என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயப்பிரியா - கவியரசி
    X
    ஜெயப்பிரியா - கவியரசி

    சுனாமி பேரலை தாக்கிய சம்பவம்: அழியாத நினைவுகளாக வேதனை தருகிறது - பெற்றோரை இழந்த மாணவிகள்

    கடலூரில் சுனாமி பேரலை தாக்கிய சம்பவம் அழியாத நினைவுகளாக மனதில் நின்று வேதனை தருகிறது என்று பெற்றோரை இழந்த மாணவிகள் கூறினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி சுனாமி பேரலை தாக்கியது. இதில் கடலூர் மாவட்டம் முழுவதும் தாய், தந்தை மற்றும் உறவினர்களை 100 மாணவ-மாணவிகள் இழந்தனர்.

    அவர்களை கடலூர் சேவை இல்லத்தில் தங்க வைத்து வளர்ந்து வந்தனர். சுனாமி தாக்கி 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது சேவை இல்லத்தில் 7 பேர் மட்டுமே இருந்து வருகின்றனர். சுனாமி பாதிப்பு குறித்து மாணவி ஜெயபிரியா கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புதுப்பேட்டை எனது ஊர். எனது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் கன்னியம்மாள் மற்றும் 4 சகோதரிகள் இருந்து வந்தோம். சுனாமி பேரலை தாக்கிய போது எனது தந்தை வெளியூர் வேலைக்கு சென்று இருந்தார்.

    எனது அம்மா கன்னியம்மாள் கடற்கரையோரம் சென்று இருந்தார். நான் மற்றும் எனது சகோதரிகள் வீட்டில் இருந்தோம். அப்போது திடீரென்று சுனாமி அலை தாக்கியதில் வீட்டுக்குள் தண்ணீர் மிக வேகமாக வந்தது.

    அப்போது அங்கு இருந்தவர்கள் எங்களை காப்பாற்றி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு எங்கள் பாட்டி எங்களை அழைத்து சென்றார். ஆனால் எனது அம்மா மட்டும் காணவில்லை. பின்னர் 2 நாள் கழித்து வேறொரு பகுதியில் தாயார் உடல் கரை ஒதுங்கியது. இதன் பிறகு நாங்கள் இந்த சேவை இல்லத்தில் வளர்ந்து வந்தோம்.

    தற்போது 4 அக்காக்கள் படித்து முடித்து வெளியே சென்றனர். நான் மட்டும் 12-ம் வகுப்பு படித்து கொண்டு இங்கு இருக்கிறேன். இந்த சுனாமி பேரலை தாக்கிய சம்பவம் இன்றும் அழியாத நினைவுகளாக மனதில் நின்று வேதனை தருகிறது. இந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிதம்பரம் பகுதியை சேர்ந்த மாணவி கவியரசி கூறியதாவது:-

    கடந்த 2004-ம் ஆண்டு எனது தந்தை பன்னீர்செல்வம், தாய் திலகவதி ஆகிய 2 பேரும் சுனாமி பேரலையில் சிக்கி உயிர் இழந்தனர். எனக்கு 1 அக்கா, 2 தங்கை, 1 தம்பி உள்ளனர். நாங்கள் பெற்றோரை இழந்த பிறகு அனைவரும் இந்த சேவை இல்லத்தில் தங்கி படித்து வருகிறோம். சுனாமி தாக்குதல் சம்பவத்தை இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    Next Story
    ×