என் மலர்tooltip icon

    கடலூர்

    நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி மாயமானது குறித்து அவரது மகன் போலீசில் புகார் செய்தார். போலீசார் தொழிலாளியை தேடி வருகிறார்கள்.

    நெய்வேலி:

    நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (வயது52). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் முதலாவது சுரங்கத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று முருகன் அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    முருகனின் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

    இது குறித்து முருகனின் மகன் திருமால் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான என்.எல்.சி. தொழிலாளியை தேடி வருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம் அருகே வீடுகளை காலி செய்ய கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர். தெரு மலை மேடு பகுதியில் ஆண்டிமடம் செல்லும் சாலையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 30 வருடங்களாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

    மலைமேடு பகுதியில் ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தாசில்தார் அலுவலகத்துக்கான புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. எனவே இங்கிருந்து வீடுகளை காலி செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்களிடம் தாசில்தார் கூறினார். அதற்கான நோட்டீசும் அவர்களிடம் வழங்கப்பட்டது. ஆனால் மலைமேடு பொதுமக்கள் வீடுகளை காலி செய்யவில்லை.

    இந்த நிலையில் அதிகாரிகள் மலைமேடு பகுதிக்கு நேற்று வந்தனர். நீங்கள் இன்னும் சில நாட்களில் வீடுகளை காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் வரும் 25-ந் தேதி வீட்டில் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். வீடுகளும் இடிக்கப்படும் என அந்த பகுதி மக்களை அதிகாரிகள் எச்சரித்து விட்டு சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பெண்கள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் ஆண்டிமடம் செல்லும் சாலையில் மாதா கோவில் முன்பு இன்று காலை திரண்டனர்.

    வீடுகளை காலி செய்ய கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையோரம் தரையில் அமர்ந்து தொடர் உண்ணாவிரதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைத்து போராட்டம் செய்தனர். பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறும்போது,

    எங்களை திடீரென வீடுகளை காலி செய்ய சொன்னால் எங்கு செல்வோம். எங்களிடம் சேத்தாம்பட்டு ஊராட்சியில் இடம் தருவதாக அதிகாரிகள் கூறினர். அங்கு சென்றால் ஸ்ரீமுஷ்ணத்தில் படிக்கும் மாணவர்கள் கடும் பாதிப்பு அடைவர். மேலும் குடும்ப அட்டையை அங்கு மாற்றுவதில் சிரமம் ஏற்படும். எனவே ஸ்ரீமுஷ்ணம் நகர் பகுதியில் இடம் கொடுத்து அங்கேயே எங்களுக்கு பசுமை வீடுகள் கட்டி தர வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட மாட்டோம். தொடர்ந்து ஈடுபடுவோம் என்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    தனியார் பஸ் வயலில் பாய்ந்ததில் 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சிதம்பரம்:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இருந்து சிதம்பரத்துக்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இன்று காலை 11.30 மணிக்கு சிதம்பரம் அருகே வயலூர் புறவழிச் சாலையில் அந்த பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது சிதம்பரத்தில் இருந்து கீரப்பாளையம் நோக்கி ஒரு மாருதி கார் சென்றது.

    புறவழிச்சாலையில் வந்து போது காரும், பஸ் சும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது போல் இருந்தது. இதையறிந்த பஸ் டிரைவர் கார் மீது மோதாமல் இருக்க பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையை விட்டு கீழே இறங்கி வயல்வெளியில் பாய்ந்தது.

    அப்போது பஸ் அங்கு மிங்குமாக ஆடியது. இதனால் பயணிகள் கூச்சலிட்டனர். பஸ் குலுங்கியதில் பஸ்சின் கம்பி மற்றும் சீட் பகுதிகளில் இடித்து குருசாமி, அவரது மனைவி வசந்தா, அமராவதி, ராமசாமி உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    பண்ருட்டி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் இவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள ஏ.ஆண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு. இவரது மகள் நித்யா (19) இவர் கடலூரில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் கடந்த 14-ந் தேதிகல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் இவரது தந்தை துரைக்கண்ணு காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    இது குறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மாதம் முழுவதும் வேலை வழங்க கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

    நெய்வேலி:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முதல் கட்டமாக மாதம் முழுவதும் வேலை வழங்கப்பட்டது. ஆண்டுகள் செல்லசெல்ல வேலை வழங்கும் நாட்களை என்.எல்.சி. நிர்வாகம் குறைத்து விட்டது. தற்போது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வருகிறது.

    நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ள கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 52). இவர் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 2-வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முதல் கட்ட பணிக்கு சென்றார்.

    பணி முடிந்ததும் வெளியே வந்த அவர், அந்த பகுதியில் இருந்த 60 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி, அதன் உச்சிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், என்.எல்.சி.யில் மாதம் முழுவதும் வேலை வழங்கினால்தான் போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறினார். இது பற்றி தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் விரைந்து வந்து, ராஜேந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர் கீழே இறங்கி வந்தார். அவரை, என்.எல்.சி. மனிதவளத்துறை பொது மேலாளர் நாராயணனிடம் அழைத்துச்சென்றனர். அங்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொது மேலாளர் நாராயணன், இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

    பண்ருட்டியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சிற்பி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த திருவதிகை ஓரையூரான் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த் (60). இவர் கடந்த 14-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த சங்கர் (50) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆனந்த் மற்றும் சங்கர் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

    இதனால் படுகாயம் அடைந்த இவர்கள் இருவரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைகாக புதுவை மகாத்மா காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆனந்த் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மணல் குவாரிக்கு சென்ற வாலிபர் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தபிரபு (வயது 27), கூலித்தொழிலாளி. இவர் கொள்ளிடம் ஆற்று பகுதியில் உள்ள மணல் குவாரிக்கு சென்றார்.

    வெகு நேரமாகியும் ஆனந்தபிரபு வீடு திரும்பாததால் அவரைதேடி உறவினர்கள் குவாரிக்கு வந்தனர். அப்போது லாரி மணல் ஏற்றிச்செல்லும் பாதையில் ஆனந்த பிரபு உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் குமராட்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து ஆனந்தபிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள் ஆனந்த பிரபு சாவுக்கான காரணம் தெரியும்வரை உடலை எடுக்க விடமாட்டோம் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார் கோவில் தாசில்தார் ஜெயந்தி, சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கிராம மக்கள் மணல் குவாரியை மூட வேண்டும், ஆனந்தபிரபு சாவுக்கு காரணமானவர்களை உடனே கைது செய்யவேண்டும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உங்களது கோரிக்கையை நிறை வேற்றுவோம் என்று போலீசார் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதையடுத்து ஆனந்தபிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்தபிரபுவின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு அவரது உறவினர்கள் அனுமதிக்க வில்லை. தொடர்ந்து 2-வது நாளாக அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ஆனந்தபிரபு வாகன விபத்தில் இறந்தாரா? அல்லது கொல்லப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தலமான தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நாளை (19-ந்தேதி) சனிப்பெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது.
    திருநள்ளாறில் சனீஸ்வர பகவான் தலமான தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. உலகளவில் சனிதோஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்ற தலமாக விளங்கும் இந்த கோவிலில் சனிபகவானுக்கு தனி சன்னதி உள்ளது.

    நாளை (19-ந்தேதி) சனிப்பெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது. நாளை காலை 10.01 மணிக்கு சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

    சனீஸ்வர பகவானை தரிசிக்க வரும் பக்தர்கள் ஒரு இரவு தங்கி மறுநாள் தரிசனம் செய்தால் சிறப்பு என கூறப்படுகிறது. இதனால் சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ் மற்றும் கார்களில் இன்றே திருநள்ளாறு வரத்தொடங்கியுள்ளனர்.
    நளதீர்த்தம்

    முதலில் நளதீர்த்தத்தில் புனித நீராடி விட்டு, அங்குள்ள நளன் கலிதீர்த்த விநாயகர் கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து விநாயகரை வழிபட்ட பின்னரே கோவிலுக்கு செல்வார்கள். பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக குளத்தில் உள்ள பழைய தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. அங்கு தூர்வாரி, புதிதாக மணல் நிரப்பி தண்ணீர் விடப்பட்டுள்ளது.

