என் மலர்
கடலூர்
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் இரட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 21). என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் நேற்று இரவு தனது உறவினர் பெண் பவித்ரா(21) என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோவில் நோக்கி புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிளை வெங்கடேசன் ஓட்டி வந்தார். இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருச்சனாபுரம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக வெங்கடேசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பவித்ரா படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் பவித்ராவை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பவித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபடுகிறது.விபத்து குறித்து புத்தூர் போலீசில் புகார் செய்யபட்டது.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரை சேர்ந்தவர் தீனா என்கிற தினகரன். சாராய வியாபாரி. இவருடைய மனைவி திருநாவுக்கரசி. இவர் சாராயம் விற்ற வழக்கில் கைதாகி கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று திருநாவுக்கரசியை பார்க்க தினகரன் அவருடைய நண்பர் சுதாகருடன் கடலூர் மத்திய சிறைக்கு வந்து மனைவியை சந்தித்து பேசினார்.
அவருக்கு புகையிலை பொருட்களை தருவதாக தினகரன் கூறினார். பார்வையாளர்கள் இடத்தில் வைத்து அதை வழங்க முடியாது என்பதால், திருநாவுக்கரசியை ஜெயில் மதில் சுவர் அருகே வர சொல்லிவிட்டு தினகரன் தனது நண்பருடன் ஜெயிலை விட்டு வெளியே வந்தார்.
பின்னர் அவர் ஜெயிலுக்குள் புகையிலை பொருட்களை வீசினார்.
இதை அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர்கள் பார்த்தனர். உடனே தினகரனும், அவரது நண்பர் சுதாகரும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை துரத்தி சென்றனர். அதில் சுதாகர் மட்டும் போலீசில் சிக்கினார். தினகரன் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுதாகரை கைது செய்தனர். தப்பி ஓடிய தினகரனை வலைவீசி தேடி வருகின்றனர். சிறைக்குள் இருக்கும் மனைவிக்கு மதில் சுவர் வழியாக புகையிலை பொருட்களை கணவரே வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்ட கலெக்டராக பிரசாந்த் பணிபுரிந்து வருகிறார். இவர் அரசு செலவை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 30-ந் தேதி ஸ்ரீமுஷ்ணம் அருகே கொழை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமுக்கு தனது காரில் செல்லாமல் அரசு பஸ்சில் அதிகாரிகளுடன் சென்றார்.
அதைத்தொடர்ந்து இனி ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மனுநீதிநாள் முகாம் மற்றும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள இதேபோல் அரசு பஸ்சில் அதிகாரிகளுடன் செல்வேன் என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் பண்ருட்டி அருகே உள்ள பைத்தாம்பாடி பகுதியில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் மற்றும் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள கலெக்டர் பிரசாந்த் அரசு பஸ்சில் செல்ல முடிவு செய்தார். கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு அனைத்துத்துறை அதிகாரிகளும் வரவேண்டும் என்று உத்தரவிட்டார். அனைத்து அதிகாரிகளும் இன்று காலை அங்கு வந்தனர்.
அங்கு அரசு பஸ் வரவழைக்கப்பட்டது. அந்த பஸ்சில் கலெக்டர் பிரசாந்த் முதலில் ஏறி அமர்ந்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா உள்ளிட்ட 50 அதிகாரிகள் அதே பஸ்சில் ஏறினர்.

பின்னர் அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும் பைத்தாம்பாடிக்கு சென்றது.
அங்கு சென்றதும் பஸ்சில் இருந்து கலெக்டர் பிரசாந்த் மற்றும் அதிகாரிகள் கீழே இறங்கி முகாம் நடைபெறும் இடத்துக்கு சென்றனர்.
