search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணல் குவாரி"

    • ஒவ்வொரு மணல் குவாரியிலும் விற்பனையான மணல் அளவு, அதற்கான பில் போன்றவற்றை சமர்பிக்கும்படி அறிக்கை கேட்டனர்.
    • நீர்வளத்துறை முதன்மை செயற்பொறியாளர் முத்தையா மற்றும் செயற் பொறியாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    சென்னை:

    தமிழகத்தில் மணல் விற்பனையை அரசின் நீர்வளத்துறை நேரடியாக செய்து வருகிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் மக்களுக்கு குறைவான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு மணல் விற்பனையை செய்கிறது.

    ஒரு யூனிட் மணல் விலை ரூ.1000-க்கும் மணலை யார்டுக்கும் கொண்டு வந்து ஒப்பந்ததாரர் வழங்க ரூ.1680 என மொத்தம் ரூ.2680 வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் அரசு மணல் விற்பனையில் தவறுகள் நடப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 12-ந் தேதி சோதனையில் ஈடுபட்டனர். திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதனால் கடந்த ஒரு மாதமாக மணல் விற்பனை முழுமையாக நடைபெறவில்லை. ஆறுகளில் இருந்து மணல் எடுக்கப்படவில்லை. யார்டுகளில் உள்ள மணல் மட்டும் மிக குறைந்த அளவில் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். ஒவ்வொரு மணல் குவாரியிலும் விற்பனையான மணல் அளவு, அதற்கான பில் போன்றவற்றை சமர்பிக்கும்படி அறிக்கை கேட்டனர்.

    இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீர்வளத்துறை முதன்மை செயற்பொறியாளர் முத்தையா மற்றும் செயற் பொறியாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் முதன்மை பொறியாளர் முத்தையா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    இதுவரையில் ஆற்று மணல் எடுக்கப்பட்ட அளவு விவரம், விற்பனை செய்த அளவு, அதற்கான பில் போன்றவற்றை அதிகாரிகள் அவரிடம் கேட்டனர். அம லாக்கத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதமும் அனுப்பியுள்ளனர்.

    • புத்தூர் அரசு மணல் குவாரியில், மணல் அள்ளுவதற்காக லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
    • திருவையாறு பகுதிகளில் சென்று மணல் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்,

    பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டனை சந்தித்து இந்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமாபதி மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஒரு கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோவிந்தநாட்டு ஊராட்சி புத்தூர் அரசு மணல் குவாரியில், மணல் அள்ளுவதற்காக லாரிக ளுக்கு அனுமதி வழங்கப்ப ட்டு, ஆன்லைன் மூலம் மணல்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தற்போது கோவிந்த நாட்டுசேரி ஊராட்சியில் அமைந்தி ருக்கும் புத்தூர் அரசு மணல் குவாரியில், மாட்டு வண்டி வைத்திரு ப்பவர்கள் மணல் அள்ளி பிழைப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் அவர்கள் கூறும் போது, இங்கு இருக்கும் ஏழை எளிய நலிவுற்ற மாட்டு வண்டி வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், கும்பகோணம் மற்றும் திருவையாறு பகுதிகளில் சென்று மணல் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொழிலாளர்களின் நலன் கருதி புத்தூரில் அமைந்துள்ள மணல் குவாரியில் மாற்றி வண்டி வைத்திருக்கும் தொழிலாளர்கள் மணல் அள்ளுவதற்கு உத்தரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
    • மணல் அள்ளப்பட்டதற்கான தெளிவான அளவினை காண்பிக்கும் என்கின்றனர்,

    கரூர்:

    கரூர் மாவட்டம், வாங்கல் அருகே மல்லம்பாளையம், நன்னியூர் புதூர் ஆகிய 2 இடங்களில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த மணல் குவாரிகளை புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆதியோர் ஓப்பந்த அடிப்படையில் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கடந்த மாதம் செப்டம்பர் 12-ந் தேதி, அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த 2 குவாரிகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மணல் குவாரி என 3 குவாரிகளில் 2 நாட்கள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

    இதைத் தொடர்ந்து கடந்த 10-ந் தேதி மீண்டும் 2-வது முறையாக மணல் திடங்கு, மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து, காவிரி ஆற்றினுள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிகமாக மணல் அள்ளப்பட்டதா என அளவீடு செய்தனர்.

    பின்னர் 3-வது முறையாக 18-ந்தேதியும், 4-வது முறையாக கடந்த 20-ந்தேதியும் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் மணல் அள்ளப்பட்ட இடத்தை, ஜிட்டல் சர்வே எந்திரங்களைக் கொண்டும், ட்ரோன் கேமரா மூலமாகவும் ஆய்வு செய்து சோதனை மேற்கொண்டனர்.

