என் மலர்
கடலூர்
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த சிறுவரப் பூரில் ஓம்சக்திகோவில் உள்ளது. கோவில் பூசாரி வழக்கமான பூஜைகளை முடித்து விட்டு நேற்று இரவு கோவிலின் கதவை பூட்டி சென்றார்.
இதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் சிலர் இரவில் கோவிலுக்குள் புகுந்தனர். அங்கிருந்த செம்பு உண்டியலை தூக்கிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவில் உண்டியல் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் கோவில் முன்பு திரண்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கமல் என்கிற கமல்ராஜ் (வயது 27) என்பவர்தான் கோவில் உண்டியலை திருடியிருக்கலாம் என்று தகவல் பொதுமக்களிடையே பரவியது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (வயது 30), திருநாவுக்கரசு (50) ஆகிய 2 பேர் கமல்ராஜின் வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த கமல்ராஜிடம் கோவிலில் உண்டியல் திருடுபோனது குறித்து கேட்டனர். இதில் கமல்ராஜிக்கும் சவுந்தர் ராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி சவுந்தர்ராஜன் சரமாரியாக கமல் ராஜை தாக்கினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
பின்னர் கமல்ராஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் கமல்ராஜை 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கமல்ராஜ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கம்மாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கமல்ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். கமல்ராஜ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து சவுந்தர்ராஜனையும், திருநாவுக்கரசையும் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ளது அரசக்குழி. இந்த பகுதியில் மாதா கோவில் உள்ளது.
புத்தாண்டையொட்டி நேற்று காலையில் இந்த மாதா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
நேற்று இரவு கோவில் நிர்வாகிகள் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கு வராண்டாவில் வைக்கப்பட்டுள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அந்த உண்டியலில் ரூ.30 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே சாத்துக்கூடல் கிராமத்தில் தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு மாநில செயலாளர் சாத்துக்கூடல் சக்திவேல் தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியன், குமரகுரு, ராமகிருஷ்ணன், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக கூறுகிறார். அவர் நதிகளை இணைக்க ரூ.ஒரு கோடி கொடுப்பேன் என்று முன்பு வாக்குறுதி அளித்திருந்தார். அந்த தொகையை அப்போது அவர் வங்கியில் போட்டு இருந்தால் வட்டியோடு சேர்த்து தற்போது ரூ. 5 கோடியாக உயர்ந்து இருக்கும். எனவே அவர் தற்போது நதிகளை இணைக்க பிரதமரிடம் ரூ.5 கோடி கொடுத்து நதிகளை இணைக்க பிள்ளையார் சுழி போட வேண்டும்.
தமிழக அரசு அறிவித்துள்ள கரும்புக்கான ஆதார விலையை தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்கவில்லை. அதனை பெற்று தர தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து 10 ஆயிரம் விவசாயிகளை ஒன்று திரட்டி சென்னையில் போராட்டம் நடத்த உள்ளோம்.
நெல்லுக்கான ஆதார விலையை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இந்த தொகை யானை பசிக்கு சோளப்பொறி கொடுத்த கதைபோல் உள்ளது. எனவே நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும். மொத்தம் ரூ.1,950 கோடிதான் விவசாயிகளுக்கு கடன் உள்ளது. இந்த கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #ayyakannu #rajinikanth
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த நடு வீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது55). இவர் அ.தி.மு.க. முன்னாள் கிளை செயலாளர்.
கிருஷ்ண மூர்த்திக்கு நடுவீரப்பட்டு அருகே உள்ள வாண்ட் ராசன் குப்பம் பகுதியில் விவசாயம் நிலம் உள்ளது. கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவு தனது விவசாய நிலத்தில் உள்ள கரும்பு பயிருக்கு காவலாக அங்கு சென்றார். பின்னர் அங்குள்ள மோட்டார் கொட்டகையில் படுத்து தூங்கினார்.
இதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவில் மோட்டார் கொட்டகைக்குள் புகுந்தனர். அங்கு தூங்கி கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியை கழுத்தை அறுத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் உள்ளவர்கள் வயலுக்கு சென்றனர். அப்போது அங்குள்ள மோட்டார் கொட்டகையில் கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கிருஷ்ணமூர்த்தி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி.க்கள் அருண்மொழிதேவன் (கடலூர்), சந்திரகாசி (சிதம்பரம்), எம்.எல்.ஏ.க்கள் சத்யா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), பாண்டியன் (சிதம்பரம்), கலைச்செல்வன் (விருத்தாசலம்), முருகுமாறன் (காட்டுமன்னார் கோவில்) ஆகியோருக்கும் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
அமைச்சர் தங்களை மதிக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார்கள். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்கள்.
ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி கடலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்த போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.
அனைவரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அமைச்சர் எம்.சி. சம்பத் பங்கேற்ற எந்த நிகழ்ச்சிகளிலும் கடலூர் மாவட்ட எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.
இந்த நிலையில் விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் திடீரென்று தினகரன் அணிக்கு மாறினார்.
சத்யா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன் ஆகிய 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர் எம்.சி. சம்பத் விழாக்களை புறக்கணித்து வந்தனர்.
