என் மலர்
செய்திகள்

வீராணம் ஏரி நிரம்பியது - சென்னைக்கு 72 கன அடி தண்ணீர் திறப்பு
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இதன் கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
அந்த ஏரியின் மூலம் 102 கிராமங்களில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரியில் இருந்து பாசனத்துக்கும் சென்னை குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கு வந்ததும் அங்கிருந்து கீழணைக்கு வரும்.
பின்னர் கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும். மழைகாலத்தில் வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து அதிகமாக தண்ணீர் வந்தது.
வீராணம் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் பெய்த மழை காரணமாக வீராணம் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. மழை காலத்தில் 44.50 அடியாக வீராணம் ஏரியில் நீர்மட்டம் இருந்தது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீரும் வரவில்லை. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43 அடியாக குறைந்தது.
இந்நிலையில் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து பாசனத்திற்காகவும், சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்புவதற்காகவும் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு 1,480 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கீழணையில் இருந்து ஏரிக்கு தண்ணீர் அதிகமாக வந்தது.
நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருந்ததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியை எட்டியது.
ஏரி முழு கொள்ளளவை அடைந்ததால் ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளித்தது. ஏரி நிரம்பி உள்ளதால் கீழணையில் இருந்து ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடுவது நேற்று நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து வழக்கமாக வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படும். நேற்றும் 72 கன அடி தண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டது.
விவசாயத்துக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.