    இந்த பல்வேறு கட்ட சோதனைகளில் போலி ரசீதுகள், போலி கியூ ஆர் குறியீடுகள் உள்ளிட்டமுக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. மேலும் கம்ப்யூட்டர்களில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகள், ஹார்டு டிஸ்க் போன்றவையும் ஆய்வு செய்யப்பட்டது.

    இதனிடையே இந்த குவாரிகளில் கடந்த 2 ஆண்டுகளில் அள்ளப்பட்ட மணல், விற்கப்பட்ட மணல் போன்ற விவரங்களை செயற்கைகோள் உதவியுடன் அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இதற்காக இஸ்ரோ, கான்பூர் ஐ.ஐ.டி. உதவியுடன் செயற்கைகோள் படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது.

    இவை மணல் அள்ளப்பட்டதற்கான தெளிவான அளவினை காண்பிக்கும் என்கின்றனர். அதிகாரிகள். டிஜிட்டல் சர்வே முறையில் மணல் அள்ளப்பட்டது அளவீடு செய்து உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

    • குவாரில் எந்த அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்று டிரோன் மூலமாக ஆய்வில் ஈடுபட்டனர்.
    • துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அறந்தாங்கி:

    தமிழக அரசின் நீர் வளத்துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மணல் வாங்குபவர்களுக்கு அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது.

    இதில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடைமுறையை பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

    இதை தொடர்ந்து கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று ஒரே நேரத்தில் தீவிர சோதனை நடத்தினர். மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    அறந்தாங்கி தாலுகா பெருநாவலூர் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் குவாரியை குத்தகைக்கு எடுத்து செயல்பட்டு வந்தார். தமிழகம் முழுவதும் இவர் எடுத்துள்ள குவாரி மற்றும் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையிட்டு ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக பெருநாவலூர் குவாரியில் இன்று அமலாக்கத்துறையினர் 10 பேர் கொண்ட குழுவினர், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அரசு அனுமதித்த 4 ஆயிரத்து 400 கனமீட்டர் அளவு வரை மணல் எடுக்கப்பட்டுள்ளதா அல்லது கூடுதலாக எடுக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சென்னை ஐ.ஐ.டி. யில் இருந்து தொழில்நுட்ப குழுவினரையும் அமலாக்கதுறையினர் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் நவீன கருவிகள் மூலம் மணல் அள்ளப்பட்டதை கணக்கிட்டனர்.

    இதேபோல அரியலூர் மாவட்டம் தளவாய் அருகே உள்ள சிலுப்பனூர் மணல் குவாரி, சேந்தமங்கலம் வெள்ளாற்றில் உள்ள மணல் குவாரிகளிலும் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். குவாரில் எந்த அளவுக்கு மணல் அள்லப்பட்டுள்ளது என்று டிரோன் மூலமாக ஆய்வில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • மணல் குவாரியின் ஆழம், அகலம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்தனர்.
    • மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    காவிரி, கொள்ளிடத்திலுள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகளவில் மணல் அள்ளப்பட்டதா? முறைகேடுகள் நடந்துள்ளதா? என்ற அடிப்படையில் மணல் குவாரிகள், குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் கடந்த ஒரு மாதமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே மருவூர் கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை சோதனை மேற்கொள்ள இருந்தனர். ஆனால் அந்த நேரத்தில் பலத்த காற்று வீச தொடங்கியதால், டிரோனை பறக்கவிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சோதனை நடவடிக்கையை அலுவலர்கள் ரத்து செய்து திரும்பினர்.

    இந்த நிலையில் இன்று திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அலுவலர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மணல் குவாரியின் ஆழம், அகலம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்தனர். இவற்றை டிரோன் கேமரா மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

    இதேபோல் நேற்று சோதனை நடத்த முடியாமல் போன மருவூர் கொள்ளிடம் ஆற்றில் இன்று மதியம் அமலாக்கத்துறை அலுவலர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வந்தனர். பின்னர் அவர்கள் குவாரியில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2 மணல் குவாரிகளிலும் சோதனை நடந்து வருகிறது. இவர்களுக்கு மத்திய காவல் படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

    • அமலாக்கத்துறையினர் 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 2 கார்கள் மற்றும் வேன்களில் மல்லம்பாளையம் மணல் குவாரிக்கு வந்தனர்.
    • துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினருடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக மணல் குவாரிக்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள மல்லம்பாளையத்தில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

    தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக அமலாக்கத்துறையினர் புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை, திருச்சி, கரூர் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த மாதம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மீண்டும் கரூர் மல்லம்பாளையம் மணல் குவாரியில் இன்று சோதனை மேற்கொண்டனர்.

