என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும். அதற்கு பதிலாக பழைய விற்பனை வரியை சீரமைத்து அமுல்படுத்த வேண்டும் என்று வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார்.
    டி.என்.பாளையம்:

    சத்தியமங்கலத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் 35-வது ஆண்டு விழா நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டார்.

    அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெறாவிட்டால் 2-வது இந்திய சுதந்திர போர் நடக்கும். இந்த வரி விதிப்பு உள் நாட்டு வணிகர்களை அழிக்கும் முயற்சியாகும்.

    அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அடிமையாகக் கூடிய சூழ்நிலை உள்ளது. தரமில்லாத பொருட்களை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும். அதற்கு பதிலாக பழைய விற்பனை வரியை சீரமைத்து அமுல்படுத்த வேண்டும்.

    சில்லரை வணிகத்தில் ஆன்லைன், அந்நிய நேரடி முதலீடு ஆகியவை உள்நாட்டு வணிகர்களை பாதிப்படைய செய்துள்ளது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    தாளவாடியில் பெய்யும் மழை தண்ணீர் சரியான தடுப்பணை இல்லாததால் வீணாக ஓடி கர்நாடகத்துக்கு செல்கிறது. எனவே அந்த தண்ணீரை சேமிக்க தடுப்பணை கட்ட வேண்டும்.

    இவ்வாறு வெள்ளையன் கூறினார்.
    ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கட்சி தலைமையிடம் போட்டி போட்டுக் கொண்டு புகார் அளிப்பதால், கட்சியில் பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் அருகே ரோட்டோரத்தில் பெரியார்- அண்ணா சிலைகள் இருந்தன. போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அந்த சிலைகள் பன்னீர் செல்வம் பார்க்கின் உள்ளே வைக்கப்பட்டன.

    இதற்கான செலவுகள் அனைத்தும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்கப்பட்டது. இதற்காக பெரிய பீடம் அமைத்து அதில் பொயார்-அண்ணா முழு உருவ சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலகமும் இங்கு அமைக்கப்பட்டு உள்ளன. இவைகளை ஈரோட்டுக்கு வந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த நிலையில் தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட பீடத்தில் பெரியார், அண்ணா சிலைகள் அருகே ஈரோடு மாநகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர், சிலை வைக்கப்பட்டது.

    பெரியார்-அண்ணா சிலைகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த மறுநாளே அங்கு எம்.ஜி.ஆர். சிலை அமைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தி.மு.க.வில் ஒரு பிரிவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி மாவட்ட தி,.மு.க. துணை செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:-

    தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் வசூல் செய்து அமைக்கப்பட்ட பீடத்தில் அண்ணா,பெரியார் சிலைகள் அருகே எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட்டது தவறு. அதிலும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி முன்னிலையிலேயே அங்கு எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட்டதை உண்மையான எந்த தி.மு.க. தொண்டர்களும் ஏற்று கொள்ளமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது பற்றி செந்தில்குமார் தரப்பினர் கட்சி தலைமைக்கும் புகார் தொவித்து கடிதம் எழுதி உள்ளனர். இதைத்தொடர்ந்து கட்சி தலைமை அழைப்பின் போல ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி சென்னை சென்றார். மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் விளக்கம் அளித்தார்.

    அன்று இரவே ஈரோடு திரும்பிய அவர் பெரியார் நகரில் உள்ள தனது இல்லத்தில் விளக்க கூட்டம் நடத்தினார். இரவு 10 மணி அளவில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் பி. கே. பழனிச்சாமி, மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர் குமாரசாமி போன்ற நிர்வாகிகள் மேலும் சிலர் கலந்து கொள்ளவில்லை.

    மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி விளக்கம் அளித்தது பற்றி முத்துசாமி பேசினார்.

    இது பற்றி துணை செயலாளர் செந்தில்குமார் கூறும்போது ‘‘மாவட்ட செயலாளர் முத்துசாமி இல்லத்தில் நடந்த கூட்டம் அவரது ஆதரவாளர்கள் கூட்டம். எனவே இதில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை.

    கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்தினால் அதில் நாங்கள் கலந்து கொள்வோம். அப்போது எங்கள் அதிருப்தியை தொவிப்போம்’’ என்று கூறினர்.

    இதற்கிடையே அதிருப்தியாளர்கள் ரகசியமாக கூடி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது மறுத்துவிட்டனர்.

    இந்த நிலையில் அவர்கள் நாளை (வியாழக்கிழமை) சென்னை செல்கிறார்கள். அங்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கிறார்கள்.

    ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்த என்.கே.கே.பி. ராஜாவின் ஆதரவாளர்கள் முத்துசாமி மீது அதிருப்தியாக உள்ளனர்.

    இந்த நிலையில் இப்போது முத்துசாமிக்கு நெருக்கமாக இருந்தவர்களும் அவர் மீது அதிருப்திக்குள்ளாகி இருப்பது ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.வில் பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
    பலத்த மழை காரணமாக பவானிசாகர் அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஊட்டி மலை மற்றும் அப்பர் பவானி, குந்தா பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

    இதையொட்டி பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை 8 மணியளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5226 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 68.51 அடியில் இருந்து மதியம் 12 மணியளவில் இது 68.80 அடியானது இன்று மாலை நீர்மட்டம் 69 அடியை தாண்டி நாளைக்குள் 70 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டினால் வாய்க்காலுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடுவது உறுதி என்பதால் விவசாயிகள் தண்ணீர் திறப்பு தேதியை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருவதால் அணையிலிருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
    ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் கன மழை கொட்டி வருகிறது.
    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டத்தில் தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் ஒருசில இடங்களில் பலத்த மழையும், மிதமான மழையும் பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரி பள்ளம் அணைப்பகுதியில் 29 மி.மீ. மழை பெய்தது.

    டி.என்.பாளையம் அருகே உள்ள விளாங்கோம்பை வனப்பகுதியில் குண்டேரி பள்ளம் அணை உள்ளது. இந்த அணைபகுதியில் நேற்று மழை பெய்தாலும் குண்டேரிபள்ளம் அணைக்கு தண்ணீர் வரவில்லை.

    இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 42 அடி தற்போது அணையில் 23.2 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. கடம்பூர் மற்றும் குன்றிமலை பகுதியில் கனமழை பெய்தால் மட்டுமே குண்டேரி பள்ளம் அணைக்கு தண்ணீர் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் நேற்று 26மி.மீ. மழை பெய்தது. மேலும் பவானிசாகர் கொடிவேரி அணை, சென்னிமலை பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

    ஈரோட்டில் மழை பெய்வதுபோல் கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்தாலும் லேசான சாரல் மழையுடன் நின்றுவிட்டது.
    சென்னிமலை அருகே பால் வியாபாரி மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர், பாலப் பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். பால் வியாபாரி. இவரது மனைவி புஷ்பா (வயது46). இவர்களுக்கு கார்த்திக் (16) என்ற மகன் உள்ளார்.

    கடந்த 2 ஆண்டுகளாக புஷ்பா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என தெரிகிறது.

    சம்பவத்தன்று புஷ்பாவுக்கு வயிற்றுவலி அதிகரித்து உள்ளது. இதனால் வெறுப்படைந்த புஷ்பா வீட்டில் இருந்த செடிக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    அப்போது அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு புஷ்பாவை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறினார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நம்பியூர் அருகே இன்று காலை மொபட் மீது வேன் மோதிய விபத்தில் தொழில் அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நம்பியூர்:

    நம்பியூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னமணி என்கிற சிதம்பர மூர்த்தி (வயது 45). இவர் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

    இன்று காலை சிதம்பர மூர்த்தி வேலை வி‌ஷயமாக தனது மொபட்டில் சென்றார். நம்பியூர் அருகே உள்ள கொன்னமடை பாலம் அருகே சென்ற போது எதிரே தனியார் ஸ்பின்னிங் மில் வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    எதிர் பாராத விதமாக வேன் எதிரே வந்த மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் சிதம்பர மூர்த்திக்கு தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து நடந்ததும் வேன் டிரைவர் வேனில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடி விட்டார்.

    இந்த விபத்து குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காயத்ரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோட்டில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் இரும்பு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம், ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது46). இவரது மனைவி கோமதி.

    பத்மநாபன் இரும்பு வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு பணப் பிரச்சனையில் பத்மநாபன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அவருக்கு குடிப்பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பத்மநாபன் வி‌ஷம் குடித்துள்ளார். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    மேல் சிகிச்சைக்காக பத்மநாபன் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி பத்மநாபன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பவானி அருகே குடிக்க தாய் பணம் தராததால் உடலில் வெந்நீரை ஊற்றி கொண்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

    பவானி:

    பவானி அடுத்த குட்ட முனியப்பன் கோயில் பகுதியை சேர்ந்தவர் பவழாயாள் (வயது65). இவரது கணவர் செம்மனன். இவர்களது மகன் கோபால கிருஷ்ணன் (42).

    செம்மனன் இறந்து விட்டார். கோபால கிருஷ்ணன் கேரள மாநிலம் மன்னார் காட்டில் திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் கோபால கிருஷ்ணன் கடந்த 3-ந் தேதி பவானியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். பின்னர் அங்கேயே தங்கி இருந்தார். சம்பவத்தன்று கோபாலகிருஷ்ணன் தன் தாயிடம் குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் இரவு பவழாயாள் தூங்க சென்று விட்டார். திடீரென கோபால கிருஷ்ணன் அலறல் சத்தம் கேட்டு பவழாயாள் கண் விழித்து பார்த்தார்.

    அப்போது கோபால கிருஷ்ணன் தனது உடலில் சுடுதண்ணீரை ஊற்றி கொண்டு உயிருக்காக போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கோபால கிருஷ்ணனை கொண்டு சென்றனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு கோபால கிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பட்டப்பகலில் காட்டை விட்டு தோட்டத்துக்குள் புகுந்து 2 தொழிலாளர்களை சிறுத்தை கடித்து குதறிய சம்பவம் தாளவாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி தாளவாடி அருகே உள்ள எல்லக்கட்டை சேர்ந்தவர் செல்வமணி விவசாயி. இவரது தோட்டத்தில் கரும்புகள் வெட்டும் பணி இன்று (வியாழக்கிழமை) காலை நடந்து வந்தது. இதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த யுவராஜ் (வயது 30), சித்தராஜ் (34) ஆகிய 2 தொழிலாளிகளும் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அந்த கரும்பு தோட்டத்தை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டதாகும். அப்போது அங்குள்ள ஒரு புதரில் பதுங்கி இருந்த ஒரு சிறுத்தை திடீரென யுவராஜ் மற்றும் சித்தராஜ் ஆகிய இருவர் மீதும் பாய்ந்து கடித்து குதறியது.

    இதில் அவர்கள் 2 பேரும் ரத்தம் சொட்டச்..சொட்ட கூக்குரலிட்டனர். இதை கண்டு அருகே கரும்பு வெட்டிக் கொண்டிருந்த சக தொழிலாளிகள் அங்கு அரிவாள் கத்தியுடன் ஓடி வந்தனர்.

    அங்கு 2 பேரை தாக்கி கொண்டிருந்த சிறுத்தையை கூச்சலிட்டு விரட்டினர். இதை கண்ட அந்த சிறுத்தை பயந்து அங்கிருந்து பாய்ந்து காட்டுக்குள் புகுந்தது.

    சிறுத்தை கடித்து தாக்கியதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு உடனடியாக தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பட்டப்பகலில் காட்டை விட்டு தோட்டத்துக்குள் புகுந்து 2 தொழிலாளர்களை சிறுத்தை கடித்து குதறிய சம்பவம் தாளவாடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிறுத்தை புகுந்து தாக்குதல் நடத்திய இடத்தை சத்தியமங்கலம் வன ஊழியர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    அங்கு கூடி இருந்த வனப்பகுதி மக்களிடம் சம்பவத்தை கேட்டறிந்த வனத்துறையினர் காட்டு பகுதிக்கோ, காட்டையொட்டி உள்ள தோட்டப் பகுதிக்கோ போகும்போது தனியாக போக வேண்டாம் என்றும் குறிப்பாக இரவு நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறினர்.
    மொடக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்த முயன்ற அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
    மொடக்குறிச்சி:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கே.ரவிக்குமார், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கே.முருகன், வருவாய்த்துறை சார்பில் மாசிலாமணி, சத்துணவு திட்டம் சார்பில் மூர்த்தி, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மணிமாலா, ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் கிருஷ்ணவேணி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, அரசு அமுல்படுத்தும் ஜிபிஎஸ் திட்டத்தை உடனடியாக ரத்து செய்யவும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஈரோடு முத்தூர் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். அப்போது, ஈரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், ஈரோடு குற்றவியல் இன்ஸ்பெக்டர் முருகன், மொடக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் பலி பலியாயினர். இந்த 2 பேரை சேர்த்து டெங்குக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.

    குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் நூற்றுக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, கொடுமுடி, பவானி பகுதியில் மட்டும் 26 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மேலும் 2 குழந்தைகள் டெங்கு நோய்க்கு பலியாகி விட்டனர்.

    அந்தியூர் அடுத்த ஆலம் பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஸ் என்பவரின் 4 மாத பெண் குழந்தை கனிகா. இந்த குழந்தைக்கு திடீரென காய்ச்சல் அடித்தது. குணமாகாததால் அந்தியூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கனிகாவுக்கு டெங்கு அறிகுறி இருந்தது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து கனிகாவை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை கனிகா பரிதாபமாக இறந்து விட்டாள். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுத காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது.

    பவானி அருகே உள்ள பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது 6 வயது மகன் தீபக் இவனுக்கும் கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் தொடர்ந்து அடித்தது. பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்தபோது அவனுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையொட்டி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் தீபக் பரிதாபமாக பலியானான்.

    இந்த 2 குழந்தைகளையும் சேர்த்து ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது.
    குறைகளை மட்டுமே கூறுவதில் கவனமாக இருக்கிறார் ஸ்டாலின் என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கழகம் கண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெள்ளை மனம் கொண்டவராம் எவராலும் வெல்ல முடியாதவராக திகழ்ந்தார். அதேபோல்தான் ஜெயலலிதாவும் யாராலும் வெல்ல முடியாதவராக திகழ்ந்தார்.

    இருவரும் திரைப்படத்தில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையில் எவராலும் தோற்கடிக்க முடியாத சக்திகளாக திகழ்ந்தார்கள். ஆனால் இங்கு (தமிழகத்தில்) ஒரு எதிர்க்கட்சி தலைவர் (மு.க.ஸ்டாலின்) இருக்கிறார். இந்த அரசை அம்மா வழியில் நடக்கும் அரசை மக்கள் விரும்பும் அரசை தொட்டதற்கெல்லாம் குறைகளை மட்டும் கூறி கொண்டே இருக்கிறார்.

    எதிர்க்கட்சி தலைவர் என்றால் எதிரி கட்சியாக மட்டும் பார்க்க கூடாது குறைகளை மட்டும் கூறுவதை வழக்கமாக இருக்கக் கூடாது. தவறு நடந்தால் சுட்டிக்காட்ட வேண்டும். அதே சமயம் ஆட்சியில் நல்லது நடந்தால் அதை பாராட்டவும் வேண்டும். ஆனால் இங்கே இருக்கிற எதிர்க்கட்சி தலைவருக்கு அந்த நல்லெண்ணம் கிடையவே கிடையாது.

    எம்.ஜி.ஆரின் ஆட்சியை பொற்கால ஆட்சியாக மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா. அவரால் வளர்க்கப்பட்ட படை வீரர்களாக விசுவாச மிக்க தொண்டர்களாக இங்கே மேடையில் நாம் இருக்கிறோம். கோடிக் கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அ.தி.மு.க. ஆட்சியையோ கட்சியையோ யாராலும் எவராலும் ஆட்டவோ... அசைக்கவோ... அழிக்கவோ முடியாது.

    இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
    ×