என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த மாதம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தி மக்களிடம் கோரிக்கை மனு பெற்றார். மேலும் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் சென்று மக்களிடம் குறைகள் கேட்டார். இதற்கு தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இதுபோன்ற செயல்களில் கவர்னர் ஈடுபடக்கூடாது என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கண்டித்திருந்தார். இனிமேல் மற்ற மாவட்டங்களில் கவர்னர் இதுபோல் ஆய்வு மேற்கொண்டால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. சார்பில் அறவழி போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    கடலூர் மாவட்டத்துக்கு ஆய்வு நடத்த வரும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார்.

    இதுபோல் கடலூர் மாவட்டத்தில் கவர்னர் ஆய்வு மேற்கொண்டால் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி காட்டப்படும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கே கடலூர் பாரதி சாலையில் உள்ள தி.மு.க. அலுவலகத்துக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ இள.புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, மாவட்ட பொருளாளர் குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், நகர செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டனர்.

    அதேபோல் அங்கு விடுதலை சிறுத்தை கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச் செல்வன், மண்டல செயலாளர் திருமாறன், மாவட்டச் செயலாளர் முல்லைவேந்தன் உள்பட ஏராளமானோர் கூடினர்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் கடலூர் பாரதி சாலைக்கு வந்தனர். இவர்களில் பலர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். கைகளில் கருப்பு கொடி ஏந்திருந்தனர்.

    பின்னர் அவர்கள் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் பாரதி சாலையில் வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் பாரதி சாலையிலேயே கருப்பு கொடி ஏந்தி தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது கவர்னருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர். இந்த மறியல் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் தலைமை தபால் நிலையத்துக்கு செல்ல முயற்சி செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளது.


    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக கடலூர் மாவட்ட தி.மு.க.வின் சார்பில் நாளை கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    கடலூர்:

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாநில சுயாட்சி கொள்கைக்கு விரோதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களை துஷ்பிரயோகப்படுத்தும் விதமாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தியதை, ஏற்கனவே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டித்து, “கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான இதுபோன்ற செயல்பாடுகளில் ஆளுநர் ஈடுபடக்கூடாது” என்று தெரிவித்திருந்தார்.

    மீண்டும் பல்வேறு மாவட்டங்களில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்ட போது, “ஆய்வு இனிமேலும் மற்ற மாவட்டங்களில் தொடருமானால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க.வின் சார்பில் அறவழிப் போராட்டம் நடத்தப்படும்”, என்று கடந்த 7.12.2017 அன்று வெளியிட்ட அறிக்கையில் மு.க.ஸ்டாலின் எச்சரித்து இருந்தார்.


    ஆனால், கடலூர் மாவட்டத்தில் நாளை ஆளுநர் ஆய்வு மேற்கொள்வார் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கட்டளையிட்டவாறு, ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கடலூர் மாவட்ட தி.மு.க.வின் சார்பில் நாளை கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாவட்ட கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் மாநில சுயாட்சி கொள்கையை நிலைநாட்டிடவும், ஆளுநரின் அத்துமீறிய அதிகார வேட்கைக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும், அறவழியிலான கருப்புக்கொடி ஆர்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    விருத்தாசலம் அருகே விருப்ப ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மீண்டும் பணிக்கு வர வலியுறுத்தி மாணவ- மாணவிகள் கதறி அழுது சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோ.ஆதனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக தமிழ்செல்வி பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சகஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் தலைமை ஆசிரியை தமிழ்செல்வி சாதியை சொல்லி திட்டுவதாக புகார் கூறினர்.

    இதுபற்றி தகவல் அறிந்த தமிழ்செல்வி உயர்அதிகாரிகளுக்கு தனது விருப்ப ஓய்வு கடிதத்தை நேற்று கொடுத்தார். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வந்தனர்.

    ஆனால் பள்ளிக்கு தலைமை ஆசிரியை வெகு நேரமாகியும் வராததால் மாணவ-மாணவிகள் கவலை அடைந்தனர். அப்போது அங்கு வந்த ஆசிரியர்கள் மாணவ- மாணவிகளிடம் தலைமை ஆசிரியை வரமாட்டார்கள் என்று கூறினர்.