    இன்று காலை அமலாக்கத்துறையினர் 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 2 கார்கள் மற்றும் வேன்களில் மல்லம்பாளையம் மணல் குவாரிக்கு வந்தனர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினருடன் வந்த அவர்கள், அதிரடியாக மணல் குவாரிக்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் அங்கிருந்த பணம், பில் புத்தகம் உள்ளிட்ட அலுவலக ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் மணல் குவாரியில் இருந்து, கடந்த மாத சோதனைக்கு பின்னர் இதுவரை அள்ளப்பட்ட மணலின் அளவு குறித்தும் அவர்கள் கணக்கிட்டனர்.

    இதற்காக பிரத்யேக தொழில்நுட்ப வல்லுனர்களையும் அவர்கள் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் மணல் அள்ளப்பட்ட அளவை நவீன கருவிகள் மூலம் துல்லியமாக கணக்கிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர் இந்த மணல் குவாரி மூடப்பட்டது, தடையை மீறி யாரும் மணல் அள்ளாமல் இருப்பதற்காக, அகழிகள் வெட்டப்பட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதையும் மீறி சிலர் மணல் அள்ளியதாக அமலாக்கத்துறையினருக்கு புகார்கள் சென்றது.

    இதன் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. அதை வைத்து அமலாக்கத்துறையினர் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அமலாக்கத்துறையினரின் இந்த சோதனை காரணமாக கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்ட வர்களிடம் விசாரணை நடத்தினர்.
    • மணல் அள்ளும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக பில்கள் போடவில்லை என புகார்கள் எழுந்தவந்தது.

    இந்த நிலையில் இன்று காலை 6 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் திடீரென கந்தனேரி மணல் குவாரிக்கு வந்தனர்.

    மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்ட வர்களிடம் விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் மணல் அள்ளும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • புதிய மணல் குவாரிகளால் சுற்று சூழல் பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி அளித்தார்
    • தமிழகத்தின் உள்கட்ட அமைப்புக்கு மணல் தேவை என்ற கோரிக்கையின் அடிப்படையில் தான் 25 குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் 25 இடங்களில் மணல் குவாரிகளை பொதுப்பணித்துறையே நடத்தும் வகையில் அனுமதி கொடுத்துள்ளோம். எந்தெந்த இடங்களில் எவ்வளவு மணல் எடுக்க வேண்டும் என்று சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி கொடுத்துள்ளோம். 25 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளால் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தின் உள்கட்ட அமைப்புக்கு மணல் தேவை என்ற கோரிக்கையின் அடிப்படையில் தான் 25 குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூரில் மழை பெய்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொள்ளிடம் மூலம் கடலில் காவிரி நீர் கலக்கும் வழித்தடத்தில் அதிக அளவு மணல் திட்டுகள் இருந்ததால் முகத்துவாரங்களில் மழைநீர் கலக்கும் இடங்களில் சிக்கல் ஏற்பட்டது. இவற்றையெல்லாம் சரி செய்தால்தான் தண்ணீர் தடையின்றி கடலுக்கு செல்லும்.அதே வேளையில் மணல் அள்ளும் பணிகளை சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.பெங்களூர் மாநகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுகளால் தான் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் மாசு, அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் பெங்களூரில் 36 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டுமென உத்தரவு விட்டுள்ளது. தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் இது சம்பந்தமாக கர்நாடகா அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முழுமையாக கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தடுக்கப்படும் பட்சத்தில் தென்பெண்ணை ஆறு முற்றிலும் பாதுகாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • கலெக்டரிடம், பா.ம.க. வினர் கோரிக்கை மனு
    • பாலாறு பாலைவனமாக மாறும் நிலை உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க.செயலாளர் சரவணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வட தமிழ்நாட்டு மக்களின் வேளாண்மைக்கும் குடிநீர் உள்பட அன்றாட பயன்பாட்டுக்கும் உயிர் ஆதாரமாக பாலாறு இருந்து வருகிறது.

    கோடிக்கணக்கான ஏக்கர் வேளாண்மை நிலங்களும்,பொது மக்களும் பாலாற்றின் நிலத்தடி நீரை நம்பிய வாழ்கின்றனர்.

    இந்நிலையில் மக்களிடம் கருத்து கேட்காமல் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் எசையனூர் மற்றும் வளவனூர் ஆகிய கிராமங்களில் பாலாற்றில் மணல் குவாரிகளை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுகிறது.

    அரசு மணல் குவாரி சம்பந்தப்பட்ட அரசு போர்டுகளை எசையனூர் கிராமத்தில் பாலாற்றங்கரையில் வைத்துள்ளனர்.

    பாலாற்றில் மீண்டும் மணல் குவாரிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் பாலாறு பாலைவனமாக மாறும் நிலை உள்ளது.

    எசையனூர் மற்றும் வளவனூர் ஆகிய கிராமங்களில் பாலாற்றில் மணல் குவாரிகளை அமைப்பது எதிர்த்து பா.ம.க சார்பில் கடந்த மாதம் 25ம் தேதி எசையனூர் கிராமத்தில் பாலாற்றில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    மணல் கொள்ளையை தடுத்து நிலத்தடி நீர் வளத்தை காத்து இயற்கை வளங்களை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில் எசையனூர் மற்றும் வளவனூர் ஆகிய கிராமங்களில் பாலாற்றில் மணல் குவாரிகளை அமைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • இனிவரும் காலங்களில் வைகைநதி வற்றாத ஜீவநதியாக பாய ஆற்றுபகுதியில் கட்டிடங்களோ, மணல் குவாரிகளோ ஏதும் அமைக்க கூடாது.
    • வைகை ஆற்றில் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், குப்பைகளை கொட்டாமல் பாதுகாக்க வேண்டும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆறு பூர்வீக பாசனபகுதிஆகும். பல ஆண்டுகளுக்கு முன் வைகை ஆற்று தண்ணீரைகொண்டு முப்போக விவசாயம் செய்துஉள்ளனர். ஆனால் பருவநிலை மாற்றத்தால் பல ஆண்டுகளாக தண்ணீரின்றி வறண்டு கடும் வறட்சியும் கண்டு உள்ளனர் இப்பகுதி விவசாயிகள்.

    மானாமதுரை வைகை ஆற்று பகுதிக்கு எப்போதும் தனி சிறப்பு உண்டு. காசியில் கங்கை நதி எப்படி உள்ளதோ அதேபோல் மேற்கில் இருந்து பாய்ந்து வரும் வைகை ஆறு வடக்கு தெற்கு பகுதியாக செல்லும் அமைப்பு மானாமதுரை வைகை ஆற்றுக்கு உள்ளது.

    இதேபோல் பல நூறுஆண்டுகாலமாக மானாமதுரை அருகே உள்ள திருப்புவனம் வைகைஆற்று கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். அங்கு வரும் பக்தர்கள் ஆறு வறண்டு தண்ணீர் இல்லாமல் இருப்பதைகண்டு மணம் வருந்தி செல்லும் நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி கடந்த 2 ஆண்டுகாலமாக வற்றாத ஜீவநதியாக மானாமதுரை வைகை ஆறு பாய்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மானாமதுரையை சுற்றி ஏராளமான கண்மாய்கள் உள்ளன. அவகைளும் நிரம்பி மறுகால் பாய்கின்றன. இதைத் தொடர்ந்து விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இனிவரும் காலங்களில் வைகைநதி வற்றாத ஜீவநதியாக பாய ஆற்றுபகுதியில் கட்டிடங்களோ, மணல் குவாரிகளோ ஏதும் அமைக்க கூடாது. கூடுதல் தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமித்துத்து நிலத்தடி நீரை அதிகபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    வைகைஆறுமுழுவதும் நாணல் செடி, சீமை கருவேல் மரங்களை அகற்ற வேண்டும். ஆற்றில் இருந்து கால்வாய்களுக்கு செல்லும் பகுதியில் உள்ள மதகுகளை புதுபிக்க வேண்டும். வைகை ஆற்றில் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், குப்பைகளை கொட்டாமல் பாதுகாக்க வேண்டும்.

    வற்றாத ஜீவநதியாக செல்லும் கங்கை நதிக்கு இயற்கை அன்னைக்கு நன்றி சொல்லும் வகையில் வேகவதி எனும் வைகை நதிக்கும் ஆரத்தி எடுத்தும், புஷ்கரணி விழா நடத்தியும் வைகை நதிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பொதுமக்கள், விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் கரைகளில் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து குடிநீர் வினியோகித்து வருகிறது.

    அனந்தேரி, போந்தவாக்கம், பேரிவிட்டிவாக்கம், மாம்பாகம், வேலகாபுரம், நந்திமங்கலம் உட்டபட 15 ஊராட்சிகளை ஆரணி ஆற்றங்கரையில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகித்து வருகின்றன.

    இந்த நிலையில் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு முடிவு செய்து ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி உள்ளது.

    இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மணல் குவாரி அமைக்க கூடாது என்று கோரி ஊத்துக்கோட்டை பொது மக்கள் கடந்த வாரம் ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிசந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதேபோல் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் மணல் குவாரி தொடங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதற்கிடையே மணல் குவாரி தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊத்துக்கோட்டையில் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மேலும் பொது மக்கள், விவசாயிகள் கிராம நிர்வாக அவுலகம் எதிரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ×