என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலம் அருகே குளத்தில் மூழ்கி ஒரே கிராமத்தை சேர்ந்த 2 மாணவிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கலைமணி (வயது 11). இவள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். அதேபகுதியை சேர்ந்த இளையராஜா என்பவரது மகள் ராசாத்தி (13). அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற இவர்கள், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பினார்கள். பின்னர் நியினார் குளம் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வருவதற்காக கலைமணி, ராசாத்தி 2 பேரும் சென்றனர்.

    அப்போது குளத்தில் இருவரும் கை, கால்களை கழுவியதாக தெரிகிறது. இந்நிலையில், நிலைதடுமாறி குளத்தின் உள்ளே இருவரும் தவறி விழுந்தனர்.

    குளத்தில் தற்போது தண்ணீர் அதிகமாக இருந்ததால், அதில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். ஒரே கிராமத்தை சேர்ந்த 2 மாணவிகள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
    காட்டுமன்னார்கோவிலில் கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தெற்கு தெரு நடுத்திட்டு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ஆர்த்தி (வயது 17). இவர் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி.முதலாமாண்டு படித்து வருகிறார்.

    கடந்த 4-ந் தேதி ஆர்த்தி கல்லூரிக்கு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த குமார் தனது மகளை பல இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் அவரை காணவில்லை.

    இதனைத்தொடர்ந்து குமார் காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குபதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி ஆர்த்தி எங்கு சென்றார் என தேடி வருகிறார்.

    வேப்பூர் அருகே கோவிலில் பூசாரியை கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்துள்ள ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம் (வயது 47). இவர் காட்டுமயிலூர் கிராமம் அருகே கருப்பசாமி கோவில் கட்டி பூஜை செய்து வருகிறார்.

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முத்துலிங்கம் குறி சொல்லி வந்தார். அவருக்கு பக்தர்கள் காணிக்கையாக பணமும், நகையும் வழங்கி வந்தனர். நேற்று இரவு முத்துலிங்கம் கோவிலில் பக்தர்களுக்கு குறி சொன்னார்.

    இரவு 10 மணி அளவில் பக்தர்கள் அனைவரும் சென்று விட்டனர். முத்துலிங்கம் மட்டும் தனியாக இருந்தார். அப்போது 10 பேர் கொண்ட மர்ம மனிதர்கள் கோவிலுக்குள் திடீரென்று புகுந்தனர். அவர்கள் முத்துலிங்கத்தை சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்த தூணில் அவரை கட்டி வைத்தனர்.

    அவர் வைத்திருந்த ரூ.3 லட்சம் ரொக்க பணம் மற்றும் 17 பவுன் நகைகளையும் மர்ம மனிதர்கள் கொள்ளையடித்தனர். மேலும் கோவிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலையும் தூக்கி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    இன்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் முத்துலிங்கம் தூணில் கட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கொள்ளையர்கள் தாக்கியதில் முத்துலிங்கம் காயம் அடைந்திருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நெய்வேலியில், இளம்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்,
    நெய்வேலி:

    நெய்வேலி புதுநகர் 28-வது வட்டம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் என்.எல்.சி. தொழிலாளி. இவரது மகள் கீர்த்திகா (வயது 19). இவர் கடைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு நேற்று மாலை வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் கீர்த்திகா வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் பயன் இல்லை. இது குறித்து கீர்த்திகாவின் தந்தை லோகநாதன் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார்.

    அதில் எனது மகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக நெய்வேலி 24-வது வட்டத்தை சேர்ந்த எதானந்த் என்ற வாலிபர் மீது சந்தேகம் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

    புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலத்தில் ரெயில்வே ஊழியர் வீட்டில் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.75 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரெயில்வே குடியிருப்பில் வசிப்பவர் சசிக்குமார் (வயது29). இவர் விருத்தாசலம் ரெயில்வே நிலையத்தில் பொறியியல்துறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 3-ந்தேதி சசிக்குமார் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான சேலத்துக்கு சென்று இருந்தார். இதை அறிந்த மர்ம மனிதன் இரவில் சசிக்குமார் வீட்டின் ஓட்டைபிரித்து உள்ளே புகுந்தான்.

    பின்னர் அவன் அங்கு இருந்த பீரோவைஉடைத்து அதில் இருந்த ரூ.75 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டான். நேற்று இரவு 11 மணிஅளவில் சசிக்குமார் வீட்டுக்குவந்து கதவைதிறந்து உள்ளே சென்றார்.

    அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. இதைப்பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பீரோவை பார்த்தபோது உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அவர் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், குற்றவியல் சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொள்ளையில் துப்புதுலக்க விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    விருத்தாசலம் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் கடந்த மாதம் 3 வீடுகளில் மர்ம மனிதர்கள் பூட்டுகளை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்து சென்றனர். தற்போது மீண்டும் அங்கு கொள்ளை சம்பவம் நடந்து இருப்பதால் அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.

    அரியலூரிலிருந்து மர்மகும்பலால் கடத்தி வரப்பட்ட லாரியை பெண்ணாடத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெண்ணாடம்:

    அரியலூர் மாவட்டம் ஆலந்தியூர் சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் லோடு ஏற்றி கொண்டு நேற்று மாலை லாரி ஒன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நோக்கி புறப்பட்டது. லாரியை இளங்கோவன் ஓட்டி வந்தார்.

    ஆலையிலிருந்து சிறிது தூரம் வந்த உடன் லாரி டிரைவர் இளங்கோவன் சாப்பிடுவதற்காக சாலையோரக்கடையில் லாரியை நிறுத்தினார்.

    பின்னர் லாரியை விட்டு இறங்கி கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் லாரியை அங்கிருந்து கடத்தி சென்று விட்டனர் .

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளங்கோவன் அரியலூர் மாவட்ட தளவாய் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் பெண்ணாடம் போலீஸ் நிலையம் உள்பட சுற்று வட்டார பகுதி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து பெண்ணாடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் மர்ம நபர்கள் லாரியை நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டனர். உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் லாரியை பின் தொடர்ந்து சென்றனர்.

    பெண்ணாடத்தை அடுத்த பெலாந்துறை காட்டு பகுதியில் மர்ம நபர்கள் லாரியை நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். பின் தொடர்ந்து வந்த போலீசார் லாரியை கைப்பற்றி பெண்ணாடம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×