என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • இஸ்லாமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வந்தார்.
    • எனக்கு நோன்பு கஞ்சியை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்கள் என்று சீமான் தெரிவித்தார்.

    சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், வெள்ளை லுங்கி, சட்டை, இஸ்லாமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வந்தார்.

    பிறகு, பிரார்த்தனை செய்துவிட்டு நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு தவெக தலைவர் விஜய் நோன்பை திறந்தார்.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், "எனக்கு நோன்பு கஞ்சியை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்கள். ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் நான் இல்லை. நான் ஒருநாள் இஸ்லாமியன் இல்லை. நான் என் மக்களின் உணர்வுக்கானவன், உரிமைக்கானவன், உயிரானவன்.

    நெற்றியில் திருநீறு வைத்துக்கொண்டு தொப்பி அணிந்து நோன்பு கஞ்சியை குடித்தவர்கள் இருக்கிறார்கள். நான் காட்டவா? தம்பி அதை விரும்புகிறார், செய்கிறார். அதை விமர்சனம் செய்ய வேண்டியதில்லை" என்று தெரிவித்தார். 

    • தமிழ் மண் திருவிழா எனும் பிரம்மாண்ட விழா கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி துவங்கி 11 நாட்களாக நடைபெற்று வருகிறது.
    • மூன்று நாட்களாக நடைபெற்ற மாபெரும் நாட்டு மாட்டு சந்தை நிறைவு.

    ஈஷாவில் நடைபெற்று வரும் தமிழ்த் தெம்பு திருவிழாவில் இன்று கொங்கு நாட்டு வீரவிளையாட்டான 'ரேக்ளா பந்தயம்' கோலாகலமாக நடைபெற்றது.

    ஆலாந்துறை அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். 

    ஆதியோகி முன்பு தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா எனும் பிரம்மாண்ட விழா கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி துவங்கி 11 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    இத்திருவிழாவின் ஒரு பகுதியாக 'ரேக்ளா பந்தயம்' இன்று ஆலாந்துறை அருகே நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் நடைபெற்றது.

    இதில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களின் ரேக்ளா பந்தய மாட்டு வண்டிகள் மற்றும் காளைகளுடன் பங்கேற்றனர்.

    ரேக்ளா பந்தயம் 200 மீட்டர் பிரிவு மற்றும் 300 மீட்டர் பிரிவு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த இரண்டு பிரிவுகளிலும் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ. 1,00,000 வழங்கப்பட்டது.

    அதே போன்று இரண்டாம் இடத்தை பிடித்தவர்களுக்கு 50,000, மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு 20,000, நான்காம் பரிசு பெற்றவர்களுக்கு 14,000 வழங்கப்பட்டன.

    மேலும் 5 முதல் 15 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 3,000, 16 முதல் 30 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 2,000 ரொக்க பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.மேலும் பந்தயத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 

    இதனுடன் ஆதியோகி முன்பு கடந்த 7-ம் தேதி முதல் நாட்டின மாடுகள் மற்றும் குதிரைகளின் சந்தை நடைபெற்று வருகிறது.

    இதில் காங்கேயம், புங்கனூர், தார்பார்க்கர், கீர், சாஹிவால், பர்கூர் உட்பட 10-க்கும் மேற்பட்ட நாட்டின ரக மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

    இதில் ரேக்ளா பந்தயத்திற்கான ஜோடி காளைகள், ஜல்லிக்கட்டு இளந்தாரி காளைகள், ஊட்டச்சத்து மிக்க பால் தரும் நாட்டின ரக பசுக்கள் ஆகியன அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே போன்று குதிரைகளில் மார்வாரி மற்றும் நாட்டுக் குதிரைகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டன.

    கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நாட்டு மாட்டுகள் மற்றும் குதிரைகளின் சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மாடுகள் மற்றும் குதிரைகளுக்கு 3 நாட்களுக்கும் தேவையான தீவனங்கள், தண்ணீர் மற்றும் வெயில் தாக்கத்தை தவிர்க்கும் வகையிலான அரங்குகள் உள்ளிட்டவை ஈஷா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    மேலும், சந்தைக்கு வரும் மக்களுக்கும் தேவையான தங்குமிடம் மற்றும் உணவு ஈஷா சார்பில் வழங்கப்பட்டது. இந்த சந்தை இன்றோடு நிறைவு பெறுகிறது.

