபால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    நூற்றாண்டு விழா பணிகள் நடைபெறுவதை பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 15 ஆயிரம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக மாறுவதற்கான நிகழ்ச்சியாக அமையும்.

    மாணவர்கள் அனைத்து போட்டி தேர்வுகளையும் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றிபெறும் வகையில் தமிழ்நாடு முழவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். நேற்று மாலை 3.30 மணி யளவில் அரசு ஊழியர்களின் நிர்வாகிகள் கோட்டையில் முதல்- அமைச்சரை சந்தித்தனர்.

    இதையடுத்து இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் முதல்வர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தை சுமூக உடன்பாடு ஏற்பட்டு நிறைவு பெறும் வகையில் அமையும்.

    இதையொட்டி முதல்அமைச்சருக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நன்றி கூறும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    நீட் தேர்வை தமிழக அரசு ஏற்கவில்லை, மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று ஈரோட்டில் துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று நடை பெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வை ஜெயலலிதா ஏற்கவில்லை. அவரது நிலை பாட்டில்தான் அரசும் உள்ளது. எனவே தமிழகத்தை பொறுத்தவரை அமைச்சர்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளவில்லை.

    நீட் தேர்வை குஜராத் மாநிலம் ஏற்கவில்லை. மேற்கு வங்காளம், கர்நாடகாவும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நிலையில்தான் தமிழக அரசும் உள்ளது. விதி விலக்கு கேட்டிருக்கிறோம்.

    எனவே இந்த விசயத்தில் ஒத்த கருத்துள்ள முதல்- அமைச்சர்களுடன் கலந்து பேசி மாற்று ஏற்பாடாக என்ன செய்வது? என்று அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் தவறான வாக்குறுதிகளை கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.

    தற்போது வந்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புதான் திடீர் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் பிரச்சினைகளை உணர்ந்து அரசு செயல்படுகிறது.

    எனவே மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு துணை சபாநாயகர் தம்பித்துரை கூறினார்.

    முன்னதாக அவர் எம். ஜி.ஆர். புகைப்பட கண்காட் சியை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் செங்கோட் டையன், ஓ.எஸ் மணியன், கடம்பூர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மர்ம காய்ச்சலுக்கு சிவகிரி பகுதியில் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் சிவகிரியில் மர்ம காய்ச்சலுக்கு 3 வயது சிறுவன் பலியாகி உள்ளான். சிவகிரி ஜீவா தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35) மனைவி பெயர் கவிதா (29).

    கணவன்-மனைவியும் விசைத்தறி தொழிலாளர்களாக பணிபுரிகிறார்கள். இவர்களின் மகன் தருண்நிதி (6). மகள் தரணி (3).

    சிவகிரியில் உள்ள தனியார் பள்ளியில் தருண்நிதி 1-ம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் அடித்தது. இதனால் மகனை பெற்றோர் சிவகிரியில் சிகிச்சை அளித்து பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சிறுவன் தருண்நிதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.

    தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது அவனுக்கு டெங்கு நோய் அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் டெங்கு நோய்க்கு அச்சிறுவன் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    மர்ம காய்ச்சலுக்கு சிவகிரி பகுதியில் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    சிவகிரி பகுதியில் இதேபோல் சம்பவம் நடந்தது கிடையாது. இப்போது சிறுவன் ஒருவன் பலியாகி உள்ளான். இதனால் சுகாதார துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பில் தீவிரம் காட்ட வேண்டும் என சிவகிரி பகுதிமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
    அத்தாணி அருகே நோய் குணமாகாததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆப்பக்கூடல்:

    அத்தாணி அருகே உள்ள குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகள் ஷோபனா (வயது 20). இவர் கோபி அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு அவர் வீட்டில் படுத்திருந்தார்.

    திடீரென அவரது பெற்றோர் எழுந்து பார்த்தனர். அப்போது ஷோபனாவை காணவில்லை. அந்த பகுதியில் பெற்றோர் அவரை தேடி பார்த்தனர்.

    தோழிகள், உறவினர்கள் வீடுகளுக்கும் தொடர்பு கொண்டு கேட்டனர். ஆனால் ஷோபனாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இரவு முழுவதும் தேடி பார்த்தும் ஷோபனா கிடைக்காததால் பெற்றோர் பயத்தில் இருந்தனர். இன்று காலை வீட்டில் உள்ள கிணற்றுப்பகுதிக்கு ஒருவர் சென்றார்.

