என் மலர்tooltip icon

    வழிபாடு

    பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் இன்று 2-வது நாளாக தேரோட்டம்
    X

    பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் இன்று 2-வது நாளாக தேரோட்டம்

    • தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.
    • நாளை மறுநாள் அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி கடைவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 11-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.

    18-ந் தேதி கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு, அதில் பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றினர். தொடர்ந்து மாரியம்மனுக்கு தினமும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 3 நாள் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி காலை பக்தர்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்தனர்.

    10 மணிக்கு அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து 21 அடி உயர வெள்ளித் தேரில் மாரியம்மனும், 12 அடி உயர மரத்தேரில் விநாயகரும் எழுந்தருளினர்.

    இரவு 9 மணிக்கு முதல் நாள் தேரோட்டம் தொடங்கியது. அப்போது பக்தர்கள் பொள்ளாச்சி மாரியம்மா தாயே.. காவல் தெய்வமே... என பக்தி கோஷம் எழுப்பினர்.

    கோவில் வளாகத்தில் தொடங்கிய தேரோட்ட மானது, மார்க்கெட் ரோடு வழியாக வந்து வெங்கட்ராமணன் வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    தேர்த்திருவிழாவை முன்னிட்டு உதவி போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று இரவு 2-வது நாள் தேரோட்டம் நடக்க உள்ளது. இமான்கான் வீதியில் நிறுத்தப்பட்டுள்ள தேர் இரவு 7 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

    தேர் உடுமலை ரோடு வழியாக வந்து சத்திரம் வீதியில் நிறுத்தப்படுகிறது. நாளை(வெள்ளிக்கிழமை) 3-வது நாளாக தேரோட்டம் நடக்க உள்ளது. தேர் புறப்பட்டு, நிலைக்கு வருதல், அதனை தொடர்ந்து பரிவேட்டை, தெப்பத்தேர் விழா நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10-ந் தேதி இரவு 8 மணிக்கு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×