என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி இவரது மகள் கிருத்திகா (23). என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் நெய்வேலி புதுநகர் வேலுடையான்பட்டு திருமணம் மண்டபத்தில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
இன்று காலை திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன் கிருத்திகா மண்டபத்தில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக நெய்வேலி என்.எல்.சி. மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஊழியர்களை பணிக்கு அழைத்து செல்வதற்காக வந்த தனியார் வேன் எதிர்பாராத விதமாக கிருத்திகா மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கிருத்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும், இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூரில் நேற்று இரவும் அவ்வப்போது கனமழையாக பெய்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடலூரில் கடந்த 2 நாட்களாக கடல் சீற்றத்துடன் இருந்தது. இந்தநிலையில் இன்று காலை கடல் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் தேவனாம்பட்டினம், தாழங்குடா, ராசாப் பேட்டை, சித்திரைப்பேட்டை, துறைமுகம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களின் படகுகள் அனைத்தும் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதுசுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. அவ்வப்போது கனமழையும் பெய்தது.

பண்ருட்டி, நெல்லிக்குப்பம், சிதம்பரம், கருவேப்பிலங்குறிச்சி, விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது. விழுப்புரத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. அதிகாலை 4.30 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் ½ மணிநேரம் நீடித்த இந்த மழையால் அந்த பகுதியில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
உளுந்தூர்பேட்டை அதன்சுற்றுவட்டார பகுதிகளான ஆசனூர், பாலி, சாத்தனூர், காட்டுநெமிலி, எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
கடல் அலை சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் இன்று 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மாவட்டத்தின் பிறபகுதிகளான விக்கிரவாண்டி, அரசூர், சங்கராபுரம், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்ட கலெக்டராக பிரசாந்த் இருந்து வருகிறார். இவர் புதுமையாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். கலெக்டருக்கு ஒதுக்கப்பட்டுள்ள உயர்ரக இனோவா காரை பயன்படுத்தவில்லை. அம்பாசிடர் காரையே பயன்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வு நடைபெற்றது. அதில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து பொதுமக்களின் பாராட்டை பெற்றார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அடிக்கடி சென்று ஆய்வு நடத்தி வருகிறார். மாணவர்களுக்கு பாடம் நடத்தி அவர்களின் கல்வி திறமைகளை பரிசோதித்து வருகிறார்.
பொதுவாக மனுநீதிநாள் முகாம்களுக்கு கலெக்டர் தனது காரில் செல்வதுதான் வழக்கம். ஆனால், இந்த முகாமுக்கு காரில் செல்லாமல் பஸ்சில் செல்ல கலெக்டர் பிரசாந்த் முடிவு செய்தார்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை கிராமத்தில் இன்று மனுநீதிநாள் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள தனது காரில் செல்லாமல், அரசு பஸ்சில் அதிகாரிகளுடன் செல்ல முடிவு செய்தார்.
கடலூரில் உள்ள கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் இருந்து காலை 8.15 மணிக்கு பஸ் புறப்படுவதால், முகாமில் பங்கேற்கும் அதிகாரிகள் காலை 8 மணிக்கே கலெக்டரின் முகாம் அலுவலகத்துக்கு வந்து விடுமாறு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து கலெக்டரின் முகாம் அலுவலகத்துக்கு காலையில் அதிகாரிகள் வந்தனர். அரசு பஸ்சும் வந்தது.
கலெக்டர் பிரசாந்த் முதலில் அந்த பஸ்சில் ஏறினார். அதைத் தொடர்ந்து 30 அதிகாரிகளும் அதே பஸ்சில் ஏறினர்.
காலை 9 மணிக்கு அந்த பஸ் அங்கிருந்து ஸ்ரீமுஷ்ணம் நோக்கி புறப்பட்டது. மனுநீதிநாள் முகாமை கலெக்டர் தலைமையேற்று நடத்துகிறார். மாலையில் அதே பஸ்சில் கடலூருக்கு திரும்புகிறார்.
பஸ் பயணத்துக்கான டிக்கெட் தொகையை அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு மாவட்ட நிர்வாகமே செலுத்தி விடுகிறது. மனுநீதிநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கலெக்டர் காரில் செல்லும் போது அவரை பின்தொடர்ந்து அதிகாரிகளும் கார்களில் செல்வார்கள். இதனால் அதிக அளவில் செலவாகும். எனவே சிக்கன நடவடிக்கையை கையாள்வதற்காக கார்களை தவிர்த்து கலெக்டர் பிரசாந்த் மற்றும் அதிகாரிகள் அரசு பஸ்சில் சென்று மனு நீதிநாள் முகாமில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 49) இவர் தனது மனைவி கண்ணகி(37),மகன் சூரியக்குமார்(8). ஆகியோருடன் நேற்று சென்னையிலிருந்து திருச்செங்கோட்டுக்கு காரில் புறப்பட்டார். காரை தன்ராஜ் ஓட்டி வந்தார்.
இந்த கார் நேற்று மதியம் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த வெங்கனூர் பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று தன்ராஜின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பு சுவரில் மோதி நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே காரில் இருந்தவர்கள் கண்ணாடியை உடைத்து கொண்டு காரை விட்டு வேகமாக வெளியேறினர். இந்த விபத்தில் தன்ராஜ் உள்பட 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள்.
விபத்து குறித்து ராமநத்தம் போலீசில் புகார் செய்யபட்டது. இதையடுத்து போலீசாரும் திட்டக்குடி தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசாமாகியது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கார் எதனால் தீப்பிடித்தது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் முதுநகர் சோனாங்குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மணிவண்ணன்(வயது 55), கவாஸ்கர் (38), ஆனந்தன்(34), ஷாகுல்(22), வால்மணி(50) இவர்கள் இன்று காலை பைபர் படகு ஒன்றில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
நடுக்கடலில் சென்ற போது பயங்கர சூறாவளிக்காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது. இதனால் அவர்கள் மீன்பிடிக்காமல் கரைக்கு செல்ல படகில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
கடலூர் முகத்துவாரம் அருகே வந்தபோது படகு திடீரென்று கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் 5 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் சயிரஸ், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கடலில் விழுந்து தத்தளித்த 5 மீனவர்களை மீட்டனர்.
கடலில் விழுந்ததில் மீனவர் மணிவண்ணனுக்கு காயம் ஏற்பட்டது. அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் கடலில் கவிழ்ந்த படகை போலீசார் மீட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்துள்ளது. இன்று காலையும் கடலூர் நகரில் மழை பெய்தது. மேலும் கடல் பகுதியான தாழங்குடா, பரங்கிப்பேட்டை, தேவனாம்பட்டினம் போன்ற பகுதிகளில் கடல் சீற்றமும், கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனையொட்டி கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று மதியம் ஏற்றப்பட்டுள்ளது.
நெய்வேலி மந்தாரக்குப்பம் வளையமாதேவி கூட்ரோடு அருகே பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர் ராமு (வயது 40). அ.தி.மு.க. பிரமுகர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று மாலை சுப்பிர மணியன் மற்றும் சின்னச்சாமி, சசிக்குமார், செல்வம் ஆகியோர் ராமுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த ராமு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் மந்தாரக்குப்பம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
அதுபோல் சுப்பிரமணியனும் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் ராமு, கணேசன், பழனி ஆகியோர் தன்னை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த முதணை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சந்தியா (வயது 23). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
சந்தியா ஊ.மங்கலம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நானும், முதணை பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் வேல்முருகன் (29) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நாங்கள் பல இடங்களுக்கு சென்று வந்தோம்.
அப்போது வேல்முருகன் என்னிடம் ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்தார். இதனை தொடர்ந்து நான் அவரை சந்தித்து என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
மேலும் வேல்முருகனும், அவரது பெற்றோர் கோவிந்தசாமி-இளஞ்சியம் ஆகியோர் என்னை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப் பதிவு செய்து இளம் பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வேல்முருகனை கைது செய்தனர்.
கடலூர் கட்டுப்பாட்டு அறையில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்துக்கும், நில எடுப்பு தடுப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசு கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல் கடலூர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஏட்டு சரவணன் கட்டுப்பாட்டு அறைக்கும், ஒரத்தூர் போலீஸ் நிலைய போலீஸ்காரர் பாலாஜி சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கும், கடலூர் போக்குவரத்து போலீஸ் நிலைய போலீஸ்காரர்கள் சஞ்சய்காந்தி, ராஜசேகர், நாகராஜன் ஆகியோர் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்க கடலையொட்டியுள்ள இலங்கை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கடலூர், ஸ்ரீமுஷ்ணம், கள்ளிப்பாடி, எசனூர், மதகளிர்மாணிக்கம், புதுக்குப்பம், சேத்ராப்பட்டு, பெண்ணாடம், திட்டக்குடி, முருகன்குடி, இறையூர், ஆவினன்குடி, பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்களில் சென்றவர்கள் சிரமத்துக்குள்ளானார்கள்.
பண்ருட்டி அருகே உள்ள கோட்லாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). விவசாய கூலி தொழிலாளி. இவரும், இவரது மனைவி அஞ்சலையும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றிருந்தனர்.
மழையின் காரணமாக மாலையில் அவரது வீடு திடீரென்று இடிந்து விழுந்தது. இதேபோல் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மெய்யாத் தூர் பகுதியில் தொகுப்பு வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு வீட்டில் பார்வதி, அவரது மகள் ராஜலட்சுமி, மருமகன் திருமூர்த்தி ஆகியோர் வசித்து வந்தனர்.
பார்வதி வேலைக்கு சென்று விட்டார். அப்போது மழை பெய்ததால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ராஜலட்சுமி, திருமூர்த்தி ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இதில் 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கூடலையாத்தூரை சேர்ந்தவர் கண்ணுசாமி (50). விவசாயி. நேற்று இவர் விளாங்குளம் பகுதியில் வயலில் நாற்று நட சென்றார். அப்போது இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் கண்ணுசாமி அருகில் உள்ள மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய அவர் பரிதாபமாக இறந்தார்.
கடலூர் தாழங்குடா, தேவனாம்பட்டினம் போன்ற பகுதிகளில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.
கடலூர் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. மரக்காணம், ஆலங்குப்பம், வடநெற் குணம், அனுமந்தை ஆகிய பகுதிகளில் மாலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் கடலூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
அதன்படி தலைமை தபால் நிலையம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று திரண்டனர். அவர்களிடம் உங்களுக்கு இங்கு போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று போலீசார் கூறினர்.
ஆனால், அங்கு திரண்டிருந்த கட்சியினர் அருகில் இருந்த அம்பேத்கார் சிலைக்கு மாலை அணி வித்து விட்டு சிலை எதிரே மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் திருமேனி, தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி, நகர செயலாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் நிலவன், நிர்வாகிகள் பாலமுருகன், மகேஷ், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தெற்கு வங்கக்கடலையொட்டியுள்ள இலங்கை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது.
கடலூரில் நேற்று லேசான மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் விடிய விடிய சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலை 7.30 மணிக்கு திடீரென்று பலத்த மழை கொட்டியது. பின்னர் தொடர்ந்து விட்டு விட்டு மழை தூறி கொண்டே இருந்தது.
கடலூர் முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், புதுபாளையம், பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், காரா மணிக்குப்பம், கூத்தப்பாக்கம், திருவந்திபுரம், முதுநகர், நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலையோரங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது.
இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். சிலர் குடைகளை பிடித்தபடியும், நனைந்த படியும் பணிகளுக்கு சென்றதை காண முடிந்தது.
பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் பெரிதும் பாதிப்படைந்தனர். ஒரு சில வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன.
இன்று காலை வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. காற்றின் வேகம் தொடர்ந்து அதிக மாகவே இருந்தது.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் இன்று காலை அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. 5 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. அந்த அலைகள் கடலில் இருந்து கரை வரை வந்து தொட்டு தொட்டு சென்றன. இதனால் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது.
கடற்கரைக்கு வந்தவர்களை கடலில் இறங்க போலீசார் அனுமதிக்கவில்லை. அவர்கள் கரையோரம் இருந்தே கடலை பார்த்து ரசித்தனர். கடல் சீற்றம் காரணமாக தாழங்குடா பகுதியில் மீனவர்கள் பெரும்பாலானோர் இன்று 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் படகுகள் கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடலூரில் பெய்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும்-குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். வாகனங்களில் சென்ற சிலர் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
இதேபோல் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நேற்று இரவு முதலே லேசான மழை பெய்து கொண்டு இருந்தது. இரவு முழுவதும் இந்த மழை நீடித்தது.அதிகாலை 3 மணிக்கு மழையின் வேகம் அதிகரித்தது ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடித்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இன்று காலையும் தொடர்ந்து மழை தூறி கொண்டே இருந்தது.
நெய்வேலி பகுதியில் நேற்று மாலை முதல் இன்று காலை வரைதொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அதன் சுற்று வட்டார பகுதிகளான டவுண்ஷிப், செடுத்தான் குப்பம், வடகக்குத்து, புது நகர், மந்தாரக்குப்பம், தண்டவன்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்றது.
பண்ருட்டி, விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதலே லேசான மழை பெய்தது. தொடர்ந்து மழை தூறி கொண்டே இருக்கிறது.
மாவட்டத்தில் மரக்காணம், திண்டிவனம், செஞ்சி, உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், கள்ளக்குறிச்சி உள்பட பல இடங்களிலும் மழை பெய்தது.
மரக்காணத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.