    இதைஅறிந்ததும் மாணவ-மாணவிகள் கண்ணீர் வடித்தனர். பின்னர் அவர்கள் விருத்தாசலம்- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கோ-ஆதனூர் பஸ் நிறுத்தத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் எங்களுக்கு தலைமை ஆசிரியையாக தமிழ்செல்விதான் வரவேண்டும். வேறு ஆசிரியர் வரவேண்டாம். அவர் வந்தால் தான் பள்ளிக்கு செல்வோம். அதுவரை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் புத்தகத்தை எடுத்து படிக்கும் காட்சி.

    போராட்டத்தில் ஈடுபட்ட சில மாணவிகள் கண்ணீர் வடித்து கதறி அழுதனர். சில மாணவிகள் புத்தகங்களை எடுத்துக்கொண்டு படித்து கொண்டு இருந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் மற்றும் தாசில்தார் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மாணவிகள் அழுதுகொண்டே எங்களுக்கு தமிழ்செல்வி ஆசிரியை தான் வரவேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்துவது குறித்த தகவல் தலைமை ஆசிரியை தமிழ்செல்விக்கு தெரியவந்தது. அவர் உடனே அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர் குழந்தைகளே நீங்கள் பள்ளிக்கு சென்று ஒழுங்காக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். அவரது அறிவுரையை ஏற்று மாணவ-மாணவிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு 10.30 மணிக்கு பள்ளி வகுப்பறைக்கு சென்றனர்.
    கடலூரில் நாளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அவர் வருகையையொட்டி விருத்தாசலம், கடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கடலூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

    முதல் முதலாக அவர் கோவைக்கு சென்று பஸ் நிலையத்தை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவேன் என்று அறிவித்தார். அதன்படி நெல்லை மாவட்டம் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார்.

    அதைத்தொடர்ந்து அவர் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்று ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு இன்று வருகிறார். மாலை 4.55 மணிக்கு விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.

    இந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று மதியம் சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் மூலம் விருத்தாசலம் வருகிறார்.

    ரெயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் அவர் விழா நடைபெறும் இடத்துக்கு செல்கிறார். விழா முடிந்ததும் மாலை 6 மணி அளவில் கார் மூலம் கடலூர் வருகிறார். கடலூர் வரும் அவர் இரவில் சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.

    கடலூரில் நாளை காலை 9.30 மணி முதல் 10 மணி வரை மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டப்பணிகளை பார்வையிடுகிறார். அதன் பின்பு சுற்றுலா மாளிகையில் அவர் காலை 10 மணி முதல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை பற்றியும், மாவட்டத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசு திட்டப்பணிகள் பற்றியும் படக்காட்சி மூலம் அதிகாரிகள் விளக்குகிறார்கள்.

    கூட்டம் முடிந்தவுடன் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடத்துகிறார்.

    அதன் பிறகு மதியம் 2 மணி அளவில் கவர்னர் பன்வாரில் புரோகித் கார் மூலம் சென்னை செல்கிறார்.

    கவர்னர் வருகையையொட்டி கடலூர்-சிதம்பரம் சாலை, நெல்லிக்குப்பம் சாலை, நேதாஜி சாலை உள்பட முக்கிய சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது.

    கடலூர் பஸ் நிலையத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு பஸ் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. அங்கு குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன.

    அதேபோல் கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் பணியும் நடந்தது. பயணிகள் தங்கும் அறைகளையும் சுத்தப்படுத்தி, மின் விளக்குகளையும் சீரமைத்தனர்.

    கவர்னர் வருகையை யொட்டி விருத்தாசலம், கடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கவர்னரின் பாதுகாப்பு குழுவினர் நேற்று இரவே கடலூர் வந்தனர். அவர்கள் முன்னிலையில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். 





    வீராணம் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் பெய்த மழை காரணமாக வீராணம் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. சென்னையின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இதன் கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    அந்த ஏரியின் மூலம் 102 கிராமங்களில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரியில் இருந்து பாசனத்துக்கும் சென்னை குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கு வந்ததும் அங்கிருந்து கீழணைக்கு வரும்.

    பின்னர் கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும். மழைகாலத்தில் வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து அதிகமாக தண்ணீர் வந்தது.

    வீராணம் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் பெய்த மழை காரணமாக வீராணம் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. மழை காலத்தில் 44.50 அடியாக வீராணம் ஏரியில் நீர்மட்டம் இருந்தது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீரும் வரவில்லை. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43 அடியாக குறைந்தது.

