என் மலர்tooltip icon

    கடலூர்

    நாளை பாபர் மசூதி இடிப்புதினமாகும். கடலூர் மாவட்டத்தில் நாளை எந்தவொரு ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ நடத்துவதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    கடலூர்:

    நாளை பாபர் மசூதி இடிப்புதினமாகும். இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் நாளை எந்தவொரு ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ நடத்துவதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    இதையொட்டி மாவட்டத்தில் உள்ள பஸ், ரெயில் நிலையம், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் போலீஸ் மோப்ப நாயுடன் சோதனை நடந்தது.

    இதேபோல் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகனங்கள் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து லாட்ஜூகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லாட்ஜூகளில் சந்தேகப்படும்படி யாராவது தங்கி இருக்கிறார்களா? என ஆய்வு செய்தனர்.

    மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். 


    திட்டக்குடி அருகே வெலிங்டன் ஏரி கரையோரம் 3 அடி ஆழத்தில் 20 மீட்டர் நீளத்துக்கு திடீரென விரிசல் ஏற்பட்டதால் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்செருவாயில் வெலிங்டன் ஏரி உள்ளது. இந்த ஏரி 1660 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியின் மூலமாக சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக ஏரியில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காணப்பட்டது. இதனால் ஏரியை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து ரூ.6½ கோடி மதிப்பில் ஏரியின் கரைகள் பலப்படுத்துதல், ஆழப்படுத்துதல் மற்றும் ‌ஷட்டர், மதகுகள் புனரமைப்பு பணிகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த பணிகள் முடிவடைந்தன.

    தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. கடலூர் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெலிங்டன் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இப்போது ஏரியின் நீர்மட்டம் 16.5 அடியாக உள்ளது.

    ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் ஏரியின் கரையோரம் நேற்று 3 அடி ஆழத்தில் 20 மீட்டர் நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டு கரை உள்வாங்கியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ராமகிருஷ்ணன், நிர்வாக பொறியாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏரியின் கரையில் ஏற்பட்ட விரிசலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் விரிசல் ஏற்பட்ட கரையில் ஜல்லிகற்கள் மற்றும் கிராவல் மண் கொட்டி பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். ஏரிக்கரையில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.
    கள்ளக்காதலில் பிறந்த பெண் குழந்தையை தாய் விற்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தை சேர்ந்தவர் விஜயா(வயது 36). இவரது கணவர் இறந்து 2 வருடங்கள் ஆகிறது. இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். விஜயா கூலிவேலைக்கு சென்று தனது குழந்தைகளை வளர்த்து வந்தார்.

    இந்தநிலையில் விஜயாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இவர்கள் தனிமையில் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். இதில் விஜயா கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இந்தநிலையில் விஜயா தனக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளதால் தற்போது பிறந்த பெண் குழந்தையை எப்படி வளர்ப்பது என நினைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அந்த குழந்தை விற்க முடிவு செய்தார்.

    அப்போது பண்ருட்டி பகுதியை சேர்ந்த அமுதா என்பவர் குழந்தையை விற்பதற்கு உதவி செய்வதாக விஜயாவிடம் கூறினார். அதற்கு விஜயாவும் சம்மதம் தெரிவித்தார். குழந்தையை விற்றதில் வரும் தொகையை இருவரும் சமமாக பிரித்துக்கொள்ளலாம் என அமுதா கூறினார்.

    இதில் விஜயாவுக்கும், அமுதாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அமுதா மற்றும் அவரது உறவினர்கள் ரஞ்சித், மல்லிகா ஆகிய 3 பேரும் தகாத வார்த்தைகளால் விஜயாவை திட்டி தகராறு செய்தனர்.

    ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குழந்தையை விற்க முயற்சி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து அமுதா ரஞ்சித், மல்லிகா ஆகிய 3 பேரையும் பிடித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் விஜயாவிடம் அந்த பெண் குழந்தை இருப்பது பாதுகாப்பில்லை என கருதி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் அன்புசெல்வி அந்த குழந்தையை மீட்டு இன்று காலை கடலூரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.

    பெற்ற தாயே குழந்தையை விற்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வீராணம் ஏரியில் தென்ரெட்டை மதகு அருகில் கரையிலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் இரு இடங்களில் கருப்பு நிறத்தில் தண்ணீர் பொங்குவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.55 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 598 கன அடியாக உள்ளது. ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக 430 கன அடி தண்ணீரும், சென்னை மெட்ரோ குடிநீருக்கு 68 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

    வீராணம் ஏரியில் தென்ரெட்டை மதகு அருகில் கரையிலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் இரு இடங்களில் கருப்பு நிறத்தில் தண்ணீர் பொங்கி வருகிறது. அந்த இடத்தை சுற்றி எண்ணை படலம் போல் படர்ந்து உள்ளது. தண்ணீர் சூடாக உள்ளது. மேலும் 15 நாட்களாக இவ்வாறு தண்ணீர் பொங்கி வருகிறது.

     வீராணம் ஏரியில் தண்ணீர் பொங்குவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தொடர்பு கொண்டுகேட்டனர். அதற்கு அவர்கள் சென்னையில் உள்ள ஆய்வகத்தில் தெரிவித்துள்ளோம். இன்று அல்லது நாளை (செவ்வாய்கிழமை) நேரில் வந்து அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர் என்று கூறினர்.

    இதனையடுத்து தண்ணீர் பொங்கும் பகுதியில் அதை தடுக்கும் விதமாக மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறையினர் அடுக்கினர், அதையும் மீறி தண்ணீர் பொங்கிய படியே உள்ளது. இதனால் பொது மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, ஏரியில் எரிவாயு வெளியேறுகிறதா அல்லது சுனாமி ஏற்படுவதற்கு முன்உருவாகும் அறிகுறியா? என்று தெரியவில்லை. அதிகாரிகள் உடனடியாக இதை ஆய்வு செய்ய வேண்டும். முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். தொடந்து ஏரியில் தண்ணீர் பொங்கி வருவதை பார்க்க சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்தவண்ணம் உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக உள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நெல் பயிர்கள் மற்றும் உளுந்து, மணிலா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம், காட்டு மன்னார்கோவில், பரங்கிபேட்டை, பெண்ணாடம், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் உள்பட பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

    பலத்த மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் பயிர்கள் மற்றும் உளுந்து, மணிலா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

    விருத்தாசலம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், நெல்லிக்குப்பம், பெண்ணாடம், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

    மாவட்டம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வயல்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் நெல் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பண்ருட்டி, கண்டரக்கோட்டை பெண்ணையாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பெரியபகண்டை கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு தோட்டத்தில் வெள்ளநீர் புகுந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கடலூர் சப்- கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தாசில்தார் விஜய ஆனந்த் மற்றும் பொதுப்பணித்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    மேலும் விளை நிலங்களில் வெள்ளநீர் புகாமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்கும் பணியை துரிதப்படுத்தினர்.
    கடலூர் அருகே ஒய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மனைவி வீட்டில் திடீரென இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லிக்குப்பம்:

    கடலூரை அடுத்த குண்டு உப்பலவாடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி சரளா வயது 50. இவர் நேற்று தனது வீட்டில் உள்ள அறையில் திடீரென்று இறந்து கிடந்தார். அப்போது அங்கு சென்ற ராஜேந்திரன், இறந்து கிடந்த சரளாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரளா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மக்களோடு மக்களாக வாழவே மனுநீதி நாள் முகாமுக்கு பஸ்சில் பயணம் செய்ததாக கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் கூறியுள்ளார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டத்தின் கலெக்டராக இருப்பவர் பிரசாந்த். இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். புனேயில் பி.எஸ்சி. வேளாண்மை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். இவர் 2008-ல் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.

    பின்னர் 2009ம் ஆண்டு முதல் 2010 வரை கோவையிலும், 2010 முதல் 2011 வரை ஓசூரிலும் சப்-கலெக்டராகவும், 2011ம் ஆண்டு முதல் 2016 வரை நிதித்துறை துணை செயலாளராகவும், 2016ம் ஆண்டு செப்டம்பர் முதல் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராகவும் பணிபுரிந்து வந்தார்.

    புதிய கலெக்டர் பிரசாந்த்துக்கு மனைவி மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இவருக்கு மராட்டியம், இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 4 மொழிகள் நன்றாக தெரியும். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மாற்றலாகி கடலூருக்கு வந்தார். அவர் கடலூரில் பல்வேறு புதுமையான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கொழை கிராமத்தில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர் 50 அதிகாரிகளுடன் அரசு பஸ்சில் சென்றார்.


    காரில் செல்லாமல் அவர் பஸ்சில் சென்றது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை தந்தது. மனுநீதிநாள் முகாம் மேடையில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு நாற்காலிகள் போடப்பட்டிருக்கும் ஆனால் நேற்று கொழை கிராமத்தில் நடந்த மனுநீதி முகாமில் விழாமேடையில் நாற்காலிகள் போடப்படவில்லை. கலெக்டர், அதிகாரிகள் மற்றும் முருகுமாறன் எம்.எல்.ஏ. உள்பட அனைவரும் தரையில் அமர்ந்திருந்தனர். பொதுமக்களும் அவர்களுடன் அமர்ந்திருந்தார்கள்.


    பொதுமக்களிடம் கலெக்டர் மனுக்கள் வாங்கினார். அவர்களிடம் கலகலப்பாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் பிறக்கும் பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் அவர்களை அலட்சியப்படுத்தக்கூடாது. அவர்களை பள்ளியில் படிக்க வைக்க வேண்டும், அப்போது தான் அவர்களது வாழ்க்கை முன்னேற்றம் அடையும்.

    பெண்களுக்கு 18 வயது பூர்த்தியடையும் முன்பு திருமணம் செய்து வைக்கக்கூடாது. அவ்வாறு திருமணம் செய்து வைத்தால் மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் பெற்றோர் திருமண விழா நடத்த திருமண மண்டபம் கொடுத்த உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருமணத்திற்கு முன்பு வீட்டில் பந்தல்கால் நடுவார்கள். அந்த பந்தல்கால் நடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வீட்டில் உள்ள முதியோர்களை நாம் மதிக்க வேண்டும், பிறகு அவர்கள் சாப்பிட்டார்களா? என்று கேட்க வேண்டும். அவர்களுக்கு பணிவிடை செய்யவேண்டும். நீங்கள் அவ்வாறு செய்தால் தான் எதிர்காலத்தில் நீங்கள் வயதான காலம் வரும்போது உங்கள் பிள்ளைகள் உங்களை கவனிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டரின் பேச்சு பொதுமக்களை கவர்ந்தது. அவர்கள் கரகோ‌ஷம் செய்தனர்.

    வழக்கமாக மனுநீதி நாள் முடிந்த பின்பு அரசு சுற்றுலா விடுதிக்கு அதிகாரி மற்றும் கலெக்டர் சாப்பிட செல்வார்கள். ஆனால் நேற்று மனுநீதி நாள் முகாம் நடந்த இடத்தில் அருகே உள்ள பள்ளியில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


    பொதுமக்களே அந்த உணவை தயார் செய்திருந்தனர். பொதுமக்களுடன் அமர்ந்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சாப்பிட்டனர். வடை, பாயசத்துடன் உணவு பரிமாறப்பட்டது. கலெக்டர் ருசித்து சாப்பிட்டார்.