    தமிழ்த் தெம்பு திருவிழாவில் தமிழ்நாட்டை சார்ந்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி, தமிழ் பண்பாட்டு கலைகளின் பயிற்சி பட்டறைகள், தினமும் மாலை வேளைகளில் தமிழ் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுக் கடைகள் உள்ளிட்டவைகள் இடம் பெற்று இருந்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் திரளாக பங்கேற்றனர்.

    இந்த ஆண்டு தமிழ்த் தெம்பு திருவிழா கடந்த பிப் 27 ஆம் தேதி முதல் மார்ச் 9 வரை 11 நாட்கள் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பொது மக்களிடம் இருந்த கிடைத்த சிறப்பான வரவேற்பினை முன்னிட்டு விழாவினை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு நாளையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவர்களின் கல்வி உரிமையை தடுக்கக்கூடாது.
    • மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி உள்ளது.

    கோவை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மும்மொழி கொள்கை வேண்டும் என்றே பெற்றோர் மற்றும் மாணவர்கள் விரும்புகிறார்கள். பணக்கார மாணவர்கள் மட்டும் தனியார் பள்ளிகளில் இந்தி மொழி படிக்கும் நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் இந்தி கற்க முடியவில்லை என்பது என்ன நியாயம்?

    மாணவர்களின் கல்வி உரிமையை தடுக்கக்கூடாது. மேலும் மும்மொழி கொள்கைக்காக போராடுபவர்களை கைது செய்வது கட்டணத்துக்கு உரியது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல.

    மும்மொழி கொள்கைக்காக கையெழுத்து இயக்கம் நடத்தினால் கைது செய்வோம் என்று கூறுபவர்கள், நீட் தேர்வு வேண்டாம் என்பது குறித்து கையெழுத்து இயக்கம் நடத்தியவர்களை கைது செய்யாதது ஏன்?

    தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். பெண்கள் வெளியில் அச்சமின்றி, பாதுகாப்பாக நடமாடுவதை உறுதி செய்வது அரசின் பொறுப்பு. பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களிலும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஆவணபடங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. ஆனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை கவலைக்கு உரியதாக உள்ளது. இதை ஆட்சியாளர்கள் சரி செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து தவறான தகவலை யாரும் பரப்புவதில்லை. சம்பவம் நடந்தால் நேரில் சென்று விசாரித்து அதன் பிறகு அறிக்கை வெளியிடுகிறோம்.

    மும்மொழிக் கொள்கை விஷயத்தில் போராட்டம், தொகுதி மறு சீரமைப்பு பிரச்சனை ஆகியவற்றை கையில் எடுப்பதன் மூலம் மற்ற பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப பார்க்கிறார்கள்.

    தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசு மூலம் இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை. இன்று அதை எதிர்ப்பவர்கள் பாராளுமன்ற புதிய கட்டிடம் திறந்தபோது அது குறித்து பேசாதது ஏன்?

    தமிழக அரசு தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்பதால் இதுபோன்ற பிரச்சனைகளை பேசி வருகிறார்கள். அரசு ஊழியர்கள் போராட்டத்தால் தலைமைச் செயலகம் ஸ்தம்பித்தது. இதை மறைக்கவே தி.மு.க. நாடகமாடுகிறது. தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.

    தமிழ் கவிஞர் பாரதியார் ஐந்து மொழிகள் கற்றவர். அதனால்தான் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று கூறினார்.

