என் மலர்tooltip icon

    கடலூர்

    எம்.சி.சம்பத் தூண்டுதலின் பேரில் தொடரப்பட்டுள்ள வழக்குகளால் நானும், எனது குடும்பத்தாரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக சத்யா எம்.எல்.ஏ. முதல்வருக்கு மனு கொடுத்துள்ளார்.

    பண்ருட்டி:

    சென்னை ஐகோர்ட்டில், இந்தியன் மக்கள் கட்சித் தலைவர் வாராகி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஓடை புறம்போக்கு நிலத்தை கஸ்தூரி என்பவர் கடந்த 2000-ம் ஆண்டு ஆக்கிரமித்து கொண்டார்.

    இந்த நிலத்தை பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்த பன்னீர்செல்வமும், அவரது மனைவி சத்யாவும் (தற்போது எம்.எல்.ஏ.,) சட்ட விரோதமாக தங்களது பெயருக்கு மாற்றிக் கொண்டனர்.

    இது குறித்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தேன். ஆனால், இதுவரை புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, என் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய கடலூர் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். இது குறித்து போலீசாரின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு உத்தர விட்டார். விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தார்.

    இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பண்ருட்டி தொகுதிக்கு தேவையான திட்டங்களை நான் செயல்படுத்த முற்படுகிறேன். அவற்றை அமைச்சர் எம்.சி.சம்பத் முடக்குகிறார். கட்சி விரோத செயல்களில் ஈடுபடுகிறார். இது தொடர்பாக நான் உங்களிடமும் (முதல்- அமைச்சர்) புகார் செய்தேன்.

    இதை மனதில் வைத்து மாவட்ட அரசு வக்கீல் மூலமாக சென்னையில் உள்ள மற்றொரு வக்கீலை கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் எனது குடும்ப உறுப்பினர்கள் மீது பல்வேறு பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

    அமைச்சரின் தூண்டுதலின் பேரில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகளால் நானும், எனது குடும்பத்தாரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். #tamilnews

    கடலூரில் வழக்கு ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய ரூ.1000 லஞ்சம் வாங்கி கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உத்திராபதி சிறையில் அடைக்கப்பட்டார்.

    நெல்லிக்குப்பம்:

    கடலூர் வில்வநகரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் நோக்கி சென்றார். முள்ளிகிராம்பட்டு என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் ஆசைத்தம்பி படுகாயமடைந்தார். ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றார். இந்த விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உத்திராபதி வழக்குப்பதிவு செய்தார்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் வாதாட கடலூரை சேர்ந்த வக்கீல் நாகசுந்தரத்தின் உதவியை ஆசைத்தம்பி நாடினார். இதையடுத்து வக்கீல் நாகசுந்தரம், நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு சென்று விபத்துக்குள்ளான ஆசைத்தம்பியின் மோட்டார் சைக்கிள் ஆவணங்கள் மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு கூறினார்.

    அதற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உத்திராபதி, ஆவணங்களை விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டுமானால் ரூ.2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார். அதற்கு வக்கீல் நாகசுந்தரம், அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்றும், ரூ.1000 மட்டும் தருகிறேன் என்று கூறினார். அதற்கு உத்திரபாதி சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்ற வக்கீல் நாகசுந்தரம், இது தொடர்பாக அவர், கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

    பின்னர் நேற்று மாலை 5 மணி அளவில் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உத்திராபதியிடம் வக்கீல் நாகசுந்தரம் 1,000 ரூபாய் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், திருவேங்கடம், சண்முகம் ஆகியோர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உத்திராபதியை கையும், களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

    இதன் பின்னர் கைது செய்யப்பட்ட உத்திராபதியை கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை வருகிற 25-ந் தேதி வரை கடலூர் சப்-ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். #tamilnews

    கடலூரில் மாணவி தனது தலை முடியில் கயிறை கட்டி 50 மீட்டர் தூரம் ஆம்னி வேனை இழுத்து சென்று சாதனை படைத்தார். மாணவியை ஆசிரிய மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் யூகிதா (வயது 11). கடலூர் மஞ்சகுப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த பள்ளியில் ஆண்டுவிழா நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட மாணவி யூகிதா தனது தலை முடியில் கயிறை கட்டி 50 மீட்டர் தூரம் ஆம்னி வேனை இழுத்து சென்று சாதனை படைத்தார். மாணவ-மாணவிகள் பலத்த கரகோ‌ஷம் எழுப்பி யூகிதாவை உற்சாகப்படுத்தினர். யூகிதாவை பள்ளி ஆசிரிய மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

    சாதனை படைத்தது குறித்து யூகிதா கூறியதாவது, நான் பள்ளியில் கராத்தே பயின்று வருகிறேன். விளையாட்டில் சாதனை செய்ய வேண்டும் என சின்ன வயதில் இருந்தே எனக்கு ஆசை ஏற்பட்டது. பல்வேறு பயிற்சிகளை எடுத்து வந்தேன். தற்போது தலை முடியில் கயிறு கட்டி ஆம்னி வேனை இழுத்துள்ளேன். இதேப்போல் மேலும் பல சாதனைகளை செய்ய வேண்டும். கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள் ஆகும். #tamilnews 

    கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் உளுந்து, மணிலா பயிரும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி எடுத்தது. இரவு நேரங்களில் கடும்பனிப்பொழிவும் ஏற்பட்டது. இதனால் வய தானவர்கள், குழந்தைகள் கடும் அவதியடைந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு 9 மணியளவில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய சாரலாக பெய்து கொண்டிருந்தது.

    சிதம்பரம், காட்டுமன் னார்கோவில், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி முதல் திடீரென்று பலத்த மழை கொட்ட தொடங்கியது. 5 மணி நேரம் தொடர்ந்து மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.

    சிதம்பரத்தில் பலத்த மழையால் சிதம்பரம் நகர், நேரு நகர், தாயுமானவர் நகர், சிவசக்தி நகர், பரதேசி நகர், வேலவன் நகர், எம்.ஆர்.நகர் போன்ற பகுதிகளில் வீடுகளின் முன்பு மழைநீர் தேங்கியுள்ளது.

    சிதம்பரத்தில் வேணு கோபாலசாமி சாலை, மன்னார்குடி தெரு போன்ற பகுதிகளிலும் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் உளுந்து, மணிலா பயிரும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

    இதேபோல் ஸ்ரீமுஷ்ணம் காவனூர், புதுக்குப்பம், நகரப்பாடி, சேத்தாம்பட்டு, பூண்டி போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த பகுதியில் அறுவடைக்கு தயாராகி இருந்த நெய்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

    இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். #tamilnews

    நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க வராததை கண்டித்து கடலோர காவல் நிலைய கதவை இழுத்து மூடி மீனவர்கள் போராட்டம் நடத்தியதால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர் கணேசன், கார்த்தி, பாபு, மகேஷ், செல்வம் ஆகிய 5 பேர் நேற்று அதிகாலையில் கடலுக்கு மீன்பிடிக்க ஒரு படகில் சென்றனர். அவர்கள் மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பியபோது திடீரென படகின் என்ஜின் பழுதடைந்தது. இதனால் அவர்கள் கரை திரும்ப முடியாமல் நடுகடலில் தத்தளித்தனர்.

    இதையடுத்து அவர்கள் தேவனாம்பட்டினம் கடலோர காவல் நிலையத்தை 1093 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களை காப்பாற்றுமாறு கூறினார்கள்.

    ஆனால் வெகுநேர மாகியும் மீட்பு படகு வரவில்லை. இதனால் மீண்டும் கடலோர காவல்நிலையத்தை மீனவர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால் மீட்பு படகை அனுப்ப முடியாது என்று போலீசார் தெரிவித்தாக கூறப்படுகிறது. அதன்பிறகு மற்ற மீனவர்களின் உதவியுடன் பழுதடைந்த படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    கடலோர காவல் படையினர் உதவிக்கு வராததால் ஆத்திர மடைந்த மீனவர்கள், மாலையில் தேவனாம் பட்டினம் கடலோர போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர். பின்னர்போலீஸ் நிலையத்தின் கதவை இழுத்து மூடி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கடலோர காவல் நிலையத்துக்கு விரைந்து வந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மீனவர்கள் கூறுகையில், எங்களுக்கு ஆபத்தில் உதவாத போலீஸ் நிலையம் எங்கள் ஊரில் இருக்க வேண்டாம் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு கடலூர் மாவட்டத்தில் 19 மீனவர்கள் காணமால் தவித்து வருகிறோம். இந்த நிலையில் அவசர கால தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டால் பதில் அளிக்காத நிலை தொடர்கிறது என்று மீனவர்கள் கூறினர். அவர்களை சமாதானப்படுத்திய இன்ஸ்பெக்டர் சரவணன், இப்பிரச்சினை தொடர்பாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் தலைமையில் இன்று (10-ந் தேதி) பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். 

    அதனை மீனவர்கள் ஏற்றுக் கொண்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews

    கடலூர் அருகே இன்று காலை இரண்டு தனியார் பஸ்கள் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
    கடலூர்:

    கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டது. பஸ்சில் 45 பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்தநேரத்தில் பின்னால் மற்றொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த பஸ் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற பஸ் மீது மோதியது.

    இதில் 2 பஸ்களும் பலத்த சேதம் அடைந்தன. பஸ்களில் இருந்த பயணிகள் காப்பாற்றுங்கள் என்று அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரன்டனர்.

    இந்த விபத்தில் 2 பஸ்களிலும் வந்த சாத்தமங்கலத்தை சேர்ந்த மங்கையர்கரசி (வயது 40), கடலூர் வன்னியர் பாளையத்தை சேர்ந்த பிருந்தா (37), விழுப்புரத்தை சேர்ந்த செல்வம் (47) உள்ளிட்ட 20 பேர் பலத்த காயம் அடைந் தனர். அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பஸ்கள் மோதிக்கொண்டதில் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
    சோழத்தரம் அருகே மகனுக்கு திருமணம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள கோதண்ட வளாகம் பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது52). விவசாயி.

    இவரின் 2-வது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். இது தொடர்பாக அமிர்தலிங்கத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இதில் மனம் உடைந்த அமிர்தலிங்கம் வீட்டில் தூக்குப்போட்டு கொண் டார். உயிருக்கு போராடிய அவரை வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு அமிர்தலிங்கத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அமிர்த லிங்கம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சோழத்தரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சிவகொழுந்து மகன் பலியானார். மகனை இழந்து வாடும் சிவகொழுந்துக்கு விஜயகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    பண்ருட்டி:

    கடலூர் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சிவக்கொழுந்து முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் பண்ருட்டி ஜவகர் தெருவில் வசித்து வருகிறார்.

    இவரது மகன்ஜெசி என்கிற சசிந்தர் (வயது 24). இவர் முந்திரி வியாபாரம் செய்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர் மணிகண்டனுடன் மோட்டார் சைக்கிளில் பண்ருட்டியிலிருந்து ஆத்திரிகுப்பத்தில் உள்ள முந்திரி தொழிற்சாலைக்கு சென்றார்.

    காடாம்புலியூர் அருகே உள்ளகாட்டாண்டிக்குப்பம் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது இவரது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இதில் சசிந்தர், மணிகண்டன் எதிரே மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த மேற்கு ராமாபுரத்தை சேர்ந்த லட்சுமணன் (32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வரும் வழியில் சசிந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டன், லட்சுமணன் மேல் சிகிச்சைகாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவகொழுந்து மற்றும் தே.மு.தி.க. தொண்டர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். மகனின் உடலை பார்த்து சிவ கொழுந்து கதறி அழுதார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தொலைபேசியில் சிவ கொழுந்துக்கு ஆறுதல் கூறினார்கள்.

    இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் மகனை இழந்து தவிக்கும் சிவ கொழுந்து குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

    பிரேத பரிசோதனை முடிந்தும் சசிந்தர் உடல் பண்ருட்டி ஜவஹர் தெருவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. பிரேமலதா விஜயகாந்த், மற்றும் தொழில் அதிபர்ககள் ஜெயப்பிரியா ஜெயசங்கர், எஸ்.வி.ஜூவல்லர்ஸ் அதிபர் வைரக்கண்ணு, அருள், மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள், குடும்பத்தினர், வர்த்தக சங்க பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். #tamilnews #vijayakanth

    தற்காலிக டிரைவர் ஓட்டிய அரசு பஸ் மோதி சென்னையை சேர்ந்தவர் இறந்தார். தந்தை, மகள் படுகாயம் அடைந்தனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து ஒரு அரசு பஸ் பயணிகளை ஏற்றுவதற்காக பஸ் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சை தற்காலிக டிரைவர் ஜோதி என்பவர் ஓட்டினார். அப்போது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றொரு அரசு பஸ் ஆகியவற்றின் மீது மோதியது.

    மோட்டார் சைக்கிளில் சென்ற சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல் (வயது 35), அவரது மகள் சாரன் சுவீட்டி (7) மற்றும் உறவினர் டேவிட் ஷியோன்குமார் (37) ஆகியோர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் 3 பேரையும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டேவிட் ஷியோன்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். தந்தை, மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பலியான டேவிட் ஷியோன்குமார், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத் தில் வேலை பார்த்துவந்தார். இந்த விபத்தை பார்த்து ஆத்திரமடைந்த போக்குவரத்து தொழிலாளர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தப்பி ஓடமுயன்ற தற்காலிக டிரைவர் ஜோதியை பிடித்து அவர்கள் தர்மஅடி கொடுத்தனர்.

    விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து அவர்களை சமாதானப்படுத்தினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ஒரே நாள் இரவில் சேத்தியாதோப்பு போலீஸ் நிலையம் எதிரே உள்ள கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேத்தியாதோப்பு:

    சேத்தியாதோப்பு அருகே உள்ள அகரம்ஆலம் பாடியை சேர்ந்தவர் பாலு (வயது 35). இவர் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையம் எதிரே பஸ் நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    தினமும் வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு பாலு வீட்டுக்கு சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அந்த கடைக்கு வந்தனர். அவர்கள் கடையின் மேற்கூரையை பிரித்து அதன் வழியாக உள்ளே புகுந்தனர்.

    கடை கல்லாப்பெட்டி யில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இதேபோல் பாலுவின் கடை அருகே உள்ள மற்றொரு கடையிலும் நேற்று இரவு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

    சேத்தியாதோப்பை சேர்ந்தவர் சீனிவாசன் (47). இவர் பஸ் நிலைய பகுதியில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் கடையில் வைத் திருந்த 2 செல்போன்கள் மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகிய வற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இந்த சம்பவங்கள் குறித்து பாலு மற்றும் சீனிவாசன் ஆகியோர் சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடந்த கடைகளை பார்வையிட்டனர்.

    கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    ஒரே நாள் இரவில் சேத்தியாதோப்பு போலீஸ் நிலையம் எதிரே உள்ள கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் 44.30 அடியாக குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இது கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    இதுதவிர இந்த ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    மழைகாலத்தில் வீராணம் ஏரியின் நீர்மட் டம் 44.50 அடியாக இருந்தது.

    பின்னர் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி நடைபெற்று வந்ததாலும் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.

    இதையடுத்து வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளவான 47 அடியை எட்டியது.

    பின்னர் கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வீராணம் ஏரிக்கு நீர்வரத்து இல்லாததாலும், சென்னை குடிநீருக்கும், மற்றும் பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடுவதாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது.

    நேற்று முன்தினம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45 அடியாக இருந்தது. நேற்று 44.30 அடியாக குறைந்தது.

    தொடர்ந்து வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து 41 அடிக்கு வந்து விட்டால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது பாதிக்கப்படலாம்.

    இதே நிலை நீடித்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

    தற்போது சென்னைக்கு வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    மேலும், பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஏரிக்கு நீர்வரத்து இல்லை.  #tamilnews

    கடலூர் மாவட்டம் நொச்சிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க. மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கைது செய்யப்பட்டார்.
    நெல்லிக்குப்பம்:

    விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை வழங்கக் கோரி கடலூர் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை முன்பு தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் தே.மு.தி.க. போராடி வருகிறது. தற்போது அரசியலுக்கு யாரெல்லாமோ வருகிறார்கள், அவர்கள் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறுகிறார்கள்.

    தே.மு.தி.க. மட்டுமே மக்கள் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்காக போராடி வருகிறது. கட்சி ஆரம்பிக்கப் போகிறவர்களால் போராட முடியுமா? நாங்கள் போராடி வருவதால்தான் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறோம். எங்கள் கட்சிக்கு இணையாக எந்த கட்சியும் இல்லை.

    தூங்கி கொண்டிருந்தவர்கள் இப்போது கட்சி ஆரம்பிக்க உள்ளனர். யார் வேண்டுமானாலும் வாருங்கள் எங்களுக்கு பிரச்சினை இல்லை. விஜயகாந்த் மக்களுக்காக போராடக்கூடியவர். அதனால்தான் அவர் மக்கள் மனதில் நிற்கிறார்.

    எதற்கு கட்சி ஆரம்பிக்க வேண்டும்? நீங்கள் நிம்மதியாக தூங்க வேண்டியதுதானே? டுவிட்டரில் ஆட்சி நடத்த முடியாது. மக்கள் பிரச்சினைகளை அறிந்து போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து பிரேமலதா தலைமையில் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு தே.மு.தி.க.வினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து பிரேமலதா கைது செய்யப்பட்டார். #tamilnews

    ×