என் மலர்tooltip icon

    கடலூர்

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து 29-ந்தேதி முதல் தி.மு.க. சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
    கடலூர்:

    தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-

    நாம் தாய் மொழிக்கு வீரவணக்கம் செலுத்துகிற வேளையில், தமிழ்த்தாய்க்கு ஒரு அவமரியாதை நடந்து இருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால் உரிய நடவடிக்கையில் தி.மு.க. இறங்கும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது தியானம் செய்ததாக கூறுவது வருந்தத்தக்கது.

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க முடியாதவருக்கு நாட்டுப்பண் பாடும்போது தியானம் வரவில்லையா? இப்போது எதற்கெல்லாமோ தியானம் செய்கிறார்கள். இந்த தியானம் தான் ஆன்மிக அரசியலா? புரியவில்லை.

    திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள். தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படும்போது அதை தடுத்து நிறுத்திய வரலாறு தி.மு.க.வுக்கு உண்டு. இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். அன்று ஆரம்பித்த போராட்டம் இன்னும் நீறுபூத்த நெருப்பாக இருந்துகொண்டு தான் இருக்கிறது.

    மத்தியில் ஆட்சி நடத்துகிற பாரதீய ஜனதா அரசு, தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கிற சதிவலையில் ஈடுபட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தை குரு உற்சவம் என மாற்றி உள்ளது. சமஸ்கிருத வாரம், புதிய கல்வி கொள்கை, இந்தி பேசாத மாநிலங்களில் 10-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம், ஏன் தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலை மைல்கல்லில் கூட இந்தியை கொண்டுவந்துள்ளது. ஆகவே 1965-ம் ஆண்டில் தமிழ் மொழிக்காக நடந்த போராட்ட களம் மீண்டும் உருவாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூறியபோது, அதை கருணாநிதி உயர்த்தவில்லை. ஆனால் இந்த அரசு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 27-ந்தேதி (நாளை) தி.மு.க. போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்துக்கு தோழமை கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. ஆனால் பாரதீய ஜனதா கட்சியும் போராட்டம் நடத்துகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் இவர்கள், மாநில ஆட்சியை கேள்வி கேட்டு போராட்டம் நடத்துவது வேடிக்கை. பஸ் கட்டண உயர்வு குறித்து நான் எழுதிய கடிதத்துக்கு முதல்-அமைச்சர் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை.

    27-ந்தேதி நடக்கும் போராட்டத்துக்கு பிறகும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வருகிற 29-ந்தேதி முதல் அனுமதிக்காத இடங்களிலும் தி.மு.க.வினர் மறியல் செய்வார்கள். சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவார்கள். இதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

    தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நிலக்கரி வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. ரூ.12,280 கோடிக்கு தரமற்ற நிலக்கரி வாங்கி உள்ளார்கள். அதில் ரூ.1,730 கோடி முதல் ரூ.3,035 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதற்கு முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கரூர் அன்புநாதன் ஆகியோர் காரணம். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    குட்கா விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. இந்த விசாரணை முடிந்ததும் அமைச்சர், டி.ஜி.பி. சிறைக்கு செல்வார்கள். இந்த ஆட்சி விரைவில் கவிழும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #tamilnews
    கடலூர் மஞ்சக் குப்பம் மைதானத்தில் இன்று நடக்கும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

    கடலூர்:

    கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம் கடலூர் மஞ்சக் குப்பம் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.

    இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். இதில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

    பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று மதியம் கார் மூலம் புதுவை வருகிறார். அங்கு அவர் ஓட்டலில் ஓய்வு எடுத்துவிட்டு மாலை 5 மணிக்கு கடலூர் புறப்படுகிறார்.

    வரும்வழியில் ஆல்பேட்டையில் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்பு அவர் மஞ்சக்குப்பத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    மு.க.ஸ்டாலின் பேசுவதற்காக மஞ்சக்குப்பம் மைதானத்தில் வடக்கு நோக்கி பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தில் மிகப் பெரிய கட்அவுட்கள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு, மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கடலூர் நகரின் நேதாஜிசாலை, பாரதி சாலை, இம்பீரியல் ரோடு உள்பட பல்வேறு இடங்களில் சாலையின் இரு புறமும் கட்சி கொடிகளும், வரவேற்பு தோரணங்களும், அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மஞ்சக்குப்பம் மைதானத்தை சுற்றி பல்வேறு இடங்களில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    வீரவணக்கநாள் பொது கூட்டத்தில் கலந்து கொள்ள கடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தி.மு.க. தொண்டர்கள் வேன், கார் மற்றும் லாரிகளில் வந்து குவிந்தனர். #tamilnews

    பஸ் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்த போவதாக வெளியான தகவலால் கடலூர் அரசு கலைக்கல்லூரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
    கடலூர்:

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு உயர்த்திய பஸ் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிரிப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்திலும் விருத்தாசலம், சிதம்பரம், விழுப்புரம் போன்ற இடங்களில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தபோவதாக வலைத் தளங்களில் செய்தி பரவியது.

    இதையொட்டி நேற்று கல்லூரி முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுபோல் இன்றும் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக செய்திகள் பரவியது. அதனைத்தொடர்ந்து கல்லூரி வாசல் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    விருத்தாசலத்தை தலைமையாக கொண்டு தனி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் தர்மராஜ், மாநில அமைப்பு செயலாளர் செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உயர்மட்ட குழு உறுப்பினர் பிரபாகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாநில நிர்வாகிகள் ஆசைத்தம்பி, விஜயமாரி, அரசன், சிவக்குமார், பாலாஜி, ஜோசப் ஆரோக்கிய ராசய்யா, ராமர், காளியப்பன், மாவட்ட செயலாளர் பாலமுருகன், துணை தலைவர் கருப்பையா, நகர தலைவர் பரமசிவம், நகர செயலாளர் பூமணி, பொருளாளர் பழனி, நாடார் உறவின் முறை செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்த பின் மாநில தலைவர் என்.ஆர்.தனபாலன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக அரசு இதுவரை இல்லாத அளவிற்கு பஸ் கட்டணத்தை 60 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதை தவிர்க்க பஸ் கட்டண உயர்வை அரசு உடனே திரும்ப பெற வேண்டும். பஸ் கட்டணத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் எங்கள் கட்சி கலந்து கொள்ளும்.

    விருத்தாசலத்தை தலைமையாக கொண்டு தனி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள 2 தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகையை வழங்கவில்லை.

    அதனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்ற மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கடலூரில் முன்னாள் அமைச்சர் ராஜாங்கம் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவர் 1974-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.

    பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்தார். 1984-ம் ஆண்டில் ராஜாசபா உறுப்பினராக இருந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.

    அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 97.

    ராஜாங்கத்தின் உடல் கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். #Tamilnews
    புதுவையில் இருந்து கடலூருக்கு மது பாட்டில்கள் கடத்தி வந்த இளம்பெண்னை கைது செய்த போலீசார் அவரது கணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    கடலூர்:

    புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்துவதை தடுக்கும் வகையில் கடலூர் ஆல்பேட்டையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    இங்குள்ள போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஒரு மொபட்டில் பெண் ஒருவர் வந்து கொண்டிருந்தார். சந்தேகத்தின் பேரில் அந்த மொபட்டை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

    அதில் புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட 120 லிட்டர் சாராயமும், 100 மது பாட்டில்களும் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் கடலூர் முதுநகர் வசுந்தராயபாளையம் பகுதியைச் சேர்ந்த லெனின்குமார் என்பவரின் மனைவி அனுசுயா (வயது 24) என்பது தெரியவந்தது.

    இவர் தனது கணவர் உதவியுடன் கடலூர் முதுநகரில் வைத்து விற்பனை செய்ய புதுவையில் இருந்து மது கடத்தி வந்தது தெரிந்தது.

    இது தொடர்பாக அனுசுயாவை போலீசார் கைது செய்தனர். லெனின் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
    ஓடும் பஸ்சில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 25 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து புதுப்பேட்டைக்கு இன்று மதியம் 11.50 மணிக்கு தனியார் மினிபஸ் புறப்பட்டது. அதில் 25 பயணிகள் பயணம் செய்தனர். மினிபஸ்சை ஒறையூரை சேர்ந்த சந்திரகாசன் (வயது 30) ஓட்டினார்.

    அந்த மினிபஸ் இந்திராகாந்தி சாலை வழியாக லிங்க் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது மினிபஸ்சின் அடியில் திடீரென தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென பஸ்சுக்கு அடியில் எரிந்து கொண்டிருந்தது. அதில் இருந்து வெளியே புகை வந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக சந்திரகாசன் மினிபஸ்சை அதே இடத்தில் நிறுத்தினார். இதையடுத்து மினிபஸ்சில் இருந்த 25 பயணிகளும் கீழே இறங்கி ஓடினர்.

    இதுப்பற்றி பண்ருட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி பண்ருட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சண்முகம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மினி பஸ்சின் அடியில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் மினிபஸ்சின் அடியில் இருந்த மோட்டார் முழுவதும் எரிந்து நாசமானது. பயணிகள் 25 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓடும் பஸ்சில் தீ பிடித்த சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews

    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மாமியாரை தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மேலக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 63). இவரது மனைவி தங்கபாப்பு (60). இவர்களது மகள் செல்வராணி. அவரது கணவர் அண்ணாதுரை ஆகியோர் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அண்ணாதுரை தனது மனைவி செல்வராணியிடம் தகராறு செய்து வந்தார். அதே போல் நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு நடந்தது.

    இதில் ஆத்திரம் அடைந்த அண்ணாதுரை, தனது மனைவி செல்வராணியை தாக்கினார். இதைப்பார்த்த செல்வராணியின் தாய் தங்கபாப்பு இதனை தட்டிக் கேட்டார்.

    அப்போது அருகில் கிடந்த கட்டையை எடுத்து அண்ணாதுரை தனது மாமியார் தங்கபாப்புவின் தலையில் தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து தங்கபாப்பு நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரையை கைது செய்தனர். #tamilnews

    கிரிக்கெட்டை விரும்புவது போல் தினகரனை இளைஞர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என கடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
    கடலூர்:

    கடலூர் கிழக்கு மாவட்ட டி.டி.வி. தினகரன் அணி சார்பில் எம்.ஜி.ஆர். 101-வது பிறந்த நாள் விழா மற்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரனுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் நடந்தது.

    கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். மிகப்பெரிய வெற்றி பெற்றார். தற்போது நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். எம்.ஜி.ஆருக்கு இளைஞர்கள் துணை நின்றார்கள்.

    அதேபோல் தினகரன் பின்னாலும் இளைஞர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் கிடையாது. ஆனாலும் இளைஞர்கள் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள். அதேபோல் ஆட்சியில் இல்லாவிட்டாலும் தினகரனை இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

    தமிழக மக்கள் அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தில் தவிர்க்க முடியாத தலைவராக தினகரன் உள்ளார். தற்போது உள்ள ஆளுங்கட்சி நீதிமன்றங்களில் படிக்கட்டுகளில் கிடக்கிறது. ஜெயலலிதா இருந்த போது, உதய் மின்திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், நீட் தேர்வுக்கு கடுமையாக எதிர்த்தார். ஆனால் தற்போது உள்ள அரசு அனைத்து திட்டங்களுக்கும் அனுமதி வழங்கி உள்ளது.

    90 சதவீதம் மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். ஆட்சியில் அமர வைத்த தினகரனுக்கும், சசிகலாவுக்கும் ஆட்சியாளர்கள் துரோகம் செய்து விட்டார்கள். பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டது இந்த அரசு. ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி உள்ளது. நிதி பற்றாக்குறை என்று அவர்களுக்கு மட்டும் சம்பளத்தை உயர்த்துவது நியாயமா? என்று அனைத்து கட்சியினரும் கேட்கிறார்கள்.

    பாரதிய ஜனதாவுக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள். இமயமலைக்கு செல்கிறவர்களை அழைத்து வந்தாலும் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழகத்தில் சக்தி பெற்ற தலைவராக தினகரன் உள்ளார்.

    இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

    கூட்டத்தில் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி பேசியதாவது:-

    தினகரன் வெற்றியால் மற்ற கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு பெரியார் விருது வழங்கியதை எண்ணி வேதனை அடைகிறேன். பாரதிய ஜனதா கட்சியினருக்கு தினகரன் மீது கோபம் கிடையாது. கடந்த தேர்தலில் ஜெயலலிதா பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவித்தார். அவர் மறைவுக்கு பிறகு கட்சியையும், திராவிட இயக்கத்தையும் வழிநடத்தும் சக்தியாக தினகரன் உருவெடுத்துள்ளார். அதனால் தான் தினகரனை அழிக்க பாரதிய ஜனதா கட்சி வருமான வரிசோதனை போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு புகழேந்தி பேசினார். #Tamilnews
    பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரையில் போராட்டம் நடத்துவோம் என விருத்தாசலத்தில் திருமாவளவன் கூறினார்.
    விருத்தாசலம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விருத்தாசலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். 6 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறோம் என்றும், பிற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைவான கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது என்றும் ஆட்சியாளர்கள் கூறுவது ஏற்புடையதல்ல.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்த காலத்தில் கூட பஸ் கட்டண உயர்வு நிகழ்ந்தது இல்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் போராடினார்கள் என்பதற்காக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அவ்வளவு பாரத்தையும் சாதாரண அப்பாவி மக்கள் மீது திணித்திருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 23-ந் தேதி(நாளை) சென்னையில் எனது தலைமையிலும், 24-ந் தேதி அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

    வருகிற 27-ந் தேதி தி.மு.க. நடத்தும் போராட்டத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவை தெரிவிக்கும். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரையில் போராட்டம் நடத்துவோம். எங்களது போராட்டம் தொடரும்.

    தமிழகத்தில் மதவாத சக்திகள் திட்டமிட்டு வன்முறையை தூண்ட முயற்சிக்கின்றன. கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் வன்முறையை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பவர்களை மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மண்ணில் அந்த சக்திகளுக்கு எப்போதும் இடமில்லை என்பதை தேர்தல் நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    கள்ளக்காதல் பிரச்சினையில் தொழிலாளியை கத்தியால் குத்தி படுகொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 45), விவசாயி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கணவன்-மனைவிக் கிடையே நேற்று இரவு திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பெரியண்ணன் கத்தியை எடுத்து மனைவி பாக்கியலட்சுமியை சரமாரியாக குத்தினார். அவர் கூச்சல் போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த தொழிலாளி ஏழுமலை (50), ராஜசேகர் (27), வெண்ணிலா (36) ஆகியோர் பெரியண்ணன் வீட்டுக்கு ஓடிவந்தனர். தகராறில் ஈடுபட்ட பெரியண்ணனை தடுத்தனர்.

    அப்போது பெரியண்ணன் ஆத்திரம் அடைந்து அவர்களையும் கத்தியால் குத்தினார். இதில் ஏழுமலைக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலே இறந்தார். இதை அறிந்ததும் பெரியண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    காயம் அடைந்த பாக்கியலட்சுமி, ராஜசேகர், வெண்ணிலா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டனர். அங்கு அவர்களது நிலமை கவலைக் கிடமாக உள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணைபோலீஸ் சூப்பி ண்டு சுந்தரவடிவேல் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட விவசாயி ஏழு மலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக பெரியண்ணனை நள்ளிரவு கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-


    எனது மனைவி பாக்கியலட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இதை அறிந்த நான் பாக்கியலட்சுமியை கண்டித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.

    நேற்று இரவும் மனைவியிடம் கள்ளக்காதலை கைவிடும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் பதில் ஏதும் கூறாததால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றேன். அவர் கூச்சல்போட்டதால் அருகில் வசித்த ஏழுமலை, மற்றும் கள்ளக்காதலன் ராஜசேகர், வெண்ணிலா ஆகியோர் ஓடிவந்து என்னை தடுக்க முயன்றனர். நான் ஆத்திரம் அடைந்து அவர்களையும் கத்தியால் குத்தினேன். இதில் விவசாயி ஏழுமலை பலியாகி விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார். tamilnews

    திட்டக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி பெரியார் நகரை சேர்ந்தவர் செந்தில் (வயது 35). இவர் பெண்ணாடம் தெற்கு ரதவீதியில் நடந்து சென்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பாபு (35) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.1,000 ரொக்கம், ஒரு செல்போன், ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் வேலூர், தஞ்சாவூர், அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிச்சென்று இருந்ததும் தெரிந்தது.

    இதையொட்டி அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார்.

    அதனைத் தொடர்ந்து, செந்திலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதன்படி செந்திலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். tamilnews

    ×