    எதேச்சையாக கிணற்றுக்குள் பார்த்தபோது உள்ளே ஷோபனா பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கிணற்றுக்குள் இருந்து ஷோபனாவின் பிணம் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஷோபனாவுக்கு நோய் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதும், ஆனாலும் நோய் குணமடையவில்லையாம். இதனால் விரக்தி அடைந்த ஷோபனா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வேறு ஏதும் காரணம் உண்டா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுததி உள்ளது.

    சாயப்பட்டறை கழிவு நீருடன் வெள்ளப்பெருக்கு கலந்து வருவதால், நொய்யல் ஆற்றுப்படுகை கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
    சென்னிமலை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மத்திய மற்றும் உள் மாவடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த கன மழைக்கு திருப்பூர் சாயப்பட்டறை சாய கழிவுநீரால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்றின் குறுக்கே சென்னிமலை அருகே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    அணைக்கு ஒரே நாளில் 16 அடி நீர் வந்துள்ளது. காலை அணைக்கு வரும் நீரின் அளவு 485 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 320 கன அடி. தற்போது அணையில் உள்ள நீர் வெளியேற அடி மதகு திறந்தே விட்டுள்ளதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    கடந்த சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு 90 கன அடி மட்டும் நீர் வரத்து இருந்தது. அணையில் 2.87 அடி நீர் இருந்தது. நேற்று அதிகாலை நிலவரம் படி நீர் வரத்து திடீரென உயர தொடங்கி தற்போது 15.748 அடி நீர் தேங்கியுள்ளது. நீர் வரத்து மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நொய்யல் ஆற்று படுகையில் வெள்ளியங்கிரி மழைசாரல் கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது. திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயகழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்ற படுவதால் ஒரத்துப்பாளையம் அணை எப்போதும் திறந்து தான் இருக்கும். தற்போது மழை வெள்ள நீர் வரத்து வந்து இருந்தாலும் இதை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எங்கே சாய கழிவு நீர் கலந்தவருமோ? என அச்சம் காரணமாகவும். உச்சநீதிமன்ற தீர்ப்பு படியும் அணைக்கு வரும் நீர் அடி நான்கு மதகுகள் வழியாக அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நல்ல மழை வெள்ள நீர் 16 அடி வந்தும் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளதை விவசாயிகள் வேதனையுடன் கூறினர். இருந்தாலும் தற்போது நிலவிய கடும் வறட்சியில் இந்த சாய கழிவு நீர் தான் பல ஆயிரம் தென்னை மரங்களை கரம் ஓரம் காப்பாற்றி உள்ளது என்பது குறிப்பிடத்ளதக்கது.

    நொய்யல் ஆற்றுப் படுகையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடபட்டு உள்ளது. பல ஆண்டுகளாக சாய நீர் மட்டும் சென்ற நொய்யல் ஆறு துர்நாற்றம் வீசி கொண்டு இருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆறு சுத்தமாகி வருகிறது. கரையோர மக்கள் குளித்தும், துணி துவைத்தும் வருகிறார்கள்.

    நொய்யல் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் நொய்யல் கரையோரம் பொதுப்பணித் துறை ஊழியர்கள் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
    இரு சக்கர வாகனம் மீது பஸ் மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பவானி:

    கோவையில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று இரவு சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.

    நள்ளிரவு நேரத்தில் அந்த பஸ் ஈரோடு மாவட்டம் பவானியை பகுதிக்கு வந்தது. சித்தோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே வந்தபோது அங்கு நின்ற இரு சக்கர வாகனம் மீது பஸ் மோதியதாக கூறப்படுகிறது.

    சிறிது நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பயணிகளில் பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

    பஸ் தீப்பிடித்து எரிந்ததும் பயணிகள் அனைவரும் எழுப்பி விடப்பட்டனர். பஸ் எரிவதை பார்த்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு சூட்கேஸ், பைகளை தூக்கிக் கொண்டு விரைவாக கீழே இறங்கினர்.

    இதன் காரணமாக அனைவரும் உயிர் தப்பினர். இது பற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. பஸ்சில் வந்த பயணிகள் வேறு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது. இரு சக்கர வாகனம் மீது மோதியதால்தான் பஸ் தீப்பிடித்து எரிந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

    பெற்றோர் லேப்- டாப் வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு, மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஓருவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    அந்த மாணவி தனது படிப்பிற்காக லேப்-டாப் வாங்கி தர வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் வாங்கி தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அந்த மாணவி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு கொண்டார்.

    சிகிச்சைக்காக அந்த மாணவியை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் அழுதது பரிதாபமாக இருந்தது.

    அம்மாபேட்டை அருகே வேன்-மொபட் மோதிய விபத்தில் கணவர் கண் முன்பு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை மணியக்கார வீதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 64). விவசாயி. இவரது மனைவி மாதம்மாள் (60). இவர்கள் 2 பேரும் இன்று காலை மொபட்டில் நெரிஞ்சிப்பேட்டைக்கு சென்றனர். அங்குள்ள கூட்டுறவு சொசைட்டியில் பால் ஊற்றி விட்டு திரும்பினர்.

    மேட்டூர்-பவானி மெயின் ரோட்டில் அவர்கள் ஏறினர். அப்போது மேட்டூர் பகுதியில் இருந்து அம்மாபேட்டை நோக்கி வந்த வேனும், மொபட்டும் மோதிக்கொண்டன.

    இதில் மாதையனும், மாதம்மாளும் தூக்கி வீசப்பட்டனர். மாதம்மாள் அதே இடத்தில் கணவர் கண் முன்பு பரிதாபமாக இறந்தார். மாதையனின் வலது காலில் முறிவு ஏற்பட்டு பலத்த காயத்துடன் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மாதையன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மாணவி தற்கொலை கொண்டார். மத்திய-மாநில அரசுகளை கண்டித்து பிரதமர் மோடி உருவ பொம்மையை எரிக்க முயன்ற 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு:

    நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை கொண்டார். இதைத் தொடர்ந்து மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளது.

    ஈரோட்டில் காளை மாட்டு சிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமர் மோடி உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

    மாணவரணி கபிலன் தலைமையில் மாவட்ட செயலாளர் குமரகுருபரன் முன்னிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சுமார் 25 பேர் மோடி உருவ பொம்மையுடன் வந்தனர்.

    அப்போது அவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோ‌ஷம் எழுப்பினர். அவர்களை சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி மோடி உருவ பொம்மையை பறித்தனர்.

    பின்னர் பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயன்றதாக 5 பெண்கள் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பெருந்துறை அருகே ஆஸ்பத்திரிக்கு சென்ற பெண் மாயமானது குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம், தாசம்பாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது61). இவரது மனைவி பாலாமணி (55).

    பாலாமணி உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று பாலாமணி ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த கதிர்வேல் பாலாமணியை பல்வேறு இடங்களில் தேடினார்.

    எனினும் பாலாமணி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கதிர்வேல் பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து மாயமான பாலாமணியை தேடி வருகிறார். காணாமல் போன அன்று பாலாமணி மெருன் கலர் சேலை அணிந்திருந்தார்.
    மாணவர்கள் எந்த ஒரு தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் 412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அச்சத்தை போக்க பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதற்காக பவளத்தாம்பாளையம் ஏ.இ. டி. பள்ளி வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த பணியை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது மன வேதனை அளிக்கிறது.

    மேலும் இது போன்று எந்த மாணவர்களும் தவறான முடிவை எடுக்கக்கூடாது. இதை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    மாணவர்கள் எந்த ஒரு தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் 412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அச்சத்தை போக்க பயிற்சி அளிக்கப்படும்.

    மாணவர்கள் போட்டி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பில் எதிர்காலத்தில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக அந்த பாடத்திட்டம் இருக்கும். இதில் பண்பாடு, கலாசாரம், தொன்மை ஆகியவை இடம் பெற்று இருக்கும்.

    நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 4 முறை பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசி உள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் பிரதமரிடம் இதுபற்றி பேசி உள்ளனர்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி மாவட்டம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற 6-ந் தேதி ஈரோட்டில் விழா நடக்கிறது.

    ஈரோடு எப்போதும் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக விளங்கி வருகிறது. இதை தேர்தலில் நிரூபித்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரமணியம், ராஜாகிருஷ்ணன், ஈஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    தாய்நாய் கண்முன்னே கல்நெஞ்ச கொடூரன் ஒருவன் அதன் 5 குட்டிகளையும் அடித்தே கொன்றான். இறந்துகிடந்த தன் குட்டிகளை பார்த்து தாய்நாய் கண்ணீர் விட்டு பாசப்போராட்டம் நடத்தியது.
    சிவகிரி:

    நன்றிக்கு உதாரணமாகவும், காவலே கடமையாகவும் கொண்ட நாய்கள் வீட்டிலும், பங்களாக்களிலும் வாழ்ந்தால்தான் மரியாதை. தெருவோர நாய்களை மற்ற நாய்கள் கூட மதிப்பில்லை. தாய்ப்பாசம் மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளுக்கும் உண்டு. ஆனால் பாசமும், நேசமும், மனிதாபிமானமும் ஏனோ மனிதர்களிடையேதான் குறைந்து வருகிறது. அதற்கு உதாரண சம்பவம் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நடந்துள்ளது.

    சிவகிரி அருகே உள்ள காகம் கிராமத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு தெருநாய் 5 குட்டிகளை ஈன்றது. ரோட்டு ஓரமாக படுத்துக்கொண்டு தன்குட்டிகளை அடி வயிற்றில் பொத்தி பொத்தி 3 நாட்களாக பாலூட்டி பாசமாக கவனித்து வந்தது. குட்டி நாய்கள் இருக்கும் இடத்தின் அருகில், யாராவது மனிதர்கள் சென்றால் எங்கே தன் குட்டிகளை எடுத்து சென்றுவிடுவார்களோ? என்று குரைத்தபடி தாய்நாய் கடிக்க பாயும். இது நியாயமான கோபம்.

    நேற்று காலை குட்டிகளுடன் தாய்நாய் படுத்து இருந்த இடம் வழியே ஒருவர் சென்றார். அவர் தன்குட்டிகளைத்தான் எடுத்துச்செல்ல வருகிறாரோ? என்று நினைத்து தாய்நாய் குரைத்தது. அந்த நபர் குடிபோதையில் இருந்தாரா? இல்லை சுயநினைவில் இருந்தாரா? என்று தெரியவில்லை. தன்னைப்பார்த்து இந்த தெருநாய் குரைத்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் ஒரு கம்பை எடுத்து தாய்நாயை விரட்டினார். பயந்துபோய் தன்குட்டிகளை விட்டு, சற்று தூரத்தில் தாய்நாய் சென்று நின்றுள்ளது.

    உடனே அந்த நபர் ஒரு கொடூரனாக மாறி 5 குட்டிகளையும் ஒவ்வொன்றாக எடுத்து அருகே இருந்த கல்லில் துணிதுவைப்பதுபோல் அடித்து கொன்றார். தான்ஈன்ற குட்டிகள் தன்கண்முன்னே கொல்லப்படுவதை பார்த்தாலும் ஒன்றும் செய்யமுடியாமல் குரைத்தபடி அருகே ஓடி வருவதும், அந்த நபர் கம்பால் தாய் நாயை விரட்டுவதுமாக இருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இந்த சம்பவம் நடந்த இடத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. அதனால் அந்த பாவ சம்பவத்தை தடுக்க வழியில்லாமல் போனது.

    இந்தநிலையில் செத்துக்கிடந்த தன் 5 குட்டிகளையும் பார்த்து கண்ணீர் விட்டபடி தாய்நாய் சுற்றிச்சுற்றி வந்தது. பொதுமக்கள் பரிதாபப்பட்டு அருகே சென்றாலும் யாரையும் அருகே நெருங்க விடாமல் குரைத்தது. நாயின் இந்த பாசப்போராட்டத்தை அந்த பகுதி பொதுமக்கள் நீண்டநேரம் நின்று பார்த்து அவர்களும் கண்ணீர் விட்டார்கள். பின்னர் சமாதானம் அடைந்த தாய்நாய் குட்டிகள் செத்துகிடந்த இடத்தில் இருந்து சற்று தூரம் போய் படுத்துக்கொண்டது. அதன்பின்னர் அந்த பகுதி மக்கள் 5 குட்டிகளையும் எடுத்து ஒரு இடத்தில் குழிதோண்டி புதைத்தார்கள். பிறகு பொதுமக்கள் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டார்கள். ஆனால் தாய்நாய் மட்டும் தன்குட்டிகள் புதைத்த இடத்தை பார்த்துக்கொண்டே இருந்தது.

    5 குட்டிகளையும் யார் அடித்துக்கொன்றது? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. ஒருவேளை தெரிந்தால் விலங்குகள் நல ஆர்வலர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கை.


    ×