    சனிப் பெயர்ச்சி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்பதால் தொடர்ந்து 24 மணி நேரமும் 2 மோட்டார்கள் மூலம் குளத்திலிருந்து பழைய தண்ணீரை வெளியேற்றி, 2 மோட்டார்கள் மூலம் புதிதாக தண்ணீர் விடுவதற் கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. குளத்தை சுற்றிலும் நிரந்தர மற்றும் தற்காலிகமாக பெண்கள் உடைமாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சனிப்பெயர்ச்சி விழாவையட்டி இலவச தரிசனம், ரூ.200, ரூ.500 கட்டண தரிசனம், நன்கொடை யாளர்கள் தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் என்று 5 தரிசன பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இலவச தரிசனத்துக்கு வருபவர்கள் நளன் குளம் செல்லும் வழியில் திருநள்ளாறு போலீஸ் நிலையம் அருகில் தொடங் கும் வரிசையில் நுழைந்து வரிசை வளாகம் வழியாக கோவிலின் வடக்கு பிரகாரத்தில் நுழைந்து 3-வது பிரகாரம், 2-வது பிரகாரம் வழியாக உள்ளே செல்ல வேண்டும்.

    ரூ.200 மற்றும் சிறப்பு தரிசனத்துக்கு வருபவர்கள் தெற்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசையில் நுழைந்து சரஸ்வதி தீர்த்தத்தின் மேற்கு கரை வழியாக கோவிலின் தெற்கு வாசலில் நுழைந்து உள்ளே செல்ல வேண்டும். 

    ரூ.500 மற்றும் நன்கொடை யாளர்கள் கீழவீதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசையில் நுழைந்து சன்னதி தெரு மற்றும் ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் செல்லலாம். 

    சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், காரைக்கால் வழியாக வரும் பஸ்களை நிறுத்த திருநள்ளாறு முன்பு உள்ள வடக்கு உள்வட்டச் சாலையிலும், திருச்சி, தஞ்சா வூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பேரளம், நெடுங்காடு வழியாக வரும் பஸ்களை நிறுத்த சுரக்குடி ரோட்டில் வடக்கு உள்வட்டச் சாலையின் மேற்கு பகுதியிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

    மயிலாடுதுறை, கும்ப கோணம், திருச்சி, தஞ்சாவூர் போன்ற ஊர்களிலிருந்து பேரளம் வழியாக திருநள் ளாறு வரும் பக்தர்களின் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களை நிறுத்த திருநள்ளாறு- பேரளம் சாலையில் செல்லூர் அருகிலுள்ள வி.ஐ.பி. நகர் மற்றும் பேட்டை ரோட்டில் உள்ள பொங்கலடி திடல் ஆகிய இடங்களும், நெடுங்காடு வழியாக திருநள்ளாறு வரும் வாகனங்களை நிறுத்த சுரக்குடி மாரியம்மன் கோவில் திடல், வேளாண்கல்லூரி ஆகிய இடங்களிலும், காரைக்கால் வழியாக திருநள்ளாறு செல்லும் வாகனங்கள் காரைக் கால் களையங்கட்டி பாலம் அருகில் உள்ள நகராட்சி சந்தை திடல், திருநள்ளாறில் உள்ள வடக்கு உள் வட்ட சாலையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருநள்ளாறு பஸ் நிலைய வளாகத்தில் வி.ஐ.பி.க்களின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து வருபவர்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்த திருநள்ளாறில் உள்ள வெள்ளாளர் தெருவிலும், பேரளம், நெடுங்காடு வழியாக வருபவர்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்த சுரக்குடிரோடு முனையில் உள்ள அய்யனார் கோவில் திடலிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 2-ந் தேதி நடக்கிறது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கோவில் கொடி மரத்தில் மேளதாளம் முழங்க, வேதமந்திரங்கள் ஒலிக்க உற்சவ ஆச்சாரியர் கனகசபாபதி தீட்சிதர் கொடியேற்றி வைக்கிறார்.

    இதனைத்தொடர்ந்து கோவில் உள் மற்றும் வெளிபிரகாரங்களில் பஞ்சமூர்த்தி வீதிஉலா நடக்கிறது.

    தொடர்ந்து தினமும் பகல் மற்றும் இரவில் உற்சவர்கள் சோமாஸ்கந்தர், சிவானந்தநாயகி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி தேர்த்திருவிழாவும், 2-ந்தேதி நண்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது. 3-ந் தேதி இரவு முத்துப்பல்லக்கு வீதிஉலா நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    அரசு நிர்வாகம் குறித்து அதிகாரிகளிடம் விசாரிக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 22 மாவட்ட மாநாடு நடந்தது.

    இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு மத்திய அரசின் பினாமி அரசாக செயல்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் புயலால் பேரழிவை சந்தித்துள்ளது. மீன்பிடிக்க சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. புயலால் இறந்த மக்களுக்கு கேரள அரசை போல நிவாரணம் வழங்கிட வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் விவசாயம் முழுமையாக அழிந்துள்ளது. எத்தனை வாழை மரம், ரப்பர் மரம் சாய்ந்துள்ளது என ஒவ்வொரு மரத்திற்கும் நஷ்ட ஈட்டினை அரசு வழங்க வேண்டும்.

    தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆயிரத்து 58 விரிவுரையாளர்களை நியமனத்திற்கு ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு எழுத்துத் தேர்வு நடந்தது.

    அதன்பிறகு நேர்முக தேர்வுக்கு அழைத்த போது போதிய மதிப்பெண் எடுக்காதவர்களுக்கு மதிப் பெண்களை திருத்தி முறைகேடு நடந்துள்ளது. இதில் 50 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. இதனை பணியில் உள்ள உயர்நீதி மன்ற நீதிபதியை கொண்டு விசாரிக்க வேண்டும். இதேபோல டாக்டர்கள் நியமனத்திற்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படாமலேயே 566 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில் முறைகேடு நடந்துள்ளது.

    மாநில கவர்னர் விழாவிற்கு செல்லலாம். ஆனால் மாநில அரசு அமைச்சர்கள் செய்ய வேண்டிய வேலையை அவர் செய்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதுஅல்ல. கடலூரில் துறை ரீதியாக அதிகாரிகள், மாவட்ட கலெக்டரை அழைத்து அரசு நிர்வாகம் எப்படி நடை பெறுகிறது என்று கவர்னர் விசாரித்தார். அந்த அதிகாரம் கவர்னருக்கு இல்லை. இச்செயலை கண்டிக்கிறோம்.

    அ.தி.மு.க. அமைச்சர்கள் வாய்மூடி மவுனம் காப்பது ஏற்று கொள்ளத்தக்கது அல்ல. இந்த அரசு மத்திய அரசின் பினாமி அரசு என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்றார். இதனால் பாரதிய ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படபோவதில்லை என்று எச். ராஜா கூறினார்.

    கடலூர்:

    நாகை மாவட்டம் சீர்காழியில் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாரதிய ஜனதாவை சேர்ந்த அகோரம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அகோரத்தை பார்ப்பதற்காக பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று கடலூர் வந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அகோரத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்றார். இதனால் பாரதிய ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படபோவதில்லை. பாரதிய ஜனதாவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.


    சீர்காழியில் நடைபெற்ற மோதலில் பா.ஜ.க.வினர் பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டனர். திருமாவளவன் இந்து கோவில்களை பற்றி சர்ச்சையாக பேசியதாலேயே நான் அவரை கண்டித்து பேசினேன்.

    தமிழ்நாட்டில் நிர்வாகம் சரியில்லை. திருவண்காடு போலீஸ் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடலூர் வண்டிப்பாளையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் இந்த திட்டம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    கடலூர்:

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவை, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    நேற்று மாலை கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடந்த விழாவில் கலந்து கொள்ள வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் விருத்தாசலம் வந்தார். ரெயிலில் பயணிகளோடு பயணியாக எளிமையாக வந்தார்.

    பின்னர் விருத்தாசலத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து அவர் விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தக் கிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    இரவு 7 மணிக்கு அங்கிருந்து கார் மூலம் கடலூர் சுற்றுலா மாளிகைக்கு புறப்பட்டார். இரவு 8 மணிக்கு கடலூர் சுற்றுலா மாளிகை வந்தடைந்தார்.

    கடலூர் பஸ் நிலையத்தை கவர்னர் ஆய்வு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையொட்டிகடந்த 2 நாட்களாக நகராட்சி ஊழியர்கள் பஸ் நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள கழிவறை சுத்தம் செய்யப்பட்டது. ஆங்காங்கே கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன.

    அதேபோல் அரசு ஆஸ்பத்திரி வளாகமும் முழுவீச்சில் சுத்தப்படுத்தப்பட்டது. பாரதி சாலையில் உள்ள சிறுவர் பூங்காவும் சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து சுற்றுலா மாளிகையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு திடீரென்று கார் மூலம் கடலூர் வண்டிப்பாளையம் அம்பேத்கார் நகருக்கு சென்றார்.


    அவருடன் கலெக்டர் பிரசாந்த் மற்றும் அதிகாரிகள் சென்றனர். வண்டிப்பாளையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    பின்னர் அவர் துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணிகளில் ஈடுபட்டார்.



    ×