என் மலர்
செய்திகள்

நீர்வரத்து இல்லாததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 44.30 அடியாக குறைந்தது
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இது கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இதுதவிர இந்த ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
மழைகாலத்தில் வீராணம் ஏரியின் நீர்மட் டம் 44.50 அடியாக இருந்தது.
பின்னர் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி நடைபெற்று வந்ததாலும் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.
இதையடுத்து வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளவான 47 அடியை எட்டியது.
பின்னர் கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வீராணம் ஏரிக்கு நீர்வரத்து இல்லாததாலும், சென்னை குடிநீருக்கும், மற்றும் பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடுவதாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது.
நேற்று முன்தினம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45 அடியாக இருந்தது. நேற்று 44.30 அடியாக குறைந்தது.
தொடர்ந்து வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து 41 அடிக்கு வந்து விட்டால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது பாதிக்கப்படலாம்.
இதே நிலை நீடித்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
தற்போது சென்னைக்கு வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மேலும், பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஏரிக்கு நீர்வரத்து இல்லை. #tamilnews






