என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை: மின்னல் தாக்கி விவசாயி பலி
    X

    கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை: மின்னல் தாக்கி விவசாயி பலி

    கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக இரண்டு வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது இடி-மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவரும் கருகி உயிரிழந்தார்.
    கடலூர்:

    தென்மேற்கு வங்க கடலையொட்டியுள்ள இலங்கை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கடலூர், ஸ்ரீமுஷ்ணம், கள்ளிப்பாடி, எசனூர், மதகளிர்மாணிக்கம், புதுக்குப்பம், சேத்ராப்பட்டு, பெண்ணாடம், திட்டக்குடி, முருகன்குடி, இறையூர், ஆவினன்குடி, பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்களில் சென்றவர்கள் சிரமத்துக்குள்ளானார்கள்.

    பண்ருட்டி அருகே உள்ள கோட்லாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). விவசாய கூலி தொழிலாளி. இவரும், இவரது மனைவி அஞ்சலையும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றிருந்தனர்.

    மழையின் காரணமாக மாலையில் அவரது வீடு திடீரென்று இடிந்து விழுந்தது. இதேபோல் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மெய்யாத் தூர் பகுதியில் தொகுப்பு வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு வீட்டில் பார்வதி, அவரது மகள் ராஜலட்சுமி, மருமகன் திருமூர்த்தி ஆகியோர் வசித்து வந்தனர்.

    பார்வதி வேலைக்கு சென்று விட்டார். அப்போது மழை பெய்ததால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ராஜலட்சுமி, திருமூர்த்தி ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இதில் 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கூடலையாத்தூரை சேர்ந்தவர் கண்ணுசாமி (50). விவசாயி. நேற்று இவர் விளாங்குளம் பகுதியில் வயலில் நாற்று நட சென்றார். அப்போது இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் கண்ணுசாமி அருகில் உள்ள மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய அவர் பரிதாபமாக இறந்தார்.

    கடலூர் தாழங்குடா, தேவனாம்பட்டினம் போன்ற பகுதிகளில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.

    கடலூர் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. மரக்காணம், ஆலங்குப்பம், வடநெற் குணம், அனுமந்தை ஆகிய பகுதிகளில் மாலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை மழை பெய்தது.
    Next Story
    ×