அங்கு கலெக்டர் தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பைத்தாம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். பின்னர் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பஸ்சில் பயணம் செய்தது ஏன்? என்பதற்கு கலெக்டர் பிரசாந்த் கூறியதாவது:-
நான் மற்றும் அதிகாரிகள் ஒரே பஸ்சில் கிராம சபை கூட்டத்துக்கு செல்வதால் அனைவரும் ஒரே நேரத்தில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு செல்ல முடியும். மேலும் தனித்தனியாக கார்களில் சென்றால் செலவு அதிகமாகும். இதை தவிர்க்கவே பஸ்சில் செல்கிறோம் என்றார்.
செலவை குறைக்க பஸ்சில் வந்த கலெக்டரின் நடவடிக்கையை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டினர்.
கடலூர் முதுநகர் செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 35). இவர் கடலூர் வண்டிப்பாளையத்தில் கிளினிக் வைத்து பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
மேலும் அவர் பிறப்பு, இறப்பு சான்றிதழ், உடல் தகுதி சான்றிதழ்களை வழங்கி வந்தார். இது குறித்து பொதுமக்கள் சார்பில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டது.
இதையொட்டி சென்னை மருத்துவப் பணிகளின் இணை இயக்குனர் மோகனன், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை நலப்பணிகள் இணை இயக்குனர் மாதவி, கண்காணிப்பாளர் ஹபீசா மற்றும் மருத்துவக் குழுவினர் வண்டிப்பாளையம் சென்று மதியழகன் நடத்தி வந்த கிளினிக்கை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் மதியழகன் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை பிடித்து கடலூர் முதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து போலி டாக்டர் மதியழகனை கைது செய்தனர். இவர் ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு இதேபோன்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலூர்:
கடலூர் செல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மாலதி (வயது 47). தனியார் ஆஸ்பத்திரியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல மாலதி முடிவு செய்தார். அதன்படி அவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து அதன் வழியாக உள்ளே புகுந்தனர். பூட்டியிருந்த பீரோவை திறந்தனர். அதில் இருந்த 13 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இந்த நிலையில் சென்னைக்கு சென்றிருந்த மாலதி இன்று காலை தனது வீட்டுக்கு வந்தார். வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பீரோவின் உள்ளே பார்த்த போது அங்கிருந்த நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா? என சோதனை செய்தனர்.
கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது.
இதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரையோரம் வசித்து வந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள். தமிழகத்திலும் சுனாமியின் கோரப்பசிக்கு பலர் இறந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, எம்.ஜி.ஆர். திட்டு, பில்லுமேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சுனாமி புரட்டி போட்டது.
மீனவர்களின் 7 ஆயிரம் கட்டுமரங்கள், பைபர் மற்றும் விசைப்படகுகள், 4 ஆயிரம் மீன் பிடிபடகுகள், 650 ஹெக்டேர் விவசாய நிலங்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.
தேவனாம்பட்டினத்தில் நடைபயிற்சிக்கு வந்தவர்களை கடல் அலை இழுத்து சென்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர்.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுனாமியின் கோரத்தாண்டவத்தில் 610 பேர் பலியாகினர்.
எங்கும் சோகமயமாக காட்சியளித்தது. சுனாமி பேரலை தாக்கி 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தமிழக கடலோரங்களில் அதன் சோக நினைவுகள் இன்றும் அகலவில்லை.
சுனாமியால் பலியானவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் தேவனாம்பட்டினத்தில் இன்று நடந்தது. தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரி அருகே மீனவர்கள் திரண்டனர். அங்கிருந்து அவர்கள் கடற்கரைக்கு மவுன ஊர்வலம் சென்றனர்.
பூக்கூடைகளையும், பால்குடங்களையும் ஏந்தியபடி சென்றனர். நெஞ்சத்தில் சோகத்தையும், கண்களில் கண்ணீரையும் சுமந்தபடி ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் சுனாமியில் பலியான தங்கள் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலில் பாலை ஊற்றினர். கூடைகளில் கொண்டு வந்த பூக்களை கடலில் தூவினர்.