    இந்நிலையில் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து பாசனத்திற்காகவும், சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்புவதற்காகவும் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு 1,480 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கீழணையில் இருந்து ஏரிக்கு தண்ணீர் அதிகமாக வந்தது.

    நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருந்ததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியை எட்டியது.

    ஏரி முழு கொள்ளளவை அடைந்ததால் ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளித்தது. ஏரி நிரம்பி உள்ளதால் கீழணையில் இருந்து ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடுவது நேற்று நிறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து வழக்கமாக வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படும். நேற்றும் 72 கன அடி தண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டது.

    விவசாயத்துக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 



    பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 22-ந்தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும் என என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
    நெய்வேலி:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி பணி நிரந்தரம், மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச சம்பளம் மற்றும் பஞ்சப்படி, சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் இன்கோசர்வ் மற்றும் ஹவுசிங்கோஸ் ஒப்பந்த தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இது தொடர்பாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இது தோல்வியில் முடிவடைந்தது.

    இந்த நிலையில் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை விளக்க பேரணி நெய்வேலியில் நேற்று நடைபெற்றது.

    பேரணியை தொ.மு.ச. நிரந்தர தொழிலாளர் சங்க தலைவர் வீர ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நெய்வேலி புதுக்குப்பம் ரவுண்டானாவில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள அண்ணாதிடலை சென்றடைந்தது.

    பின்னர் அங்கு கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் மாதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் பழனிவேல், பாட்டாளி ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் முருகவேல், தொழிலாளர் வாழ்வுரிமை சங்க செயலாளர் திருநாவுக்கரசு, எல்.எல்.எப். சங்க செயலாளர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சி.ஐ.டி.யூ. மாநில துணை செயலாளர் குமார், என்.எல்.சி. சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் ஜெயராமன், அண்ணா தொழிலாள் ஊழியர் சங்க செயலாளர் உதயகுமார், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் பேசினர்.

    பின்னர் சி.ஐ.டி.யூ. ஒப்பந்த தொழிலாளர் சங்க அலுவலக செயலாளர் அமிர்தலிங்கம் கூறியதாவது:-

    வருகிற 21-ந் தேதிக்குள் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை என்.எல்.சி. நிர்வாகம் நிறைவேற்றி தர வேண்டும். இல்லை என்றால் 22-ந் தேதி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும். வருகிற 30-ந் தேதிக்குள் கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்றித்தர தவறினால் ஜனவரி முதல்வாரத்தில் இருந்து கோரிக்கைளை நிறைவேற்றும் வரை தொடர்போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க தலைவர் வேல்முருகன், அலுவலக செயலாளர் குப்புசாமி, எல்.எல்.எப். தொழிற்சங்க மாநில செயலாளர் மண்.திருநாவுக்கரசு, ஒப்பந்த தொழிலாளர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஹென்றி, ரெங்கராமாநுஜம், குப்புசாமி, காமராஜ், அய்யப்பன், பாலசுப்பிரமணியன், சிவலிங்கம் உள்பட நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் தொ.மு.ச. ஒப்பந்த தொழிலாளர் சங்க பொருளாளர் ஸ்டாலின் நன்றி கூறினார்.
    ஸ்ரீமுஷ்ணம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள காவாலக்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). தொழிலாளி. இவருக்கு கடந்த 2 வாரத்துக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

    அவரை, சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் ராஜேந்திரனுக்கு காய்ச்சல் குணமாகவில்லை.

    இதையடுத்து டாக்டர்கள், அவரது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தனர். அப்போது ராஜேந்திரனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து ராஜேந்திரன், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

    டெங்கு காய்ச்சலுக்கு பலியான ராஜேந்திரனுக்கு குணசுந்தரி என்ற மனைவியும், ஆனந்தராஜ், அரவிந்த் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    டெங்கு காய்ச்சலுக்கு ராஜேந்திரன் பலியானதையடுத்து சுகாதாரத்துறையினர் காவாலக்குடியில் முகாமிட்டனர். அந்த பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களையும் பரிசோதனை செய்தனர்.

    மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கொசு மருந்து அடித்தனர். ஆங்காங்கே தேங்கி நின்ற கழிவுநீரையும் அகற்றினர்.
    கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிற 14-ந்தேதி சென்னையில் இருந்து ரெயில் மூலம் கடலூர் மாவட்டம் விருத்தசலத்திற்கு வருகிறார்.
    கடலூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

    முதன் முதலாக அவர் கோவைக்கு சென்று பஸ் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டார். அங்கு அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டமும் நடத்தினார்.

    சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்று ‘ஒக்கி’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அடுத்ததாக அவர் வருகிற 14-ந்தேதி(வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து ரெயில் மூலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருகிறார்.

    விருத்தாசலத்தில் அரிமா சங்கம் சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்குகிறார். அதன் பிறகு அவர் கார் மூலம் கடலூருக்கு வந்து இரவில் தங்குகிறார்.

    மறுநாள் (15-ந் தேதி) கடலூரில் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். ஆய்வுக்கூட்டம் முடிந்ததும் பகல் 2 மணி அளவில் அவர் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
    வீராணம் ஏரியில் முதலைகள் இருப்பதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து கடந்த மாதம் வடவாறு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மற்றும் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    தற்போது கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.95 அடி இருந்தது. சென்னையின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 71 கனஅடி அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கந்தகுமாரன், கலியமலை கிராம பகுதியில் உள்ள வீராணம் ஏரிக்கரையில் நேற்று 3 முதலைகள் படுத்து கிடந்தன. ஏரியில் குளிக்க சென்ற கிராம மக்கள் அந்த முதலைகளை பார்த்து அலறியடித்து ஓடினர். உடனே அந்த முதலைகள் ஏரிக்குள் சென்று விட்டன.

    இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், “கீழணையில் தண்ணீர் திறக்கப்பட்டபோது முதலைகள் அடித்து வரப்பட்டுள்ளது. இதனால் ஏரியில் குளிக்க பயமாக உள்ளது. ஏரியில் முதலைகள் இருப்பதால் நாங்கள் பீதியில் உள்ளோம்” என்றனர்.

    இது குறித்து காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ஜெயந்தியிடம் கேட்ட போது, “வீராணம் ஏரியில் முதலைகள் கிடப்பதாக தகவல் வந்துள்ளது. எனவே, வீராணம் ஏரியில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏரியில் உள்ள முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
    திருமாவளவனை எச்.ராஜா தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில முற்போக்கு மாணவர் அணி கழக செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று மதியம் 12 மணிக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே திரண்டனர்.

    பின்னர் அவர்கள் திடீரென்று மறைத்து வைத்திருந்த எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

    அப்போது அங்கு நின்ற திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் உருவபொம்மையை எரிக்க விடாமல் பிடுங்கி சென்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் போராட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை. இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றனர்.

    இதனால் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட் டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் அழைத்து சென்றனர்.

    விடுதலை சிறுத்தை கட்சியினரின் மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம் அருகே வாலிபரை வெட்டிக் கொன்று உடலை எரித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வி.சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் செம்புலிங்கம் (வயது 35). இவரது மனைவி கசந்தாமணி(30). செம்புலிங்கத்தின் மீது திருட்டு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் நேற்று மாலை செம்புலிங்கம் விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் நல்லூரில் உள்ள தனது உறவினரான தனியார் பஸ்சில் டிரைவராக வேலைபார்க்கும் கண்ணன் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது கண்ணனுக்கும், செம்புலிங்கத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த கண்ணன் அரிவாளால் செம்புலிங்கத்தை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவிசந்திரன், ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் ஆகியோர் கொண்ட போலீசார் கண்ணன் வீட்டுக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு அவரை காணவில்லை. அந்த பகுதியில் முகாமிட்டு கண்ணனை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை கண்ணனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கண்ணன் செம்புலிங்கத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

    மேலும் விருத்தாசலம் அருகே உள்ள பெரிய வடவாரி நகராட்சி குப்பைகள் கொட்டும் கிடங்கில் குப்பையோடு குப்பையாக வைத்து கொலை செய்த செம்புலிங்கத்தின் உடலை எரித்ததாக போலீசாரிடம் கூறினார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குப்பை கிடங்கில் பாதி எரிந்த நிலையில் கிடந்த செம்புலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கண்ணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபரை வெட்டிக் கொன்று உடலை எரித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×