என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த புவனகிரி தாமரைக்குளம் கீழக்கரையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 62). இவரது மூத்த மகன் பாலமுருகன்(48). இவரது மனைவி தேன்மொழி(42). பன்னீர்செல்வம் தனது மூத்த மகன் பாலமுருகன் வீட்டில் தங்கியிருந்தார்.
புவனகிரி கடைவீதியில் பன்னீர்செல்வமும், பாலமுருகனும் சலூன் கடை வைத்து நடத்தி வந்தனர். இதில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தினமும் தந்தை, மகனுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று இரவு பன்னீர் செல்வம் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அங்கிருந்த தனது மகன் பாலமுருகனிடம் தகராறு செய்தார். ஏன் குடித்து விட்டு தகராறு செய்கிறீர்கள் என்று அவரிடம் பாலமுருகன் கேட்டார்.
ஆனாலும் தொடர்ந்து அவர் மகனுடன் தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக பேசினார். அப்போது பன்னீர்செல்வத்தின் மருமகள் தேன்மொழி அங்கு இருந்தார். அவர் மாமனாரிடம் ஏன்? தந்தை, மகனும் சண்டை போடுகிறீர்கள்? என்று தட்டிக்கேட்டார். உடனே மருமகளையும் பன்னீர் செல்வம் ஆபாசமாக பேசினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தேன்மொழி அங்கிருந்த கத்தியை எடுத்து மாமனார் பன்னீர்செல்வம் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் பன்னீர்செல்வம் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
இந்தகொலை தொடர் பாக தேன்மொழி மற்றும் அவரது கணவர் பால முருகன் ஆகியோரை பிடித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மாமனாரை மருமகள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் புவனகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த சோமாட்சிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(வயது 24). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பண்ருட்டி அருகே பக்கிரிப்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வந்தபோது அந்தவழியாக சென்ற தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெயபிரகாஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தி பஸ் டிரைவர் வடிவேலுவை கைது செய்தார். #tamilnews
பண்ருட்டி:
பண்ருட்டி நகராட்சி துப்பரவு பணியாளர்கள் பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் இந்திரா காந்தி சாலையில் ஜவுளிக்கடை அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள புதர் பகுதியில் இருந்து குழந்தை அழும் குரல் கேட்டது. உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அங்கு பிறந்த ஒரு வாரமான அழகான பெண் குழந்தை அனாதையாக கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தி அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியது. இதைத்தொடர்ந்து கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் அங்கு வந்தனர். அனாதையாக கிடந்த பெண் குழந்தையை ஆர்வமுடன் பார்த்தனர்.
அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் என்பவர் அந்த அழகிய பெண்குழந்தையை மீட்டு தனது வீட்டுக்கு கொண்டு சென்றார்.
பச்சிளம்பெண் குழந்தையை புதரில் வீசி சென்றது யார்? என்று பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
கடலூர்:
கடலூர் முதுநகர் ஏணிக் காரன்தோட்டம் பகுதியில் மாரியம்மன்கோவில் உள்ளது. நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சாலையின் ஓரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அருகில் உள்ள மற்றொரு பகுதியை சேர்ந்த சிலர் அந்த வழியாக சென்றனர். திடீர் என்று இருபிரிவினர்களுக்கிடையே வாய்த்த கராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அவர்களில் ஒரு பிரிவினர் ஆத்திரம் அடைந்து ஏணிக்காரன் தோட்டம் பகுதிக்கு சென்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள், ஆட்டோ, மினி லாரி உள்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
மேலும் அவர்கள் அங்குள்ள வீடுகள் மீது கற்களை சரமாரியாக வீசினர். இதில் பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமானது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். வாகனங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்ததால் ஆத்திரம் அடைந்த ஏணிக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் மாரியம்மன்கோவில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் வீடுகள் மற்றும் வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியவர்களை கைது செய்யவேண்டும். அப்போதுதான் கலைந்து செல்வோம் என்றனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தங்கள் தரப்பினரை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி கடலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் முத்து கிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் கடலூர்- சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்பு அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இது தரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #tamilnews
கடலூர்:
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரேம்ஜோசப் (வயது 25), முகமதுசாயித் (27).
இவர்கள் இருவரும் புதுவை அருகே கோட்டக்குப்பத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்து விட்டு ஓடிவிட்டனர். இதுதொடர்பாக கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். நகை பறித்த பிரேம் ஜோசப், முகமதுசாயித் ஆகியோரை விரட்டி பிடித்து கைது செய்து செய்தனர். இதில் அவர்கள் 2 பேர் கையிலும் காயம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களின் கையில் உள்ள காயங்கள் குணமாகாததால் அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று அதிகாலை ஆஸ்பத்திரியிலிருந்து பிரேம்ஜோசப் தப்பி ஓடிவிட்டான். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் ஆஸ்பத்திரி முழுவதும் தேடினர். எங்கும் அவனை காணவில்லை.
இதைத்தொடர்ந்து புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய பிரேம்ஜோசப்பை தேடி வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓடிய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள எல்.என்.புரம் பாரதி நகரை சேர்ந்தவர் ஏழுமலை (50) கூலி தொழிலாளி. இவர் இரவு வீட்டின் கதவை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டு இருந்தார்.
நள்ளிரவு 1 மணியளவில் இவரது வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனை தொடர்ந்து ஏழுமலை குடும்பத்தினர் அலறி அடித்துக கொண்டு வெளியே ஓடி வந்தனர். அந்த குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பலானது.
பின்னர் அந்த தீ அருகில் இருந்த இளையபெருமாள் என்பவரது வீட்டுக்கும் பரவியது. இதில் அந்த வீடும் எரிந்து சேதம் அடைந்தது. அதிஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினார்கள்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அனைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பண்ருட்டி தாசில்தார் விஜய் ஆனந்து தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும் பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். #tamilnews
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கோண்டூர் செந்தமிழ்சேய் நகரை சேர்ந்தவர் சுகுமார் (வயது 45). மருந்து விற்பனை செய்யும் பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி, வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சுகுமாரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து கொள்ளையடித்த பொருட்களுடன் தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இந்த நிலையில் சென்னைக்கு சென்றிருந்த சுகுமார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து சுகுமார் நெல்லிகுப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி 10- வது வட்டம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
கடந்த 9-ந் தேதி இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து சதீஷ் குமாரின் தந்தை ஏழுமலை நெய்வேலி டவுன் ஷிப் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர்.
விசாரணையில் சதீஷ்குமாருக்கும், அதே பள்ளியில் வேலைப் பார்க்கும் பண்ருட்டியை அடுத்த கீழக்குப்பத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கும் இடையே கள்ளகாதல் இருந்து வந்தது தெரிந்தது. போலீசார் ஆசிரியையின் கணவர் ஞானப்பிரகாசிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது ஞானப் பிரகாசம் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை போலீசாரிடம் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று நடத்திய விசாரணையில் ஞானப்பிரகாசம் தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை விட்டு விடும்படி பலமுறை சதீஷ்குமாரிடம் கூறினேன். ஆனால், அவர் கேட்கவில்லை. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.
அதன்படி தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து சதீஷ்குமாரை அடித்துக்கொலை செய்து உடலை பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு ஏரிப்பாளையத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் புதைத்து வைத்திருப்பதாக கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஞானபிரகாசம் கொடுத்த தகவலின் பேரில் அவரது நண்பர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் போலீசாருக்கு நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா, சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் ஆகியோர் சதீஷ்குமாரின் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இது குறித்து பண்ருட்டி தாசில்தார் விஜய் ஆனந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் பிணம் புதைக்கப்பட்ட இடத்துக்கு விரைந்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் செம்மலர்(வயது 16). இவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் செம்மலரின் தாய் சமீபத்தில் இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து செம்மலர் சோழத்தரம் அருகே உள்ள மாமங்கலத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்தார். அவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த செம்மலர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காட்டுமன்னார்கோவில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக் காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு செம்மலர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சோழத்தரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மரிய அந்தோணிஜோசப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 27). மர வேலை செய்யும் ஆசாரி.
இவர் பண்ருட்டியில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். பண்ருட்டியில் கெடிலம் ஆற்றுபாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வடலூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளும், அரசு பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி கொண்டன.
இதில் வெங்கடேசன் மோட்டார் சைக்கிளுடன் பஸ்சுக்கு அடியில் சிக்கினார். அவரது உடல் மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த வெங்கடேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews






