என் மலர்
கடலூர்
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் இமயராஜா (வயது 52). இவர் தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
நேற்று மாலை அவர் மீன்சுருட்டி என்ற இடத்தில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு காட்டுமன்னார் கோவில் கடை வீதிக்கு வந்து கொண்டிருந்தார். அந்த வேனுக்கு பின்னால் ஆதனூரைச் சேர்ந்த ராஜகுமார் (36), ரஞ்சித் (19) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் பள்ளி வேனை முந்தி செல்ல முயன்றனர். ஆனால், வேன் டிரைவர் வழிவிடாமல் சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் வேனை மறித்து டிரைவர் இமயராஜாவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து காட்டு மன்னார்கோவில் போலீ சில் இமயராஜா புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரை தாக்கிய ராஜகுமார், ரஞ்சித் ஆகியோரை கைது செய்தார். #tamilnews
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி ரேகா. இவர் பிரசவத்துக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கடலூர் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அணுக்கம்பட்டு பெரியகாட்டுசாகையை சேர்ந்தவர் முருகன். கார் டிரைவர். இவரது மனைவி ஜெயமாலினி. இவரும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவரையும் பிரசவத்துக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர்கள் 2 பேருக்கும் நேற்று முன்தினம் இரவு குழந்தைகள் பிறந்தது. ரேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், ஜெயமாலினிக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் டாக்டர்கள் அறிவித்தனர்.
இந்த நிலையில் ஜெயமாலினியின் மாமியார் வைரம் என்பவர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தனது மருமகளுக்கு ஆண் குழந்தைதான் பிறந்தது. அந்த குழந்தைதான் எங்களுக்கு வேண்டும் என்று கூறினார்.
ஆனால், ரேகாவின் உறவினர்களோ ரேகாவுக்குதான் ஆண் குழந்தை பிறந்தது என்றனர். இதனால் ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு ஆண் குழந்தைக்கு 2 பெண்கள் உரிமை கொண்டாடினர். இதனால் ஆண் குழந்தை யாருக்கு பிறந்தது என்பது பிரச்சனையானது. இதை கண்டறிவதற்காக ஜெயமாலினிக்கும், குழந்தைக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் ஹபீசா இன்று ஜெயமாலினி, அவரது கணவர் முருகன் மற்றும் மாமியார் வைரம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
வைரத்திடம் விசாரணை நடத்திய போது எனக்கு கண் சரியாக தெரியாததால் எனது மருமகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று முதலில் தெரியாமல் கூறிவிட்டேன். ஆனால், எனது மருமகளுக்கு பிறந்தது பெண்குழந்தைதான். அதனை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம் என்றார்.
ஜெயமாலினியின் கணவர் முருகனிடம் விசாரித்த போது எனது மனைவிக்கு பெண் குழந்தைதான் பிறந்தது. எனது மனைவிக்கு 3 முறை கர்ப்பம் கலைந்தது. 4-வதாக பெண் குழந்தை பிறந்தது. தற்போது மீண்டும் 5-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை நாங்கள் வளர்த்துக்கொள்கிறோம் என்றார். ஜெயமாலினியும் தனக்கு பிறந்தது பெண் குழந்தைதான் என்று கூறி அந்த குழந்தையை ஏற்றுக் கொண்டார்.
பெண் குழந்தையை பெற்றுக்கொண்ட ஜெயமாலினி தனது குழந்தையை முத்தமிட்டு அரவணைத்தார்.
இதனை தொடர்ந்து ஆண் குழந்தைக்கு 2 பெண்கள் உரிமை கொண்டாடிய சம்பவம் முடிவுக்கு வந்தது.
அதுபோல ரேகாவிடம் ஆண் குழந்தையை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அந்த குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Tamilnews
நெய்வேலி:
நெய்வேலியை அடுத்த ஊ.மங்கலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான டாகா என்ற மின்உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு மின்உற்பத்தி செய்ய தேவையான நிலக்கரி நெய்வேலி சுரங்கத்தில் இருந்து ரெயில்கள் மூலம் அனுப்பப்படுகிறது. அங்கு நிலக்கரி சேமித்து வைக்க குடோன் ஒன்று உள்ளது.
இந்த குடோன் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தனியார் மின்உற்பத்தி நிலைய முதன்மை மேலாளர் சந்திரன், ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டனர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊர்? அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ்நிலையம் பின்புறம் இந்திராகாந்தி சாலையில் பாலாஜி சில்க்ஸ் என்ற ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடை 3 மாடிகளை கொண்டதாகும். இதன் உரிமையாளர் கே.வி.ஆர். மோகன், பிரபல தொழில் அதிபர்.
இந்த ஜவுளிக்கடையில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். நேற்று இரவு 10 மணி அளவில் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். காவலாளி மட்டும் பணியில் இருந்தார்.
இரவு 11 மணி அளவில் திடீர் என்று ஜவுளிக்கடையில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த காவலாளி உடனடியாக கடையின் உரிமையாளர் மோகனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே மோகன் ஜவுளிக்கடைக்கு விரைந்து சென்றார். அங்கு கடை தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
உடனே பண்ருட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென கடைமுழுவதும் பரவ தொடங்கியது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்லமுடியாமல் வெளியில் நின்ற படியே தண்ணீரை பீய்ச்சு அடித்தனர்.

நேரம் செல்ல செல்ல தீ அதிகமாக பரவியதால் கடலூர், நெய்வேலி, சிதம்பரம் போன்ற பகுதியில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். மாவட்ட தீயணைப்பு அதிகாரி செந்தில்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் பண்ருட்டி போலீசார், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் மற்றும் ஜவுளிக்கடையின் ஊழியர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஜவுளிக்கடையின் கண்ணாடிகள் வெப்பம் அதிகமானதால் வெடித்து சிதறியது. மேலும் ஏ.சி.மெஷின்களும் வெடித்து சிதறின.
இந்த நிலையில் இரவு 1 மணி அளவில் ஜவுளிகடையின் 3-வது மாடி வெப்பம் தாங்கமுடியாமல் டமார் என இடிந்து விழுந்தது. சுவர்கள் தொடர்ந்து இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினர்.
ஜவுளிகடையில் தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருந்ததால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. இதைத் தொடர்ந்து அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இரவு 11 மணிக்கு பிடித்த தீ இன்று காலை 8 மணி வரை தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. இந்த தகவல் அறிந்ததும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். இந்த தீவிபத்தில் ஜவுளிக் கடையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்து இரவில் ஏற்பட்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. பகலில் தீப்பிடித்திருந்தால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ் பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. #Tamilnews
தைப்பூச திருவிழாவையொட்டி வடலூரில் ஜோதி தரிசனம்: 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
vadalur vallalar thai poosam Jyothi Darshan
vadalur vallalar, thai poosam, Jyothi Darshan, தைப்பூசம், வடலூர் வள்ளலார், ஜோதி தரிசனம்,
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் தைப்பூச திருவிழாவையொட்டி ஜோதி தரிசனம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 147-வது ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
காலை 7 மணியளவில் வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லத்திலும், தண்ணீரால் விளக்கெரித்த கருங்குழி இல்லத்திலும், வடலூர் தர்மசாலையிலும் மற்றும் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து மாலையில் தர்மசாலைமேடை, ஞானசபை மேடைகளில் கருத்தரங்குகள், சன்மார்க்க சொற்பொழிவுகள், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் சத்தியஞானசபையில் இன்று நடந்தது. காலை 6 மணி முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. பின்னர் 10 மணி, மதியம் 1 மணிக்கு 7 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
அதன்பின்பு இரவு 7 மணியும், 10 மணியும், நாளை(வியாழக்கிழமை) காலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.
இன்று காலை நடைபெற்ற ஜோதி தரிசன விழாவில் கடலூர், விழுப்புரம், திருச்சி, சேலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், காமராஜ், சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் பிரசாந்த் ஆகியோர் பங்கேற்றனர். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் வந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வடலூரில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காணப்பட்டனர். ஜோதி தரிசன விழாவில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பூச திருவிழாவை யொட்டி கடலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. ஜோதி தரிசனம் காண வந்த பக்தர்களுக்கு தனியார் அமைப்புகளின் சார்பில் அன்னதானம் மற்றும் மோர் வழங்கப்பட்டது.
தைப்பூச விழாவை யொட்டி பக்தர்கள் வசதிக்காக அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, மதுரை, சேலம், நாமக்கல் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வடலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து சபை வளாகத்தில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது வேன், கார், மினி லாரிகளை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கழிப்பறை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.
விழாவையொட்டி கடலூர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட போலீசார், சிறப்பு காவல் படையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடலூர்:
விருத்தாசலம்- கருவேப்பிலங்குறிச்சி ரோட்டில் உள்ள ஆலயம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் சந்தேகமான முறையில் வந்தனர். அவர்களை போலீசார் வழிமறித்து விசாரித்த போது, அவர்கள் அரியலூர் மாவட்டம் செந்துறை நக்கம்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்த பாஸ்கரன் (32), சிதம்பரம் கீழ்பூங்குடி ராஜசேகரன் (32), திருநெல்வேலி மாவட்டம் காக்கநல்லூரை சேர்ந்த கோபால் என்கிற திருமலை (37) ஆகிய 3 பேர் என்று தெரிந்தது.
மேலும் அவர்கள் 3 பேரும் சேர்ந்து விருத்தாசலம் அருகே செல்வி என்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இது தவிர 3 பேரும் விருத்தாசலம், மங்கலம்பேட்டை, உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைப்பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதில் பாஸ்கரன் மீது மட்டும் 8 வழக்குகள் உள்ளன. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார்.
அதன்படி பாஸ்கரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். இதையடுத்து பாஸ்கரனை குண்டர் சட்டத்தில் விருத்தாசலம் போலீசார் கைது செய்தனர். #tamilnews
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் 24-வது வட்டம் என்.எல்.சி.குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் அறிவழகன். இவர் என்.எல்.சி.யில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் இந்துமதி (வயது 26). எம்.இ.படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று மாலை பெற்றோரிடம் தோழிவீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு இந்துமதி வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த அறிவழகன் தன் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கும் அவரை காணவில்லை.
இதனைத்தொடர்ந்து அவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்தர்நாத் வழக்குபதிவு செய்து மாயமான பட்டதாரி பெண் இந்துமதியை தேடி வருகின்றனர். #tamilnews
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உளள கிள்ளை கலைஞர்நகரை சேர்ந்தவர்கள் சக்கரவர்த்தி (வயது 42), சத்தியமூர்த்தி (35), முத்து (28). இவர்கள் 3 பேரும் ஒரு பைபர் படகில் கடந்த 28-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று மாலை நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடல் சீற்றத்தில் பைபர்படகு மூழ்கியது. இதில் மீனவர்கள் 3 பேரும் கடலில் விழுந்தனர்.
இதில் சக்கரவர்த்தி, சத்தியமூர்த்தி ஆகியோர் நீந்தி கரை திரும்பினர். ஆனால் முத்து மட்டும் காணவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் கிள்ளை அருகே உள்ள சின்னவாய்க்காலில் பிணமாக மிதந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கிள்ளை சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
சென்னை மண்ணடியை சேர்ந்தவர் காஜா (வயது 27). இவர் இன்று காலை சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் பஸ்சில் ஏறினார்.
அந்த பஸ் இன்று மதியம் 1.30 மணிக்கு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடிக்கு வந்தது.
அப்போது அங்கிருந்த மது விலக்கு போலீசார் அந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் இருந்த பேக்குகளை திறந்து பார்த்தனர்.
பஸ்சில் காஜா வைத்திருந்த பேக்கையும் திறந்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதில் மொத்தம் ரூ.26 லட்சம் இருந்தது.
இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காஜாவையும், பணக்கட்டுகள் இருந்த பேக்கையும் எடுத்துக் கொண்டு கடலூர் முதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது காஜா கூறியதாவது:-
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த பாரூக் என்பவர் ரூ.26 லட்சத்தை என்னிடம் கொடுத்தார். அதனை கடலூர் முதுநகர், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று கொடுத்துவிடும்படி கூறினார். அவர் கூறியப்படி பணத்தை பஸ்சில் கொண்டு வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஜாவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பஸ்சில் பயணம் செய்து வந்த வாலிபரிடம் இருந்து ரூ.26 லட்சம் கைப்பற்றப்பட்ட சம்பவம் குறித்து உயர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஓடும் பஸ்சில் வாலிபரிடம் ரூ.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே தொழுதூருக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டு வரும் திராவிடக்கட்சிகள் மக்களின் மனதில் இடம் பெறாமல் தோற்று விட்டன. திராவிட கட்சிகளின் ஆட்சியை மாற்ற வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் தற்போது விரும்புகின்றனர்.
உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை தமிழக அரசு தற்போது குறைத்துள்ளது. இது போதாது. மக்களின் நலன் கருதி பஸ் கட்டணத்தை மேலும் குறைக்க வேண்டும்.
ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் நான் கோரிக்கை வைத்தேன். அதற்கு அவர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
ராமநத்தம் அருகே ஆவட்டி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி விரைவில் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews






