என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரியில் பயமுறுத்தும் முதலைகள்: பொதுமக்கள் குளிக்க தடை
    X

    வீராணம் ஏரியில் பயமுறுத்தும் முதலைகள்: பொதுமக்கள் குளிக்க தடை

    வீராணம் ஏரியில் முதலைகள் இருப்பதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து கடந்த மாதம் வடவாறு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மற்றும் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    தற்போது கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.95 அடி இருந்தது. சென்னையின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 71 கனஅடி அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கந்தகுமாரன், கலியமலை கிராம பகுதியில் உள்ள வீராணம் ஏரிக்கரையில் நேற்று 3 முதலைகள் படுத்து கிடந்தன. ஏரியில் குளிக்க சென்ற கிராம மக்கள் அந்த முதலைகளை பார்த்து அலறியடித்து ஓடினர். உடனே அந்த முதலைகள் ஏரிக்குள் சென்று விட்டன.

    இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், “கீழணையில் தண்ணீர் திறக்கப்பட்டபோது முதலைகள் அடித்து வரப்பட்டுள்ளது. இதனால் ஏரியில் குளிக்க பயமாக உள்ளது. ஏரியில் முதலைகள் இருப்பதால் நாங்கள் பீதியில் உள்ளோம்” என்றனர்.

    இது குறித்து காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ஜெயந்தியிடம் கேட்ட போது, “வீராணம் ஏரியில் முதலைகள் கிடப்பதாக தகவல் வந்துள்ளது. எனவே, வீராணம் ஏரியில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏரியில் உள்ள முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
    Next Story
    ×