    கடந்த முறை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைக்க பாடுபட்டோம் என்ற வகையில், இந்த முறை தமிழகத்தில் தி.மு.க. அரசை அகற்ற வலிமையான கூட்டணியை அமைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், மாநில பொதுசெயலாளர் வி.வி.வாசன், குனியமுத்தூர் ஆறுமுகம், சிகாமணி, அருணேஸ்வரன், செல்வராஜ், ராமலிங்கம், ஞானசேகரன், வேணுகோபால், கார்த்திக் கண்ணன், வளர்மதி கணேசன், சார்லஸ் பட்டாபி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சென்சார் தொழில்நுட்பத்துடன் இந்த ஹெல்மட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த கண்டுபிடிப்பு சாலை விபத்துக்களை குறைக்க உதவும்.

    கோவை:

    மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் தினந்தோறும் சாலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதில் மது அருந்திவிட்டு செல்பவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அப்பாவி பொதுமக்களும் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

    இதன்காரணமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கிறார்கள். மது அருந்தியவர்களை கண்டுபிடிக்க போலீசார் சிறிய எந்திரம் ஒன்றை பயன்படுத்தி வருகிறார்கள்.

    சம்பந்தப்பட்டவர்கள் வாயில் வைத்து அதனை ஊதச் சொல்வார்கள். மது அருந்தி இருந்தால் அந்த எந்திரம் காட்டிக் கொடுத்து விடும். குடிமகன்களிடம் இந்த எந்திரத்தை ஊதச் சொல்லி ஆய்வு செய்ய போலீசார் பாடாதபாடு பட்டு வருகிறார்கள்.

    இந்த பணியை எளிதாக்கும் வகையில் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இணைந்து நவீன ஹெல்மெட் ஒன்றை உருவாக்கி அசத்தி உள்ளனர். இது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடிக்கும் அதிநவீன எந்திரம் ஆகும்.

    சென்சார் தொழில்நுட்பத்துடன் இந்த ஹெல்மெட் மற்றும் மோட்டார்சைக்கிள் இணைக்கப்பட்டு இது பயன்படுத்தப்படுகிறது. மது அருந்தி இருந்தால் வாகனத்தை இயக்க முடியாதபடி இந்த ஹெல்மெட் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நவீன ஹெல்மெட் குறித்து மாணவிகள் கூறுகையில், "மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இந்த ஹெல்மெட்டை வடிவமைத்துள்ளோம். இந்த ஹெல்மெட், மது அருந்தியிருந்தால் வாகனத்தை இயக்க முடியாதபடி, சென்சார் தொழில்நுட்பத்துடன் இயங்கும். இந்த கண்டுபிடிப்பு சாலை விபத்துக்களை குறைக்க உதவும் என தெரிவித்தனர்.

    இந்த ஹெல்மெட்டை கல்லூரியில் நடந்த தொழில்நுட்ப ஹேக்கத்தான் போட்டியில் மாணவிகள் காட்சிப்படுத்தி விளக்கினர். ஹெல்மெட்டை கண்டுபிடித்த மாணவிகளை கல்லூரி நிர்வாகத்தினரும், போலீ சாரும் பாராட்டி உள்ளனர்.

    • நான் சொன்னதையும், எடப்பாடி பழனிசாமி சொன்னதையும் திரித்து திரித்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • பா.ஜ.க.வை பற்றி நான் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன்.

    கோவை:

    கோவையில் நேற்று முன்தினம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இது அரசியல் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் நேற்று அண்ணாமலை கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நானும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி குறித்து தெளிவாக கூறி இருக்கிறோம். நான் அளித்த பேட்டியில் அ.தி.மு.க. என்ற பெயரை நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் அதுபற்றி விவாதத்துக்காக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

    நான் சொன்னதையும், எடப்பாடி பழனிசாமி சொன்னதையும் திரித்து திரித்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க.வை பற்றி நான் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன். அ.தி.மு.க.வை பற்றி எடப்பாடி பழனிசாமியும் தெளிவாக பேசி இருக்கிறார். அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் பா.ஜ.க.வை திட்டுவதையே நோக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. மும்மொழி கொள்கையில் உறுதியாக உள்ளது.
    • பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

    கோவை:

    மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் இன்று மெட்ரிகுலேஷன் சி.பி.எஸ்.சி பள்ளிக்கூடங்களில் படிப்பவர்கள் 3 மொழி படிக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுவது ஏன்?.

    பணம் இருப்பவர்கள் எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் பணம் இல்லாத ஏழை, எளிய மக்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கான மொழியை கற்கக்கூடிய வாய்ப்பை ஏன் இவர்கள் மறுக்கிறார்கள். 3 மொழி வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. அனைவரும் மும்மொழி கொள்கையை வரவேற்கின்றனர்.

    பா.ஜ.க. மும்மொழி கொள்கையில் உறுதியாக உள்ளது. ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒவ்வொரு கொள்கைகள் உள்ளது. கூட்டணியில் இருப்பதால் இதை மட்டுமே கூற வேண்டும் என்பதெல்லாம் இல்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் இணைந்து செயல்படுவதற்காக மட்டுமே.

    கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் மேம்பாட்டுக்காக, பிரதமர் நரேந்திர மோடி மிகக் கடுமையான பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க 33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் கொண்டு வந்திருப்பது நரேந்திர மோடி தான்.

    நரேந்திர மோடி எடுத்திருக்கும் திட்டங்களால் பெண்களின் வளர்ச்சி ஒருபடி மேலே தான் சென்று இருக்கிறது. குறிப்பாக பாதுகாப்பு துறையில் பெண்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதெல்லாம் மகளிருக்கு மரியாதை கொடுக்கும் விதமாகவும், முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், நரேந்திர மோடி செய்து கொண்டு இருக்கிறார்.

    ஆனால தமிழ்நாட்டில் தாய்மார்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடிவதில்லை, பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கு இருக்கிறது. ரெயிலில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் உள்ளது. பாலியல் வன்கொடுமைகள் தமிழகம் எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ராணிப்பேட்டையில் ஒட்டப்பட்ட சர்ச்சையான போஸ்டர் பாஜகவினரால் ஒட்டப்பட்டது அல்ல.
    • 3வது மொழியை கற்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கையெழுத்து போடுகின்றனர்.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் என மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார்.

    இந்தி பேசும் மாநிலங்களில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை இந்தியில் கொடுத்துவிட்டு தான் இங்கு அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார். அமித்ஷா செய்தவற்றை தெரிந்து கொண்டு தான் பின்னர் துரைமுருகன் பதில் கூற வேண்டும்.

    அமித்ஷாவை வரவேற்ற போஸ்டரில் சந்தான பாரதி படம் இடம்பெற்றதன் பின்னணியில் திமுகவினர் உள்ளனர். ராணிப்பேட்டையில் ஒட்டப்பட்ட சர்ச்சையான போஸ்டர் பாஜகவினரால் ஒட்டப்பட்டது அல்ல.

    உரிய விசாரணை மேற்கொண்டால் சர்ச்சை போஸ்டரின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

    மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக எங்கும் மாணவர்களை வற்புறுத்தி கையெழுத்து பெறவில்லை.

    அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தான் வரிசைகட்சி நின்று கையெழுத்து போட்டுச்செல்கின்றனர். 3வது மொழியை கற்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கையெழுத்து போடுகின்றனர்.

    ஆர்வமுடன் வரும் மாணவர்களை இங்கு வராதீர்கள் என்று எப்படி கூறுவது? 

    பாஜகவால்தான் தோற்றோம் எனக் கூறியவர்கள் தற்போது பாஜக கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதுவரை 250க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்துள்ளனர்.
    • கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதுதொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுவரை 250க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்துள்ளனர். கடந்த வாரமும் சிலருக்கு சம்மன் அனுப்பி, அவர்களிடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி, அவர்கள் கூறியவற்றை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் கொடநாடு வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டின் மேலாளர் நடராஜன் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

    இதையடுத்து அவர் நேற்று கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

    அவரிடம் போலீசார், சசிகலா கொடநாடு எஸ்டேட் வந்தபோது பங்களாவில் உள்ள அறைகளை பார்த்து விட்டு ஏதாவது கேட்டாரா? கணினி ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி, விசாரணை மேற்கொண்டனர். கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது.

    இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

    அதில் வருகிற 11-ந் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொடநாடு வழக்கில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பலரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீண்டும் விசாரணை தீவிரமடைந்துள்ளதால் கொடநாடு வழக்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    • தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.
    • நாளை மறுநாள் அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி கடைவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 11-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.

    18-ந் தேதி கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு, அதில் பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றினர். தொடர்ந்து மாரியம்மனுக்கு தினமும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 3 நாள் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி காலை பக்தர்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்தனர்.

    10 மணிக்கு அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து 21 அடி உயர வெள்ளித் தேரில் மாரியம்மனும், 12 அடி உயர மரத்தேரில் விநாயகரும் எழுந்தருளினர்.

    இரவு 9 மணிக்கு முதல் நாள் தேரோட்டம் தொடங்கியது. அப்போது பக்தர்கள் பொள்ளாச்சி மாரியம்மா தாயே.. காவல் தெய்வமே... என பக்தி கோஷம் எழுப்பினர்.

    கோவில் வளாகத்தில் தொடங்கிய தேரோட்ட மானது, மார்க்கெட் ரோடு வழியாக வந்து வெங்கட்ராமணன் வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    தேர்த்திருவிழாவை முன்னிட்டு உதவி போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று இரவு 2-வது நாள் தேரோட்டம் நடக்க உள்ளது. இமான்கான் வீதியில் நிறுத்தப்பட்டுள்ள தேர் இரவு 7 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

    தேர் உடுமலை ரோடு வழியாக வந்து சத்திரம் வீதியில் நிறுத்தப்படுகிறது. நாளை(வெள்ளிக்கிழமை) 3-வது நாளாக தேரோட்டம் நடக்க உள்ளது. தேர் புறப்பட்டு, நிலைக்கு வருதல், அதனை தொடர்ந்து பரிவேட்டை, தெப்பத்தேர் விழா நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10-ந் தேதி இரவு 8 மணிக்கு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    • முதலமைச்சர் வருவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா தலைமை தாங்கினார்.

    ஊட்டி:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரிடையாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார்.

    அத்துடன் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். மேலும் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அடுத்த மாதம் முதல் வாரம் அல்லது இரண்டவாது வாரத்தில் அவர் நீலகிரிக்கு வருகிறார்.

    நீலகிரிக்கு வருகை தரும் அவர் அங்கு அரசு சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அத்துடன் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மக்களுக்கு நேரிடையாக சென்றடைகிறாதா என்பதையும் கள ஆய்வு செய்கிறார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் விழாவில் பங்கேற்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு தடை சட்டம் உள்ளதால், கடந்த பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாமல் உள்ளது. மேலும் கூடலூரில் செக்ஷன் 17 நிலப்பிரச்சினை உள்ளது.

    இதுதவிர மாஸ்டர் பிளான் சட்டம், கட்டிட அனுமதி கிடைப்பதில் தாமதம் உள்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.

    ஊட்டிக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் முதலமைச்சர் நீலகிரி வருவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, கூடுதல் கலெக்டர் கவுசிக், அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் வரும் போது மேற்கொள்ள வேண்டிய நலத்திட்ட பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு வழங்க உள்ள நலத்திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் விழா நடத்த மேற்கொள்ள வேண்டிய ஆயத்த பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் எம்.பி. ஆ.ராசா விவாதித்தார்.

    இதுகுறித்து ஆ.ராசா கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் ஊட்டிக்கு வருகிறார். அப்போது பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது.

    இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் அரசு அதிகாரிகளுடன் நடத்தப்பட்டது என்றார். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசுத்துறை உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    • விளாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனிமொழி.
    • ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை மேலும் நிரூபிக்கும் வகையில் உள்ளார் கனிமொழி கதிர்வேல்.

    பொள்ளாச்சி:

    ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்பதற்கு நிறைய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. படிப்பு, வேலை, தொழில் தன்னம்பிக்கை, குடும்பம் என எல்லாவற்றிலும் ஆண்களை விட பெண்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றால் அது மிகையாகாது. இதனால் தான் பெண்களின் முக்கியத்துவத்தை போற்றவும், அவர்களின் பிரதிநிதித்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாகவே மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

    தாயாக, மனைவியாக, மகளாக என ஒரு சமூகத்தில் நீக்கமற நிறைந்திருப்பது பெண்கள்தான். ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றாலும் சரி.. ஒரு குடும்பத்தில் தலைமுறையே உயர வேண்டும் என்றாலும் பெண்களின் கல்வி அவசியமானது என்று மூத்தோர்கள் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.

    அந்த வகையில், ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை மேலும் நிரூபிக்கும் வகையில் உள்ளார் கனிமொழி கதிர்வேல்.

    விளாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனிமொழி. இவர் உடுமலையைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும், இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

    MA B.Ed படிப்பை முடித்த ஆசிரியராக பணியாற்றிய கனிமொழி தற்போது இரவு நேரங்களில் இயங்கும் தனியார் ஆம்னி பேருந்தை, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இயக்கி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார்.

    இவர் அழகன் டிராவல்சில் பொள்ளாச்சி- சென்னைக்கு இரவு நேரத்தில் ஆம்னி பேருந்தை இயக்கி வருகிறார். பல சிரமங்களை சந்தித்தாலும் தினந்தோறும் 620 கி.மீ. பேருந்துடன் பயணிப்பதாக தெரிவித்துள்ளார். 

    • கொங்கு நாடுமக்கள் தேசிய கட்சியும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
    • தி.மு.க. கூட்டணியில் தான் தொடர்கிறோம். தொடர்வோம்.

    கோவை:

    தமிழகத்தில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்தாலும், தற்போதே தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

    ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.

    கூட்டணி அமைப்பது, எவ்வளவு தொகுதிகளில் போட்டியிடுவது, கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எது என்பதை கண்டறிவது, என பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் கொங்கு நாடுமக்கள் தேசிய கட்சியும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளராக ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளார்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பிடித்து போட்டியிட்டது. அந்த கட்சியின் பொதுச்செயலாளரான ஈ.ஆர்.ஈஸ்வரன், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈ.ஆர்.ஈஸ்வரன் அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டி பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தி.மு.க. கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதனால் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடருமா? அல்லது கூட்டணி மாறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

    இந்த நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    2026-ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க கூட்டணியில் தான் தொடரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது.அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

    சமீபத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நான் பாராட்டி பேசியதை வைத்து, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இணைகிறதா? என்று கேட்பது தவறு. நாங்கள் நிச்சயமாக தி.மு.க. கூட்டணியில் தான் தொடர்கிறோம். தொடர்வோம்.

    அண்மைக்காலமாக அ.தி.மு.க.வில் நடந்து வரும் பிரச்சனை குறித்து என்னிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு நான், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இப்போது உள்ள சூழ்நிலையில் அ.தி.மு.க.வை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

    இந்தச் சூழ்நிலையில் புதியதாக அ.தி.மு.க.விற்கு வேறு யாரையாவது நியமிப்பது நன்றாக இருக்காது என்ற ஒரு பொதுவான கருத்தை தான் நான் தெரிவித்தேன். அவ்வளவு தான். அதில் வேறு ஒன்றுமில்லை. அந்த கருத்தை வைத்து, அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று பேசுவது சரியல்ல.

    எங்களைப் பொறுத்தவரை நாங்கள் கட்சி வளர்ச்சி பணிகள், மக்கள் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். இன்று நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

    அத்திக்கடவு-அவிநாசி திட்ட பணிகளை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதை தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார். இதற்காக ஏற்கனவே நன்றி தெரிவித்து இருக்கிறோம்.

    அத்திக்கடவு-அவிநாசி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான நீர் காளிங்கராயன் மலையிலிருந்து தான் வருகிறது. எனவே இந்த திட்டத்திற்கு காலிங்கராயன்-அத்திக்கடவு அவிநாசி திட்டம் என பெயர் சூட்ட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×