என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லிக்குப்பம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கழுத்தை அறுத்து கொலை
    X

    நெல்லிக்குப்பம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கழுத்தை அறுத்து கொலை

    நள்ளிரவில் அ.தி.மு.க. பிரமுகர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த நடு வீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது55). இவர் அ.தி.மு.க. முன்னாள் கிளை செயலாளர்.

    கிருஷ்ண மூர்த்திக்கு நடுவீரப்பட்டு அருகே உள்ள வாண்ட் ராசன் குப்பம் பகுதியில் விவசாயம் நிலம் உள்ளது. கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவு தனது விவசாய நிலத்தில் உள்ள கரும்பு பயிருக்கு காவலாக அங்கு சென்றார். பின்னர் அங்குள்ள மோட்டார் கொட்டகையில் படுத்து தூங்கினார்.

    இதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவில் மோட்டார் கொட்டகைக்குள் புகுந்தனர். அங்கு தூங்கி கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியை கழுத்தை அறுத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

    இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் உள்ளவர்கள் வயலுக்கு சென்றனர். அப்போது அங்குள்ள மோட்டார் கொட்டகையில் கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கிருஷ்ணமூர்த்தி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×