கடற்கரையில் 5 நிமிடம் மவுனமாக அமர்ந்து இருந்தனர். சுனாமியில் பலியான தங்களது குடும்பத்தினரை நினைத்து கற்பூரத்தை ஏற்றி வழிபட்டனர்.
இதையடுத்து சுனாமியில் இறந்தவர்களுக்கு நினைவாக உருவாக்கப்பட்ட நினைவுத் தூண் உள்ள பகுதிக்கு சென்று மலர் வளையம் வைத்து கண்ணீர் சிந்தினர்.
மீனவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனத்தினர் உள்பட ஏராளமானோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இன்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இறந்தவர்களை நினைத்து பெண்கள் ஒப்பாரி வைத்து கதறித்துடித்தனர் கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. கடற்கரை பகுதிகளில் எங்கும் அழுகை குரல் கேட்ட வண்ணம் இருந்தது.
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் கடலூரில் உள்ள மீன் மார்க்கெட்டுகள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளது.
சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் கடலூர் மாவட்டத்தில் பலர் தங்களது வீடுகளில் பலியானவர்களின் படத்தை வைத்து விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சுனாமியின்போது காரைக்கால் கடற்கரையோரம் வசித்தவர்களும் ராட்சத அலையில் சிக்கி சுமார் 500 பேர் பலியாகினர் . அவர்களின் நினைவாக கடற்கரையில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
புதுவை நிர்வாகம் சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் அஞ்சலி செலுத்தினர் .
அதைத்தொடர்ந்து சுனாமியின் போது இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட நண்டலாறு, பட்டினச்சேரி பகுதியில் அவர்களது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி சுனாமி பேரலை தாக்கியது. இதில் கடலூர் மாவட்டம் முழுவதும் தாய், தந்தை மற்றும் உறவினர்களை 100 மாணவ-மாணவிகள் இழந்தனர்.
அவர்களை கடலூர் சேவை இல்லத்தில் தங்க வைத்து வளர்ந்து வந்தனர். சுனாமி தாக்கி 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது சேவை இல்லத்தில் 7 பேர் மட்டுமே இருந்து வருகின்றனர். சுனாமி பாதிப்பு குறித்து மாணவி ஜெயபிரியா கூறியதாவது:-
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புதுப்பேட்டை எனது ஊர். எனது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் கன்னியம்மாள் மற்றும் 4 சகோதரிகள் இருந்து வந்தோம். சுனாமி பேரலை தாக்கிய போது எனது தந்தை வெளியூர் வேலைக்கு சென்று இருந்தார்.
எனது அம்மா கன்னியம்மாள் கடற்கரையோரம் சென்று இருந்தார். நான் மற்றும் எனது சகோதரிகள் வீட்டில் இருந்தோம். அப்போது திடீரென்று சுனாமி அலை தாக்கியதில் வீட்டுக்குள் தண்ணீர் மிக வேகமாக வந்தது.
அப்போது அங்கு இருந்தவர்கள் எங்களை காப்பாற்றி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு எங்கள் பாட்டி எங்களை அழைத்து சென்றார். ஆனால் எனது அம்மா மட்டும் காணவில்லை. பின்னர் 2 நாள் கழித்து வேறொரு பகுதியில் தாயார் உடல் கரை ஒதுங்கியது. இதன் பிறகு நாங்கள் இந்த சேவை இல்லத்தில் வளர்ந்து வந்தோம்.
தற்போது 4 அக்காக்கள் படித்து முடித்து வெளியே சென்றனர். நான் மட்டும் 12-ம் வகுப்பு படித்து கொண்டு இங்கு இருக்கிறேன். இந்த சுனாமி பேரலை தாக்கிய சம்பவம் இன்றும் அழியாத நினைவுகளாக மனதில் நின்று வேதனை தருகிறது. இந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சிதம்பரம் பகுதியை சேர்ந்த மாணவி கவியரசி கூறியதாவது:-
கடந்த 2004-ம் ஆண்டு எனது தந்தை பன்னீர்செல்வம், தாய் திலகவதி ஆகிய 2 பேரும் சுனாமி பேரலையில் சிக்கி உயிர் இழந்தனர். எனக்கு 1 அக்கா, 2 தங்கை, 1 தம்பி உள்ளனர். நாங்கள் பெற்றோரை இழந்த பிறகு அனைவரும் இந்த சேவை இல்லத்தில் தங்கி படித்து வருகிறோம். சுனாமி தாக்குதல் சம்பவத்தை இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீ முஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள அருணாகர நல்லூர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 35). விவசாயி.
இவருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மதியழகன் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார் கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மதியழகனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்கமால் மதியழகன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூரு, ஆர்.எம்.வி. விரிவாக்கத்தை சேர்ந்தவர் பெரோஷ்அகமதுகான். இவருடைய மனைவி ஆலம் ஆராகாத்து(வயது 54). இவர் அசாம் மாநிலம் தேஜ்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனது உறவினரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆலம் ஆராகாத்து அவரது கணவர், மற்றும் மகன், மகளுடன் பெங்களூருவில் இருந்து காரில் வந்தார்.
நேற்று மாலை கடலூர் முதுநகர் அக்கரை கோரிக்கு சென்று உறவினர்களுடன் கடலில் குளித்தார். அப்போது ஆலம் ஆராகாத்து ராட்சத அலையில் சிக்கி மூழ்கினார். அக்கம் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் ஓடோடி வந்து கடலில் மூழ்கிய ஆலம் ஆராகாத்தை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஆலம் ஆராகாத்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த ஆனத்தூர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி மங்கவரத்தாள். இவர்கள் 2 பேரும் அதே ஊரை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை அழைத்துக் கொண்டு நேற்று இரவு மொபட்டில் புதுப்பேட்டையில் உள்ள செங்கல் சூளைக்கு சென்றனர்.
மணம் தவழ்ந்தபுத்தூர் அருகே சென்று கொண்டு இருந்த போது பண்ருட்டியிலிருந்து அரசூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் திடீரென்று மொபட் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சங்கரும், மங்கவரத்தாளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாந்தி காயம் அடைந்தார். அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தகவலறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) குமார், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ் பெக்டர்கள் சவ்வாது உசேன், செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரசு பஸ் டிரைவரை கைது செய்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கடலூர் வட்ட கிளையின் சார்பில் கடலூர் தாலுகா அலுவலகம் முன்பு வட்ட தலைவர் ராஜன்பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் இளையராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், கோட்ட செயலாளர் ஜெயராமன், கூட்டுறவு சிக்கன கடன் சங்க தலைவர் ஞானமணி, இயக்குனர் பிரதாப், வட்ட துணை தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆன்லைன் மூலம் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாற்றம் பரிந்துரை செய்வதற்கு இணைதள வசதிகள் மற்றும் அதற்கான செலவின தொகையை வழங்க மறுக்கும் வருவாய் நிர்வாக ஆணையரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்துகொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் ஸ்ரீராம் நன்றி கூறினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 47). ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கும், இவரது டிரைவரான ஆச்சாள்புரத்தைச் சேர்ந்த சண்முகபிரகாஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சிதம்பரம் அண்ணாமலை நகர் கூத்தங்கோவில் புறவழிச்சாலையில் பழனிசாமி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சண்முகபிரகாஷ் அந்த பகுதிக்கு நாகை மாவட்டம் மாங்கணம்பட்டு பகுதியை சேர்ந்த ஹர்சத் அலி (25), ஆச்சாள்புரத்தைச் சேர்ந்த மாரியப்பன், மனோஜ் ஆகியோருடன் வந்தார். பழனிச்சாமியை 4 பேரும் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தனர்.
பின்னர் சண்முகபிர காஷ், ஹர்சத்அலி உள்பட 4 பேரும் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் ஹர்சத்அலி மீது ஆனைக்காரன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. தொடர்ந்து அவர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் உத்தரவுப்படி ஹர்சத்அலி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.