    அவர் விரைவில் சாப்பிட்டு முடித்துவிட்டார். உடனே அவர் கை அலம்புவதற்காக ஒரு பாத்திரத்தில் ஊழியர்கள் தண்ணீர் கொண்டு வந்தனர். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

    அனைவரும் சாப்பிட்டு முடித்தபின் எல்லோரையும் போல் என்று கூறிவிட்டார். பின்னர் அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் அவர் எழுந்து சென்று கை அலம்பினார்.

    அவரது எளிமை குறித்து கலெக்டர் பிரசாந்திடம் கேட்டபோது,

    நான் எளிமையை விரும்புவன் மக்களோடு மக்களாக வாழ விரும்புகிறேன். கலெக்டர் என்றால் அதிகாரிகளுடன் கார்களில் வருவார்கள். அவ்வாறு வரும்போது பொதுமக்கள் மத்தியில் ஒரு அச்சம் இருக்கிறது. அதிகாரிகளை நெருங்கி மனுகொடுக்கவோ? தங்களது கோரிக்கைகளை சொல்லவோ தயங்கி நிற்கின்றனர்.

    இதைபோக்க வேண்டும் என்பதற்காகவே நான் எளிமையாக மனுநீதிநாள் முகாமில் கலந்து கொள்ள முடிவு செய்தேன். அதன்படி கடலூரில் இருந்து ஸ்ரீமுஷ்ணத்திற்கு நான் மற்றும் அதிகாரிகள் காரில் வராமல் அரசு பஸ்சில் வந்தோம். காரில் வந்திருந்தால் நான் வரும் வழியில் உள்ள பிரச்சனைகள் எங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

    பஸ்சில் வந்ததினால் அந்த பகுதியில் உள்ள ரோடுகள், கிராமபகுதிகள் எப்படி இருக்கின்றன என்பது தெரியவந்தது. பஸ்சில் வரும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தெரிந்துக்கொள்ள முடிந்தது. கடலூரில் இருந்து ஸ்ரீமுஷ்ணத்திற்கு வந்து செல்ல அதிகாரிகளும், நானும் கார்களில் வந்திருந்தால் ரூ.40 ஆயிரம் செலவாயிருக்கும். அரசு பஸ்சில் வந்ததினால் 4 ஆயிரத்து 250 ரூபாய் செலவாகியுள்ளது.

    நான் காரில் வந்திருந்தால் மக்கள் ஒருவித அச்சத்துடன் ஒதுங்கி நின்றிருப்பார்கள். பஸ்சில் வந்து இறங்கியதால் மக்கள் ஆச்சரியத்துடன் என்னை பார்த்தார்கள், மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றார்கள். மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு நாற்காலிகள் தனியாக போடுவார்கள்.

    இது மக்களிடம் இருந்து தனிமை படுத்துவதுபோல் இருக்கும். எனவே விழாமேடையில் நாற்காலிகள் போடவேண்டாம் என்று கூறிவிட்டேன். மக்களோடு மக்களாக கீழே உட்கார்ந்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். அவர்கள் தயக்கமின்றி தங்கள் குறைகளை கூறினார்கள்.

    இதேபோல் தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் மனுநீதி நாள் முகாம் நடைபெறும். அந்த முகாமிற்கு நானும் அதிகாரிகளுடன் பஸ்சில் தான் செல்வேன்.

    மனுநீதி நாள் முகாம் முடிந்தபிறகு அரசு சுற்றுலா விடுதியில் சென்று சாப்பிட்டால் அதிக செலவாகும். இதை தவிர்க்கவே இங்கு மக்களோடு மக்களாக அமர்ந்து சாப்பிட்டேன். இதனால் செலவு குறைந்துள்ளது. இங்குள்ள உணவு எனக்கு ரொம்ப பிடித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாலையில் 4 மணிக்கு மனுநீதி முகாம் முடிந்து கலெக்டர் அதிகாரிகளுடன் பஸ்சில் கடலூருக்கு புறப்பட்டார். மக்கள் புன்னகையுடன் அவரை வழி அனுப்பி வைத்தனர்.
    ×