நேற்று மாலை சத்யா பன்னீர்செல்வம் திடீரென்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டர் பிரசாந்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் தனது தொகுதியில் உள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்தி தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் ஒரு துரும்பை கூட கிள்ளி போட்டது இல்லை. எந்த பணிகளும் செய்யவில்லை. எனது தொகுதியான பண்ருட்டி தொகுதியில் எதுவும் செய்வதும் கிடையாது.
எங்கள் தொகுதியில் மக்கள் பணி சம்பந்தமாக மாவட்ட அமைச்சர் என்ற முறையில் மனு அளித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. முட்டுக்கட்டை போடுகிறார்.
இதனை மீறி நாங்கள் மக்கள் பணிகள் செய்தால் அதனையும் தடுக்கிறார். இதனால் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அரசுக்கு பெரும் அவப்பெயர் ஏற்படுவதோடு, களங்கம் ஏற்படுகிறது.
பண்ருட்டி பகுதிக்கு வர இருந்த கல்லூரியை அமைச்சர் எம்.சி.சம்பத் தடுத்து வேறு பகுதிக்கு மாற்றி விட்டார். இதனால் எங்கள் தொகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பண்ருட்டியில் பல ஆண்டுகளாக நடைபெறும் பாலம் கட்டும் பணிகள் அமைச்சர் தலையீட்டால் தாமதம் ஆகி வருகிறது. மேலும் இந்த பணிகளை விரைவில் முடிக்க அமைச் சர் எம்.சி.சம்பத் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
கோரிக்கைகள் குறித்து பலமுறை மனு அளித்தும், தபால் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆட்சிக்கு அமைச்சரால் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. உடனே அமைச்சர் எம்.சி.சம்பத்தை அழைத்து எச்சரிக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய அவருக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிராக கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சத்யா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது மோதல் உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது. அமைச்சர் எம்.சி. சம்பத் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இவர்கள் தினகரன் அணிக்கு மாறப் போவதாக தகவல் பரவியுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பாக முருகுமாறன் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, “2 நாட்கள் பொறுத்திருங்கள். திங்கட்கிழமை பதில் சொல்கிறேன்” என்றார்.
பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் கேட்ட போது, “அருண்மொழி தேவன் எம்.பி. டெல்லியில் இருக்கிறார். அவர் கடலூர் வந்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம்” என்றார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மேலப்பாளையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி (வயது35). விவசாயி. இவரது வீட்டுவளாகத்தில் டிராக்டர் மற்றும் கார் நிறுத்தி இருந்தார்.
நேற்றுஇரவு ரஜினி மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணி அளவில் 3 மர்ம வாலிர்கள் ரஜினி வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு நின்ற டிராக்டரில் உள்ள பேட்டரிகளை கழற்றி கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டுமுன்பு சத்தம் கேட்பதை அறிந்த ரஜினி திடீரென்று எழுந்து வந்தார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் அருகில் உள்ளவர்களிடம் வீட்டில் திருடர்கள் நிற்பதை கூறினார்.
உடனே அவர்கள் அனைவரும் தடி, கம்புகளுடன் திரண்டு வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிஓடினர். அவர்களை ரஜினி மற்றும் சிலர் துரத்தினர். இதில் 2 வாலிபர்கள் மின்னல் வேகத்தில் ஓடி விவசாய நிலத்தில் குதித்து தப்பிஓடிவிட்டனர்.
ஒரு வாலிபர் மட்டும் அவர்களிடம் சிக்கிக்கொண்டார். உடனே அவர்கள் பிடிபட்ட வாலிபரை சரமாரியாக தாக்கினர். அந்த வாலிபர் வலிதாங்கமுடியாமல் கூச்சல் போட்டுஅலறினார். ஆனாலும் பொதுமக்கள் வாலிபருக்கு தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர் இதுகுறித்து அவர்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால்போலீசார் வெகு நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் பொதுமக்கள் விடிய- விடிய அந்த வாலிபருக்கு காவல் இருந்தனர்.
இன்று காலை 5 மணி அளவில் போலீசார் அங்கு வந்தனர். அவர்களிடம் பிடிபட்ட திருடனை பொதுமக்கள் ஒப்படைத்தனர். பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவனது பெயர் முத்துகுமார் (24) என்பதும், கம்மாபுரத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. தப்பி ஓடிய 2 வாலிபர்களும் கம்மாபுரத்தை சேர்ந்த வேல் முருகன், சந்துரு என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
விவசாயி வீட்டில் திருட முயன்ற வாலிபரை பொது மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
கடலூர் முதுநகர் வசந்தராம்பாளையம் பகுதியில் நகராட்சி சார்பில் பொதுக்கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. கழிப்பறை கட்டுவதற்கு நகராட்சியிலிருந்து சரியாக பணம் வழங்கப்படவில்லை என்பதால் இந்த கழிப்பறை கட்டி முடித்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.
இந்தநிலையில் இன்று காலை நகராட்சி அதிகாரி உத்தரவின்பேரில் நகராட்சி மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் துப்புரவு பணியாளர் ஜெய்சங்கர் உள்பட நகராட்சி பணியாளர்கள் வசந்தராம் பாளையத்தில் உள்ள கழிப்பறை கட்டிட பூட்டை உடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.பிரமுகர் ஒருவர் இன்னும் கழிப்பறை கட்டியதற்கான பணம் நகராட்சி சார்பில் வழங்கப்படவில்லை. அதற்குள் எதற்காக கழிப்பறை பூட்டை உடைத்து சுத்தம் செய்கிறீர்கள் என்று கேட்டார்.
இதில் அவர்களுக் கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நகராட்சி மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், துப்புரவு பணியாளர் ஜெய்சங்கர் ஆகிய 2 பேரையும் அ.தி.மு.க.பிரமுகர் தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் நகராட்சியில் உள்ள அனைத்து துப்புரவு பணியாளர்களும் கடலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.
பின்னர் நகராட்சி ஊழியர்களை தாக்கிய அ.தி.மு.க.பிரமுகரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் நகராட்சி அதிகாரி மற்றும் ஊழியரை தாக்கிய அ.தி.மு.க.பிரமுகரை கைது செய்யும் வரை எந்தவித பணியும் செய்யமாட்டோம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் கூறினர்.
இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் சிப்காட்டில் டான்பாக் நிர்வாக பணியாளர்கள் வாழ்வுரிமை சங்க கொடியேற்று விழா மற்றும் வாயிற்கூட்டம் நடந்தது. தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து பேசினார்.
விழாவில் டான்பாக் சங்க கவுரவ தலைவர் செந்தில், தலைவர் கார்த்திக், செயலாளர் செந்தில்ராஜ், பொருளாளர் பிரபாகரன், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பஞ்சமூர்த்தி, முடிவண்ணன், கடலூர் தொகுதி செயலாளர் ஆனந்த், நிர்வாகக்குழு உறுப்பினர் கண்ணன், நகர செயலாளர் கமலநாதன், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் வேல்முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘ஒகி’ புயல் பாதிப்பை ஒரு மாதத்துக்கு பிறகு மத்தியக்குழு வந்து பார்வையிடுவது கண்டிக்கத்தக்கது. ‘ஒகி’ புயலில் இதுவரை 400-க்கும் அதிகமானவர்கள் காணாமல் போனதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதைத்தான் மீனவர்களும் கூறி வந்தனர். எனவே காணாமல் போன மீனவர்களை மீட்டுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காணாமல் போன மீனவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு நிவாரணம் வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்து விட்டு, காணாமல் போன அனைத்து மீனவர்களுக்கும், அரசு அறிவித்த 20 லட்சம் ரூபாய் நிவாரணத்தையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் உடனே வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரிக்கு மத்திய அரசு ஒதுக்கி உள்ள நிதி உதவி போதாது, எனவே உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும். அதேப்போல் புயலால் சேதமடைந்த படகுகளை கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி கேட்கிறீர்கள், தமிழ்நாட்டை ஆள ரஜினி வந்து இருக்கிறார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அவரை விட தலைமை பண்புள்ளவர்கள், நிர்வாக திறமை உள்ளவர்களெல்லாம் நிறைய பேர் உள்ளனர்.
தமிழ்நாட்டை சினிமாத்துறையில் உள்ளவர்கள் ஆண்டது போதும். தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு ரஜினி ஏதாவது குரல் கொடுத்து இருக்கிறாரா? தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு அவர் குரல் கொடுத்து விட்டு அரசியலுக்கு வரட்டும்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
கடலூர்:
கடலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வில்வநகர் பகுதியை சேர்ந்தவர் ஷாலினி (வயது 23). இவருக்கும், புதுவை வில்லியனூர் கோட்டை மேடு பகுதியை சேர்ந்த இளஞ்செழியன் என்ற விஷ்ணு (28) என்பவருக்கும் கடந்த 6.9.2017 அன்று திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்ததும் கணவன்-மனைவி இருவரும் செம்மண்டலம் வரத ராஜர் நகரில் குடியிருந்தனர். இந்த நிலையில் இளஞ்செழியன் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ஷாலினி கடலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் கணவருடன் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தேன். இந்த நிலையில் அவர் திடீரென்று நான் அழகாக இல்லை என்று கூறினார். மேலும் என்னிடம் எனது பெற்றோரிடம் அதிகமாக நகை வாங்கி வரும்படி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கு உடந்தையாக இளஞ்செழியனின் தந்தை முனுசாமி (57), தாய் பூங்கொடி (53) மற்றும் உறவினர்கள் பார்த்தசாரதி, மணிவண்ணன், வேல்முருகன், ரமணி ஆகியோர் இருந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளஞ்செழியன் அவரது தந்தை முனுசாமி, தாய் பூங்கொடி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கொம்பாடி குப்பம் அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 42). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில்நேற்று மாலை குமார் வழக்கம் போல் தனது வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
கொம்பாடிகுப்பம் பெட்ரோல் பங்க் அருகே குமார் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கடலூரிலிருந்து - விருத்தாசலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் எதிர்பாராத விதமாக குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசபட்ட குமார் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்யபட்டது. இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிபாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் இறந்த குமாருக்கு கவுரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






